Published:Updated:

`கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

கல்லணை
கல்லணை ( ம.அரவிந்த் )

பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சோதனைச்சாவடி என அனைத்தும் மிக அருகிலிருந்தும் கல்லணையில் மணல் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கல்லணை பல மாவட்ட விசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் காவிரிக் கிளை ஆறுகளில் மணல் கடத்தல் நடைபெற்றுவருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறிவந்த நிலையில், மணல் கடத்தல் கும்பல் தற்போது கல்லணை தலைப்பிலேயே மணல் திருடியிருக்கிறது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆற்றுக்குள் போராட்டம்
ஆற்றுக்குள் போராட்டம்

மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீர் கல்லணை வந்தடைந்த பிறகு காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அந்தந்தப் பகுதிகளின் தண்ணீர் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படும். கல்லணையிலிருந்து வரும் தண்ணீரை நம்பித்தான் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. கல்லணை, விவசாயிகளின் வாழ்வாதாரமாக மட்டுமல்ல... விளைநிலங்கள் வறட்சியின்றி பசுமை பூமியாக இருப்பதற்கும் முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பாய்ந்துவரும் நீரைத் தேக்கிவைத்து, தேவைக்கேற்றாற்போல் காவிரியின் கிளை ஆறுகளில் திறந்துவிடும் வகையில் மாமன்னன் கரிகாலச் சோழனால் அமைக்கப்பட்ட கல்லணையின் கட்டுமானம் இன்றைக்கும் பலரால் வியந்து பாராட்டப்பட்டுவருகிறது. சொல்லப்போனால் `விவசாயிகளின் ரத்த ஓட்டம்’ என்றே கல்லணையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு விவசாயிகளின் வாழ்வில் ஒன்றாகக் கலந்திருக்கிறது கல்லணை.

மணல் கடத்தப்பட்ட பகுதி
மணல் கடத்தப்பட்ட பகுதி

கல்லணையிலிருந்து வரும் ஆறுகளில், மணல் கடத்தல் கும்பல் பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவந்தனர். அவ்வப்போது அவை பெயரளவுக்கு மட்டுமே தடுக்கப்படுவதும் வழக்கமாக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கல்லணைக்கு அருகில் அரசே மணல் குவாரி அமைத்து மணல் எடுத்தது. இதை எதிர்த்து அந்தப் பகுதியினர் போராடியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், தனியார் மணல் கடத்தல் கும்பல் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேறும் தலைப்பிலேயே மணல் கடத்த தொடங்கியிருக்கிறது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதுதான் வேதனை என்றும், இதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கல்லணைக்குள் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட மணல் கடத்தல் லாரி
சிறை பிடிக்கப்பட்ட மணல் கடத்தல் லாரி

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் காவிரில் கிளை ஆறுகளில் பல இடங்களில் மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் மணல் திருடப்பட்டுவருகிறது. இது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அணையிலிருந்து குறிப்பிட்ட தொலைவிலேயே மணல் திருடிவந்தனர்.

தற்போது கல்லணையில் நீர் வெளியேறும் தலைப்பு பகுதியில் மணல் எடுக்கத் தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் லோடு ஆட்டோ, வேன் ஆகியவற்றில் மணல் அள்ளி வந்தவர்கள் தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரிகளில் மணல் எடுத்துவருகின்றனர். இரவு முழுவதும் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. இதற்காக பிரத்யேகப் பாதையும் அமைத்துள்ளனர்.

மணல் கடத்த பயன்படுத்திய ஜேசிபி வாகனம்
மணல் கடத்த பயன்படுத்திய ஜேசிபி வாகனம்

பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் சோதனைச்சாவடி என அனைத்தும் மிக அருகில் இருந்தும் மணல் திருட்டு நடைபெறுகிறது என்றால் அதிகாரிகளின் துணை இல்லாமல் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. கல்லணை தலைப்பிலேயே மணம் திருடுவதால் கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் எனப் பதறிய பொதுமக்கள், மணல் ஏற்றிய லாரியை சிறைப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்கள். இரண்டு மணி நேரம் ஆகியும் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

`மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடிக்கு மணல் திருட்டு?!’ - விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினோம். அப்போது மணல் திருட்டுக்குத் துணைபோன அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், கீழ் மட்டத்தில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களுக்கு மெமோ கொடுத்தனர். இதில் தொடர்புடைய முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக கண்துடைப்பாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ஆற்றுக்குள் போராட்டம்
ஆற்றுக்குள் போராட்டம்

நீர் வெளியேறும் பகுதிகளில் படியும் மணல் ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து சேமித்து வைக்கப்படும்; அதையும் பொதுப்பணித்துறையைஅச் சேர்ந்தவர்கள் முறைகேடாக விற்பனை செய்வதும் நடந்துவருகிறது. கல்லணை காக்கப்பட வேண்டுமென்றால் அரசு உடனடியாக இங்கு நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும். அத்துடன் மணல் கடத்தலுக்கு துணைபோன பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றோம், ``மணல் கடத்தல் நடைபெறுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியுடன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு