Published:Updated:

உணவே உயிர்! #MyVikatan

Rice
News
Rice

எங்கள் வீட்டில் மரத்தாலான வடிதட்டு ஒன்று நீண்ட நாட்களாக உபயோகத்தில் இருந்தது. ஒரு முறை எனது சின்னக்காவுடன் ஏதோ சண்டை போட்டு, கோபத்தில் அந்த வடிதட்டை எடுத்துக் கீழே அடித்ததில் அது இரண்டு மூன்று துண்டுகளாகிப் போனது.அந்தக் குற்ற உணர்வு இன்று வரை மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.

உணவே உயிர்! #MyVikatan

எங்கள் வீட்டில் மரத்தாலான வடிதட்டு ஒன்று நீண்ட நாட்களாக உபயோகத்தில் இருந்தது. ஒரு முறை எனது சின்னக்காவுடன் ஏதோ சண்டை போட்டு, கோபத்தில் அந்த வடிதட்டை எடுத்துக் கீழே அடித்ததில் அது இரண்டு மூன்று துண்டுகளாகிப் போனது.அந்தக் குற்ற உணர்வு இன்று வரை மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
Rice
News
Rice

‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்று உணவின் வலிமையை உலகுக்கு உணர்த்துவார் தனது புற நானூற்றுப் பாடல் (எண்:182) மூலம், கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி. உணவு, உயிர் வாழத் தேவைதான் என்றாலும் பகுத்துண்டு வாழ்தலே சிறப்பு என்பதையும் கூடவே உணர்த்தும் விதமாக,

‘உண்டாலம்ம இவ்வுலகம்,இந்திரர்

அமிழ்தம் இவையதாயினும் இனிது

எனத் தமியர் உண்டலும் இலரே!’

என்று மேலும் புகழ் சேர்ப்பார். அதாவது இந்திரன் வழங்கும் அமிழ்தம் மனிதர்கள் பல காலம் வாழ வழி கோலுவதாக இருந்தாலுங்கூட அதனைத் தனியாகச் சாப்பிட்டு வாழ நினைக்காமல் சுற்றத்துடன் பகிர்ந்து உண்ணவே விரும்புவராம் உயர்ந்தோர்.(இந்தப் புலவர், பாண்டிய மன்னர் அவையை அலங்கரித்ததாகவும்,மன்னர் கடாரம்,சாவகம், ஈழம் முதலிய நாடுகளைப் பிடிக்கக் கடற்பயணம் மேற்கொண்டபோது இவரும் உடன் சென்றதாகவும்,விபத்தில் சிக்கிக் கடலில் உயிர் நீத்ததால் கடலுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு இயம்புகிறது.)

இதை எழுதிக் கொண்டிருக்கையில் நம் முப்படைத் தளபதி பிபின் ராவத்,தனது மனைவி மற்றும் 12 பேருடன் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி,தீயில் கருகி இறந்த செய்தியால் நம் இதயம் விம்முகிறது. எக்காலத்திலும் விபத்தும் இறப்பும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் போலும்.

திருமூலரும் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’ என்பார்.உடம்பை வளர்க்க உணவே பிரதானம்.சுவரோ, தாளோ இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?அதைப்போல்தான் உயிர் உறைய, உடம்பு முக்கியமாகிறது. அந்த உடம்பின் இருப்புக்கும் வளர்ப்புக்கும் உயிர்ப்புக்கும் உணவே காரணமாகிறது. அந்த உணவை நமக்கு வழங்க, பல வகை உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், பூமியில் வாழும் மக்கட் தொகையில் பெரும்பாலானோரின் பிரதான உணவு எது என்று தேடியபோது, கிடைத்த விடை அரிசி. உலகத்தில் இருநூற்றுச் சொச்சம் நாடுகள் உண்டென்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அவற்றில் பாதிக்கு மேல்,அதாவது 117 நாடுகளில் அரிசி விளைவிக்கப்படுவதாகவும், 81 நாடுகளில் மிக அதிகமாக விளைவிக்கப்பட்டு,விளைவிக்க முடியாத மற்றைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அது மேலும் கூறுகிறது. ஆனால் அந்த அரிசி உணவே ‘டயாபடீஸ்’ என்னும் சர்க்கரை வியாதிக்கு அதிகக் காரணம் என்று தற்போதைய மருத்துவ உலகம் கூறி, அதனை விலக்கக் கூறி வருவதால் அரிசியைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவல் கூடி விட்டது. என்னைப்போல் உங்களுக்கும் அதனைப்பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள். ஒன்றாகவே அரிசி உலகினுள் சென்று பார்ப்போம்.

Rice
Rice

அதோ ஒரு பாடல் சத்தம்.ம்…ம்..உங்களுக்கும் கேட்கிறதா? அதனைக் கேட்டு விட்டே செல்வோமே.

‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா..

நேற்று வெச்ச மீன் கொழம்பு

என்னை இழுக்குதையா..

நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு

வந்து மயக்குதையா..

பச்சரிசிச் சோறு..

உப்புக் கருவாடு…’

சார்..போதும் வாங்க… இப்பவே வாய்க்குள்ள உமிழ்நீர் சொரக்க ஆரம்பிச்சிடிச்சா…

எனக்குந்தான் சார். எடுத்த வேலையை செஞ்சு முடிச்சிட்டு… ஆற..அமர..உட்கார்ந்து.. ஊர்க்கதை பேசியபடி.. ஒரு கட்டுக் கட்டுவோம்…வாங்க.. பாருங்க..இந்தப் பாடலில் தினமும் நெல்லுச்சோறு,அதாவது அரிசிச் சாதத்தைச் சாப்பிடுவதை ஒரு வரமாகக் கருதுவதாகவே தோன்றுகிறது. உண்மையும் அதுதான்.

நெல் விளையாத,வானம் பார்த்த பூமியுள்ள பகுதிகளில்,மற்றைய புஞ்சைத் தானியங்களை விளைவிப்பவர்களுக்கு, நிதமும் அரிசிச் சோறு என்பது ஒரு கனவே.

எம்மைப் போன்று டெல்டா பகுதியில் பிறந்தவர்களுக்கு என்றைக்கும் அரிசிச் சோறுதான்.உண்மையில் டெல்டா வாசிகள் கொடுத்து வைத்தவர்களே.

அரிசியை உற்பத்தி செய்து, உலகத்தாரின் பசிப் பிணியைப் போக்கி வரும் நெல், ஒரு புல் வகைத் தாவரம்.’ஒரைசா சடிவா’ (Oryza Sativa)என்றழைக்கப்படும் இத் தாவரம் கி.மு 10000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தாய்லாந்தின் கொரட்(korat) பகுதியிலுள்ள’நாண் நோக் தா’(Non Nok Tha)என்ற இடத்தில் பயிர் செய்யப்பட்டதாகச் சொல்கிறது அரிசிப் பஞ்சாங்கம்.(Rice Almanac- 4 th edition) தாய்லாந்து,மியான்மர் எல்லையில் உள்ள ஆவிக் குகை (spirit cave)யிலும் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றனவாம்.சீனாவின் ‘யாங்க்ட்சே’ மற்றும் ‘மேல் ஹுவாய்’ (upper huai) ஆற்றுத் தீரங்களிலும் ஏறக்குறைய அக்காலக் கட்டத்திலிருந்தே நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது.

மாவீரர் அலக்சாண்டரின் நாடு பிடிக்கும் படல முடிவில்(344-324 BC) மெடிடரேனியன் பகுதியில் நெல் விளைவிக்க ஆரம்பித்தார்களாம். ஆசியாவிலுள்ள நாடுகளில் நெல் அதிகமாகப் பயிராகிறதாம். சீனா, இந்தியா, இலங்கை என்று ஆசியாவில் 10 நாடுகள்;ஆப்பிரிக்காவின் துணை சஹாரன் பகுதியில் 5; லத்தீன்

அமெரிக்கப் பகுதியில் கொலம்பியா தொடங்கி,வெனிசூலா முடிய 66 நாடுகள் என உலகின் 81 நாடுகள் நெல்லை அதிகமாகப் பயிர் செய்கின்றன.

நெல்லைக் கொட்டுவதற்கு முன்னர் அவை நீச்சல்குளங்களாகக் காட்சியளிக்கும். எங்கள் சின்ன வயதில் நாங்கள் பார்த்த ‘ஸ்விம்மிங் பூல்கள்’ அவைதாம். என் தந்தையார் இரண்டு மில்களிலும் மாறி மாறிக் கணக்கராகப் பணியாற்றியதால், அவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும் நாங்கள், இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவோம்!

சரி.அரிசி மிகப் பழங்காலத்திலிருந்தே மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதும் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதும் தெளிவாகிறது. எந்தெந்த விதங்களில் அது உயர்வானது என்று பார்ப்போமே.

- உடலுக்கு ஆரோக்கியமான எடையைத் தருகிறது.

- பிரவுன் அரிசி சாப்பிடுபவர்கள் நாட்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

- வெள்ளை அரிசி அதிக சக்தியையும்,உடற்பயிற்சிக்குப் பிறகு க்ளைகோஜன் லெவல் சீராகவும் உதவுகிறது.

- பொதுவாகவே அரிசி எளிதாக ஜீரணமாகி விடுகிறது.

நாங்கள் சிறு பிராயத்தில் பெரும்பாலும் மூன்று வேளையும் அரிசி உணவைத்தான் சாப்பிட்டோம்.அதிலும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.எங்கள் தந்தையாருடன்,நாங்கள் அண்ணன்-தம்பி நான்கு பேரும் ஒன்றாக, வரிசையாக அமர்ந்து சாப்பிட்ட நாட்கள்தான் எவ்வளவு இனிமையானவை. 60 ஆண்டுகள் போன பிறகும் அந்த இனிய நினைவுகள் மட்டும் இளமையாக மனதில்!

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்று ஆரம்பித்து,பாரியின் மகளிர் பாடியதைப் போல்,இன்றைக்கு என் தந்தையாரும் இல்லை..மூத்த சகோதரரும் இல்லை... அன்னமிட்ட கைகளுக்குச் சொந்தக்காரரான என் தாயும் இல்லை. பாரியின் பறம்பு மலையும் இல்லாது போனது போல், அந்தப் பழைய வீடும் இல்லை. நினைவுகள் மட்டும் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஆனால், எங்களுக்கு எந்தவித உடல் எடைக் குறைபாடும் ஏற்பட்டதில்லை.

எங்கள் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் ‘பாய்ல்டு ரைஸ்’ தான். அதாவது நெல்லைத் தூசிகள் நீக்கி, நன்கு காய வைத்து பத்தாயம்,குருது,தொம்பக் கூடு போன்றவற்றில் சேமித்து வைத்து விடுவார்கள்.(பத்தாயம் என்பது மரத்தாலான,சதுர அல்லது செவ்வக அமைப்பு. அவரவர் வீட்டுத் தேவைகளுக்கேற்ற வகையில் தச்சர்களைக் கொண்டு செய்து கொள்வார்கள். பல அடுக்குகளாக இருக்கும்.கீழே பூமியில் 4,6,8,10 என்று கால்கள் இருக்கும்.அதன்மேல் வலுவான பலகை இருக்கும்.அப்பலகைதான் நெல்லைத் தாங்குவது.மேலே மூடி இருக்கும்.மூடியிலுள்ள சிறு திறப்பு மூலம் நெல்லைக் கொட்டுவார்கள்.பின்னர் அதனைப் பூட்டி வைத்து விடுவார்கள்.நெல்லை எடுப்பதற்கு பக்கவாட்டில் உள்ள அடிப்பலகையில் கண்கள் போன்று இரண்டு திறப்புக்கள் இருக்கும்.அதனைத்திறந்து நெல் எடுத்த பின்னர், அதனையும் பூட்டி வைத்து விடுவார்கள். அந்தக் காலத்தில் விவசாய வேலைகளுக்குக் கூலியாக நெல்லைத்தான் கொடுப்பார்கள். பத்தாயத்தில் நெல் குறைந்து விட்டால் சிறுவர்களை உள்ளே இறக்கி விட்டு,நெல்லைத் தள்ளச்செய்து,கண் போன்ற அமைப்பின் மூலம் வெளியே கொண்டு வரச் செய்வார்கள்.

Rice
Rice

நான் சிறுவனாக இருந்த போது எனது உறவினர் (தாத்தா) பட்டாமணியராக இருந்தார்.பத்தாயத்தில் ஏற என்னிடம் பதமாகப்பேசி அழைத்துச் சென்று,ஓர் அரிக்கேன் விளக்கைக் கையில் கொடுத்து உள்ளே இறக்கி விடுவார்.நெல் நெடியும்,உள்ளிருக்கும் கரப்பான் பூச்சிகளும் பயமுறுத்தும்.குருது என்பது வைக்கோல் மற்றும் மண் பூச்சால் செய்யப்படுவது.சில வீடுகளில் அதற்கு பெயிண்ட் அடித்து வைத்திருப்பார்கள்.எட்டடி,பத்தடி உயரத்தில் இரு பிரிவாக இருக்கும்.பத்தாயம் போலவே மேலே நெல்லைக் கொட்டவும்,இரு கண்கள் போன்ற பகுதிகளால் எடுக்கவும் வசதி உண்டு.இதில் உள் இறங்கவெல்லாம் முடியாது.நெல்

வரும் பகுதியைக் கொட்டங்கச்சிகளால் மூடி, களி மண்ணால் பூசி வைத்து விடுவார்கள்.தொம்பக் கூடு என்பது மூங்கில் மற்றும் இளம் நொச்சிக் குச்சிகளால் பின்னப்படுவது.அதன் மேல், காற்று புகாமல் இருக்க பசுஞ்சாணத்தால் மெழுகி விடுவார்கள்.இதில் சிறிய அளவே சேமிக்க இயலும்.)

சேமிக்கும்போது,அதனுடன் ஈரமில்லாத வேப்பந்தழை,நொச்சி இலை ஆகியவற்றையும் போட்டு விடுவார்கள்.பூச்சிகள் அண்டாமலிருக்க எளிய வழி அது.தேவைப்படும்போது வேண்டிய அளவில் எடுத்து, பெரிய தொட்டிகளில் ஊற வைத்து விடுவார்கள்.தேவையான நேரம் ஊறிய பிறகு, பெரும் பானைகளில் நெல்லை வேக வைப்பார்கள்.வெந்த நெல்லைச் சூரிய ஒளியில் காய வைப்பார்கள்.பதமாகக் காய்ந்த பிறகு சாக்குகளில் கட்டி ‘ரைஸ் மில்’லுக்கு எடுத்துச் சென்று அரைத்து வருவார்கள்.

அந்தக் காலத்தில் எங்கள் பக்கத்து ஊரில் இரண்டு ரைஸ் மில்கள் இருந்தன. அங்கு நெல்லை ஊற வைக்கச் சிமெண்டாலான பெரிய தொட்டிகள் இருக்கும். 10’x8’ அளவில் 8 அடி ஆழத்திற்கு 4,5 இருக்கும். அதில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்புவார்கள். நெல்லைக் கொட்டுவதற்கு முன்னர் அவை நீச்சல் குளங்களாகக் காட்சியளிக்கும். எங்கள் சின்ன வயதில் நாங்கள் பார்த்த ‘ஸ்விம்மிங் பூல்கள்’ அவைதாம். என் தந்தையார் இரண்டு மில்களிலும் மாறி,மாறிக் கணக்கராகப் பணியாற்றியதால், அவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும் நாங்கள், இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவோம். உற்சாகம் கரை புரண்டோடிய அந்த நாட்களை இனி பெற முடியாது என்பதால், அந்த நாட்களை அசை போட்டுப் பார்த்து மகிழச்சியடைய வேண்டியதுதான்.

திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள கட்டிமேடு கிராமத்தில் ‘நெல் திருவிழா’ நடத்திப் பாரம்பரிய நெல் விதைகளைச் சேமித்து வழங்கிய ‘நெல் ஜெயராமன்’ அவர்களை இந்த நேரத்தில் நாம் நினைக்காமல் இருக்க முடியாது.

அரைப்பது என்பது அரிசி, உமி, தவிடு என்று தனித்தனியாகப் பிரிப்பதுதான்.வந்த அரிசியைக் கல்,மண் நீக்க சல்லடைகளில் ஓட விடுவார்கள். இதற்குத் தான் ‘புழுங்கலரிசி’ என்று பெயர். இந்தப் புழுங்கல் அரிசியைத்தான் சமையலுக்கு உபயோகிப்பார்கள்.எங்கள் வீட்டில் ஒவ்வொரு வேளைக்கும் பத்து பேர் சாப்பிட வேண்டியிருந்ததால் பெரிய பானையில் நீரை வைத்து, அது கொதித்ததும் அதில் அரிசியைப்போட்டு, நன்கு வெந்ததும், வடி தட்டை அப்பானையின் வாயில் வைத்து வடித்துக் கவிழ்த்து வைத்து விடுவார்கள்.கஞ்சி முழுதுமாக வெளியேறிய பிறகே நிமிர்த்து வைப்பார்கள்.அந்த வடிந்த கஞ்சியில் சிறிது உப்பைப் போட்டு இளஞ்சூட்டில் குடித்தால் நன்றாகவும் இருக்கும்;உடலுக்கு உறுதியும் சேரும்.இப்போதுள்ள தலை முறைக்கு வடி கஞ்சியே தெரியாது.

எங்கள் வீட்டில் மரத்தாலான வடிதட்டு ஒன்று நீண்ட நாட்களாக உபயோகத்தில் இருந்தது.ஒரு முறை எனது சின்னக்காவுடன் ஏதோ சண்டை போட்டு,கோபத்தில் அந்த வடிதட்டை எடுத்துக் கீழே அடித்ததில் அது இரண்டு மூன்று துண்டுகளாகிப் போனது.அந்தக் குற்ற உணர்வு இன்று வரை மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.

நாங்கள் புழுங்கலரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டதாலோ என்னவோ எங்களில் யாருக்கும் நாட்பட்ட நோய்கள் ஏதும் வந்ததில்லை. பின்னாளில் நான் ம.செ.ஆ துறையில் பொறுப்பில் இருந்தபோது,’ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வழங்க என்ன செய்யலாம்?’ என்ற ஓர் ஆய்வை எடுத்தோம்.தற்போதைய தரங்குன்றிய அரிசிக்குக் காரணமென்ன என்பதையும் ஆய்ந்தோம்.மதுரைப் பகுதியில் அதிக அரிசி ரேஷனுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டதால் அங்கு சென்று களப்பணி மேற்கொண்டோம்.’நெல்லைப் போதுமான நேரம்

ஊற வைப்பதில்லை’ என்பதும், தரமற்ற அரிசிக்குக் காரணம் அதுவும் என்பதையும் அறிந்தோம். எங்கள் களப்பணி நாட்களில் பல சுவாரசியங்கள் நடைபெறும்.எனது நண்பர் ஒருவர் இரவில் அரிசிச்சோறு சாப்பிட்டால்தான் தனக்குத் தூக்கம் வரும் என்று கூற, ஈரோட்டில் இரவில் சாப்பாடு போடும் ஓட்டல் தேடி அலைந்தது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது.

Rice
Rice

பொங்கல் சமயத்தில் எங்கள் வீட்டில் போகிப்பண்டிகையன்றே பொங்கல் விழா ஆரம்பித்து விடும்.அன்றிரவு வெண்பொங்கல் செய்வார்கள்.அடுத்த நாள் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று தூள் பறக்கும். இவையெல்லாம் பச்சரிசியில் செய்யப்படுவதால், எப்பொழுது புழுங்கலரிச் சாதம் சாப்பிடுவோம் என்றிருக்கும். சேர்ந்தாற்போல் ஐந்தாறு வேளை புழுங்கலரிசிச் சோறு இல்லையென்றாலே போரடிக்கும்.அந்தப் போரைப் போக்கும் விதமாக, மாட்டுப் பொங்கலன்று மதியம் ஆட்டுக்கறியை புழுங்கலரிசிச் சோற்றுடன் ஒரு வெட்டு வெட்டி விட்டே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவோம்.

அரிசிகளின் வகைகள் என்று பார்த்தால்…அப்பப்பா! ஆயிரக் கணக்கில் உண்டு என்கிறார்கள்.பச்சரிசி, புழுங்கலரிசி, பாசுமதி அரிசி ஆகியவற்றையே நாம் அதிகமாக உணவுக்குப் பயன் படுத்துகிறோம். வகைகள் என்று வருகின்ற போது மாப்பிள்ளை சம்பா, கறுங்குருவை,காட்டுயானம், சிவப்பரிசி, அன்னமழகி அரிசி, கல்லுருண்டை சம்பா, காடைச் சம்பா, காளான் சம்பா, கிச்சலிச் சம்பா என்று நீண்டுகொண்டே போகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி மகத்துவம் உண்டு என்று கூறப் படுகிறது.மாப்பிள்ளைச் சம்பா இளம் வயதினருக்கு மிகவும் ஏற்றது என்று சொல்லப்படுகிறது.

திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள கட்டிமேடு கிராமத்தில் ‘நெல் திருவிழா’ நடத்திப் பாரம்பரிய நெல் விதைகளைச் சேமித்து வழங்கிய ‘நெல் ஜெயராமன்’ அவர்களை இந்த நேரத்தில் நாம் நினைக்காமல் இருக்க முடியாது.

ஊட்டச்சத்து உண்மைகள்(nutrition facts) என்று பார்க்கையில்,100 கிராம் வெள்ளையரிசி 130 கலோரி சக்தி தருகிறதாம். கொழுப்பு,கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியவை மிகக் குறைவாகவே இருக்க,பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் B6, மெக்னீசியம், இரும்பு ஆகியவை அதிக அளவில் உள்ளனவாம். இருப்பு வைத்துக் கொள்வது, அதாங்க ஸ்டோரேஜ் என்று சொல்கிறோமே, அந்த விதத்தில் பார்த்தால் ,உரிய முறையில்,ஈரப்பதமின்றி பாதுகாப்பாக வைத்திருந்தால் அரிசி நீண்ட காலத்திற்குக் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

பாரீசின் அந்தத் தெருவில் நடந்து செல்கையில், நமது சென்னையின் கடைத் தெருவில் நடந்து செல்வது போலவே இருக்கும். ஏனெனில், அந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான கடைகளின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாகவே இருக்கும்.

அரிசி இருப்பு வைத்துக் கொள்வதற்கென்று எங்கள் வீட்டில் சுமார் 3 அடி உயரமும், அந்த அளவுக்குச் சுற்றளவும் கொண்ட இரண்டு கூன்கள் இருந்தன. இப்போதெல்லாம் கீழடி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்படும் ‘தாழி’களை அவை ஒத்திருக்கும்.மண்ணால் செய்யப்பட்டு சுடப்பட்ட அவற்றைச் சுற்றி சிமெண்ட் கலவையைப் பூசி விடுவார்கள்- மேலும் பாதுகாப்புக் கருதி.நெல்லை ரைஸ் மில்லில் அரைத்துக் கொண்டு வந்ததும், மேலும் கல் மண் இன்றிக் ‘கை பார்த்து’ (கை பார்ப்பது என்பது தானியங்களை முறத்திலோ அல்லது பெரிய தாம்பாலங்களிலே பரப்பி,ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி, சின்னஞ்சிறு தூசுகளையும் நீக்குவதாகும்.)சுத்தம் செய்த பிறகு அவற்றில் கொட்டி வைத்து மூடி வைத்து விடுவார்கள்.கல் உப்பைச் சிறு துணிகளில் முடிந்து உள்ளே போட்டு வைப்பார்கள்-புழு, பூச்சியைத் தவிர்க்க. நாம் முன்பே பார்த்துபோல், உலகின் மக்கட்தொகையில் பாதிக்கும் அதிகமானோரின் முக்கிய உணவு அரிசியே.இப்பூவுலகில் ஏழைகளும், உழைப்பாளிகளும் பசியாறி நிம்மதியுடன் வாழ்வதற்கு, எளிய விலையில் கிடைக்கின்ற அரிசியே மூல காரணம்.’அவனன்றி அணுவும் அசையாது’ என்பது போல்,’அரிசியின்றி இந்த அகிலம் இல்லை’ என்று சொன்னால்,அது முழுவதும் உண்மையே. இன்று,நேற்றல்ல.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அரிசிதான் அண்டத்தை வாழ வைத்து வருகிறது.

அரிசிச் சோறு இருக்கிறதே, அது எதனுடனும் எளிதாகக் கூட்டணி அமைக்க வல்லது.அனைவருடனும் ஒத்துப் போகும் ‘ஒற்றுமைக் குணம்’ ஓங்கப்பெற்றது. உலகெங்கும் வியாபித்திருக்கிற சிக்கன், மட்டனாகட்டும், வெஜிடேரியனில், பூவுலகம் பூராவிலுமுள்ள பூசணிக்காய் (பறங்கிக் காய்), வெண்டைக் காய், இதரக் காய்களாகட்டும்... எல்லாவற்றுடனும் எளிதில் ஐக்கியமாகி விடும் அற்புதக் குணம் அரிசிச் சோற்றுக்குண்டு.

இதை எழுதுகையில் நமது பேராவூரணியில் ஒருமுறை சாப்பிட்ட விருந்து இப்பொழுதும் மனதை நிறைத்து,வாயில் எச்சிலை ஊறச் செய்கிறது.அந்த மறக்க முடியாத விருந்தில் அசைவ உணவுகளே அதிகம் பரிமாறப்பட்டன.

- கோழி வறுவல்-கோழிக் குழம்பு,மட்டன் வறுவல்-மட்டன் குழம்பு,நண்டு வறுவல்- குழம்பு, வஞ்சிரம் வறுவல்-குழம்பு,எரால் வறுவல்-குழம்பு,முட்டை வறுவல்-ஆம்லெட் என்று இன்னும் பல ஐயிட்டங்களுடன் அசத்தலான அந்த விருந்தை இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியப்பட வைக்கிறது! ஆனால் எல்லாவற்றுக்கும் பிரதானம் அரிசிச் சோறு.

அரிசியில் செய்யப்படும் பல வகையான உணவுகள் அகிலம் முழுவதும் ஃபேமஸ். இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம், இடியாப்பம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.நம்மூரில் கிடைக்கும் அதே ருசியில் இன்று உலகம் பூராவிலும் இந்த வகை உணவுகள் கிடைக்கின்றன.நம்மூர் ஓட்டல்காரர்களே எல்லா நாடுகளிலும் தங்கள் தொழிலை வியாபித்ததுடன், நமது உணவு வகைகளையும் அறிமுகப்படுத்தி விட்டார்கள். அமெரிக்காவிலும் இப்பொழுது இட்லி, தோசையெல்லாம் கிடைக்கின்றன.

Rice
Rice

பிரான்சின் பாரீஸ் நகரில் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தபோது, தினமும் இரவு உணவுக்கு நம்மூர் ஹோட்டலுக்குச் சென்று, பிடித்தமான நமது உணவுகளை உண்ட பிறகே, தங்கியிருந்த வீட்டிற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம். பிரான்சு நாட்டினரும் மிகுதியாக வந்து நமது உணவுகளைச் சாப்பிட்டுச் செல்வதைக் கண்டபோது மனதுக்கு இதமாக இருந்தது.

பாரீசின் அந்தத் தெருவில் நடந்து செல்கையில், நமது சென்னையின் கடைத் தெருவில் நடந்து செல்வது போலவே இருக்கும். ஏனெனில், அந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான கடைகளின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாகவே இருக்கும். இப்படி உலகம் முழுவதும் நமது அரிசி உணவு வகைகள் கோலோச்சி வரும் இந்த நேரத்தில்,சர்க்கரை நோயையும்,மீத்தேனையும் காரணங்காட்டி,அரிசியை ஓரங்காட்ட நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்கின்ற உயர்ந்த பண்பாடுள்ள நாட்டில் உடலை வளர்த்து உரமாக்கி, உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்த அரிசியைக் குறை கூறுவதை எங்ஙனம் பொறுத்துக் கொள்ள இயலும்?

120 நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகை ஆண்டு வரும் அரிசிக்கு, தற்போதைய ஆய்வு முடிவகளைக் காரணங்காட்டி விடை கொடுக்க நினைப்பது விதண்டாவாதம். அரிசிச் சோறு சாப்பிடுவதால்தான் சர்க்கரை வியாதி பெருகுகிறதாம். சுமார் 12000 ஆண்டுகளாகத் தோன்றாத இந்தச் சர்க்கரை வியாதி, கடந்த நூற்றாண்டின் இறுதியில் அல்லவா தோன்றி வதைக்க ஆரம்பித்துள்ளது. அதற்குக் காரணம் அரிசியென்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? ஒரு தடவை இந்த நோய் வந்து விட்டால் ஆயுளுக்கும் நீடிக்குமாம். நமது மருத்துவர்கள் தரும் மருந்துகள் நோயைப் பூரணமாகக் குணமாக்காதாம். கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்குமாம்.என்ன வேடிக்கை! உங்களுக்கு நோய்க்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்பதற்காக ஏன் அரிசி மீது பழி போடுகிறீர்கள்? உலகில் 4448 நோய்கள் இருப்பதாகவும், அந்த அத்தனை நோய்களையும் நீக்க மூலிகைகளும் இருப்பதாகச் சொல்லப்படுவதெல்லாம், ஏட்டில் மட்டுந்தானா?

நெல் பயிர் செய்யும் கழனிகளில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால், அதில் வளர்ந்து வாழும் சிறு உயிரினங்களால் மீத்தேன் வாயு தோன்றி, சுற்றுச்சூழலை அச்சுறுத்துகிறதாம்.சரி.நீரைக் குறைத்து, நீரைத் தேக்காமல், தேவையான அளவை மட்டுமே உபயோகப்படுத்தி நெல்லைப் பயிர் செய்யும் உபாயங்களைக் கண்டுபிடித்து, விவசாயிகளிடம் அதனை நடைமுறைப்படுத்துங்களேன்.

அடுத்து, நெல் அறுவடை செய்தபிறகு அதன் வேருடன் கூடிய தாளை எரியூட்டுவதால், கரியமில வாயு தோன்றிச் சூழலை மாசுபடுத்துகிறதாம்.

rice
rice

நான் டெல்டா மாவட்டக்காரன்.எங்கள் பகுதியில் முன்பெல்லாம் இரு போகம் நெல் பயிர் செய்வார்கள். காவிரி நீர் பிரச்னையான பிறகு, அது ஒரு போகமாகச் சுருங்கி விட்டது. அதிலும் நாற்று, நடவு என்பதெல்லாம் குறுகி, நேரடி நெல் விதைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது. எங்கள் பகுதியில் எங்கும் எப்பொழுதும் நெல்லின் தாள் எரியூட்டப் படுவதே இல்லை.

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்கின்ற உயர்ந்த பண்பாடுள்ள நாட்டில் உடலை வளர்த்து உரமாக்கி, உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்த அரிசியைக் குறை கூறுவதை எங்ஙனம் பொறுத்துக் கொள்ள இயலும்? யூகலிப்டஸ் மரம் வளர்க்க ஆரம்பித்த நாளிலிருந்து, ஒரு சாரார் அது நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுகிறதென்றும், மற்றொரு சாரார் அவ்வாறு இல்லை என்று அடித்துச் சொல்வதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றுவரை விடை கண்டுபிடித்தபாடில்லை. அதைப் போலவே அரிசி மீது அபாண்டப்பழி சுமத்தப் படுகிறதோவென்ற சந்தேகம் எமக்கு உண்டு.

ஏனெனில், படிக்கப்படும் பத்திரிகைகளும்,’ஆன்’ செய்யப்படும் டிவி சேனல்களும் அரிசியையே குறை கூற ஆரம்பித்து விட்டதால், இளைஞர்கள் பலர் அரிசியென்றாலே பயந்தோடும் நிலை உருவாகி வருகிறது.

உள்ளூர் வைத்தியர் ஒருவர், ‘தான் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடும்போது குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது!’என்ற கண்டிஷன் போடுவாராம். மருந்து வாங்கிக்கொண்ட ஒருவர் ‘அப்படி நினைத்தால் என்ன ஐயா ஆகும்? என்று கேட்க, மருத்துவர் கூலாகச் சொன்னாராம்..மருந்து வேலை செய்யாதென்று. எங்கேயோ மரத்தில் தாவும் குரங்கின் மீது பழியைப்போட்டுத் தப்பித்துக் கொள்ளும் மருத்துவர்களும் நமது நாட்டில் உண்டு என்பதுதானே இதன் பொருள். அது போலவே சர்க்கரை வியாதிக்கு அரிசியைப் பலிகடா ஆக்குகிறார்களோ?

ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை வியாதிக்கும், மீத்தேனைக் குறைத்தலுக்கும் அரிசியைக் குறை கூறுவதை விட்டு விட்டு, உரிய மருந்துகளைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்வோம்.

- ரெ.ஆத்மநாதன்

காட்டிகன், சுவிட்சர்லாந்து