Published:Updated:

செழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி!

வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்
பிரீமியம் ஸ்டோரி
வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்

1 ஏக்கர்... ரூ. 4 கோடி...

செழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி!

1 ஏக்கர்... ரூ. 4 கோடி...

Published:Updated:
வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்
பிரீமியம் ஸ்டோரி
வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்

மகசூல்

ங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கப்படும் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மை உடையவை.

அவற்றில் செம்மரம், சந்தன மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்திலிருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றவையாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன். 47 ஏக்கர் நிலத்தில் செம்மரச் சாகுபடி செய்துவருகிறார்.

தான் வளர்த்த செம்மரத் தோட்டத்தில் கணேசன்
தான் வளர்த்த செம்மரத் தோட்டத்தில் கணேசன்

ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 3 கி.மீ தொலைவில் தீரன் சின்னமலைப் பள்ளிக்கு எதிரே இருக்கிறது இவரின் தோட்டம். அங்கிருந்த கணேசனைச் சந்தித்தோம். “என் பூர்வீகம் ஊத்தங்கரை (ஊற்றங்கரை). இது வறண்ட பூமி. அப்பா மா சாகுபடிதான் செஞ்சிட்டு இருந்தாரு. ஆனா ஒரு கட்டத்துல மாங்காய் சரியாகக் காய்க்கலை. பிறகு புளிய மரம் வெச்சோம். அதுவும் காய்க்கலை. அதுக்குப் பிறகுதான் செம்மரம் பக்கம் கவனம் திரும்பிச்சு. மரம் வளர்ப்பு விஞ்ஞானி சதாசிவம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிப் பேராசிரியர் பார்த்திபன்னு பலபேர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘ஊத்தங்கரை, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம், சித்தூர், திருப்பதி, கடப்பா, திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவைதான் செம்மரங்களின் தாயகம், அதனால் நன்றாகவே வளரும்’னு பார்த்திபன் சொன்னார். ‘நல்லா வளந்தா செம்மரம், இல்லைனா வேங்கை மரம்’னு முன்னாள் வனத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஐயா கொடுத்த தைரியத்துல செம்மரச் சாகுபடியில இறங்கிட்டேன்’’ என முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இங்கே 20 ஏக்கர் இருக்கு. பக்கத்துல இருக்கிற சாமல்பட்டியில 20 ஏக்கர் இருக்கு. நிலத்துல இருந்த மா மரங்கள், புளிய மரங்களை வெட்டிட்டு 2004-ம் வருஷம் செம்மர நடவு ஆரம்பிச்சேன். தொடர்ந்து 2008, 2011, 2013, 2019னு வெவ்வேற காலகட்டத்துல நட்டுவெச்ச மரங்களெல்லாம் இப்போ நல்லா வளர்ந்து நிக்குது. செம்மரங்கள் வளர்க்கணும்னு முடிவு செஞ்சப்பவே, திருச்சி மாவட்டத்துல செம்மரங்கள் இருந்த ஏழு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன்.

செம்மரத் தோட்டம்
செம்மரத் தோட்டம்

அங்கே இருக்கிற மரங்களை இன்னும் ரெண்டு வருஷத்துல அறுவடை செஞ்சிடுவோம். செம்மரங்களோடு தேக்கு, வேம்பு, வாகை, பெருநெல்லினு வளர்த்துட்டு வர்றேன். கிட்டத்தட்ட 100 வகையான மர வகைகள் இயற்கையோடும் விலங்கினங்களோடும் ஒரு காடுபோல வளர்ந்து வருகின்றன. மொத்தமிருக்கும் நிலத்துல 80 சதவிகிதம் செம்மரங்கள்; 20 சதவிகிதம் மற்ற மரங்கள் என்ற கணக்குல வளர்த்துட்டு வர்றேன்.

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் என்றால் 400 மரங்களுக்கு 4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். மரச் சாகுபடிக்காக ‘மர மேம்பட்டு வாரியம்’ உருவாக்கணும்னு குரல் கொடுத்துட்டு வர்றோம்.

