Published:Updated:

40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம்! - கோவைக்காய் கொடுக்கும் கொடை!

அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்

மகசூல்

40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம்! - கோவைக்காய் கொடுக்கும் கொடை!

மகசூல்

Published:Updated:
அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்
‘‘மண், தண்ணீர், பட்டம், பருவமழை இதெல்லாம்தான் ஒவ்வொரு பயிரோட மகசூலையும் தீர்மானிக்குது. காய்கறிகளைச் சாகுபடி செய்யப் பல பட்டங்கள் இருந்தாலும், எனக்குத் தண்ணீர் வசதியோடு தைப்பட்டம்தான் சரியா இருந்தது.

இந்தப் பட்டத்துல, வளமான தண்ணீர் இருந்தா காய்கறி மட்டுமல்ல, வேற எந்தப் பயிர் வெச்சாலும் மகசூலுக்குப் பாதகம் இருக்காது. அதிலும், கோவக்காய்ச் சாகுபடி செய்தா சொல்லி வெச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்” என உற்சாகமாகப் பேசுகிறார், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள கோட்டக் காயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்.

40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம்! - கோவைக்காய் கொடுக்கும் கொடை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவந்த கோவப்பழங்களைப் பறவைகள் வந்து கொத்திச் செல்ல... வண்டுகள் ரீங்காரம் இட்டு இசைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்த ஒரு காலைவேளையில் கோவைக்காய்த் தோட்டத்தில் அறுவடை வேலைகளிலிருந்த ரமேஷைச் சந்தித்துப் பேசினோம்.

கோவைக்காய் அறுவடை
கோவைக்காய் அறுவடை

“என்னோட அப்பா விவசாயம்தான் பார்த்தார். அதனால, எனக்கும் சின்ன வயசுல இருந்து படிப்போடு சேர்ந்து விவசாய அனுபவங்கள் கொஞ்சம் இருந்தது. நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு ஒரு ஹோட்டல்ல 5 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, தஞ்சாவூர் பக்கத்துல இருக்குற ஒரு ரிசார்ட்டுல வேலைக்குப் போனேன். அங்க ரிசார்ட் இடம்போக மீத இடம் இருந்தது. அதுல சின்ன அளவுல கத்திரி, தக்காளி, கீரைனு பயிர் செய்து உரிமையாளர்கிட்ட கொடுத்தேன். வாங்கிட்டுப் போய்ச் சமைச் சவர், ‘காய்கறிகள் ரொம்ப நல்லாயிருக்கு. பேசாம இங்க தங்குற எல்லோருக்கும் கொடுக்குற அளவுக்கு உற்பத்தி செய்’னு சொன்னார். அப்புறமாத்தான் சிறிய அளவுல இருந்த தோட்டத்தைக் கொஞ்சம் பெரிசா விரிவுபடுத்தினேன். விவசாய அனுபவங்களை அங்கேதான் கத்துக்கிட்டேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இனிமே முழுமையா விவசாயம் செய்யலாம்னு வேலையை விட்டுட்டு, போன வருஷம் ஊருக்கு வந்துட்டேன். எனக்குச் சொந்தமா ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. அது தவிர, 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன். கோவைக்காய்-40 சென்ட், பீர்க்கங்காய்-60 சென்ட், புடலை-60 சென்ட், பட்டன் ரோஸ்-30 சென்ட், சம்பங்கி-50 சென்ட், மலை வேம்பு ஒன்றரை ஏக்கர்னு பயிர் பண்ணியிருக்கேன். போன டிசம்பர் மாசம்தான் பயிர் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவர் கோவைக்காய் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

பீர்க்கங்காய்ச் செடி
பீர்க்கங்காய்ச் செடி

‘‘பிப்ரவரி 1-ம் தேதி தைப்பட்டத்துல கோவக்காயை நடவு பண்ணிட்டேன். வெறும் கட்டையாக வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். 40 சென்ட் நிலத்தை ரெண்டா பிரிச்சு, ரெண்டு பாகமா பந்தல் போட்டிருக்கேன். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு பந்தல்ல பறிப்பு நடக்கும். கோவக்காயைப் பொறுத்தவரைக்கும் ஒரு இலைக்கு ஒரு காய்னு வைக்குது. ஏப்ரல் 10-ம் தேதியில இருந்து பறிப்பு நடந்துகிட்டிருக்கு. முதல்ல 20 கிலோதான் மகசூல் கிடைச்சது. போகப்போக மகசூல் அதிகரிச்சது.

பட்டன் ரோஸ்
பட்டன் ரோஸ்

இந்த நேரத்துல கொரோனோ சோதனைக் காலமும் வருமானத்தைப் பதம் பார்த்துடுச்சு. கிலோ 20 முதல் 25 ரூபாய்க்குப் போக வேண்டிய கோவைக்காய் 10 ரூபாய்க்கும் குறைவாத்தான் விற்பனை ஆச்சு. ஆனா, இதுவும் எனக்கு நஷ்டமில்லை. லாபம் கொறைஞ்சதுனுதான் சொல்லணும். மே மாசத்துல இருந்து 100 கிலோ முதல் 150 கிலோ வரைக்கும் கிடைச்சது” என்றவர் கோவைக் காய் பராமரிப்பு முறைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம்! - கோவைக்காய் கொடுக்கும் கொடை!

“கோவக்காயைப் பொறுத்தவரை பராமரிப்பு ரொம்ப முக்கியம். கொடிகளுக்கு அடியுரம் வைக்கும்போது, முதல்ல டி.ஏ.பி, எரு ரெண்டையும் கலந்து வெக்க ஆரம்பிச்சேன். அப்புறமாத்தான் வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலமா வேர்ப்பகுதிகளுக்கு நேரடியா பாய்ச்சினேன். என்னால உடனே டி.ஏ.பி.யை விட முடியல. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா குறைக்க முடிஞ்சது. இப்போ 40 சதவிகிதம் டி.ஏ.பி பயன்படுத்துறேன். எதிர்காலத்துல அதை நிறுத்திட்டு முழுமையான இயற்கை விவசாயம் செய்வேன். வேர்ப்பகுதியில சொட்டு நீரோடு ஜீவாமிர்தமும் கொடுத்தேன். ஜீவாமிர்தம் விட்டதுக்கு அப்புறமா 40 சென்ட்ல ஒரு நாளைக்கு 300 கிலோ வரைக்கும் கிடைச்சது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் மார்க்கெட்டுக்குக் கோவைக்காய் பறிச்சு அனுப்புறதால, பணப் பிரச்னை இல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவைக்காயைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு அதிகமாகவும் காய்க்கும், குறைவாகவும் காய்க்கும். மாசம் ஒருமுறை வேப்ப எண்ணெய் கரைசல், 15 நாளுக்கு ஒருமுறை வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தெளிப்பேன். அதனால பூச்சித் தாக்குதல் இல்லாம, இலைகள் பச்சை பசேல்னு ஆயிடுது. கோவைக்காய் தவிர, பட்டன்ரோஸ் பூவையும் பறிச்சு சந்தைக்குக் கொண்டு போறேன். ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கிடைக்குது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மார்க்கெட்டுக்குக் கோவைக்காய் பறிச்சு அனுப்புறதால, பணப் பிரச்னை இல்ல. இன்னும் சொல்லணும்னா ஆபீஸ்ல சம்பளம் வாங்குற மாதிரி கோவைக்காய் எங்களுக்குச் சம்பளம் கொடுக்குது” என்றவர், வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்
அறுவடையான கோவைக்காயுடன் ரமேஷ்

“சுற்றுவட்டாரப் பகுதியில கிலோ 15 ரூபாய்க்கும், திருமழிசை சந்தைக்கு 10 ரூபாய்க்கும் கொடுக்குறேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிப்பு மூலம் 40 சென்ட்ல 200 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. கிலோ 10 ரூபாய்னு வெச்சா 2,000 ரூபாய் வீதம் மாசத்துக்கு 30,000 ரூபாய் கிடைக்குது. இப்போ கொரோனோ தடைக்காலத்தால் வருமானம் கம்மியா கிடைக்குது. தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் செயல்பட ஆரம்பிச்சா கிலோ 25 ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். இன்னும் 4 வருஷத்துக்குக் குறையாம கோவைக்காய் வருமானம் இருக்கும். பட்டன்ரோஸ் ரெண்டு நாளைக்கு ஒருமுறை 2 கிலோ மகசூல் கிடைக்குது. அதை அச்சரப்பாக்கம் பகுதியிலயே கிலோ 300 ரூபாய்க்குக் கொடுக்குறேன். இது மூலமா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை 600 ரூபாய் வருமானம் வருது. இதைக் கோவைக்காய் பறிப்பு மற்றும் இதரச் செலவுக்காகப் பயன்படுத்துறேன். பட்டன்ரோஸ் இன்னும் ஒரு வருஷம் ஆனா, செடிக்கு 5 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அப்போ வருமானம் 5 மடங்கு அதிகமாகும். இதுபோகப் பீர்க்கங்காய், புடலை, சம்பங்கி, மலைவேம்பு எல்லாம் பலன் கொடுக்குறப்போ வருமானம் இன்னும் அதிகமாகும்” என்றபடி விடை கொடுத்தார் ரமேஷ்.

தொடர்புக்கு, ரமேஷ்,செல்போன்: 96555 73136

பூச்சிகளை விரட்டும் வேஸ்ட் டீகம்போஸர்!

100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் 90 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லம் போட்டுக் கலக்க வேண்டும். வேஸ்ட் டீகம்போஸர் பாட்டிலில் உள்ள பசையை எடுத்து தண்ணீரில் கலக்க வேண்டும். அதனுடன் ஒரு கிலோ ஆட்டுப் புழுக்கையைத் தூளாக்கி அந்த டிரம்முக்குள் மூடி வைக்க வேண்டும். இது நுண்ணுயிர்களைப் பெருக்க உதவும். கரைசலை நிழலான இடத்தில் வைத்துத் தினமும் 2 முறை 7 நாள்கள் தொடர்ந்து கலக்க வேண்டும். பிறகு 7 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் டீகம்போஸர் கரைசல் சேர்த்து 15 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். இதைத் தெளிக்கும்போது ஆட்டுப் புழுக்கை வாடைக்குப் பூச்சிகள் பக்கத்திலேயே வராது.

கோவைக்காய்ச் சாகுபடி!

40 சென்ட் நிலத்தில் கோவைக்காய்ச் சாகுபடி செய்யும் விதம் குறித்து ரமேஷ் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே!

ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, 3 முதல் 5 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். வடிகால் வசதியுடன்கூடிய செம்மண், மணற்சாரி, லேசான களிமண் ஆகிய மண் வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை. சித்திரை மாதத்தைத் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் கோவைக்காய்க் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், தைப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம்! - கோவைக்காய் கொடுக்கும் கொடை!

தேர்வு செய்த நிலத்தில் 2 டிராக்டர் எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, இரண்டு சால் உழவு செய்து, நான்கு நாள்கள் ஆற விட வேண்டும். பிறகு, 6 அடி இடைவெளியில் (6X6 அடி) ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, ஒவ்வொரு குழியிலும், இரண்டு கிலோ தொழு உரம், கைப்பிடியளவு சூடோமோனஸ் மற்றும் கொஞ்சம் ஜீவாமிர்தம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடிவிட வேண்டும். பிறகு, மூன்று கோவைக்காய் கொடித் தண்டுகளை முக்கோண வடிவில் நடவு செய்ய வேண்டும். விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும்போது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும். தரையிலிருந்து அரையடி உயரத்துக்குமேல் இருக்கும் கொடிகளாகப் பார்த்து, அரையடித் துண்டுகளாக வெட்டி அவற்றைச் சாணிக்கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும் (40 சென்ட் நிலத்துக்கு 5 கிலோ சாணத்தை, 15 லிட்டர் தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்).

வளர்ச்சியைக் கூட்டும் வைக்கோல் மூடாக்கு

நடவு செய்த பிறகு குழிகள்மீது வைக்கோல் கொண்டு மூடாக்குப் போட்டு, 20 நாள்கள்வரை கைகளால் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்பத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது சிறப்பானது. வழக்கமான பாசனமாக இருந்தால் 4 முதல் 7 நாள்களுக்கு ஒரு முறையும், சொட்டு நீர்ப்பாசனமாக இருந்தால், 2 நாள்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது.

15 நாள்கள் இடைவெளியில் 100 லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் ஜீவாமிர்தக் கரைசலை மாற்றி மாற்றித் தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

15-ம் நாளில் கொடிகள் துளிர்விட்டு வைக் கோலுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் வைக்கோலை அகற்றி விட வேண்டும்.

பிறகு, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கொம்பு இருக்குமாறு, ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் ஐந்தரை அடி உயரத்தில் உறுதியான கொம்புகளை வைத்துப் பந்தல் அமைக்க வேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் செடியை ஒட்டிக் குச்சி ஊன்றி, கொடிகளைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 55-ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும். 80-ம் நாள் முதல் தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். தொடர்ந்து மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை 2 கூடை மாட்டு எருவைக் கொடுக்கலாம்.

புழுத்தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய்

காய்களில் புழுத்தாக்குதல் இருந்தால், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கலாம். துளிர்கள் அதிகமாக வருவதற்கு 15 நாள்கள் இடைவெளியில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் வாரம் இருமுறை அறுவடை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism