Published:Updated:

கிருமிநாசினி தயாரிக்க அரிசி வேண்டாம்... வேப்பிலை, மஞ்சளே போதும்!

மாற்றுவழி

பிரீமியம் ஸ்டோரி
‘‘இந்திய உணவுக் கழகத்தில் கையிருப்பில் இருக்கும் அரிசியைக்கொண்டு கிருமிநாசினி தயாரிக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கிருமிநாசினிக்குத் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. இந்திய உணவுக் கழகச் சேமிப்புக் கிடங்குகளில் உபரியாக இருக்கும் அரிசியைப் பயன்படுத்தி எத்தனால் தயாரித்து, அதன் மூலம் கிருமிநாசினி தயாரிக்கவும், எஞ்சிய எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிறது மத்திய அரசின் அறிவிப்பு. அதற்கான வேலைகளும்கூட தொடங்கிவிட்டன.

அரிசி
அரிசி

வளர்ந்த நாடுகளே ‘கொரோனா தாக்குதல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்குமோ...’ என்று கலங்கி நிற்கின்றன. இந்தச் சமயத்தில் நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக வைத்திருக்கும் தானியத்தை எடுத்து கிருமிநாசினி தயாரிக்க முன்வந்திருப்பதற்குப் பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில், இன்னும்கூட 30 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குப் போதுமான உணவு கிடைக்காத நிலை இருக்கிறது. இந்த நிலையில் இப்படியோர் அறிவிப்பு சமூக ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

இது தொடர்பாக, கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர் நடராஜனிடம் பேசினோம். “இயற்கையில் கிருமிநாசினி தயாரிக்கப் பல வழிகள் உள்ளன. அரிசியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வேப்பிலை, மாட்டுச் சிறுநீரில் மஞ்சள் கலந்து தெளிப்பது போன்ற பல வழிகள் இருக்கின்றன. ஆனால், `செயற்கையாகத் தயாரிக்கும் கிருமிநாசினி நல்ல பலனைத் தரும்’ என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், கொரோனா நோயாளிகளுக்கே ஆங்கில மருத்துவத்துடன் இயற்கை மருத்துவமும் கலந்து ஒருங்கிணைந்த சிகிச்சை முறை சில மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. சில அமைப்பினர் இயற்கையாகக் கிருமிநாசினி தயாரித்து விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, மக்களின் உணவுத் தேவைக்காக இருக்கும் அரிசியை விட்டுவிட்டு, மத்திய அரசு இயற்கையின் பக்கம் திரும்புவது நல்லது” என்றார்.

அரிசி மூலம் கிருமிநாசினி தயாரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “நாட்டிலுள்ள ஏழைகள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்கான அரிசியைப் பயன்படுத்தி, பணக்காரர்களின் கைகளைக் கழுவும் கிருமிநாசினி தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள ஏழைகள் எப்போதுதான் விழித்துக்கொள்ளப் போகிறார்களோ..!” என்று பதிவிட்டிருக்கிறார்.

கிருமிநாசினி தயாரிக்க அரிசி வேண்டாம்... வேப்பிலை, மஞ்சளே போதும்!

``இயற்கை வளம் குறைவாக இருக்கும் நாடுகளும், வேறு வழிமுறை அறியாதவர்களுமே உணவுப் பொருளைக்கொண்டு கிருமிநாசினி உற்பத்தி செய்வார்கள். ஆனால் நம்மிடமோ, கிருமிநாசினி தயாரிக்க வேம்பு, மஞ்சள் உட்பட ஏராளமான இயற்கைப் பொருள்கள் இருக்கின்றன. பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், சாணம், சிறுநீர் போன்றவற்றைப் பயன்படுத்திச் சோப்பு, ஷாம்பூ, பற்பொடிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. பசுவின் பொருள்களைப் பயன்படுத்தி நிச்சயம் கிருமிநாசினியையும் தயாரிக்க முடியும். இதைச் செயல்படுத்தினால், லட்சக்கணக்கான விவசாயிகளும் பயன்பெறுவார்கள். கோடிக்கணக்கான மக்களுக்கு உணவும் கிடைக்கும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கைக் கிருமிநாசினி தயாரிப்பு!

வீட்டிலேயே இயற்கைக் கிருமிநாசினி தயாரிப்பதற்கான எளிய முறைகளைக் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

முறை 1

“வேப்பம் பட்டையைச் சீவல் சீவலாக எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கவைத்த கஷாயத்தை வடிகட்டிக்கொள்ளவும். இதில், பொடித்த பச்சைக் கற்பூரம் ஒரு கிராம் கலந்துகொள்ளவும்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இதைக்கொண்டு கைகளை அலசினால் கிருமித்தொற்று தாக்காது. புண்கள், காயங்கள் இருந்தால், அதற்கும் இந்தக் கிருமிநாசினியை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

முறை 2

வேப்பிலையையும் மஞ்சளையும் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும் அல்லது இடித்துக்கொள்ளவும் (மஞ்சள்தூளுக்குப் பதில் விரலி மஞ்சள் பயன்படுத்துவது சிறந்தது). இத்துடன் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும். மூன்று முதல் ஐந்து கிராம் அளவுக்கு படிகாரத்தைத் தூள் செய்து இதனுடன் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். இதைக்கொண்டு கைகளை அலசலாம் (படிகாரம் சேர்த்தால் கலவை சிவப்பாக மாறும். அதை விரும்பாதவர்கள் படிகாரத்தைத் தவிர்க்கலாம், தவறில்லை).”

-எஸ்.கதிரேசன்

பஞ்சகவ்யா ஆய்வு

`மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் தன்மை பஞ்சகவ்யாவில் இருக்கிறதா, நோய்த் தொற்று வைரஸ்களுக்கு எதிராகச் செயல்புரியும் தன்மை இருக்கிறதா?’ என்பதை அறிய பஞ்சகவ்யாவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு