Published:Updated:

`தோட்ட வருமானம் தூய்மைப் பணியாளர்களுக்கே..!' நெல்லை மாநகராட்சியின் செம முயற்சி

மாநகராட்சி காய்கறித் தோட்டம்
மாநகராட்சி காய்கறித் தோட்டம்

5 லட்சம் மக்கள் வசிக்கும் நெல்லை மாநகரில் தினமும் 110 டன் குப்பைகள் சேருகின்றன. அதில், மக்கும் குப்பையில் இருந்து இயற்கை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், தற்போது காய்கறித் தோட்டமும் அமைத்துள்ளார்கள்.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தயாரிக்கும் இயற்கை நுண்ணுயிர் உரத்துக்கு அப்பகுதி விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இலவசமாக வழங்கப்பட்டு வந்த உரம் தற்போது கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் கிடைக்கும் வருவாய் தூய்மைப் பணியாளர்களிடமே கொடுக்கப்படுகிறது.

மாநகராட்சி சார்பாக 40 இடங்களில் இயற்கை உரம் தயாரிக்கப்படுவதுடன் அந்த இடங்களில் காய்கறி தோட்டங்களையும் அமைத்துள்ளனர். அதிலிருந்து மாதம்தோறும் 25 டன் காய்கறிகள் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க அனுமதி அளித்து, அதில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகுத்துள்ளார்.

வாழை சாகுபடி
வாழை சாகுபடி

காய்கறித் தோட்டம் குறித்து ஆணையர் கண்ணனிடம் பேசினோம். ``நெல்லை மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டி என்ற இடத்தில் கொட்டப்பட்டது. சுகாதாரச் சீர்கேடு காரணமாக அங்கு குப்பைகளைக் கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் அந்தந்த மண்டலங்களிலேயே குப்பையைத் தரம் பிரிக்க ஏற்பாடு செய்தோம்.

மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என 8 வகையாகப் பிரித்து அவற்றைத் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அப்புறப்படுத்துகிறோம். மக்கும் குப்பையில் இருந்து இயற்கை நுண்ணுயிர் உரம் தயாரிக்கிறோம்.

உரம் தயாரிக்கும் இடம்
உரம் தயாரிக்கும் இடம்

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தை ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு இலவசமாகவே கொடுத்தோம். இலவசமாகக் கொடுத்ததாலோ என்னவோ அதை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் இருக்கவில்லை. அதனால் தரமான இயற்கை உரத்திற்கு கிலோ 3 ரூபாய் என விலை நிர்ணயித்தோம்.

மாநகராட்சி சார்பாக விற்பனை செய்யப்படும் இயற்கை உரத்தை நிறைய பேர் வந்து வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் 25 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாக்கெட்டுகளில் இயற்கை உரம்
பாக்கெட்டுகளில் இயற்கை உரம்

உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்லாமல் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் நடக்கும் விவசாயப் பணிகளுக்கும்கூட இங்கிருந்து இயற்கை உரத்தை வாங்கிச் செல்கிறார்கள்

இயற்கை உரத்தைத் தயாரிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு அதில் இருந்து கிடைக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுத்து விடுகிறோம். இயற்கை உரத்தைப் பயன்படுத்தி நாமே காய்கறித் தோட்டம் போடலாமே என முடிவு செய்து தோட்டம் அமைத்தோம். அதையும் தூய்மைப் பணியாளர்களே பராமரிக்கிறார்கள்.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்

காய்கறித் தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தையும் அதைப் பராமரிக்கும் தொழிலாளர்களே பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் கூடுதல் பணிச்சுமை இருந்தபோதிலும் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் தோட்டப் பணிகளிலும் ஈடுபட்டார்கள்” என்கிறார்.

இயற்கைத் தோட்டத்தைப் பராமரிக்கும் தொழிலாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் காளான் வளர்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகிறார்கள். விதவிதமான பூச்செடிகளை வளர்த்து விற்பனை செய்வதிலும் நல்ல வருவாய் கிடைக்கிறது.

காளான் வளர்ப்பு
காளான் வளர்ப்பு

இயற்கை விவசாயம் குறித்து தெரிந்துகொள்வதற்காகச் சில பணியாளர்கள் கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரிக்கு பயிற்சிக்காகச் சென்று வந்திருக்கிறார்கள். இது தவிர, தேனி வளர்ப்புப் பயிற்சியையும் தூய்மைப் பணியாளர்கள் பெற்றுள்ளதால் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் தேன் விற்பனையும் தொடங்க இருப்பதாகத் தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் பேசுகையில், ``ஒவ்வோர் இடத்திலும் மண் பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த இடத்துக்குத் தகுந்தவாறு காய்கறிகளைப் பயிரிட நடவடிக்கை எடுத்தோம். அதனால் நல்ல விளைச்சல் கிடைப்பதால் பணியாளர்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள்.

தோட்டத்தைப் பார்வையிடும் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த்
தோட்டத்தைப் பார்வையிடும் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த்

கத்திரி, தக்காளி, வெண்டை, சுரைக்காய், காலிஃப்ளவர், மிளகாய், வெங்காயம், புடலை, முள்ளங்கி, முருங்கை, நிலக்கடலை, சோளம், கப்பக்கிழங்கு எனப் பல வகையானவற்றை பயிரிட்டிருக்கிறார்கள். சோளம், நிலக்கடலை ஆகியவற்றில் நல்ல லாபம் கிடைத்தது.

மாதம்தோறும் காய்கறித் தோட்டத்தில் இருந்து 25 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி, கிர்ணிப் பழம் ஆகியவை மட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் முதல் முறையாகத் திராட்சை பயிரிட்டிருக்கிறார்கள். அதுவும் நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

திராட்சைக் கொடி
திராட்சைக் கொடி

நெல்லையின் சீதோஷ்ண நிலையில் இங்கு பயிரிட்டுள்ள வெற்றிலைக் கொடியும் நன்றாக வளர்ந்திருக்கிறது. கரும்பு வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கிறது. வேளாண்மைத் துறையினரிடம் ஆலோசனை கேட்டு எங்கள் பணியாளர்கள் விவசாயத்தை சிறப்பாகச் செய்கிறார்கள்” என்றார் பெருமையுடன்.

தோட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் பேசினோம். ``வழக்கமான பணியுடன் சேர்த்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியைச் செய்யச் சொன்னபோது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்துச்சு. வேண்டா வெறுப்பாக அதைச் செய்யத் தொடங்கினோம். இப்போது எங்களுக்கு அதில் இருந்து ஊக்கத் தொகை கிடைப்பதால் ஆர்வமாகச் செய்யுறோம்.

காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி
காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி

முதலில் பூந்தோட்டம் போட்டோம். அதன் பிறகு, காய்கறித் தோட்டம் போட்டிருக்கோம். 40 இடங்களில் இந்தத் தோட்டம் இருக்கு. இயற்கை உரத்தைப் பயன்படுத்தி காய்கறிகள் பயிரிடுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் அந்தப் பகுதி மக்களே அவற்றை வாங்கிக் கொள்கிறார்கள்” என்றார்கள், மகிழ்ச்சியுடன்.

நெல்லை மாநகராட்சியின் இந்த முன்னோடித் திட்டத்தைப் பாராட்டுவோம்!

அடுத்த கட்டுரைக்கு