பிரீமியம் ஸ்டோரி

"லாபம் படத்தைப் பார்த்தீர்களா?’’ என்று நண்பர் ஒருவர் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார். சரி, என்னதான் உள்ளது என்று பார்த்தேன். மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசிப் படம். கூட்டுப்பண்ணை என்ற விஷயத்தை மையமாகப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இடதுசாரி சிந்தனையாளர் என்பதாலும், அவரே ஒரு கூட்டுப்பண்ணையில் பங்குதாரராக இருந்தார் என்பதாலும், இதைக் கதைக்களமாகத் தேர்வு செய்திருக்கலாம். படத்தைப் பற்றிச் சமூக வலைதளங்களில் காரம் சாரமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. படம் எப்படி உள்ளது, யார் எப்படி நடித்தார்கள்... என்பதை அவர்கள் பேசிக்கொள்ளட்டும். நாம் கூட்டுப்பண்ணையைப் பற்றிப் பார்ப்போம்.

மனிதன் முதலில் விவசாயம் செய்யத்தொடங்கியதே, கூட்டுப்பண்ணை முறையில்தான். ஆம், இனக்குழுக்களாக வாழ்ந்தபோது, நிலத்தை யாரும் பங்கு பிரித்துக் கொள்ளவில்லை. எல்லோரும் நிலத்தில் உழைத்தார்கள். அங்கு விளைந்ததை உண்டு கழித்தார்கள். இப்படிக் கூட்டாக இணைந்து வாழும்போதுதான் அவர்களுக்குள் வாழ்வியல் பண்பாடு உருவானது. இதனால்தான், விவசாயத்தையும் பண்பாட்டையும் சேர்த்து குறிக்கும் அக்ரி-கல்ச்சர் (Agri-Culture) என்ற சொல் உருவானது. காலப்போக்கில் நிலம் தனி உடைமையாக உருமாறியது. இப்படி மாறினாலும், ஊர் கூடி விவசாயப் பணிகளை பகிர்ந்து செய்தார்கள். விவசாயம் செய்ய மனிதர்கள் தேவையில்லை; கருவிகள் போதும் என்று இயந்திரம் பக்கம் திரும்பியவுடன் ஊர் கூடி விவசாயம் செய்வதும் மறைந்து போனது.

கூட்டுப்பண்ணையை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை ரஷ்யாவையே சேரும். இவர்கள் கருவிகளையும் பயன்படுத்தினார்கள். மனிதர்களையும் மகிழ்வித்தார்கள்.

“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றைப் பறிக்க முனைந்தேன். உடனே, ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் உழவர் ஒருவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.

‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.

நான் திகைத்துப் போனேன். ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப் பண்ணையைச் சேர்ந்தது.

கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தைத் தனது சொந்த சொத்தைப்போல் மதித்துப் பாதுகாக்கும் பண்பை, ஒரு சாதாரண கிராம விவசாயி யிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை” என்று ‘சோவியத் நாட்டில்’ என்ற நூலில் தான் பார்த்த கூட்டுப் பண்ணையைப் பற்றி வியந்து எழுதியுள்ளார் எழுத்தாளர் அகிலன்.

புரட்சிக்குப் பிறகு, பொருளாதாரம் சரிந்திருந்த நேரத்தில் லெனின் சிந்தனையில் உருவானதுதான், ‘கூட்டுப்பண்ணைத் திட்டம்.’ இதுகுறித்துச் சிறிய கையேடு ஒன்றையும் லெனின் எழுதி வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள எல்.ஐ.சி கட்டடம் அருகில் என்.சி.பி.ஹெச் பதிப்பகம் செயல்பட்டு வந்தது. ரஷ்யாவிலிருந்து வரும் புத்தகங்களைக் குறைந்த விலையில் அள்ளி, அள்ளி கொடுப்பார்கள். சிலசமயம் கிலோ கணக்கில் புத்தகங்களை எடை போட்டும் கொடுப்பார்கள். இப்படி கிலோ கணக்கில் வாங்கியபோது, கொசுறாக எனக்குக் கிடைத்தது லெனின் எழுதிய ‘கூட்டுப் பண்ணை’ என்ற சிறு நூல். கூட்டுப்பண்ணை என்றால் என்ன? அவை எப்படிச் செயல்பட வேண்டும் என விளக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருந்தது.

