Published:Updated:

மரபு வழிக்கு மாற்றிய மாமனிதர்!

முனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
முனிசாமி

நினைவு

மரபு வழிக்கு மாற்றிய மாமனிதர்!

நினைவு

Published:Updated:
முனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
முனிசாமி
‘‘நம்மாழ்வார் ஐயாவை வழிகாட்டியாகவும், இயற்கை விவசாய விஞ்ஞானியாகவும் தான் மற்றவர்கள் பார்ப்பார்கள். ஆனால், நானோ என் குடும்பத்தின் மூத்தவராகவும் என் மனைவிக்குத் தந்தையாகவும், பிள்ளைகளுக்குத் தாத்தாவாகவும்தான் பார்க்கிறேன்” குரல் தழுதழுக்கப் பேசுகிறார் பெரியவர் முனிசாமி.

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான முனிசாமி மதுரை அய்யர் பங்களா பகுதியில் வசித்து வருகிறார். பணியாற்றிய காலத்தில் கிராமப்புற மக்களிடம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றியும் எடுத்துச் சொல்லி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் அரசு ஊழியராகப் பணியாற்றியவர்.

நம்மாழ்வாருடன்
நம்மாழ்வாருடன்

நம்மாழ்வாருடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நம்மிடம் பேசிய முனிசாமி, “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான் 1984-ல் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். காரியாப்பட்டி பகுதியில ரொம்ப வருஷம் வேலை பார்த்தேன். சின்ன வயசுலயிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு பற்றி இயல்பாகவே ஆர்வம் இருந்தது. அதனால வழக்கமான அரசு ஊழியராக இல்லாம, பணியாற்றிய இடங்கள்ல இயற்கை விவசாயம் தொடர்பா ஆலோசனைகள் சொல்லுவேன்.

கிராமங்களைச் சுற்றி வரும்போது ரசாயன உரங்களால் நிலம் பாழ்பட்டு வருவதைக் கண்டு மனசு வலிக்கும். ஒரு அரசு ஊழியனா இருந்துகிட்டு என்னால கவலைப்படுறதைத் தவிர வேற ஒண்ணும் பண்ண முடியல.

இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்க்கை முறை பற்றியே பேசிக்கிட்டு இருந்ததால என்னைப் பலபேர் கேலியா பார்த்தாங்க. ஆனா, நான் அதைப் பற்றிக் கவலைப்படல. இந்த நிலைமையிலதான் நம்மாழ்வார் ஐயாவைப் பற்றிப் பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுகிட்டேன். ஏதோ ஒரு உந்துதல்ல 2009-ம் வருஷம் அவரைப் போய்ப் பார்த்தேன். அதுக்கு பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு” என்றவர், தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.

முனிசாமி
முனிசாமி

“ரசாயன உரங்களால விவசாயம் வீணாப்போனது, நிலத்தடி நீர் இல்லாமப்போனது, சாப்பிடுற உணவே விஷமா மாறிப்போனது பத்தி எல்லோ ருக்கும் புரியுற மாதிரி ஐயா பேசுனாரு. மக்கள் மொழியில பேசுனதால படிக்காதவங்ககூட அவரோட கருத்துகளைப் புரிஞ்சுகிட்டாங்க.

அவரைப் பார்த்துத் தொடர்பு ஏற்படுத்திக்கிட்ட பிறகு, அடிக்கடி போய்ச் சந்திக்கிறதை வழக்கமாக்கி கிட்டேன். என்னுடைய கருத்துகள், உணர்வுகளைப் பத்தி அவர்கிட்ட சொல்வேன். அவரும் அதைக்கேட்டு ஆலோசனை சொல்வார். லாப நோக்கமில்லாத அமைப்பு களோட சேர்ந்து செயல் படணும்னுதான் ஐயா நினைச்சாரு. அப்படி யாரும் அமையாததால, அவர் ஆரம்பிச்ச அறக்கட்டளைக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்தேன். அப்போது அரசு ஊழியராக இருந்ததால, அவருடைய அமைப்பில் பொறுப்பு வகிக்க முடியல.

எப்ப மதுரைக்கு வந்தாலும் என் வீட்டுலதான் தங்குவார். நானும் அவருக்குத் தகுந்த மாதிரி, வீட்டு மாடியில தனி அறை, தனிச் சமையலறைன்னு ஏற்பாடு பண்ணி வெச்சிருந்தேன். இங்க வரும்போது பக்கத்துல உள்ள கிராமக்களுக்குப் போய் மக்கள்கிட்ட பேசுவாரு. இப்படி அவரோட தொடர்ந்து தொடர்புல இருந்ததால, ஒரு கட்டத்துல அவரை உறவினராகவே நினைக்க ஆரம்பிச் சுட்டேன்.

அவர் இறப்பதற்குக் கொஞ்ச நாள் முன்னாடிகூட எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனார். அதை இப்பவும் என்னால மறக்க முடியல’’ என்றவர், குரல் கம்ம அமைதியானார். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினார்.

‘‘எந்தவகையிலும் தன்னோட கொள்கையிலிருந்து மாற்றிக்கொள்ளாதவர். தற்சார்பு வாழ்க்கையையும், பாரம்பர்ய மருந்துகளையும் விட்டு விலகாதவர். அவர் உடல் நலமில்லாம இருந்தப்ப நாட்டுக்கோழிச் சாறு குடிக்கச் சொன்னேன். மறுத்துட்டாரு. நானும் அவரை மாதிரியே கடந்த 30 வருஷமா ஆங்கில மருந்துகளை எடுத்துக்கிறதில்ல. மரபுவழி மருந்துகளைத்தான் எடுத்துக்கிறேன்.

அவர் மதுரை வந்திருந்தப்ப சில தனியார் அமைப்புகள் அவருடைய திட்டங்களுக்கு ஸ்பான்சர் செய்றதாச் சொன்னாங்க. அவங்களோட நோக்கத்தைப் புரிஞ்சுகிட்டு மறுத்துட்டாரு. அவரு சொன்ன ஆலோசனைப்படிதான், என்னை மாதிரி கிராம அலுவலர்களை ஒருங்கிணைச்சு இயற்கை விவசாயத்தை எடுத்துச் சொல்லி, அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வெச்சேன். அவர் சொன்ன தற்சார்பு வாழ்வியல், இயற்கை வேளாண்மை முறைகளை நகரங்கள்ல வசிக்கும் மக்களும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனாலும், முழுமையா மாறல. ஐயாவின் கருத்துகளும் அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பின்பற்றி, அவர் விட்டுச் சென்ற பணியை நாம தொடரணும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.