Published:Updated:

இந்தியா முழுவதும் பரவிய இயற்கை விவசாயம்! - பல்லாயிரக்கணக்கில் பரிமாறிய பாரம்பர்ய விதைகள்!

‘விதைகள்’ யோகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
‘விதைகள்’ யோகநாதன்

மறுபயணம் - பதிவுகளின் பாதையில்... 10

இந்தியா முழுவதும் பரவிய இயற்கை விவசாயம்! - பல்லாயிரக்கணக்கில் பரிமாறிய பாரம்பர்ய விதைகள்!

மறுபயணம் - பதிவுகளின் பாதையில்... 10

Published:Updated:
‘விதைகள்’ யோகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
‘விதைகள்’ யோகநாதன்

கடந்த 14 ஆண்டுகளாகப் ‘பசுமை விகட’னுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பக்காலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில், பசுமை விகடன் ஆரம்பக் காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிப் பேசுகிறது இந்த ‘மறுபயணம்’ பகுதி.

நாட்டு விதைகளின் பலன்களையும், அவற்றின் தேவைகளையும் பலருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் பணியைத் தொடர்ந்து செய்துவருபவர் ‘விதைகள்’ யோகநாதன். இவர், திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தண்டலைப்புத்தூரைச் சேர்ந்தவர். இவரது பாரம்பர்ய விதைகள் பற்றியும், அவரது காய்கறிச் சாகுபடி குறித்தும் 25.07.2011 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘பொன்னி... மணப்பாறைப் பச்சை... வெள்ளை... நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி ரகங்கள்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

2011-ல் வெளிவந்த கட்டுரை
2011-ல் வெளிவந்த கட்டுரை

அதன் பிறகு, விவசாயிகள் பலரும் அவர் சேகரித்து வைத்திருந்த பாரம்பர்ய விதை களைத் தேடிப் பயணிக்க ஆரம்பித்தனர். இதுவரை இவரின் கைபிடித்து இயற்கை விவசாயத்துக்கு மாறியவர்கள் நூற்றுக் கணக்கானோர். யோகநாதன், ‘விதைகள்’ யோகநாதனாக மாறுவதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது பசுமை விகடன். கட்டுரை வெளியான பிறகு, நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து நம்மிடம் பல தகவல் களைப் பகிர்ந்துகொண்டார் யோகநாதன்.

‘‘திருச்சிக்குப் பக்கத்துல இருக்குற சின்ன கிராமத்துலதான் நான் இருக்கிறேன். நம்மாழ்வார் ஐயாவோட ‘காவிரியைத் தூய்மைப்படுத்துவோம்’ நிகழ்ச்சிக்கு பல மாநிலங்கள்ல இருந்தும் பெண்கள் பல நதிகளோட நீரை கலசங்கள்ல எடுத்துக்கிட்டு வந்து காவேரி ஆத்துல ஊத்தினாங்க. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஐயா மேல எனக்குத் தனிப்பிரியம் உருவாச்சு.

அதுக்குப் பிறகு, 2005-ம் வருஷத்துல இருந்து ஐயா கூடவே பயணிச்சேன். அந்தக் காலகட்டத்துல திருச்சியில ஒரு தனியார் இனிப்பகத்தில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இருந்தாலும், ‘இயற்கை விவசாயம்’, ‘தற்சார்பு’னு ஐயா சொல்ற வார்த்தைகள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.

ஐயாவோடு இணைஞ்சு இயற்கை விவசாயம் தொடர்பான சில நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு வந்தேன். 2008-ம் வருஷம், எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஏக்கர் நிலத்துல ‘குண்டு கத்திரிக்காய்’, ‘பொன்னி கத்திரிக்காய்’, ‘மணப்பாறை கத்திரிக்காய்’ உள்ளிட்ட 5 விதமான கத்திரிக்காய்களை இயற்கை முறையில் பயிரிட்டு, வெற்றிகரமாக விளைவிச்சு நல்ல மகசூலும் எடுத்தேன். தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களிலிருந்து சில முன்னோடி இயற்கை விவசாயிகளையும், ‘பூச்சி’ செல்வத்தையும் அழைச்சுக்கிட்டு வந்து, ஒரு கருத்தரங்கை நடத்தியிருந்தேன். இது சம்பந்தமாகப் பசுமை விகடன்ல ஒரு கட்டுரை வெளியிட்டாங்க. அதற்குப் பிறகு என்னோட அலைபேசியைக் கீழே வைக்க முடியல.

