Published:Updated:

சட்டம் : மானியங்கள் அதிகம் தரும் தோட்டக்கலைத்துறை!

கத்தரிக்காய்
பிரீமியம் ஸ்டோரி
கத்தரிக்காய்

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 20

சட்டம் : மானியங்கள் அதிகம் தரும் தோட்டக்கலைத்துறை!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 20

Published:Updated:
கத்தரிக்காய்
பிரீமியம் ஸ்டோரி
கத்தரிக்காய்

தோட்டக்கலை, இந்திய வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிக்கிறது. அண்மைக் காலங்களில் நாட்டின் உணவு ஊட்டச்சத்து மற்றும் உடல்நலப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்துவருகிறது; வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்திவருகிறது. விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் தொழிலாக மாறிவரும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள்துறை குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

தக்காளி
தக்காளி

தமிழ்நாட்டு விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களையும், சந்தை மாறுதல்களையும் வரவேற்று கடைப்பிடிப்பதால் நம் மாநிலம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாடு ஏழுவிதமான வேளாண் காலநிலைகளையும், பலவிதமான மண் வளங்களையும் கொண்டது. இதனால் பழங்கள், காய்கறிகள், மலைப் பயிர்கள், மருத்துவப் பயிர்கள், சுவைதாளிதப் பயிர்கள், வாசனைத் திரவியப் பயிர்கள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மத்திய அரசின் ‘தோட்டக்கலைப் பயிர்கள் புள்ளிவிவரம்- 2018’ தேசிய அளவில் தமிழ்நாடு, மரவள்ளிக்கிழங்குப் பயிரின் பரப்பு மற்றும் உற்பத்தித்திறனில் நாட்டில் முதலிடத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் தென்னைச் சாகுபடியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை போன்ற முக்கியக் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை மொத்தக் காய்கறிப் பயிர்களின் சாகுபடிப் பரப்பில் 70 சதவிகிதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சாமந்தி பூ
சாமந்தி பூ

வீரிய ஒட்டு ரகக் காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் திட்டங்களின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, தரமான நடவு செடிகள் மற்றும் காய்கறி விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டின் முக்கியப் பழப்பயிர் உற்பத்தியில் மா 52 சதவிகிதம், வாழை 28 சதவிகிதம் என இந்த இரு பயிர்கள் மட்டும் மொத்தச் சாகுபடிப் பரப்பில் 80 சதவிகித பங்களிப்பைச் செய்கின்றன. ஆண்டு முழுவதும் திராட்சை உற்பத்தி, பருவமில்லாத காலங்களில் மா உற்பத்தி ஆகியவை தமிழகத்தின் தனித்தன்மை.

கத்தரிக்காய்
கத்தரிக்காய்

மலர்கள் உற்பத்தியில் தமிழகம் 17.46 சதவிகிதம் பங்களிப்பு செய்து தொடர்ந்து இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இயங்கிவரும் திசு வளர்ப்புக் கூடங்களில் தரமான மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதன் மூலம் மலர்ச் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மிளகாய், பூண்டு, இஞ்சி, ஏலக்காய், மிளகு, கிராம்பு, லவங்கம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள், புளி, ஜாதிக்காய் போன்ற அனைத்து வகையான சுவைதாளிதப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிளகாய் மற்றும் மஞ்சள் பயிர்களின் சாகுபடிப் பரப்பு மொத்த சுவைதாளிதப் பயிர்கள் சாகுபடிப் பரப்பில் 64 சதவிகிதமாக உள்ளது. தமிழ்நாட்டில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் 2007-08-ம் ஆண்டு முதல் சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில் மட்டும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சட்டம் :  மானியங்கள் அதிகம் தரும் தோட்டக்கலைத்துறை!

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் கரூர், காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பை அதிகரிப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வீரிய ரகக் காய்கறி விதைகள் மற்றும் தரமான நடவுச் செடிகள் 40 முதல் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை, தோட்டக்கலைப் பயிர்களில் 2016-ம் ஆண்டு காரீப் பருவத்திலிருந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் அந்தந்த வருவாய் கிராமங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துகொள்ளலாம்.

சட்டம் :  மானியங்கள் அதிகம் தரும் தோட்டக்கலைத்துறை!

தோட்டக்கலைத்துறையில் மானியம் பெறுவதில், காப்பீடு செய்வதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் வட்ட அளவில் தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை துணை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலரைத் தொடர்புகொள்ளலாம்.

மாவட்ட அளவில் தோட்டக்கலை துணை இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர், மாநில அளவில் தோட்டக்கலை இயக்குநர், கூடுதல் தோட்டக்கலை இயக்குநர், தோட்டக்கலை இணை இயக்குநரை அணுகி தகவல் பெறலாம்.

- முற்றும்

சிவ.இளங்கோ

பிரமிக்கவைத்த பசுமை விகடன்!

விவசாயமும் சட்டமும் சார்ந்து பசுமை விகடனில் கடந்த இருபது இதழ்களில் தொடர் எழுத வாய்ப்பளித்த பசுமை விகடன் ஆசிரியர் குழுவுக்கும், விகடன் குழுமத்துக்கும், ஆதரவளித்த வாசகர்களுக்கும், விவசாயிகளுக்கும் `சட்டப்பஞ்சாயத்து’ இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டப் பஞ்சாயத்துத் தொடர் எழுதியதன் மூலம் பல புதிய அனுபவங்களைப் பெற்றோம்.

நூற்றுக்கணக்கான விவசாயிகள், வாசகர்கள் சட்டப்பஞ்சாயத்து உதவி மையத்தைத் தொடர்புகொண்டனர். அவர்களுடைய சந்தேகங்களுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். அடிப்படையில் நான் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளுக்குச் சட்டம் சார்ந்த தகவல்களைக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். பசுமை விகடனில் தொடர் எழுதும் முன்னர், இதற்கு இவ்வளவு பெரிய தாக்கம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தொடர் எழுத ஆரம்பித்த பிறகு பசுமை விகடன், விவசாயிகளிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். வருங்காலத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போது விவசாயிகளுக்குச் சட்டம் சார்ந்து, திட்டம் சார்ந்து புதிய தகவல்களைத் தர முயற்சி செய்கிறோம். பசுமை விகடன் வாசகர்கள், விவசாயிகள் சட்டம் சார்ந்த, அரசு அலுவலகப் பிரச்னை மற்றும் சந்தேகம் இருந்தால் சட்டப்பஞ்சாயத்து இயக்க உதவி மையத்தை அணுகலாம்.

7667-100-100 என்ற எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். சனிக்கிழமைதோறும் நடக்கும் உதவி முகாமில் நேரில் வந்து உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். அலுவலக முகவரி: சட்டப்பஞ்சாயத்து இயக்கம், எச்- 42/3, மேற்கு அவென்யூ, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை- 600041.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism