Published:Updated:

அதிகாரிகள் உதவியுடன் ஆற்றங்கரையையே உடைத்து மணல் திருடும் கொள்ளையர்கள்; அதிர்ச்சியில் விவசாயிகள்!

மணல் கொள்ளை (மாதிரி படம்)
மணல் கொள்ளை (மாதிரி படம்)

மணல் கொள்ளையர்களின் கொடூர பார்வை, ஆற்றின் கரைகள் மீதும் படரத் தொடங்கியிருப்பது, திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகளையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பதை பதைக்க வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் இதுவரை நிகழாத மிகக் கொடுமையான அவலம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக மணல் கொள்ளையர்கள், ஆறுகளில் உள்ள மணலை சூறையாடி வந்தார்கள். இதைத் தடுத்து நிறுத்த விவசாயிகள் எவ்வளவுதான் போராடினாலும் விடிவுகாலம் பிறக்காமலே உள்ளது. இந்நிலையில் மணல் கொள்ளையர்களின் கொடூர பார்வை, ஆற்றின் கரைகள் மீதும் படரத் தொடங்கியிருப்பது, திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகளையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பதை பதைக்க வைத்துள்ளது.

மணல் மாஃபியாக்கள் அரசியல்வாதிகளோடும் அதிகாரிகளோடும் கைகோத்து, ஆறுகளில் அளவுக்கதிகமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆறுகளின் தரைப்பகுதி, பள்ளத்தாக்கு போல் மாறியதால், வாய்க்கால்களில் தண்ணீர் ஏறுவதில்லை. இதனால் வயல்களுக்குத் தண்ணீர் பாய்வதில்லை.

மணல் கொள்ளை (மாதிரி படம்)
மணல் கொள்ளை (மாதிரி படம்)
மதுரை: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை!'-சமூக ஆர்வலர் புகாரால் பரபரப்பு

இதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. ஆறுகளுக்குள் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கே வழியில்லாத சூழலில், தற்போது ஆறுகளின் கரைகளையும் மணல் கொள்ளையர்கள் சூறையாடத் தொடங்கியிருப்பது, நெஞ்சைப் பதற வைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள பள்ளங்கோவில், கொத்தமங்கலம், இராயநல்லூர் விளக்குடி, வரம்பங்குடி, விட்டுக்கட்டி, செட்டியமூலை உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களில் ஆற்றின் கரைகளைக் குடைந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக விவசாயிகள் பதறுகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு செட்டியமூலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள முள்ளியாற்றுக் கரை ஓரத்தில் மணல் எடுப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலருக்கு தகவல் வந்துள்ளது. இவர்கள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது 5 அடி ஆழத்துக்கு மேல் சுரங்கம் போல் பள்ளம் தோண்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி விவாசாயிகள், ``இதைப் பார்த்துட்டு நாங்க பதறிப்போயிட்டோம். இது சம்பந்தமா கிராம நிர்வாக அலுவலர்கிட்ட நாங்க கேட்டதுக்கு, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்... ஆனால், மணல் எடுக்குறவங்க கேட்க மாட்டேங்குறாங்கனு சொல்லி சமாளிச்சார். உடனடியாக வட்டாட்சியர் ஜெகதீசனைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். இதை நேர்ல வந்து பார்த்த வட்டாட்சியர், மணல் தோண்டப்பட்ட இடத்தை ஹிட்டாச்சி இயந்திரத்தை வரவழைச்சு மூடிவிட்டுப் போனார். இது சம்பந்தமா கிராம நிர்வாக அலுலலருக்கு அறிவுறுத்திட்டுப் போனார்.

மணல் கொள்ளை
மணல் கொள்ளை
அமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை?

விட்டுகட்டி, வரம்பியம், பள்ளங்கோவில், செட்டிமூலைப் பகுதிகளில் சில அரசியல் பிரமுகர்கள் தங்களின் உட்கட்சிப் பூசலால் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், ஆற்றின் கரைகள் மற்றும் படுகைகள் பலவீனம் அடையும். மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் செல்லும்போது, கரைகள் உடைப்பெடுத்து, ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளது.

மணல் மாஃபியாக்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழலும் உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இதைத் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்கள். மேலும், இது குறித்து பேசும் இப்பகுதி விவசாயிகள், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களை பல அடி ஆழத்திற்குத் தோண்டி, மண் எடுக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது மற்ற விவசாயிகளுக்கு பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆதங்கப்படுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு