Published:Updated:

ஏக்கருக்கு ரூ.1,21,000... சிறப்பான வருமானம் தரும் சின்ன வெங்காயம்!

அறுவடை செய்த வெங்காயத்துடன் வெற்றிவேல் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடை செய்த வெங்காயத்துடன் வெற்றிவேல் முருகன்

மகசூல்

‘‘குறைவான நாள்கள், குறைவான செலவு, நிறைவான வருமானம் தரும் பயிரில் சிறப்பானது சின்ன வெங்காயம்.

அறுவடைக்குப் பிறகு நீண்ட நாள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால்தான் விவசாயிகள் பரவலாகச் சின்ன வெங்காயத்தைத் தேர்வு செய்து பயிரிடுகிறார்கள்” என்கிறார் இயற்கை விவசாயி வெற்றிவேல் முருகன்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திரவிய நகரில் உள்ள அவரது நிலத்தில் சந்தித்தோம். “நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் ஆரியங்காவூர். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். 12-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு மரக்கடையில கணக்குப் பிள்ளையா இருந்தேன். எங்க பகுதியில நெல், நிலக்கடலை, சின்ன வெங்காயம்தான் அதிக பரப்புல சாகுபடி நடக்குது. அப்பா, அண்ணன் விவசாயம் பார்த்தாலும், நான் விவசாயத்துல ஈடுபாடு இல்லாமதான் இருந்தேன். 2016-ம் வருஷம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த என்னோட நண்பர் அருண்குமார், இயற்கை விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு புளியங்குடி அந்தோணிசாமி ஐயாவைப் பார்ப்பதற்காக என்னையும் கூட்டிகிட்டுப் போனார். கரும்பு, எலுமிச்சைத் தோட்டங்களைச் சுற்றிக்காட்டியதுடன், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்ற இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு முறையைப் பற்றியும் விளக்கமா சொன்னார் அந்தோணிசாமி.

வெங்காய வயல்
வெங்காய வயல்

‘விவசாயத்துக்கு மண்தான் அடிப்படை. மண்ணை வளப்படுத்தினால்தான் விவசாயத்துல ஜெயிக்க முடியும். முதலில் உங்க மண்ணை வளப்படுத்துங்க. பலதானிய விதைப்பு, மட்கிய தொழுவுரம், மண்புழுவுரத்தால் மண்ணை வளப்படுத்தலாம்’னும் சொன்னார். அதுவரைக்கும், ‘விவசாயம் லாபமில்லாத் தொழில்’னு தான் நினைச்சிருந்தேன். அவரைச் சந்திச்சப் பிறகு அந்த நினைப்பை மாத்திக்கிட்டேன். அடுத்து, மாதாபுரத்தில் இயற்கை விவசாயத்தில எலுமிச்சைச் சாகுபடி செய்ற ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜனைச் சந்திச்சேன்.

அவரது பேச்சும், இயற்கைவிவசாய அனுபவமும் இயற்கை விவசாயம் மேல, எனக்கு முழு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அவருதான் எனக்கு ’பசுமைவிகடன்’ இதழை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, மதுரை, எழுமலையில ஓய்வுபெற்ற நீதிபதி சடையாண்டி தோட்டத்தில நடந்த இயற்கை விவசாயப்பயிற்சியிலும் கலந்துகிட்டேன். முதல்ல பெரியவெங்காயம் சாகுபடி செஞ்சேன். ஆனா, தண்ணீர்ப் பற்றாக்குறையால குறைவான மகசூல்தான் கிடைச்சுது. ஆனா, வெங்காயம் திரட்சியா இருந்துச்சு. தொடர்ந்து சின்னவெங்காயம் சாகுபடியே செய்துட்டு வர்றேன். இது மொத்தம் ஒன்றரை ஏக்கர் நிலம். இதில் ஒரு ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்று பேசியவர் நிறைவாக வருமானம் மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்துப் பேசத் தொடங்கினார்.

அறுவடை செய்த வெங்காயத்துடன் வெற்றிவேல் முருகன்
அறுவடை செய்த வெங்காயத்துடன் வெற்றிவேல் முருகன்

‘‘எங்க பகுதி விவசாயிகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்லதான் விளைபொருளை விற்பனை செய்யுறாங்க. நானும் அங்கயேதான் விற்பனை செய்யுறேன். வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும் என்பதால், சந்தையின் விலை நிலவரத்தைப் பொறுத்து 10 மூட்டை, 20 மூட்டைனு விற்பனை செய்வேன். வெங்காயத்தைப் பொறுத்தவரையில மொத்தமாக விற்பனை செய்றதைவிட, விலையைப் பொறுத்து விற்பனை செய்யும்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும். இதைப் பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றுவதில்லை. ஒரு ஏக்கர் சின்னவெங்காயம் அறுவடையில் 4,760 கிலோ மகசூல் கிடைச்சுது. குறைந்தபட்சமா 25 ரூபாயும், அதிகபட்சமா 45 ரூபாய் வரைக்கும் விற்பனையாயிருக்கு. மொத்த விற்பனை மூலமா 1,21,380 வருமானமாகக் கிடைச்சுது.

இதுல உழவு, விதைவெங்காயம், பாத்தி, நடவு, களை, அறுவடைனு மொத்தம் 31,600 ரூபாய் செலவாச்சு. செலவு போக மீதமுள்ள 89,780 ரூபாய் நிகரலாபமாக் கிடைச்சுருக்கு. இரண்டரை மாசத்துல அதிக பாடு இல்லாம கிடைச்ச இந்த வருமானத்தைப் பெருசா நினைக்கிறேன்” எனச் சொன்னபடியே வெங்காயத்தைக் கைநிறைய அள்ளிக்காட்டினார்.

தொடர்புக்கு, வெற்றிவேல் முருகன், செல்போன்: 99443 37256

இப்படித்தான் சாகுபடி செய்யணும்.

ரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய வெற்றிவேல் முருகன் கூறும் தகவல்கள் பாடமாக இங்கே.

ஏக்கருக்கு ரூ.1,21,000... சிறப்பான வருமானம் தரும் சின்ன வெங்காயம்!

சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. கரிசல்மண், செம்மண் என அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். நடவு செய்யத் தேர்வு செய்துள்ள பட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 10 நாள்கள் இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். 3-வது உழவிற்கு முன்பு, ஏக்கருக்கு 200 கிலோ கனஜீவாமிர்தத்தைப் பரவலாகத் தூவிவிட்டு உழவு செய்ய வேண்டும். 4-வது உழவுக்குப் பிறகு, பாத்திகள் எடுக்க வேண்டும். 100 கிலோ தொழுவுரத்துடன் 4 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி கலந்து பாத்திக்குள் தூவித் தண்ணீர் பாய்ச்சிவிட்டு 4 விரல் இடைவெளியில் விதை வெங்காயத்தை நடலாம்.

நடவிற்கு முதல்நாள் மாலையில், 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்மில், 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து, அதனுள் விதை வெங்காயத்தைப் போட்டு, 30 நிமிடம் ஊறவைத்து பிறகு நிழலில் உலர்த்தி, மறுநாள் காலை நட வேண்டும். இதனால், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் வராது. வெங்காயத்தின் வேர்ப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு ஊன்ற வேண்டும். 5 முதல் 8-ம் நாள் முளைப்பு தெரியும்.

அன்றே முதல் தண்ணீர் விட வேண்டும். பிறகு, தேவையைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். ஒரு ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோ வரை விதை வெங்காயம் தேவை.

15 முதல் 20-ம் நாளுக்குள் ஒரு களையும், 35 முதல் 40-ம் நாளுக்குள் ஒரு களையும் என இரண்டு முறை களை எடுக்க வேண்டும். 10-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் (200 லிட்டர்) மற்றும் சூடோமோனஸ் கரைசல் (100 லிட்டர் தண்ணீரில் 400 கிராம் சூடோமோனஸ்) கலந்து சுழற்சி முறையில் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். இதனால், வளர்ச்சி அதிகரிப்பதுடன், வெங்காயமும் திரட்சியாக இருக்கும். 25-ம் நாளிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) மற்றும் மீன் அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30-ம் நாளுக்குமேல் அறுவடை வரை நுனிக்கருகல் நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30-ம் நாளிலிருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை டிரைக்கோடெர்மாவிரிடி கரைசலை (10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி) கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

55 முதல் 60-ம் நாளுக்கு மேல் முற்றத் துவங்கும். 65 முதல் 75-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். வெங்காயத் தாள்கள் பரவலாக முற்றிப் பழுத்துக் காணப்படும். அந்த நேரத்தில் மண்ணிலிருந்து வெங்காயத்தை எடுத்துப் பார்த்தால், இளஞ்சிவப்பு நிறத்தில் திரட்சியாக இருந்தால் அறுவடை நிலைக்கு வந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளலாம். அறுவடை செய்த வெங்காயத்தை, நிலத்தில் 5 முதல் 6 நாள்கள் வரை காய வைத்தபிறகு பிரித்தெடுக்கலாம். ரசாயன முறை சாகுபடி வெங்காயத்தை அறுவடைக்குப் பிறகு இரண்டு மாதங்கள்தான் இருப்பு வைக்க முடியும். ஆனால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை 4 முதல் 5 மாதங்கள் வரைகூட இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

விலை கிடைக்கும்போது விற்பதே சிறந்தது!

வெங்காயத்தைச் சேமித்து வைக்கும் விவசாயிகள் மழைக்காலங்களில் ஈரம் படாமல் பிளாஸ்டிக் தாளால் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தொடர்ச்சியாக மூடி வைக்காமல் காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும். காற்றோட்டம் இல்லாவிட்டால் அதிக வெப்பத்தின் தாக்கத்தால் வெங்காயம் அழுகவும் வாய்ப்புள்ளது. அறுவடை செய்தபோது இருக்கும் எடையைவிட இருப்பு வைத்து விற்பனை செய்வதால் சுருக்கத்தின் காரணமாக எடை குறைவு ஏற்படும். எனவே சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போதே விற்பனை செய்துவிடுவது நல்லது.