Published:Updated:

உப்பு, கோல மாவை வைத்து போலி உரம்; அரசு பெயரில் விற்பனை; குடோனுக்கு சீல் வைத்த போலீஸார்!

கலப்பட பொட்டாஷ்
News
கலப்பட பொட்டாஷ்

50 கிலோ மூட்டைகளாக நிரப்பி இதுவரை நூற்றுக்கணக்கான டன்களில் போலி உரங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். உள்ளூர் பிரமுகர்கள் கொடுத்த ரகசிய தகவல் அடிப்படையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கள்ள உரத்தயாரிப்பு குடோனுக்கு சீல் வைத்துள்ளார்.

பொட்டாஷ் உரம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாகப் போலி உரத்தை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்துள்ளது ஒரு மோசடிக்கும்பல். அவர்கள் கள்ளத்தனமாகத் தயாரித்தது சாதாரண கலப்பு உரம் அல்ல. பெரிய நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கக்கூடிய பொட்டாஷ் உரம். அதுவும் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் பொட்டாஷ்(IPL) பெயர் அச்சடிக்கப்பட்ட நைலான் பைகளில் அடைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், ராதாகிருஷ்ணன் இருவரும், அதே பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் குடிசைத்தொழில் போலக் கலப்பட பொட்டாஷ் தயார் செய்து விற்பனை செய்திருக்கிறார்கள்.

கலப்பட பொட்டாஷ்
கலப்பட பொட்டாஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

50 கிலோ மூட்டைகளாக நிரப்பி இதுவரை நூற்றுக்கணக்கான டன்களில் போலி உரங்களை விற்பனை செய்திருக்கிறார்கள். உள்ளூர் பிரமுகர்கள் கொடுத்த ரகசிய தகவல் அடிப்படையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கள்ள உரத்தயாரிப்பு குடோனுக்கு சீல் வைத்துள்ளார். இது, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கே.செல்லமுத்து, ``இந்த ஆண்டு பருவமழை சிறப்பாகப் பெய்துள்ளது. குளங்கள், ஏரிகள், அணைகள் மற்றும் பாசனக்கிணறுகளில் தண்ணீர் தளும்பி கிடக்கிறது. விவசாயிகள் ஆர்வமுடன் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிப்பொடி, கோலமாவு, கல் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட இது போன்ற உரங்கள் மகசூல் பாதிப்பை ஏற்படுத்துவதால் விவசாயிகள் கடனாளியாக்கப்படுகிறார்கள். தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்'' என்றார் வேதனை குரலில்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத்தலைவர் வக்கீல் ஈசன், ``வெளி நாட்டிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யக்கூடிய பொட்டாஷ் உரம் இது. எந்த இயந்திரமும் இல்லாமல் குடிசைத்தொழில்போல் தயாரித்துள்ளார்கள்.

வழக்கறிஞர் ஈசன்
வழக்கறிஞர் ஈசன்

50 கிலோ மூட்டை இப்போது 1,700 ரூபாய் விலையில் அங்கீகரிக்கப்பட்ட உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கோலமாவு, காவிப்பொடி, கல் உப்பு கலந்த போலி பொட்டாஷ் தயாரிக்க மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சம் 270 ரூபாய் மட்டும் உற்பத்தி செலவு பிடிக்கிறது. மூட்டை ஒன்றுக்கு 1,430 ரூபாய் லாபத்தில் இந்தக் கள்ள உரத்தை விவசாயிகள் தலையில் கட்டியிருக்கிறார்கள்.

அங்குத் தயாரிக்கப்பட்ட உரத்தை எந்தெந்தக் கடைகளில் வைத்து விற்பனை செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உடந்தையாக இருந்த அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி உரத்தை வாங்கி பயன்படுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து எங்கள் சங்கத்தின் சார்பில் இன்று பொள்ளாச்சி சப்- கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளிக்க இருக்கிறோம். மேலும் இது போன்ற போலி உரத்தொழிற்சாலைகள் பல்வேறு இடங்களில் இயங்க வாய்ப்புள்ளது. அதையும் ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.