Published:Updated:

`ஆடிப்பட்டம் தேடி விதை!' - விதைகள் பகிர்வுக்காகவே நடக்கும் விவசாயிகளின் திருவிழா

பாரம்பர்ய விதைகள் பகிர்வு
பாரம்பர்ய விதைகள் பகிர்வு

``தற்சார்பு வாழ்வியலை மீண்டும் கொண்டுவரணும், இயற்கையைக் காக்கணும் என்ற காரணத்துக்காக, பாரம்பர்ய விதைகளை கையிலெடுத்து இந்த விதைத் திருவிழாவை நடத்தி வருகிறோம்" - இயற்கை விவசாயி.

நம் முன்னோர்களின் பாரம்பர்ய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இன்று இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்ய விதைகள் கையில் எடுக்கப்பட்டு தற்சார்பை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம் செய்யத் துடிக்கும் பலருக்கும் வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், `பாரம்பர்ய விதைகள் பகிர்வு திருவிழா' இன்று நடந்து வருகிறது. இந்த விழாவில் பாரம்பர்ய காய்கறி விதைகள், சிறுதானியங்கள், கீரை விதைகள், நெல் வகைகள் என விதை வகைகள் பலவும் இடம்பெற்றுள்ளன. `தளிர் இயற்கை வழி வேளாண்மை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், செல்வராஜ் மற்றும் மகாராஜன் ஒருங்கிணைப்பில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

விதை பகிர்வு நிகழ்ச்சி
விதை பகிர்வு நிகழ்ச்சி
விதை..! - குறுங்கதை #MyVikatan

இதுதொடர்பாக தளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த இயற்கை விவசாயி, செஞ்சி அருண் பாண்டியனிடம் பேசினோம். ``விவசாயிகளின் மிகப்பெரிய சக்தி விதைகள்தான். `ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியே இருக்கு. அதைச் சார்ந்துதான் இந்தத் திருவிழா இங்கு நடந்து வருகிறது. விதைகள் பகிர்வுக்காக, விதைகள் எனச் சொல்லப்படக்கூடிய அனைத்து வகையான விதைகளும் இங்கே வந்துள்ளன. காய்கறி, கீரை, நெல், தானியங்கள் எனப் பல வகையான விதைகள் இங்கு வந்துள்ளன. விவசாயிகள் அவர்களிடம் உள்ள விதைகளை இங்கு காட்சி படுத்தியுள்ளனர். ஒரு சில விவசாயிகள், `விதைக்கு விதை தரணும்' எனும் முறையில் இயற்கை முறையிலான விதைகளை பகிர்கின்றனர். அவர்கள் காசு வாங்குவதில்லை. ஒரு சில விவசாயிகள், விதைகளை விற்பனைக்கும் தருகிறார்கள். இப்படியாகப் பல விதங்களில் இருக்கு. சில இயற்கை விவசாயிகள், அவர்களாகவே மதிப்புக்கூட்டிய பொருள்களையும் இங்கு விற்பனை செய்கின்றனர். இயற்கை விதைகள் அங்காடி கடை வைத்திருப்பவர்களும் இங்கே வந்துள்ளனர்.

பாரம்பர்ய விதைகள் மையம் சார்பாக நிறைய பேர் இங்கு வந்திருக்காங்க. வலையம்பட்டு வெங்கடாஜலம் மற்றும் நம்மாழ்வாருடைய சிஷ்யர்களும், உழவர் ஆனந்த், ராஜேந்திரன், சோமசுந்தரம் போன்ற பல முக்கியமானவர்களும் இங்கு வந்திருக்கிறார்கள். பொதுவாகவே, நம் முன்னோர்கள் மண்ணை தாயாக நினைச்சாங்க. தற்சார்பு வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்ந்து வந்தனர். கடந்த 50 வருடங்களாக, தற்சார்பை தாண்டி பணமாக விளைபொருள்களைப் பார்த்த சமயத்தில், அந்நிய நாட்டுப் புரட்சியாலும்; செயற்கை உரங்கள் உள்ளே வந்ததாலும் மண் மலடாக மாறிப்போனது. நம் முன்னோர்கள், பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் பண்ணி, நம்ம மண்ணுக்கு, மக்களுக்கு, மருத்துவத்துக்கு என்ன தேவை அப்படின்னு விதைகளை சேகரித்து வச்சிருந்தாங்க. அவற்றைக் கைமாற்றிக் கொடுத்துகிட்டு வந்தாங்க. அந்த விதைகளையும், பாரம்பர்ய அறிவையும் முதலில் நாம் தொலைத்துவிட்டோம். எல்லாமே கடந்த 50 ஆண்டுகளில் நடந்துவிட்டது.

விதைகள் மாதிரி படம்
விதைகள் மாதிரி படம்
கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்

விவசாயிகளின் இறப்பை பார்க்கத் தொடங்கினோம். மக்கள் நோய்வாய்ப்படத் தொடங்கினாங்க. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கவும், தற்சார்பு வாழ்வியலை மீண்டும் கொண்டு வரணும் என்பதற்காகவும், இயற்கையைக் காக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் பாரம்பர்ய விதைகளைக் கையிலெடுத்து இந்த விதைத் திருவிழாவை தளிர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தி வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு