Published:Updated:

3 ஏக்கர்... ரூ.1,47,000 லாபம்... பாரம்பர்ய நெல் சாகுபடியில் அசத்தும் அரிசி வியாபாரி!

நெல் வயலில் கெம்பு செட்டியார்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் கெம்பு செட்டியார்

மகசூல்

3 ஏக்கர்... ரூ.1,47,000 லாபம்... பாரம்பர்ய நெல் சாகுபடியில் அசத்தும் அரிசி வியாபாரி!

மகசூல்

Published:Updated:
நெல் வயலில் கெம்பு செட்டியார்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் கெம்பு செட்டியார்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெம்பு செட்டியார். அரிசி வியாபாரியான இவர், நாளடைவில் விவசாயியாக மாறியதோடு, இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்து கவனம் ஈர்க்கிறார். இவருடைய வயல் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கருவேப்பம்பூண்டியில் உள்ளது.

ஒரு மாலை வேளையில் இவரைச் சந்திக்கச் சென்றோம். நெல் அறுவடை செய்து முடித்த நிலையில் வயலில் ஆசுவாசமாக அமர்ந்து, காற்று வாங்கிக்கொண்டிருந்த கெம்பு செட்டியார் நம்மை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பக்கத்துல இருக்குற நீர்பெருத்தகரம்தான் எனக்குப் பூர்வீகம். 1982-ம் வருஷம் காஞ்சிபுரம் மாவட்டத்துல உள்ள இந்தக் கருவேப்பம்பூண்டிக்கு வந்து மளிகைக்கடை வெச்சேன். அதுல நான் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கல. விவசாயிகள்கிட்ட நெல்லை வாங்கி, அதை அரிசியாக்கி சென்னை ஆலந்தூர் பகுதியில விற்பனை செஞ்சேன். அதுல நல்ல லாபம் கிடைச்சது.

அரிசி வியாபாரம் மூலமா கிடைச்ச வருமானத்துல 1995-ம் வருஷம் இந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். நான் இந்த நிலத்தை வாங்கினப்போ ஒரு பாழடைஞ்ச கிணறும், ரெண்டு ஈச்ச மரங்களும்தான் இருந்துச்சு. கிணத்த நல்லா தூர்வாரி, ஆழப்படுத்தி மோட்டார் மூலம் பாசனத்துக்கு ஏற்பாடு செஞ்சு, விவசாயத்தைத் தொடங்கினேன்.

நெல் வயலில் கெம்பு செட்டியார்
நெல் வயலில் கெம்பு செட்டியார்

ஆரம்பத்துல கரும்பு சாகுபடி செஞ்சு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிக்கிட்டு இருந்தேன். கரும்பு சாகுபடியில உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏத்த லாபம் கிடைக்காததால அதைக் கைவிட்டுட்டு நெல் சாகுபடிக்கு மாறினேன்.

நம்மாழ்வாரை சந்திச்சேன்

தொடர்ச்சியா பல வருஷங்கள், ரசாயன உரங்கள போட்டுதான் நெல் விளைவிச்சேன். ஒருமுறை காஞ்சிபுரத்துல இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில நடந்த இயற்கை விவசாயக் கூட்டத்துல கலந்துக்குற வாய்ப்பு யதார்த்தமா அமைஞ்சது. அதுக்குப் பிறகு வானகத்துல நம்மாழ்வாரை சந்திச்சேன். இயற்கை விவசாயம் எப்படிப் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்கன்னு கேட்டேன். ‘நிலத்துக்கு ரசாயன உரங்கள கொடுக்கிறதை முதல்ல நிறுத்து... ரெண்டு நாட்டு மாடுகளை வாங்கிக்கோ... சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயார் பண்ணி பயிர்களுக்குக் கொடு... பூச்சித்தாக்குதல்கள் ஏற்படாம தடுக்க, வேப்பங்கொட்டை கரைசல் தெளி. இப்போதைக்கு இதைச் செஞ்சா போதும். மீதியை பிறகு பார்த்துக்கலாம்’னு சொன்ன நம்மாழ்வார், இயற்கை இடுபொருள்களை எப்படித் தயார் செய்யணும், எப்பெல்லாம் இதைக் கொடுக்கணும்னு விளக்கமா சொல்லி என்னை அனுப்பி வச்சார்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

மனைவி தந்த ஊக்கம்

“இயற்கை விவசாயத்துக்கு மாறிய முதல் வருஷம் பாரம்பர்ய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு வெறும் 6 மூட்டை நெல்தான் மகசூல் கிடைச்சது. அதனால ரொம்பவே வெறுத்துப் போய்ட்டேன். போட்ட முதலுக்குக்கூட விளைச் சல் தேறலயேனு நொந்துபோய் என் மனைவிகிட்ட புலம்பினேன். ‘இந்தத் தடவை லாபம் கிடைக் கலைன்னா பரவாயில்லை. அடுத்த தடவை கண்டிப்பா லாபம் கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருக்கு. இயற்கை விவசாயத்தைத் தொடர்ச்சியா முயற்சி செஞ்சிப் பார்ப்போம்’னு என் மனைவி சொன்னாங்க. அது எனக்கு ரொம்பவே ஊக்கமா இருந்துச்சு.

பாரம்பர்ய நெல்லுடன்
பாரம்பர்ய நெல்லுடன்

பயிர்களுக்குப் பஞ்சகவ்யா, அமுதகரைசல், மீன் அமிலம் கொடுக்குறதோட மட்டு மல்லாம... நிலத்தை நல்லா வளப்படுத்தினா, கண்டிப்பா இதுல நம்மால ஜெயிக்க முடியும்ங் கற ஒரு ஞானதோயமும் ஏற்பட்டுச்சு. அடியுரமா ஏக்கருக்கு அஞ்சு டன் எரு போட்டேன். தக்கைப் பூண்டு, சணப்பு, உளுந்து, பச்சைப்பயிறு, காராமணி எல்லாம் கலந்து பசுந்தாள் விதைப்பு செஞ்சு, நல்லா தழைகள் வந்து பூ பூக்குற சமயத்துல மடக்கி உழுதேன். எண்ணெய் வித்துப் பயிர்களும் மண்ணுக்கு நிறைய சத்துக்களைக் கொடுக்கும்ங்கறதுனால எள்ளு, நிலக்கடலை, ஆமணக்கு விதைகளை ஒண்ணா கலந்து விதைச்சு, நிறைய தழைகள் வந்த பிறகு மடக்கி உழுதேன். மண்புழு உரம் விலைக்கு வாங்கிட்டு வந்து போட்டேன். அடுத்தடுத்த வருஷங்கள்ல படிப்படியா மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது. நாளடைவுல நிலத்துலயே மண்புழுக்கள் உண்டானதால மண்புழு உரம் வாங்குற தேவையும் இல்லாம போச்சு” என்றவர், தற்போது விளைவித்த பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி அனுபவம் குறித்து விவரித்தார்.

அட்டவணை
அட்டவணை

“கோடை பட்டத்துல 2 ஏக்கர்ல கருங்குறுவையும் ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சலிச் சம்பாவும் சாகுபடி செஞ்சேன். கருங்குறுவையில 2 ஏக்கருக்கும் சேர்த்து 35 மூட்டை (80 கிலோ மூட்டை) கிடைச்சது. இதை அரிசியா அரைச்சோம்னா 1,750 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் வீதம் 1,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல பயிர் பண்ணின ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவுல 22 மூட்டை நெல் மகசூல் கிடைச்சிருக்கு. இதை அரிசியா அரைச்சோம்னா 1,100 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 75 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 82,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணை, வைக்கோல் விலை மதிப்பு 13,000 ரூபாய். ஆக மொத்தம் 3 ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலமா 2,35,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக 1,47,500 ரூபாய் லாபமா கிடைக்கும்.

எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க

ரொம்ப வருஷமா அரிசி வியாபாரம் செஞ்சுகிட்டு இருக்குறதுனால, எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க. பாரம்பர்ய அரிசியை ரொம்பவே விரும்பி வாங்குறாங்க. இதனால விற்பனையில எந்த ஒரு சிரமும் இல்லை. இயற்கை விவசாயத்துனால நிறைவான லாபமும், ஆரோக்கியமான உணவை விளைவிக் கிறோம்ங்கற ஆத்ம திருப்தியும் கிடைக்குது’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.


தொடர்புக்கு, கெம்பு செட்டியார்,

செல்போன்: 95008 38020.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய, கெம்பு செட்டியார் சொல்லும் செயல்முறைகள் பாடமாக...

நெல் வயலில் கெம்பு செட்டியார்
நெல் வயலில் கெம்பு செட்டியார்

நாற்று உற்பத்தி

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய 5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அடியுரமாக, எருக்கன், ஆடாதொடை, நொச்சி, வேம்பு உள்ளிட்ட இலைதழைகள் கலந்து 100 கிலோ இட வேண்டும். தண்ணீர் கட்டி சேத்துழவு செய்து அடுத்த 15 நாள்களில் நாற்றங்கால் நன்கு புளித்த பிறகு, 100 கிலோ எரு போட்டு, உழவு செய்து மண்ணை சமப்படுத்தி, 20 கிலோ விதைநெல் தெளிக்க வேண்டும். நாற்றுகள் வளரத் தொடங்கிய பிறகு பூச்சித்தாக்குதல்கள் தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 23 - 25 நாள்களில் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

வைக்கோல்
வைக்கோல்

சாகுபடி நிலம்

நடவு செய்வதற்கான நிலத்தை முன்கூட்டியே தயார் செய்யவேண்டும். அதாவது நடவு தேதியை முடிவு செய்து அதற்கேற்றார்போல நிலத்தை தயாரிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்டி சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு விதைகள் கலந்து 10 கிலோ தெளிக்க வேண்டும். 45-ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். 15 நாள்கள் கழித்து, 2 டன் எரு போட்டு மீண்டும் சேற்றுழவு செய்து, நிலத்தை நன்கு சமப்படுத்தி, தலா முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு 3 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் களை எடுக்க வேண்டும். 18-ம் நாள் 50 கிலோ ஆட்டு எருவோடு, தலா 3 கிலோ சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து வயல் முழுவதும் பரவலாகத் தூவ வேண்டும். 25-ம் நாள் 100 லிட்டர் தண்ணீர்ல் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் அமுதகரைல் கலந்து விட வேண்டும். 40-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மூலிகை பூச்சி விரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் இரண்டாம் களை எடுக்க வேண்டும். 50-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கருங்குறுவை 130 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஆத்தூர் கிச்சிலிச்சம்பா 140 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

அரிசி
அரிசி
சிவப்பரிசி
சிவப்பரிசி
சிவப்பரிசி
சிவப்பரிசி

6 மாதங்களுக்குப் பிறகுதான் அரவை

அறுவடை செய்த நெல்லை 6- 9 மாதங்கள் இருப்பு வைத்திருந்து அரைத்தால், அரிசி தரமாக இருக்கும். சமைக்கும்போது குலைந்து போகாமல் இருக்கும்.

வயலுக்கு வரும் கொக்குகள்!

‘‘பல வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்குறதுனால என்னோட வயல்ல மண்புழுக்கள் அதிகமா இருக்கு. இதைச் சாப்பிட நிறைய கொக்குகள் வருது. இதனால இளம் நெற்பயிர்கள், கொக்குகளோட கால்கள்ல சிக்கி சேதமடையுது. இதனால கொக்குகளை விரட்ட, ஒரு தகர டப்பாவுல குச்சியால அடிச்சு சத்தம் எழுப்புவேன்... கொக்குகள் ஓடிப் போயிடும். நெற்பயிர்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகும்கூட கொக்குகள் வரும். ஆனா, பயிர்களுக்குப் பாதிப்பு இருக்காது. தீமை செய்ற பூச்சிகளைக் கொக்குகள் புடிச்சி சாப்பிட்டுவிடும்’’ என்கிறார் கெம்பு செட்டியார்.