‘‘ரஷ்யாவில் கூட்டுப் பண்ணைகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்தன. கூட்டுப்பண்ணையில் நடக்கும் விவசாயம், வேலை என்பதாக இல்லாமல், மக்களுக்குச் சேவை செய்யும் பணியாகக் கருதப்பட்டது என்று சொல்வது தான் சரியாக இருக்கும். கூட்டுப்பண்ணை ஒவ்வொன்றும், தங்களுக்கான உற்பத்தி இலக்கை நிர்ணயம் செய்து, போட்டிப் போட்டுக்கொண்டு விளைச்சலை அள்ளிக் குவித்தன. நாட்டு மக்களின் பசியைப்போக்க, நல்ல விளைச்சல் எடுக்கும் கூட்டுப் பண்ணைகளுக்குச் சோவியத் அரசு, பரிசு களையும் சலுகைகளையும் வாரி வழங்கியது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


நம் கிராமங்களில் விவசாயிகள் வீட்டில் டிராக்டர் நிற்பதுபோல, சோவியத்திலிருந்த ஒவ்வொரு கூட்டுப் பண்ணையிலும் குட்டி விமானங்கள் இருந்தன என்றால், நம்புவது கஷ்டம்தான். கூட்டுப்பண்ணையில் விளையும் பொருள்களை, நகரங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

சோவியத் ஒன்றியத்திலிருந்த உஸ்பெகிஸ்தானின் பாலைவனப் பகுதியில் பருத்திச் சாகுபடி நடந்தது. இன்று பாலைவனத்தில் இஸ்ரேல் விவசாயம் செய்வதற்கு, முன்னோடி சோவியத் ஒன்றியம் தான். ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் கலையைக் கற்றிருந்தனர் சோவியத் மக்கள்.

காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்ணை வளப்படுத்தி, ரசாயன உரங்களை ஓரம்கட்டி வரும் உயிர் உரங்களில் முக்கியமானது, அசோஸ்பைரில்லம். இந்த அற்புதமான அசோஸ்பைரில்லம் கூட்டுப் பண்ணை ஒன்றில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கூட்டுப்பண்ணைகள் உலகம் முழுவதும் கவனம் பெற்றன. அதிக விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று ரசாயனத்தை அதிகம் பயன்படுத்தியதும், அரசியல் காரணங்களும் கூட்டுப்பண்ணைகள் சரிவுக்கு அடித்தள மிட்டன’’ என்று ஒருமுறை உருகி, உருகிப் பேசினார் பேராசிரியர் அ.உதயகுமார். நம்மில் பலருக்கும் இ.எம் உதயகுமார் என்றால்தான் இவரைத் தெரியும். ஆனால், இவர் ரஷ்யாவில் வேளாண்மைப் பட்டம் பெற்று வந்தவர் என்ற தகவல் பெரும்பாலான வர்களுக்குத் தெரியாது.

ரஷ்யாவில் கூட்டுப்பண்ணைகளுக்கு மூடுவிழா நடப்பதற்கு முன்பு, இஸ்ரேல் நாட்டில் கிபூட்ஸ், மோஷாவ் (Kibbutz, Moshav) என்ற சமுதாய வாழ்வியல் முறைகளைச் செயல்படுத்த தொடங்கியிருந்தார்கள். கிபுட்ஸ் என்ற கூட்டுப்பண்ணையில் விருப்பம் உள்ளவர்கள் தங்கி விவசாயம், பழப்பண்ணை, பால் பண்ணை... பணிகளில் ஈடுபடலாம். பண்ணையில் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் சமூகத்துக்குப் பயன்படுகிறது. யாருக்கும் சம்பளம் கிடையாது. இங்கு வாழ்பவர்களின் தேவையைக் கூட்டுப்பண்ணைப் பார்த்துக் கொள்ளும். தனியாகச் சமையல் அறை கிடையாது. சமுதாயச் சமையல் கூடத்தில் அனைவரும் கூடி உணவு சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று, அடுத்த வாரத்துக்கான செயல் திட்டங்கள் வடிவமைக்கப்படும். கூட்டுப்பண்ணை என்பது குதூகலமான வாழ்க்கை முறையாக உருவாக்கியுள்ளார்கள். அடுத்து, மோஷாவ் என்பது பல கூட்டுப்பண்ணைகள் இணைந்த கூட்டுறவு அமைப்பு. அரசுக்குச் சொல்ல வேண்டிய தகவல்கள், நலத்திட்டங்களைப் பெற்றுத் தருவது... போன்ற பணிகளை இதன் மூலம் செய்துவருகிறார்கள்.

இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான கிபூட்ஸ், மோஷாவ் அமைப்புகள் உள்ளன. இஸ்ரேலின் விவசாயம், பால்பண்ணை வெற்றிக்குப் பின்னால், இந்த அமைப்புகள்தான் அடிநாதமாக உள்ளன. Israel Kibbutz என்ற பெயரை யூடியூபில் அடித்துப் பார்த்தால் வித விதமான வீடியோக்கள் கொட்டுகின்றன. கிபூட்ஸ் பண்ணைகளின் வீடியோக்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள ஆரோவில் பகுதிதான் நினைவுக்கு வருகிறது. இங்கு பல கூட்டுப்பண்ணைகள் உள்ளன. குறிப்பாக, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களும் கூட்டுப்பண்ணை விவசாயத்தை, தமிழ் மண்ணில் செய்வதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

இந்தக் கூட்டுப்பண்ணையைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, நண்பர் ஒருவர் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஏன் என்று விசாரித்தபோது, சொந்த கதையைச் சொன்னார். ‘‘விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர்கள் இணைந்து, நிலம் வாங்கிக் கூட்டுப்பண்ணை விவசாயம் செய்யத் தொடங்கினோம். இதுவரை சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வரவில்லை’’ என்றார்.

கூட்டுப்பண்ணை
கூட்டுப்பண்ணை

ஆமாம், நீங்கள் இருப்பது நகரத்தில், நிலம் இருப்பது பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில். அப்புறம் எப்படி விவசாயம் செய்தீர்கள்? என்று கேட்டேன். ‘‘பணியில் இருப்பதால், பணத்தை மட்டுமே முதலீடு செய்தோம். ஓர் ஆளை வேலைக்கு வைத்து விவசாயப் பணிகளைச் செய்ய வைத்தோம்’’ என்றார். இதற்குப் பெயர் கூட்டுப்பண்ணை அல்ல. கூட்டுப் பண முதலீடு. இதன் மூலம் வருமானம் கிடைக்காது; ஆண்டு தோறும் செலவுகள்தான் கூடி கும்மியடிக்கும். ரஷ்யா தொடங்கி, ஆரோவில் வரை கூட்டுப்பண்ணை என்றால் அங்கேயே வாழ்ந்து விவசாயம் செய்யும் முறை. அப்படி வாழும்போதுதான், நீங்களும் நிறைய கற்றுக் கொண்டு வளர்வீர்கள். பண்ணையும் பொன்விளையும் பூமியாக மாறும்.

சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் விவசாயத்தைச் சிறப்பாகச் செய்பவர்களை உற்றுக் கவனித்தால் ஓர் உண்மை புரியும். இவர்கள் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடு கட்டி வாழ்வார்கள். குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வயலுக்குச் செல்லும் விடுமுறை விவசாயியாக (Weekend Farmer) இருந்தால்கூட ஓரளவு சமாளிக்கலாம். ஆனால், பல கிலோ மீட்டர் தூரத்தில் பண்ணையை வைத்துக்கொண்டு, மொபைல் போனில் விவசாயம் செய்தால் வருமானத்தைச் சுத்தமாக மறந்துவிட வேண்டியதுதான் என்றேன்.

‘‘கர்நாடகாவில் சில கூட்டுப் பண்ணைகள் நன்றாக நடக்கிறது என்கிறார்களே?’’ என்றார். ஒரு மாநிலத்தில் விவசாயம் மட்டுமல்ல, எந்தத் தொழில் செழிக்கவும் அரசு ஆதரவு அவசியம். அந்த வகையில் கர்நாடகா விவசாயிகள் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில், விவசாயத்தைப் போற்றிக் கொண்டாடும் மாநிலங்களில் இதுவும் ஒன்று.

கர்நாடகாவில் எங்கே மின்சார இணைப்பு வேண்டும் என்றாலும் உடனே மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்பு, மின்சார வாரியத்துக்குத் தகவல் கொடுத்தால் போதும். இதற்கு ‘அக்கிரம சக்கரம’ என்று செல்லமாக விவசாயிகள் பெயர் வைத்துள்ளார்கள். அதாவது, மின்சார லைனில் கொக்கிப்போட்டு, நமக்குத் தேவையான இடத்தில் மோட்டர் வைத்து, தண்ணீர் இறைத்து விவசாயத்தைத் தொடங்கலாம்.

சில நாட்களில், அந்தப் பகுதி மின்வாரிய அலுவலர்கள் வந்து, கொக்கிப்போட்டு மின்சாரம் எடுத்ததற்கு சிறுதொகையைத் தண்டம் கட்டச் சொல்வார்கள். அதைக் கட்டியவுடன், சட்டப்படி இலவச மின் இணைப்பு கொடுத்துவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் இப்படி நடக்குமா? மின் இணைப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்துக்கிடப்பவர்கள் உண்டு. எனவே, கள நிலவரம் தெரியாமல், விவசாயத்தில் கால் வைத்துவிட்டு, பத்திரிகையில் படித்தேன், யூடியூபில் பார்த்தேன் என்று பழி சுமத்த யாரையும் தேட வேண்டாம் என்றேன்.

இப்போது, சென்னைக்கு அருகில் விவசாய நிலம் வாங்க, வாரம்தோறும் ஊர்களைச் சுற்றி வருகிறார். ‘‘இந்த முறை நிச்சயம், விடுமுறை விவசாயியாக மாறிவிடுவேன்’’ என்று நம்பிகையுடன் சொல்லி வருகிறார், அந்த நண்பர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு