Published:Updated:

`ரசாயனத்தைத் தவிருங்கள்; நாட்டு விதையே மூலதனம்!'- ஓங்கி ஒலித்த விவசாயிகளின் குரல்

எம்.திலீபன்

``விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகளும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் நாட்டு விதைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும்.''

Seeds Festival
Seeds Festival

``இனியும் நாம் விதைகளுக்காக கார்ப்பரேட்டிடம் கையேந்தக் கூடாது. நமது பாரம்பர்ய விதைகளை நாமே மீட்டெடுத்து விதைப்போம். விதைகளே நம் பேராயுதம்” என அரியலூரில் நடந்த விதைத் திருவிழாவில் இயற்கை விவசாயிகள் எடுத்த சபதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AriyalurSeeds Festival
AriyalurSeeds Festival

அரியலூரில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைத் திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் நடைபெற்றன. கண்காட்சியில் பாரம்பர்ய நெல் விதைகள், சிறுதானிய விதைகள், பருத்தி விதைகள், அரிய மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல், வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Former Veeramani
Former Veeramani

நாட்டுவிதைகளின் முக்கியத்துவம் குறித்து குமிழியத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வீரமணி, ``நமது பாரம்பர்ய நாட்டு விதைகள் மறைந்து வீரிய ஒட்டுரக விதைகளையே விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் இதைத் தவிர்க்க வேண்டும். நம் கைவிட்டுப்போன பாரம்பர்ய நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இதுபோன்ற விதைத் திருவிழாக்கள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

Traditional Seeds Saving technique
Traditional Seeds Saving technique

விவசாயிகள் நாட்டு விதைகளை மறந்து வீரியரக விதைகளை விதைப்பதால் நோய் மற்றும் பூச்சித்தாக்குதல்களும் அதிகமாகிறது. தீமை செய்யும் பூச்சிக்களின் பெருக்கத்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. எத்தனை வகை ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும், மண் சத்துக் குறைந்ததாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்திட இயற்கை முறை விவசாயம் ஒன்றே தீர்வு. பாரம்பர்ய ரக விதைகளைப் பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. ரசாயன உரங்களின் பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.

சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ``ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகளும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் நாட்டு விதைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நாட்டு விதைகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். விவசாயத்திற்கு விதைகளே மூலதனம். அந்த விதைகளை நாமே தேர்வுசெய்ய வேண்டும்.

வருங்காலத்தில் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும்.
சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா
Ariyalur Seeds Festival
Ariyalur Seeds Festival
"செலவு குறைவு, மகசூல் அதிகம்!" - விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்திற்கேற்ற 'குழித்தட்டு நாற்றங்கால்'

இவ்வகையான நாட்டு விதைகளை நம் தலைமுறைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக விளைச்சல் என்ற நினைப்பில் வீரிய ஒட்டுரக விதைகளைப் பயன்படுத்துவதால் அதற்கான சாகுபடி செலவும் அதிகரித்து விவசாயிகள் பெருமளவு நட்டத்துக்குத் தள்ளப்படுகின்றனர். வருங்காலத்தில் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயத்தில் இருமடங்கு லாபம் அடையலாம்” என்றார். `விதைகளே பேராயுதம்’ என நம்மாழ்வார் சொன்னதைப்போல மீண்டும் நாட்டு விதைகள் பரவலாக்கம் செய்தால் மட்டுமே `உணவே மருந்து' என வாழமுடியும்'' என்றார்.