Published:Updated:

செம்மரம் ஒரு டன் 40 லட்சம் ரூபாய்! - ஏற்றுமதிக்கு ஏராளமான வாய்ப்புகள்!

நேரலையில் கணேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
நேரலையில் கணேசன்

கூட்டம்

சுமை விகடன் சார்பில் ஜூலை 11-ம் தேதி, ‘செம்மரம்... ஏக்கருக்கு ரூ.4 கோடி வருமானம்! சாகுபடி முதல் விற்பனை வரை..!

’ என்ற தலைப்பில் ஆன்லைன் கட்டணப் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி ஆர்.பி.கணேசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி விவசாயி ராமன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

செம்மரம் ஒரு டன் 40 லட்சம் ரூபாய்! - ஏற்றுமதிக்கு ஏராளமான வாய்ப்புகள்!

“வறண்ட நிலங்களுக்கு ஏற்றது செம்மரம் வளர்ப்பு. எல்லாச் செம்மரங்களும் அதிக விலைக்குப் போகாது. மரத்தைச் சீவினால் வரும் அடர் சிவப்பு நிறம் கொண்ட வைரம் பாய்ந்த செம்மரங்கள் மட்டுமே அதிக விலைக்குப் போகும். விவசாயிக்கு மரம் வளர்ப்பது ஒரு தீர்வுதான். குறைந்தபட்சம் நிலத்தைச் சுற்றி மரம் வளர்க்கிறது மூலமா வருமானத்தை அதிகப்படுத்தலாம். செம்மரம் செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். ஆண்டுக்கு 500 மி.மீ முதல் 1,000 மி.மீ மழைப்பொழிவு இருந்தாலே போதுமானது. 30 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் நடவு செய்யலாம். காற்றின் ஈரப்பதம் 50-60 சதவிகிதம் இருக்க வேண்டும். 10-க்கு 10 அடி இடைவெளியில் வளர்க்கலாம். இந்த இடைவெளியில் ஏக்கருக்கு 440 மரங்களை வளர்க்கலாம். கொஞ்சம் வறண்ட பூமியாக இருந்தால், 8-க்கு 8 அடி இடைவெளி விட்டு நடலாம். ஒரு வருடத்தில் 1-3 அடி வரை வளரும். 5 வருடத்தில் 20 அடி வரை வளர்ந்துவிடும்.

முருகன்
முருகன்

செம்மரம் வளர்க்க மானியம் இருக்கு. இதற்கு மாவட்ட தோட்டக்கலைத்துறையும், மாவட்ட வனத்துறையையும் அணுக வேண்டும்.

செம்மரத்துக்கு அதிக நீர் விடக்கூடாது. தென்னைக்கு நடுவில் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். களிமண்ணில் பயிரிடக் கூடாது. செம்மரத்தோடு வேம்பு, சந்தனம், வாகை மரங்களையும் சேர்த்து வளர்க்கலாம். செம்மரக் கன்றுகளை நடவு செய்த பிறகு, வி.ஏ.ஓ அடங்கலில் பதிவு செய்யணும். வெட்டி இருப்பு வைக்குறதுக்கும், எடுத்துட்டு போறதுக்கும் தமிழ்நாடு வனத்துறைகிட்ட அனுமதி வாங்கணும். தற்போது தமிழகத்துக்கு 60 டன் ஏற்றுமதிக்கான அனுமதியாக வழங்கப்படுகிறது. இதை அதிகப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய வேளாண்துறையின் கீழ் மர வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்று கேட்டு வருகிறோம். அது வந்தால் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் எந்த வகையான மரமாக இருந்தாலும் அவற்றை எளிதில் விற்பனை செய்துவிட முடியும். தற்போதைக்குச் செம்மரம் விற்பனைக்கான சில தடைகள் உள்ளன. அவை விரைவில் அகன்றுவிடும் என்று நம்புகிறேன்” என்றவர் தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

நேரலையில் கணேசன்
நேரலையில் கணேசன்

தொடர்ந்து பேசிய முன்னோடி விவசாயி ராமன், “நான் சாகுபடி செய்து 10 வருஷமாகுது. செம்மரத்துக்கு மண் ரொம்ப முக்கியம். தண்டு நேராக இருக்கும் கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். செம்மரங்களுக்குக் கன்று நடவு செய்யறது மட்டும்தான் நம்ம வேலை. மத்தபடி அது தானா வளர்ந்துடும். செம்மரத்துக்கு ஊடுபயிர் பயிர் செஞ்சும் வருமானம் பார்க்கலாம். அதே மாதிரி மழையளவு, மண் தன்மை, தட்பவெப்பத்தைத் தெரிஞ்சு மரம் வைக்குறது முக்கியம். மற்ற விவசாயத்துடன் மர வளர்ப்பும் ஒருங்கிணைஞ்சு நடந்துட்டு வந்தால் வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளும் கோடீஸ்வரர்களாக இந்தச் செம்மரம் ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்றவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ராமன்
ராமன்

விற்பனை மற்றும் ஏற்றுமதி குறித்து பேசிய சேலம் மாவட்ட வன அலுவலர் மருத்துவர் ஆர்.முருகன், “செம்மரம் ஒரு வகைப்படுத்துப்பட்ட தடிமரம். தங்கள் பட்டா நிலங்களில் செம்மரத்தை வளர்த்து விற்பனை செய்வதற்குத் தடையேதுமில்லை. அதை வளர்த்து வெட்டுவதற்கு முன் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தங்கள் சுயதேவை மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். பட்டா நிலங்களில் விளையும் செம்மரத்துக்கு ஏற்றுமதி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்காசியா நாடுகளான சீன, ஜப்பான் ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. செம்மரத்தில் வீட்டுச் சாமான்கள், பொம்மைகள், இசைக்கருவிகள் ஆகியவை செய்யப்படுகின்றன. இதை வீட்டில் வைத்தால் ஐஸ்வரியம் பெருகும் என்பது சீனர்களின் நம்பிக்கை. செம்மரத்துக்கு உள்நாட்டு பயன்பாடு மிக மிக குறைவு. அதேசமயம் வெளிநாட்டில் விலை அதிகம் கிடைக்கிறது. தரத்திற்கேற்றார்போல் ஒரு டன் செம்மரம் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரையும், 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரையும் விற்பனையாகிறது. இது முற்றிலும் சர்வதேச சந்தையை சார்ந்திருப்பதால் எதிர்காலத்தில் விலை மாறுபடலாம். அதற்குத் தகுந்தாற்போல் செம்மரம் வளர்ப்பு சம்பந்தமான முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். செம்மரக்கன்றுகள் வாங்க வனத்துறையின் விரிவாக்க மையங்களை அணுகலாம்’ என்றார்.