Published:Updated:

மருத்துவத்திலும் தற்சார்பு வேண்டும்! - மாணவர்களுக்கு மூலிகைப் பயிற்சி!

மாணவர்களுடன் மூலிகைப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்களுடன் மூலிகைப் பள்ளி

மருத்துவம்

மருத்துவத்திலும் தற்சார்பு வேண்டும்! - மாணவர்களுக்கு மூலிகைப் பயிற்சி!

மருத்துவம்

Published:Updated:
மாணவர்களுடன் மூலிகைப் பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்களுடன் மூலிகைப் பள்ளி

ணவு, உடை, இருப்பிடம் ஆகியவைதான் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். மற்றவை அனைத்துமே நம்மைச் சுற்றியிருப் பவர்களுக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட கெளரவத் தேவைகள். கெளரவத் தேவைகளைக் குறைத்தாலே தற்சார்பு வாழ்க்கை சாத்தியம்தான். தினமும் காலையில் எழுந்ததும் துலக்கும் பற்பொடியிலிருந்து இரவு படுக்கப்போகும் முன் பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை நாமே தயார் செய்து கொள்வதுதான் தற்சார்பு. இதில் மருத்துவத்திலும் தற்சார்பு தேவை” என்கிறார் பள்ளியின் தாளாளர் ரெங்கதுரை.

திருநெல்வேலி மாவட்டம், சீதகற்ப நல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது உகந்தான்பட்டி சாலையில் ‘ஶ்ரீ அரவிந்த் வித்யாலயா பள்ளி’. மரங்கள், மூலிகைகள் சூழ்ந்து வனம்போலக் காட்சி அளிப்பதால் ‘காட்டுப்பள்ளிக்கூடம்’ என்றே இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை 33 மாணவர்கள், 23 மாணவிகள் என மொத்தம் 56 பேர் படித்து வருகிறார்கள். பள்ளியின் பாடத்திட்டத்தை மன அழுத்தம் இல்லாத கல்வியாகக் கற்றுக்கொடுப்பதுடன் பாரம்பர்ய விளையாட்டுகள், சுற்றுபுறச்சூழல் ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் செயல்படவில்லை. ஆனால், டியூஷன் வகுப்புக்காக வாரத்தில் இரண்டு நாள்கள் மாணவர்கள் வந்து செல்கிறார்கள். இந்தப் பள்ளியில் உள்ள ‘மூலிகைத் தோட்ட’த்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன. இங்குள்ள மாணவர் களிடம் எந்த மூலிகையைக் காட்டி கேட்டாலும், அந்த மூலிகையின் பெயர், அதன் மருத்துவ குணம், அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்துத் தெளிவாகச் சொல்கிறார்கள். அத்துடன், மூலிகைகளில் சோப்பு, தைலம், பற்பொடி, திருநீறு, பானகம் எனத் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்சார்பு என்பதில் மாணவர்கள் மூலிகைகளை அடையாளம் கண்டு சேகரித்து மதிப்புக்கூட்டி வீட்டில் உள்ளவர்களின் பயன்பாட்டுக்காகக் கொடுக்கிறார்கள்.

இந்தப் பள்ளியின் தாளாளரான ரெங்கதுரையிடம் பேசினோம், “நெல்லை மாவட்டம் கூடங்குளம்தான் என்னோட சொந்த ஊரு. பி.காம் முடிச்சுட்டு, ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தேன். தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரா 10 வருஷம் இருந்தேன். அதுக்கு பிறகு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். 2010-ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்போட அனுசரணையில் இங்கு, இந்தப் பள்ளியைத் தொடங்கினோம். இது என்.ஐ.ஓ.எஸ் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங்) பள்ளி. அதாவது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறைத் திட்டமாகும்.

மனைவியுடன் ரெங்கதுரை
மனைவியுடன் ரெங்கதுரை

பாடத்திணிப்பு இன்றி விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம். மனப்பாடம் இல்லாமல் செயல்வழியாகப் புரிந்து படிப்பது, மனச்சோர்வு இல்லாமல் விளையாட்டுகளுடன் கல்வி கற்பது ஆகியவை இங்கு கற்றுத்தரப்படுகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையான இக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, மாநில அரசின் பாடத்திட்டம் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து உயர்கல்வி வாய்ப்பும் இதில் கிடைக்கிறது.

இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களைச் சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்து அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள், அதே பாடத்திட்டத்தைக் கற்றுத்தரும் இந்தப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். பாடத்திட்டத்தையும் தாண்டி சமூகத்தைப் புரிந்துகொள்ள, சமூகத்தில் சிறந்து விளங்க ஒரு மாணவருக்குத் தேவையான அடிப்படை பண்புகளைத் தாண்டிய பலவற்றையும் சொல்லிக் கொடுத்து கூடுதல் தகுதி உடைய வனாக உருவாக்குகிறோம்” என்றவர் மாணவர் களுக்கு அளிக்கப்படும் மூலிகைப் பயிற்சிகள் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

மாணவர்களுடன்
மாணவர்களுடன்

‘‘என் தந்தை சித்த மருத்துவர். ஆனால், அவரிடம் நான் மருத்துவம் கற்கவில்லை. பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற சித்த மருத்துவர்தான், எனக்கு வழிக்காட்டினார். இதே சித்த மருத்துவர்தான், அடுத்தமுறை பள்ளிக்கு வந்தபோது “மூலிகைகளில் இருந்து மதிப்புக் கூட்டலாம்” எனச் சொல்லி சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தார். தொடர்ந்து நானே மூலிகைத் தோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்த்தேன். அதற்குப் பிறகுதான், பள்ளியில் என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும் மூலிகைகளை அடையாளம் காணுதல் குறித்து வயல்வெளியில் செயல்முறை வகுப்பெடுத்தேன். எங்களைப் பொறுத்த வரையில் மருத்துவத்திலும் தற்சார்பு இருக்க வேண்டும் என்பதால்தான் இன்றுவரை மூலிகை அடையாளம் காணுதல், மதிப்புக் கூட்டுதல் குறித்து இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறோம். இதில், வருமானத்தை விட ஆரோக்கியத்தையும், அதைக் கொண்டு சேர்த்தலையும் பெரிதாக நினைக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு,
ரெங்கதுரை,
செல்போன்: 96267 46022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism