Published:Updated:

`எந்தத் தொழில் செய்தாலும் விவசாயத்தைக் கைவிடமாட்டோம்!'- வயலில் இறங்கி நாற்று நட்ட மாணவர்கள்

நோட்டுப் புத்தகங்களோடு பள்ளிக்கு வந்த மாணவர்கள்,  அப்படியே புத்தகங்களை வகுப்பறையில் வைத்துவிட்டு வயல்வெளிக்குத் திரண்டு வந்தார்கள்.

பயிர் நட்ட மழலைகள்
பயிர் நட்ட மழலைகள்

கடந்த 12-ம் தேதி விவசாயிகள் தினம் என்பதால், தமிழகம் முழுக்க பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் விவசாயம் பற்றி புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் திருச்சி சோமரசம் பேட்டை பகுதியில் உள்ள ஆக்ஸ்போர்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் திருச்சி மணிகண்டம் பகுதி வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், பள்ளியின் தாளாளர் ரவீனா மோகன்ராஜ் மற்றும் தலைமை ஆசிரியை நவநீதம் மற்றும் பள்ளி நிர்வாகி மணிமாறன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சகிதமாக மாணவர்கள் அருகில் உள்ள வயலுக்குச் சென்றனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

விவசாயிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள வயலுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து, பயிரிடும் முறையைக் கேட்டு தெரிந்துகொண்டனர்.

தொடர்ந்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டு அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினர். நாள் முழுவதும் விவசாயிகள் தினத்தைக் கொண்டாடினர். மேலும் அவர்கள், `விவசாயத்தைக் கற்போம்.. விவசாயத்தைக் காப்போம்.. விவசாயிகளைப் போற்றுவோம், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம், படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல, விவசாயிகளும் கடவுளே எனக் கோஷமிட்டனர். மேலும் அவர்கள், எந்தத் தொழில் செய்தாலும் விவசாயத்தைக் கைவிடமாட்டோம், இனி நாங்களும் விவசாயம் செய்வோம், உணவை வீணடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மழலைகள்
மழலைகள்

மேலும், அங்கு காவிரியில் வெள்ளம் வந்ததால், காவிரிப் பாசன பகுதிகளில் இப்போது நடவு நடப்பதால், வயலில் பயிர் நடும் பெண்களிடம், எந்தப் பயிரை நடனும் எனக் கேட்டபடி நட்டனர். சில மாணவிகள் நாற்று நேராக நடுவதற்காகப் பிடிக்கப்படும் சணல் கயிற்றைப் பிடிக்க, குழந்தைகள் சீருடையில் இருந்த மாணவ- மாணவிகள் சேற்றில் இறங்கி நாற்று நட்டனர். தொடர்ந்து அவர்கள் விவசாயத்தைக் காப்போம் என விவசாயிகளிடம் கலந்துரையாடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அங்கிருந்த விவசாயிகள், `எங்கள் தலைமுறையோடு விவசாயம் போயிடும், இனி யாரும் விவசாயம் செய்ய சேற்றில் இறங்க மாட்டாங்க எனக் கவலை இருந்தது. இனி வருகிற காலங்களில் படித்தாலும் பிள்ளைகள் விவசாயத்தைக் கைவிட மாட்டாங்க என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது'' எனப் பரவசப்பட்டார்கள்.