இதுக்கிடையில, கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைக்காக என் நிலத்திலிருந்து ரெண்டு ஏக்கர் நிலத்தை எடுத்துக்கறதாகவும், 1,300 செம்மரங்களை வெட்டப்போறதாகவும் நெடுஞ்சாலைத் துறையில இருந்து நோட்டீஸ் அனுப்பினாங்க. ஒரு செம்மரத்துக்கு 95 ரூபாய் நஷ்ட ஈடு தர்றதாகச் சொன்னாங்க. `ஒரு செம்மரம் நல்லபடியாக வளர்ந்து பலன் கொடுத்தா லட்சங்கள்ல விற்பனையாகுது. இவங்க 95 ரூபாய் விலை நிர்ணயிச்சுருக்காங்களே’ன்னு சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தேன். அது இன்னமும் நடந்துகிட்டு இருக்கு” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“வனத்துறை நடவடிக்கையில பல தவறுகள் இருக்கு. விவசாய நிலங்கள்ல வளரும் மரங்களை வனத்தில் வளரும் மரங்கள் மாதிரியே தடைசெய்யறாங்க. அரியவகை மர இனமாக இருந்தா, சுலபமா விற்பனை செய்ய முடியாது. அதுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்கு. அந்தப் பட்டியல்ல செம்மரமும் இருந்தது.

அந்த நேரத்துலதான் `பனிச்சிறுத்தை’ என்ற விலங்கு அரியவகை உயிரினம் என்ற பிரிவிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு பத்திரிகையில படிச்சேன். எந்தவொரு தாவரமோ, விலங்கோ, பறவையோ... அவற்றின் எண்ணிக்கை 2,500-க்குக் கீழே குறைஞ்சா `அரியவகை உயிரினம்’னு சொல்லப்படுது. அதனால, பனிச்சிறுத்தை 2,500-க்கு மேலே இருக்கிறதா ஆதாரத்தோடு தகவல் கொடுக்கப்பட்டு, பிறகு அது பட்டியல்ல இருந்து நீக்கப்பட்டதாகப் படிச்சேன்.

வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்
வளர்ந்து வரும் செம்மரக் கன்றுகள்

உடனே தகவல் உரிமைச் சட்டம் மூலமா தமிழ்நாடு, ஆந்திராவுல ரெண்டு கோடிக்கும் அதிகமான செம்மரங்கள் இருக்குங்கிற விவரத்தை வாங்கினேன். அதை ஜெனீவாவில் இருக்கும் சர்வதேச இயற்கைவள பாதுகாப்பு கூட்டமைப்புக்கு (IUCN) மெயிலில் அனுப்பினேன். பிறகு 2018, ஜூலை 5-ம் தேதி `செம்மரம் அரியவகை இனம்’ என்ற பிரிவிலிருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசின் பன்னாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகத்துக்கும்(டி.ஜி.எஃப்.டி) மெயில் அனுப்பினேன். விவசாய நிலங்கள்ல வளரும் செம்மரங்களை ஏற்றுமதி செய்யத் தடையில்லைனு 18.02.2019 அனுமதி கிடைச்சது” என்றவர் அதற்கான ஆவணங்களையும் காட்டினார். தொடர்ந்து பேசிய கணேசன்,

“ `ஆண்டுக்கு 310 டன்தான் செம்மரம் ஏற்றுமதி செய்யணும்’னு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அளவை நிர்ணயிச்சிருக்கு.

மரத்தைச் சுற்றி சோற்றுக்கற்றாழை
மரத்தைச் சுற்றி சோற்றுக்கற்றாழை

ஆந்திராவுக்கு 250 டன் போக, தனியார் நிலங்கள்ல தமிழ்நாட்டு சார்பா 60 டன்தான் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுது. `இந்தத் தடைகளை விவசாய நிலங்கள்ல வளரும் செம்மரத்துக்கு நீக்க வேண்டும், அதோடு 10,000 டன் என நிர்ணயம் செய்ய வேண்டும்’னு பிரதம மந்திரி குறை தீர்க்கும் அமைப்பு மூலம் கோரிக்கை வெச்சிருக்கேன். அநேகமா 2020-ம் ஆண்டுக்குள் நீக்கப்பட்டுவிடும்னு நம்புறேன்” என்றார். இவரின் செம்மர வளர்ப்புக்கும், செம்மர விற்பனைக்காகச் செயலாற்றியதற்காகவும் `செம்மரச் செம்மல்’ விருது வழங்கி கௌரவித்திருக்கிறது செம்மரம் சாகுபடியாளர் சங்கம். நிறைவாக வருமானம் குறித்து பேசிய கணேசன்,

செம்மரச் செம்மல் விருது பெறும் கணேசன்
செம்மரச் செம்மல் விருது பெறும் கணேசன்

“நான் செம்மரம் நடும்போது பல இடைவெளியில நடவு செஞ்சேன். இப்போ என்னோட அனுபவத்துல மிக வறண்ட பூமிக்கு எட்டடியும், வளமான பூமிக்கு 10 அடியும் இடைவெளிவிட்டு நடவு செய்யுமாறு பரிந்துரைக்கிறேன். அதே மாதிரி சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம். விற்பனையில் செம்மரத்தை ஏ, பி, சி, டி-னு நான்கு தரமா பிரிக்கிறாங்க. இன்றைய சந்தை மதிப்பில் ‘சி’ தர செம்மரம் ஒரு டன் 20-25 லட்ச ரூபாய் போகுது. ஒரு கிலோ 2,000 ரூபாய் என்ற கணக்குல ஒரு மரத்துக்கு 100 கிலோ கிடைச்சாக்கூட செலவு, வரிகள் போக ஒரு லட்ச ரூபாய்க்குக் குறையாது. ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் என்றால் 400 மரங்களுக்கு 4 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செம்மரத்தின் விலை விவரம்...
செம்மரத்தின் விலை விவரம்...

செம்மரங்களுக்குக் கன்னு வாங்குறதும், நடவு செய்யறதும்தான் வேலை. மத்தபடி தரிசு நிலங்கள்ல மானாவாரிப் பயிராகத்தான் வளத்துட்டு வர்றேன். முதல் அஞ்சு வருஷத்துக்கு நிலக்கடலை, பயறு வகைகள்னு ஊடுபயிர்லயும் வருமானம் பார்க்கலாம். `மரச் சாகுபடிக்காக மர மேம்பட்டு வாரியம் உருவாக்கணும்’னு குரல் கொடுத்துட்டு வர்றோம்.

‘‘செம்மரம் சாகுபடி செய்யணும்னா சாகுபடி செய்யப்படும் பகுதியின் மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு வெச்சிருக்கிறது முக்கியம்.’’

மற்ற விவசாயத்துடன் மர வளர்ப்பும் ஒருங்கிணைஞ்சு நடந்துட்டு வர்றதால மர மேம்பட்டு வாரியம், விவசாய அமைச்சகத்தின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும். இது நடந்தால் மர வளர்ப்புக்குத் தேவையான தரமான கன்றுகள், சொட்டுநீர் மானியம், வங்கிக் கடன், மதிப்புக்கூட்டுதல், மரப் பயன்பாட்டை அதிகப்படுத்துதல், ஏற்றுமதி போன்ற விஷயங்கள் எளிதாக நடக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஆர்.பி.கணேசன், செல்போன்: 94434 15023

செம்மரம் சாகுபடி இப்படித்தான்!

ரு ஏக்கரில் செம்மரச் சாகுபடி செய்வது குறித்து கணேசன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பாடமாக இங்கே...

செம்மரம் ஆணிவேர் வகையைச் சேர்ந்தது. செம்மரச் சாகுபடிக்கு செம்மண், செம்பொறை, செம்மணல் இருக்கும் நிலங்கள் மிகவும் ஏற்றவை. ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையான மழைக்காலம் நடவு செய்வதற்கு ஏற்றது. நடவு செய்யப்படும் நிலத்தின் வரப்புகளை மூன்றடி உயரத்துக்கு நன்கு உயர்த்தி, ஒவ்வொரு நிலத்திலும் பிறைவட்ட வடிவில் தண்ணீர் சேகரிப்பதற்குப் பள்ளத்தை உருவாக்க வேண்டும். பிறகு 10-க்கு 10 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 440 குழிகள் எடுக்க வேண்டும். இரண்டரை அடி நீள, அகல, ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழிக்குள் ஓரடி உயரத்துக்கு மேல் மண்ணை நிரப்பி, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஈரப்பதத்தைப் பொறுத்து உயிர்த்தண்ணீர் தேவைப்படுகிறதா என்று பார்த்துக் கொடுக்கலாம். பிறகு கிடைக்கும் மழைத் தண்ணீரைப் பொறுத்து கன்றுகள் வளரும்.

மூன்று ஆண்டுகளுக்கு மரத்தின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். பிறகு வேகமாகிவிடும். நடவு செய்யும் கன்றுகளில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிழைத்துவிடும். பட்டுப்போன செடிகளுக்கு பதிலாகப் புதிய கன்றுகளை அவ்வப்போதே நட்டுவிட வேண்டும். செம்மரத்தின் இலைகளை ஆடு மாடுகள் சாப்பிடும். அதனால், நான்கைந்து அடி உயரம் வளரும் வரை தோட்டத்தில் ஆடு மாடுகளால் கன்றுகளுக்குச் சேதாரம் ஏற்படாதபடி வளர்க்க வேண்டும். வேர் பிடித்தவுடன் சோற்றுக்கற்றாழையை மரத்தைச் சுற்றி வளர்க்கலாம். இது, கோடைக்காலங்களில் மரத்தின் அடியில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும். பக்கக் கணுவில் கிளைகள் வளர்ந்தால் கவாத்து செய்துவிட வேண்டும். செம்மரம் வளர்ந்து பலன் கொடுப்பதற்கு 25 ஆண்டுகள் ஆகும்.

செம்மரத்தின் தரம் முக்கியம்!

கோவை, மேட்டுப்பாளையத்திலுள்ள வனக்கல்லூரி விஞ்ஞானி மற்றும் வனத்துறை அதிகாரியிடம் செம்மரம் குறித்து திரட்டிய தகவல்கள் இங்கே கேள்வி - பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

செம்மரம் வளர்ப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமா?

“செம்மரம் மட்டுமல்ல. சந்தன மரம், வேங்கை, ரோஸ்வுட் என எந்த மரமாக இருந்தாலும் உங்கள் நிலத்தில் நட்டு வைத்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் சொல்லி, அதை அடங்கலில் சேர்க்கச் சொல்ல வேண்டும். நம் தோட்டத்திலிருந்து வெட்டி எடுத்துக்கொண்டு போகும்போதோ, ஏற்றுமதி செய்யும்போதோ இந்த ஆவணம்தான் கைகொடுக்கும்.’’

செம்மரத்தை யார் வாங்குவார்கள்?

``செம்மரத்துக்கு உள்நாட்டு வியாபாரம் மிகவும் குறைவு. வெளிநாடுகளுக்குத்தான் அதிகம் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் டிம்பர் மார்க்கெட்டிலிருக்கும் கம்பெனிகள் இதை வாங்குகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தனியார் நிலங்களில் செம்மரம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 5,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.’’

செம்மரத்துக்கான சந்தை எப்படி இருக்கிறது?

``செம்மரத்தின் உள்பகுதிதான் விற்பனைக்கு ஏற்றது. 20 முதல் 60 ஆண்டுகள் வரையிலான மரங்கள் மிகவும் ஏற்றவை. இந்தியாவில் டிம்பர் மார்க்கெட் மிகப்பெரியது. அதனால், டிம்பரில் செம்மரப் பயன்பாட்டைச் சேர்க்க முயன்று வருகிறோம். ஏற்றுமதிக்கு மூன்றுவிதமான அரசு நிறுவனங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஒரு விவசாயி இந்தச் சான்றுகளை வாங்கி ஏற்றுமதி செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தமிழ்நாட்டில் ஆறு லட்சம் மரங்களுக்கு மேல் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த மரங்களுக்கான விற்பனை வழிகளுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் செம்மரத்துக்கான ஒரு நல்ல சந்தை உருவாகும்.’’

செம்மரத்துக்கான தரம் எப்படி இருக்க வேண்டும்?

``ஒரு விவசாயி தன் நிலத்தில் செம்மரத்தை வளர்த்து, உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், யார் வாங்குகிறார்கள் என்பதில் இன்னும் தெளிவு இல்லை. செம்மரத்துக்கு அடர்த்தி முக்கியம். அதாவது 0.9 (900 கிலோ/கனமீட்டர்)), 1.0க்கு மேலே இருந்தால் மட்டுமே நல்ல விலை கிடைக்கும். காடுகளில் வளர்ந்த செம்மரத்தில் இந்த அடர்த்தி அளவு எளிதாக உள்ளது. விவசாய நிலங்களில் வளரும் மரங்களுக்கு 0.6, 0.7 என்ற அடர்த்திதான் இருக்கிறது. அதனால், இந்த விஷயங்களில் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். தரம் வாய்ந்த செம்மரத்தை வளர்த்தால் மட்டும்தான் சந்தையில் விற்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. எனவே நன்கு ஆலோசித்த பிறகு செம்மரச் சாகுபடியில் ஈடுபடுவது நல்லது. ஆனால், மற்ற மர வகைகளோடு ஒப்பிடும்போது செம்மரத்தின் விலை ஒரு டன், ஒரு லட்சம் விற்றால்கூட நல்ல லாபம் என்பது மறுக்க முடியாத உண்மை.’’

செம்மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?

``திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்ட வன விரிவாக்கக் கோட்டங்களில் தரமான செம்மரக் கன்றுகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தேவைப்படுவோர் முன்பதிவு அடிப்படையில் வாங்கிக்கொள்ளலாம்.

அதேசமயம் வாங்கிக் கொண்டு போய் சீக்கிரம் வளர்த்துவிட வேண்டும் என்பதற்காக அதிகம் தண்ணீர் கொடுக்காதீர்கள். தண்ணீர் அதிகம் கொடுத்து வளர்த்தால், மரத்தின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மரத்தின் பாதி பகுதிதான் விற்பனைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.’’

“மரங்கள் உங்களைக் காப்பாற்றும்!”

ர வேளாண் விஞ்ஞானி இ.ஆர்.ஆர்.சதாசிவத்திடம் பேசினோம். “மரங்கள் இல்லாவிட்டால் உலகில் உயிரினங்கள் வாழ முடியாது. எந்த நிலமாக இருந்தாலும், அதில் மரங்களை வளர்க்க முடியும். மர வளர்ப்புக்கு மழைத் தண்ணீரே போதுமானது. நீங்கள் மரங்களை வளர்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டால் போதும், நிம்மதியாக இருக்கலாம். அதன் பிறகு அந்த மரங்கள் உங்களைக் காப்பாற்றும். 63 ஆண்டுகளுக்கு முன்னரே செம்மரம் பற்றி ஆய்வு செய்து முடித்துவிட்டேன். ஆனால், அது மக்களிடம் போய்ச் சேர்வதற்குப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் முழுமையாக சென்று சேரவில்லை. அதனால்தான் என் பண்ணையிலேயே செம்மரம் உள்ளிட்ட பல வகை மரங்களை வளர்த்துவருகிறேன்.

 சதாசிவம்
சதாசிவம்

தஞ்சாவூர் மாவட்டம், மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு பசுமைக்காட்டையே உருவாக்கியிருக்கிறேன். ஓரடி நிலத்துக்குக் கீழே முழுக்கச் சுக்காம்பாறைதான். ஓணான்கூட முட்டை வைக்காது என்று சொல்லப்பட்ட அந்த நிலத்தில் இன்றைக்கு ஓணான், பல்லி, பாம்பு, முயல் என அனைத்து பிராணிகளும் நடமாடுகின்றன. சுற்றுவட்டாரத்தில் 500, 600 அடி ஆழத்தில் நீரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். என் பண்ணையில் 100 அடிக்குள்ளேயே தண்ணீர் கிடைக்கிறது. காரணம் மரங்கள்தான். மரத்தின் வேர்கள் நீரைத் தேக்கிவைப்பதற்கு உதவுகின்றன. அந்தப் பண்ணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்” என்றார் புன்னகையுடன்.