Published:Updated:

சந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி
தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
ருவநிலை மாற்றம், தண்ணீர்ப் பிரச்னை, விவசாயப் பொருள்களுக்குரிய விலை கிடைக்காதது என இன்றைய சூழலில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் அதிக ஆட்கள் தேவைப்படாத, பராமரிப்பு செலவில்லாத, சந்தனம், செஞ்சந்தன மரங்களைச் சாகுபடி செய்துவருகிறார்.

தோட்டத்தில் சந்தன மரங்கள்
தோட்டத்தில் சந்தன மரங்கள்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா, மூணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி. பெருந்துறை - கோயம்புத்தூர் புறவழிச்சாலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் சாலையில், ‘குளு குளு’ வென்று வீசும் காற்றைக் கடந்து தங்கவேலின் தோட்டத்தைச் சென்றடைந்தோம். `தோட்டம்’ என்று சொல்வதைவிட, `அழகிய பண்ணை’ என்றே சொல்லலாம். அழகாக ஒரு சின்ன ஓட்டு வீடு, ‘கொக்... கொக்...’ என ஒலியெழுப்பியபடி மேயும் கோழிகள், புல்வெளியில் குனிந்து மேயும் ஆடுகள், நாட்டு மாடுகள் எனச் சூழல் ரம்மியமாக இருந்தது.

“நான் 35 வருஷத்துக்கு முன்னாடியே நிலத்தைக் குத்தகைக்குவிட்டுட்டு, பெருந்துறைக்குப் போயிட்டேன். அங்கே நிலக்கடலை பருப்பை உடைச்சு வியாபாரம் செஞ்சேன். நல்ல லாபம் கிடைச்சுது. 2010-ம் வருஷத்துக்குப் பிறகு, வியாபாரம் குறைஞ்சு போச்சு. உடனே மில், குடோனை வாடகைக்கு விட்டுட்டு, மறுபடியும் விவசாயம் பார்க்க வந்துட்டேன். பருவமழை இல்லை. கூலி ஆள் பிரச்னையால மத்த விவசாயம் செய்யத் தோணலை. அதுமட்டுமில்லாம, வயசாகிடுச்சி. இனிமேல் அங்கே இங்கே அலைய முடியாதுனு மரப் பயிருக்கு மாறிட்டேன். எல்லாரும் போற வழியில போகாம, ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு நினைச்சப்போதான் சந்தன மரம் நடுற யோசனை வந்துச்சு. அந்தச் சமயத்துல, கோயம்புத்தூர் கொடிசியாவுல நடந்த விவசாயக் கண்காட்சியில சந்தன மர ஸ்டால் போட்டிருந்தாங்க. அங்கே முழுத் தகவலும் தெரிஞ்சுகிட்டேன். பிறகு ராசிபுரம் போய் சந்தன மரம் வளர்க்கிறது சம்பந்தமா முழுசா தெரிஞ்சுகிட்டேன். அதுமட்டுமில்லாம, பெருந்துறையில எங்க வீட்டுல சந்தன மரம், செம்மரம், மாமரம் இருக்கு. அதுவும் நல்லா வளர்ந்திருந்துச்சு. `சரி... இதை ஏன் நாம வளர்த்துப் பார்க்கக் கூடாது’னு தைரியமா சந்தன மர வளர்ப்பு இறங்கிட்டேன். இருக்கிறதுல திருடன் பாதி வெட்டிட்டு போனாலும், மிச்சமாவது தேறுமுல்ல...” என்று உற்சாகமாக தங்கவேல் பேசிக்கொண்டிருக்கையில், இடையில் புகுந்தார் அவர் மனைவி பழனியம்மாள். “நீங்க வேணுமுன்னா பாருங்க... ஒருநாள் ராத்திரியில திருடன் வந்து சந்தன மரத்தை வெட்டிட்டு, `வாய்யா... வந்து வண்டியில மரத்தை ஏத்திவிடு’னு துணைக்குக் கூப்பிடப் போறான். அப்போ தெரியும்” என்று கலகலப்பூட்டினார்.

அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே தொடர்ந்து பேசிய தங்கவேல், ‘‘2010ம் வருஷம் பழநிமலை வன அபிவிருத்திக் கழகத்துல ஒரு கன்னு 15 ரூபாய்னு 1,200 கன்றுகளை வாங்கி நாலு ஏக்கர்ல நடவு செஞ்சோம். நடவு செஞ்சுட்டு கிராம நிர்வாக அலுவலர்கிட்ட இத்தனை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கோம்னு தகவல் சொல்லி, அதற்கான அடங்கலையும் வாங்கிவெச்சுக்கிட்டேன். இன்னைக்கு எங்க தோட்டத்துல ஒரு ஆள் உயரத்துக்கு மேல சந்தன மரம் வளர்ந்து கெடக்கு. `சந்தன மரத்துக்கு இடையில துணைச்செடி ஏதாவது வளர்க்கலாமே’னு சிலர் சொன்னாங்க. உடனே வனத்துறையில 1,200 நாட்டு வேம்பு மரங்களை வாங்கிட்டு வந்து நட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் தோட்டத்துக்கு வந்த வனத்துறை அதிகாரி ஒருத்தர், ‘சந்தன மர வளர்ச்சிக்கான நீரையும், சத்துகளையும் துணைச் செடியா நட்டிருக்கிற நாட்டு வேம்பு சாப்பிட்டுடும்’னு சொன்னாரு. அதைக் கேட்டு, நட்டுவெச்ச வேம்பு மரங்களை வெட்டி எறிஞ்சுட்டேன். அதுக்குப் பிறகு, சந்தன மரத்துக்குப் பாய்ச்சுற தண்ணி வெயில்ல காய்ஞ்சு போயிடுச்சு. `தெரியாத்தனமா வேப்ப மரத்தை வெட்டிட்டோமே’னு இப்போ வருத்தப்படுறேன். இருந்தாலும் சந்தன மரம் நல்லா வளர்ந்துட்டு வருது’’ என்றவர், செம்மரச் சாகுபடி பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி
தங்கவேல் - பழனியம்மாள் தம்பதி

“ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி எங்க நிலத்துல 500 மாங்கன்றுகளை நட்டோம். நிலத்துல சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருந்ததால, கிட்டத்தட்ட 400 மரங்கள் பட்டுப்போச்சு. இப்போ வெறும் 100 மரங்கள்தான் இருக்கு. பட்டுப்போன மாமரத்தையெல்லாம் வெட்டி வீசிட்டேன்.

அந்த இடத்துல 10 மாசத்துக்கு முன்னாடி வனத்துறையிடமிருந்து 700 செம்மரக் கன்றுகளை வாங்கி நாலு ஏக்கர்ல நட்டுவெச்சிருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செம்மறியாடுகளுடன்...
செம்மறியாடுகளுடன்...

10 அடிக்கு 10 அடி இடைவெளியில, ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலத்துல குழி வெட்டி அதுல செம்மரம் நட்டோம். மாமரத்துக்குப் போட்ட சொட்டுநீர்க் குழாய்களையே இதுக்குப் பயன்படுத்திக்கிட்டோம். உரம் எதுவும் பெருசா போடலை. பஞ்சகவ்யாவை ஒரு தடவை கரைச்சு, சொட்டுநீர்க் குழாய்ல விட்டோம். ஒரு அடிக்குச் செடி வளர்ந்து வந்த சமயத்துல முயல் கடிச்சு 700 கன்னும் வீணாப்போச்சு. அப்புறம் அதுவா தானா தழைஞ்சு வருது’’ என்றவர்,

நாட்டுக்கோழிகளுடன்...
நாட்டுக்கோழிகளுடன்...

‘‘சந்தனம், செம்மரம் ரெண்டிலும் உடனடியாக வருமானம் கிடைக்காதுதான். ஆனா, பிற்காலத்துல நல்ல லாபம் கிடைக்கும்னு செய்யறோம். சந்தன மரத்தை வளர்க்க இப்போ எந்தப் பிரச்னையுமில்லை. இன்னும் 10 வருஷத்துக்கு மேலதான் பாதுகாப்பை வலுவாகச் செய்யணும். நான் இப்பவே ரெண்டடுக்கு முள் வேலியும், கம்பி வேலியும் போட்டு, பாதுகாப்பு செஞ்சி வெச்சிருக்கேன். சந்தன நாற்று, குழியெடுத்தது, நடவு, சொட்டுநீர்க் குழாய் எல்லாம் சேர்த்து 60,000 செலவாச்சு. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை பராமரிப்புச் செலவு 10,000 ஆகுது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை சொட்டுநீர்க் குழாய் மாத்தணும். அதுக்கு 30,000 ரூபாய் செலவாகும். 1,200 சந்தன மரம் நட்டதுல இப்போ 1,000 மரங்கள்தான் இருக்கு. 30 வருஷத்துக்குப் பிறகுதான் சந்தன மரம் வாசம் வீசும்; அதுக்கு மதிப்பும் கிடைக்கும். சந்தன மரத்துக்குள்ள இருக்கிற கட்டைக்குத்தான் மதிப்பு. ஒரு மரத்துல குறைஞ்சபட்சம் எட்டு கிலோ கட்டை கிடைக்கும். அந்த வகையில், என் நிலத்துல இருந்து குறைஞ்சது 7,500 கிலோ சந்தனக் கட்டை கிடைக்கும்.

இன்னைக்கு சந்தனக் கட்டையோட விலை ஒரு கிலோ 14 ஆயிரம் ரூபாய். இன்னும் 20 வருஷம் கழிச்சு, இதே விலைக்கு வித்தாலும்கூட, குறைஞ்சது 10 கோடி ரூபாய் கிடைக்கும்.

வனத்துறையினர் தான் சந்தன மரத்தை அறுத்து, டெண்டர் விட்டு, விற்பனை செஞ்சு தருவாங்க. அதுக்கு அவங்க 20 சதவிகித நிர்வாகச் செலவு எடுத்துக்குவாங்க. மீதி 80 சதவிகிதம் நம்மகிட்ட கொடுப்பாங்க. கடைசியில் கையில் குறைஞ்சது 8 கோடி ரூபாய் நிக்கும்” என்றவர் நிறைவாக,

இரண்டடுக்கு முள் வேலி
இரண்டடுக்கு முள் வேலி

‘‘தோட்டத்துல 25 நாட்டுக்கோழிகள வளர்க்கிறேன். நாலு மாசத்துக்கு ஒரு தடவை 30 கோழிகளை விக்கிறேன். சராசரியா ஒரு கோழி மூணு கிலோ வரைக்கும் வருது. கிலோ 340 ரூபாய்னு 30 ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறேன். இதன் மூலமாக வருஷத்துக்கு 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. செம்மறியாடு 25 வெச்சிருக்கேன். அவற்றின் குட்டிகளை வித்துடுவேன். ஒரு குட்டி சராசரியா 5 ஆயிரம் ரூபாய்னு வருஷத்துக்கு 20 குட்டிகளை விப்போம். அதன் மூலமாக வருஷத்துக்கு 1,00,000 ரூபாய் கிடைக்குது. இதைவெச்சு எல்லாச் செலவுகளையும் பார்த்துக்குறோம். எல்லாரும் யோசிக்கிற, செய்யத் தயங்குற சந்தன மரத்தையும் செம்மரத்தையும் நான் நட்டு வளர்க்கிறதையே சாதனையா நினைக்கிறேன். அதுக்கான சன்மானம் எனக்குப் பின்னாடி என் மகனுக்கும், பேரப் பிள்ளைங்களுக்கும் கிடைக்கும். அது போதும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு, தங்கவேல், செல்போன்:89038 69760/ 98427 83660.

சந்தன மர வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

ந்தனமர வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து முன்னோடி சந்தனமர விவசாயி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த முருகசெல்வத்திடம் பேசினோம். ``சந்தனமர வளர்ப்புக்குச் செம்மண் பூமி முதல் தரமானது. மலையடிவாரப் பகுதிகள் சந்தன மரம் பயிர் செய்ய உகந்த இடம். தண்ணீர் தன்மை (பி.ஹெச் அளவு) 7-க்குள்ளாக இருக்க வேண்டும். அதேபோல சீதோஷ்ணநிலை 35 டிகிரிக்கு உள்ளாக இருப்பது நல்லது. 10 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து விதையெடுத்து உருவாக்கிய கன்றுகளைப் நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு மைசூர் சந்தனமர வகை நாற்றுகள் தரமானவை.

சந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி!

நாற்றுகளை நடுவதற்கு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை உகந்த காலம். முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் சொட்டுநீர்ப் பாசனம் அவசியம். மஞ்சள், சிற்றரத்தை, சீந்தில், அமுக்கிராகிழங்கு, அதிமதுரம், பூனைமீசை, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை ஊடுபயிராக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பயிரிடலாம். சந்தன மரம் பயிர் செய்தவுடன் கிராம நிர்வாக அலுவலரின் ஆவணங்களில் பதிவு செய்து அடங்கல் பெறுவது மிகவும் அவசியம்’’ என்றார்.

தொடர்புக்கு, முருகசெல்வம், செல்போன் 63822 12029

சந்தன மர நடவு முறை

“மூன்றடி ஆழம், இரண்டரை அடி அகலத்தில் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். குழியை ஒரு மாதம் ஆறப்போட வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு ஐந்து கிலோ தொழுவுரம் போட வேண்டும். 1,200 குழிக்கு 6,000 கிலோ (6 டிராக்டர்) தொழுவுரம் தேவைப்படும். தொழுவுரம் போட்டதும், அதன்மீது ஒரு அடிக்கு மண்ணைப் போட வேண்டும். அதன்மீது சந்தனக் கன்றை நடவு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மினி டிராக்டர் மூலமாகக் களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், ஆண்டுக்கு ஒரு முறை உரம் கொடுக்கலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு