Published:Updated:

தென்னைகளைக் குறிவைக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்... இயற்கை முறையில் அழிப்பது எப்படி?

கரும் பூசணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் மைதா மாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இப்படி முறையான மேலாண்மையைக் கையாண்டால் சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

பயிற்சியளிக்கும் மாணவிகள்
பயிற்சியளிக்கும் மாணவிகள்

தென்னையில் இன்றைய பெரிய பிரச்னை சுருள் வெள்ளை ஈ. இதனால் தென்னையில் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். வெள்ளை ஈ தாக்குதலைச் சமாளிக்கும் முறைகள்குறித்து விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்கள் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

வெள்ளை ஈ தாக்குதலுக்கு உள்ளான தென்னை
வெள்ளை ஈ தாக்குதலுக்கு உள்ளான தென்னை

கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருக்கிறார்கள். அங்கு நிலவும் காலசூழ்நிலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அறிந்து, விவசாயிகளுடன் கள அனுபவம் பெற்று வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் உள்ள கோழிக்காட்டுபொத்தை கிராமத்தில் தென்னையில் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சியளித்தனர்.

சுருள் வெள்ளை ஈ
சுருள் வெள்ளை ஈ

வேளாண்மைத்துறை ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சியில், தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ பற்றி விளக்கப்பட்டது. தென்னையில் 800-க்கும் அதிகமான பூச்சிகள் காணப்பட்டாலும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைப்புழு, எரியோபைட் சிலந்திப்பூச்சி, செதில் பூச்சிகள், மாவுப்பூச்சி மற்றும் கறையான் ஆகிய பூச்சிகளின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாக ஏற்படும். ஆனால், தற்போது தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

பாதிக்கப்புக்குள்ளான தென்னை
பாதிக்கப்புக்குள்ளான தென்னை

இவற்றின் முட்டைகள் சுருள் வடிவத்தில் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இதன் குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் ஓலையின் அடியிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. அதனால் ஓலைகளின் மேல் கரும்பூசாணம் படர்கிறது. செளகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை போன்ற குட்டை ரகங்களிலும், குட்டை நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களிலும் இவை அதிகளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இப்பூச்சிகள் தென்னை மட்டுமல்லாமல் வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகிய பயிர்களிலும் காணப்படுகின்றன.

6 அடி உயரத்தில் மஞ்சள் பொறிகளை தொங்க விட வேண்டும். அந்த நிறத்தால் கவரப்பட்டு வரும் பூச்சிகள் அட்டையில் ஒட்டிக்கொள்ளும்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம்வரை பருவமழை குறைவால் ஏற்பட்ட வறட்சி, அதிகளவு வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகிய காரணங்களால் இவை அதிகளவு பெருகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள் விஞ்ஞானிகள். மஞ்சள் நிறம் இந்தப் பூச்சிகளைக் கவரும் தன்மையுடையது. எனவே மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஒரு ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்க விட வேண்டும். மஞ்சள் நிறத்தால் கவரப்பட்டு வரும் பூச்சிகள் அட்டையில் ஒட்டிக்கொள்ளும். அதன் பிறகு துணியால் அதை துடைத்து விட்டு, மீண்டும் ஒட்டுப்பொறியில் விளக்கெண்ணைய் தடவி வைக்க வேண்டும். மரத்தில் உள்ள பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீர் தெளிக்கலாம்.

'காக்ஸினெல்லிட்' பொறி வண்டுகள், 'என்கார்ஸியா' ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். அவற்றைக் கொண்டும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.

'கிரைசோபெர்லா' இரை விழுங்கிகள் இந்தப் பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விடுவதன் மூலம் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது 'காக்ஸினெல்லிட்' பொறி வண்டுகள், 'என்கார்ஸியா' ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். அவற்றைக் கொண்டும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்பெண்ணெய் 3௦ மி.லி எடுத்து ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்க வேண்டும்.

கரும் பூசணத்தை நிவர்த்தி செய்ய 25 கிராம் மைதா மாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இப்படி முறையான மேலாண்மையைக் கையாண்டால் சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்கலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.