‘விதைகள்’ யோகநாதன்
‘விதைகள்’ யோகநாதன்


தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வர ஆரம்பிச்சது. ஒவ்வொருத்தரிடமும் ‘பாரம்பர்ய விதைகளைப் பற்றியும், இயற்கை விவசாயத்தைப் பற்றியும் விரிவாச் சொல்லிக்கிட்டிருந்தேன். நிறைய பேர் இயற்கை விவசாய முறைக்கு மாற ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு இப்ப வரைக்கும் ஆலோசனைக் கொடுத்துட்டுதான் இருக்கேன். பலபேர் இப்ப வெற்றிகரமான விவசாயியா மாறியிருக்காங்க.

அதன்பிறகு, வேலையை விட்டுட்டேன். நம்மாழ்வார் ஐயாவோடு இணைஞ்சு விதைகளைத் தேடி பயணம் செஞ்சிருக்கேன். இப்படிப் பல வகைகள்ல சேகரிச்ச விதைகளைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும், விதைத்திருவிழா நடத்தி விவசாயிகள் மத்தியில் பரவலாக்கம் செய்ய ஆரம்பிச்சோம். இந்த எல்லாப் பயணங்களுக்கும், விதைச் சேகரிப்புக்கும் பசுமை விகடனின் அந்த ஒரு கட்டுரைதான் முழுமுதற் காரணமா இருந்தது’’ என்றவர், பிற மாநில விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த தகவல் களைப் பகிர்ந்துகொண்டார்.

சத்தீஸ்கரில் விதைப் பரிமாற்றம்

‘‘சத்தீஸ்கர் மாநிலம், தம்தரி மாவட்ட ஆட்சியரா இருந்த பிரசன்னா ஐ.ஏ.எஸ் பசுமை விகடன் மூலமாதான் அறிமுகமானார். அவர் முயற்சியால ‘பூச்சி’ செல்வம், பேராசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பலரை அழைச்சிட்டுப் போய், அங்கயிருக்க விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சி கொடுத்தோம். குறிப்பா, பள்ளி மாணவர்களுக்கு நானும், பசுமை விகடன் பொறுப்பாசிரியர் குமரேசனும் விதைப் பந்து தயாரிக்கும் பயிற்சி கொடுத் தோம். தொடர்ந்து திருச்சியில பசுமை விகடன் நடத்துன விவசாயக் கண்காட்சியில சத்தீஸ்கர் விவசாயிகள் பலரும் கலந்து கிட்டாங்க. அந்த மாநில விவசாயிங்ககிட்ட நம்ம பாரம்பர்ய விதைகளைக் கொடுத்து, அவங்களோட பாரம்பர்ய விதைகளை வாங்கிட்டு வந்து நம்ம ஊர் விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கேன்.

‘விதைகள்’ யோகநாதன்
‘விதைகள்’ யோகநாதன்


பிரசன்னா ஐ.ஏ.எஸ் அழைப்பின் பேரில் இதுவரை 22 முறை சத்தீஸ்கர் விவசாயி களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். ஆயிரக் கணக்கானோர் இன்னிக்கு வரைக்கும் இயற்கை விவசாயம் செய்துகிட்டு வர்றாங்க. பசுமை விகடன் மூலமா கொடுத்த பயிற்சியால தம்தரி மாவட்டத்துல இன்னிக்குப் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்காங்கன்னு பிரசன்னா ஐ.ஏ.எஸ் இப்பவும் சொல்றதைக் கேட்க மகிழ்ச்சியா இருக்கு.

அந்தமானில் பயிற்சி

2018-ல, அந்தமானில் உள்ள ‘நீல்’ தீவு, ‘இயற்கை விவசாயத்தீவு’ என அறிவிக்கப் பட்டது. சுனாமி பாதிச்சபோது நம்மாழ்வார் ஐயாவுடன் இணைஞ்சு அந்தமானில் பல மாதங்கள் தங்கி பணியாற்றினோம். ஐயா தலைமையில் அங்கு பல கருத்தரங்குகள் நடத்தினோம். ஐயாவின் ஆலோசனையைக் கேட்டு அங்கிருந்த பல விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறினாங்க.

நம்மாழ்வார் பெயரில் இன்றைக்கும் அங்கு ஓர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கிட்டு வருது. அப்போதுதான் முனைவர் வேல்முருகன் நட்பு கிடைச்சு, அந்த நட்பின் அடிப்படையில் அழைச்சார். அங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளிப்பது பற்றிப் பேசினார். பசுமை விகடனைத் தொடர்புகொண்டோம். உடனடியாகப் பயிற்சிக்கு ஏற்பாடு செஞ்சாங்க.

பஞ்சகவ்யா சித்தர் கொடுமுடி நடராஜன், நான், பசுமை விகடன் குழுவினரோடு அந்தமான் பயணமானோம். அங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள் தயாரிப்பு தொடர்பாக டாக்டர் ஐயாவும், நானும் பயிற்சி அளித்தோம். தொடர்ந்து அந்தமானின் பல பகுதி விவசாயிகளைச் சந்திச்ச பசுமை விகடன் குழுவினர் அங்குள்ள விவசாய முறைகளைப் பற்றிப் பசுமை விகடன்ல எழுதுனாங்க.

விதையைப் பரப்பிய விதைத் திருவிழா

தொடர்ந்து குஜராத்தில் உள்ள ‘நவ்சார் இன்ஸ்டிடியூட்’ மூலம் பாரம்பர்ய விதைகள்குறித்துப் பலமுறை பேசியிருக்கேன். கடந்த 6 வருஷமா அகத்தியர் உழவர் உற்பத்தி நிறுவனத்தை நிர்வகிச்சுக் கிட்டு இருக்கேன். இதன்மூலம் தமிழ்நாட்டுல விதைத் திருவிழாவை நடத்திக்கிட்டு வர்றோம்.

ஆரம்பத்துல, ‘விதைத் திருவிழா’ நடத்தும்போது, மக்களுக்குப் பாரம்பர்ய விதைகளை இலவசமாவே கொடுத்தோம். ஆனா, அவங் களுக்கு அதோட மதிப்பு தெரியாம இருந்துச்சு. இப்ப பாரம்பர்ய விதைகள் மீதான மரியாதை கூடியிருக்கு. தேடி வந்து விலை கொடுத்து விதைகளை வாங்கிட்டுப் போறாங்க’’ என்றவர், பல்வேறு காய்கறி விதைகளை நமக்குக் காட்டினார்.

‘‘எங்ககிட்ட விதைகளை வாங்கிப் பயிரிடு றவங்க, அடுத்த வருஷம் விதைத் திருவிழாவுல வாங்குன விதைகளைத் திருப்பிக் கொடுக் குறாங்க. இப்படிப் பரிமாற்றம் மூலம் பாரம்பர்ய விதைகளோட மகத்துவம் பலருக்கும் போய்ச் சேருது’’ என்றவர் நிறைவாக,

விதையை வெளியில் வாங்கக் கூடாது

‘‘வீட்டுத்தோட்டமா இருந்தாக் கூட, அதுல பாரம்பர்ய விதைகளைப் பயிரிடணும்னு நினைக் குறாங்க. இதுக்குக் காரணம் ‘பசுமை விகடன்’தான். இதுவரைக்கும் பலபேர்கிட்ட இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகளோட தேவை களைப் பரப்பியிருக்கேன். ஆயிரக் கணக்கான பேருக்கு விதை கொடுத் திருக்கேன்.

விவசாயி என்னைக்கு விதையைக் காசு கொடுத்துக் கடையில வாங்குறாங்களோ, அன்னைக்கே விவசாயம் நம்ம கையைவிட்டுப் போயிடுச்சு. விதையைக் கைப்பற்றி விட்டால், ஒட்டுமொத்த உணவுச் சந்தையையும் கைப்பற்றிடலாம்கிற கம்பெனிகளோட திட்டம் பலிச்சுடுச்சு.

உரம், பூச்சிமருந்து, விதைனு விவசாயியைச் சந்தைக்குள்ள முடக்கி கடன்காரனா மாத்தி மொத்த விவசாயத்தையும் அழிச் சுட்டாங்க. அவங்களுக்குத் தேவை யான விதைகளை அவர்களே உற்பத்தி செய்யுறவரைக்கும் எங்க பயணம் தொடரும். பெரிய விவசாயிகள் வாங்குற அளவுக்குச் சின்ன விவசாயி களும் பாரம்பர்ய விதைகளை வாங்கிப் பயிரிடணும். அதுதான் எங்களோட வேண்டுகோள்” என்றார் நெகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு,

யோகநாதன், செல்போன்: 94449 46489

70 ரகக் காய்கறி விதைகள்

பாரம்பர்ய காய்கறி விதைகள் பற்றிப் பேசிய யோகநாதன், ‘‘என்கிட்ட இப்ப 70 ரகக் காய்கறி விதைகள் இருக்கு. குறிப்பா கத்திரிக்காய் 10 வகைகள், மற்ற காய்கறிகள்ல 20 ரகங்கள், கீரைகள்ல 25 ரகங்கள், கொடி காய்கறிகள்ல 15 ரகங்கள் இருக்கு. எந்தக் காய்கறியா இருந்தாலும் ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்குத்தான் கொடுக்குறேன். இதை நான் லாப நோக்கத்துல செய்றதில்ல’’ என்றார்.‘‘என்கிட்ட இப்ப 70 ரகக் காய்கறி விதைகள் இருக்கு. எந்தக் காய்கறியா இருந்தாலும் ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்குத்தான் கொடுக்குறேன்.’’