Published:Updated:

சட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் வருவாய்த்துறை!

சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
சட்டம்

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 17

சட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் வருவாய்த்துறை!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 17

Published:Updated:
சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
சட்டம்

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. அந்தத் திட்டங்களைப் பெற விவசாயிகள், வருவாய்த்துறையிடம் சான்றுகள் பெற்று இணைக்க வேண்டும். ஆண்டுக்கொருமுறை மே, ஜூன், ஜூலை மாதங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடக்கும். அதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிவ.இளங்கோ
சிவ.இளங்கோ

ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் தனது கிராம கணக்குகளைச் சமர்ப்பிப்பார். இதில் கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் ஆய்வு செய்யப்படும். ஜமாபந்தியில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் தனிப்பட்ட மற்றும் பொதுப் பிரச்னைகள் குறித்த கோரிக்கைகளுக்கு மனு செய்யலாம். இங்கு பெரும்பாலான பிரச்னைகள் உடனே தீர்க்கப்படும். குறிப்பாக, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் வரப்பு, வாய்க்கால் தகராறுகளுக்குச் சட்டப்படி வழிகாட்டல் செய்து பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படு கின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடக்கும் குறைதீர்வு நாள் கூட்டம்போல வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தவேண்டும். இதில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது பிரச்னைகளை மனுக் கொடுத்துத் தீர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் பேரழிவு ஏற்பட்டுப் பயிர்கள் அழியும்போதும் வட்டாட்சியர் பாதிப்பைக் கணக்கிட்டு, மாவட்ட ஆட்சியர் வழியாக அரசுக்கு அறிக்கை அனுப்புவார். அந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. நீர் நிலைகள், கண்மாய்களை ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டியது வருவாய்த்துறையின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். உங்கள் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே வட்டாட்சியரிடம் புகார் செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டம்
சட்டம்

சொட்டுநீர்ப் பாசன கருவிகளை 100 சதவிகித மானியத்தில் வாங்கச் சிறு-குறு விவசாயச் சான்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர், கள ஆய்வின் அடிப்படையில் உண்மை நிலவரத்தை வருவாய் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். அது, வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படும். அதன் அடிப்படையில் சிறு-குறு விவசாயச் சான்றை வட்டாட்சியர் வழங்குவார். இந்தச் சான்று வாங்கக் கட்டணம் கிடையாது. ஐந்து ஏக்கருக்குள் நன்செய் அல்லது புன்செய் நிலம் உள்ளவர்கள் சிறு-குறு விவசாயச் சான்று பெறத் தகுதி உடையவர்கள். எனவே கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கொடி நாள் பணம் கொடுத்தால்தான் சிறு-குறு விவசாயச் சான்று கொடுப்பேன் என்று வட்டாட்சியரும் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினாலோ, லஞ்சம் கேட்டாலோ கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் செய்யலாம்.

மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரி விவசாய நிதிஉதவி(கிசான்) திட்டத்தில் ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் வருடத்திற்கு 6,000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பட்டா நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்படும். இதில் விவசாயிகள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கிற்கு இந்தத் திட்டத்திலிருந்து பணம் வரவில்லை என்றாலோ உங்கள் பகுதி வட்டாட்சியரை அணுகவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சட்டம்
சட்டம்

விவசாயிகள் பயிர் செய்யத் தேவையான பொருளாதாரத் தேவைக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளை அணுகலாம். வங்கிகளில் கடன் பெறவும், விவசாயக் காப்பீடு செய்யவும் விண்ணப்பத்துடன் பல ஆவணங்கள் இணைக்க வேண்டியுள்ளது. அதில் முதன்மையான ஆவணம் சிட்டா, அடங்கல். விசாரணையின் அடிப்படையில் கையால் எழுதப்பட்ட சிட்டா, அடங்கல் மற்றும் யார் விவசாயம் செய்கிறார்கள், என்ன விவசாயம் செய்யப்படுகிறது என்ற சான்றும் கிராம நிர்வாக அலுவலரால் கொடுக்கப்படுகிறது. இந்தச் சான்று வாங்கக் கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட சிட்டா, அடங்கல் துணை வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணமாக 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்களிலும், கணினி மையங்களிலும் கணினி சிட்டா, அடங்கல் பெற்றுக்கொள்ளலாம்.

சட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் வருவாய்த்துறை!

டிராக்டர், குபேட்டா, தெளிப்பான் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் விவசாய இடுபொருள்கள் உள்ளிட்டவை மானியத்துடன் வாங்க, விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயச் சான்று வாங்கி இணைக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் கள ஆய்வு செய்து விவசாயச் சான்று கொடுப்பார். இதற்குக் கட்டணம் இல்லை. வேறு எந்த வகையிலும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற விவசாயச் சான்று இணைக்க வேண்டும். கள ஆய்வு செய்து கொடுக்கப்படும் இந்தச் சான்றில், என்ன மாதிரி விவசாயம்? எவ்வளவு பரப்பில் செய்யப்படுகிறது? ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள இடத்தின் வரைபடம் மற்றும் 100 மீட்டரில் வேறு எந்த நீர்நிலைகளும் இல்லை என்பதற்கான தடை இல்லாச் சான்று உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த விவசாயச் சான்றும் கட்டணம் இல்லாமல் கொடுக்கப்பட வேண்டும்.

சந்தன மரங்களைப் பட்டா நிலத்தில் வளர்க்கலாம். பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்கள் பற்றி விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் சந்தன மரத்தின் எண்ணிக்கை மற்றும் வயது, பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தின் சர்வே எண், விவசாயியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதற்குண்டான தனிப் பதிவேட்டில் பதிய வேண்டும். இவ்வாறு சந்தன மர விவரங்களைப் பதிவு செய்யத் தனிப் பதிவேடு உள்ளது.

இந்தப் பதிவேட்டில் சந்தன மர விவரங்களைக் கட்டாயம் பதிய வேண்டும் என்பது பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவதில்லை. எனவே சந்தன மரம் பயிர் செய்யும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் செய்துள்ள விவரங்களைத் தெரிவித்து, அதற்குண்டான பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதன் மூலம் எதிர்காலத்தில் வரும் சட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

விவசாயிகள் லஞ்சம் கொடுக்காமல் சான்றுகள் வாங்கச் சட்ட பஞ்சாயத்து இயக்கம் உதவி செய்யும். இனி சான்று கொடுக்க லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்யவும்.

இயக்குநர், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை-600016. தொலைபேசி: 044 22321090, 22321085, 22310989, 22342142. இ-மெயில்: dvac@nic.in

மேலும் விவரங்களுக்குச் சட்ட பஞ்சாயத்து உதவி மையத்தை 7667-100-100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

-வழிகாட்டல் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism