Published:Updated:

பயிர்வாரி முறைக்குக் குரல் கொடுத்தவர், விவசாயச் செயற்பாட்டாளர்... மறைந்த வையாபுரியின் நினைவலைகள்!

வையாபுரி
வையாபுரி

பட்ஜெட் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தபோது வையாபுரியும் உடனிருந்தார். அப்போது, `பயிர்வாரி முறைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று நிதியமைச்சரை வலியுறுத்தினார்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த ஆறகளூரைச் சேர்ந்தவர் சி.வையாபுரி. இவர் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்து வந்தார். தமிழகத்தில் விவசாயம் தொடர்பாக எழும் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தான் கொண்ட கொள்கையிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்காத இவர், பல விவசாய சங்கங்களோடு முரண்பட வேண்டியிருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இயங்கி வந்தார். அவர் கடைசி வரை வலியுறுத்தி வந்தது ஒன்றே ஒன்றைத்தான். அது `பயிர்வாரி முறை’. இந்த நிலத்தில் இந்தப் பயிரைத்தான் விளைவிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் பிரித்துள்ளளனர்.

அதன்படியே நாம் விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். புஞ்சை நிலத்தில் நஞ்சைப் பயிர்களையும், நஞ்சை நிலத்தில் புஞ்சைப் பயிர்களையும் பயிரிடுவதால்தான் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது, பயறு வகைகளை பயிர் செய்ய முடியாமல் போகிறது என வலியுறுத்தி வந்தார். இதுசம்பந்தமாக சமீபத்தில் பசுமை விகடன் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் பரிந்துரை கூட்டத்திலும் பங்கேற்றார். பட்ஜெட் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தபோது வையாபுரியும் உடனிருந்தார். அப்போது `பயிர்வாரி முறைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று நிதியமைச்சரை வலியுறுத்தினார். நிறைய நீர் மேலாண்மை சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களையே விளைவிக்க வேண்டும் என்று கூறி வந்தார். அதுவும் பனையை நடவு செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி வந்தார்.

1978-ல் எம்.ஜி.ஆர் முதவல்வராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைக்க அனுமதிப்பது சம்பந்தமாக விவசாயப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது. அதில் போர்வெல் அமைக்கக் கூடாது, பிற்காலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டபட வேண்டி வரும் என்று சொல்லி, அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறினார். போர்வெல் போட்டு போட்டு இன்று தமிழகத்தில் விவசாயத்துக்குத் தண்ணீரின்றி இருப்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அதேபோன்று இலவச மின்சாரத்தை அனுமதித்தால் நம்முடைய கிணறுகள் எல்லாம் எதிர்காலத்தில் வறண்டு போகும் என்றார். அதுவும் இன்று நிதர்சனமாகியுள்ளது.

Vaiyapuri
Vaiyapuri

2007-ல் பசுமை விகடனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், தானாக ஒரு மூட்டை இயற்கை முறையில் விளைவித்த அரிசியைக் கொண்டு வந்து விகடன் குழும மேலாண்மை இயக்குநர் சீனிவாசனிடம் வழங்கிவிட்டுச் சென்றார். ``இப்போதெல்லாம் நான் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதில்லை. இது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கிறது. அதனால், கைக்களைத்தான் எடுத்து வருகிறேன். களைகளால் மாடுகளுக்குத் தீவனமாகவும் தொழிலாளர்களுக்குக் கூலியும் கிடைக்கிறது" என்று சொல்லி நீங்களும் களைக்கொல்லி பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார். அதுசம்பந்தமான கட்டுரை பசுமை விகடனின் தற்போதைய இதழில் (10.9.2020) பிரசுரமாகியுள்ளது. நேற்றைக்கு முன்தினம்கூட அவரிடம் பேசினோம். ``உங்களுடைய பேட்டி பிரசுரமாகியுள்ளது" என்றோம். ``ரொம்ப சந்தோஷம். பசுமை விகடன் ஆசிரியர் நல்லா இருக்கிறீரா? கேட்டதாகச் சொல்லவும். பசுமைக் குழுவினர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்" என்று வாழ்த்தினார். எப்போதும் பசுமை விகடன் மீதும், அதில் பணிபுரிபவர்கள் மீதும் தனிப்பட்ட அன்பைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

அதேபோன்று சமூக நீதியிலும் மிகவும் பற்றுள்ளவர். இதை நிலைநாட்டுவதற்காகக் கலப்பு திருமணத்தைச் செய்து கொண்டவர். இதனால் அவரது குடும்பத்தில் இவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். இவரின் மனைவி ராஜம்மாள். முன்னாள் தலைவாசல் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தலைவாசல் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். வாழப்பாடி ராமமூர்த்தியோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். காங்கிரஸில் இருந்து விலகி ஐக்கிய விவசாயிகள் சங்கத்தைத் தோற்றுவித்து தனது கடைசி மூச்சு வரை செயலாற்றி வந்தார்.

ஏற்கெனவே இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டிருந்தவர், நேற்று (ஆகஸ்ட் 27-ம் தேதி) இரவு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84. இந்த வயதிலும் எப்போதும் போன் அடித்தாலும் எடுப்பார். கேட்கிற கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். ஓயாத உழைப்பு, கொள்கையில் சமரசமின்மை, தைரியமாகக் கேள்வி கேட்கும் திறன்... இவையெல்லாம் அடுத்து விவசாயம் சார்ந்த பிரச்னைகளைக் கையில் எடுப்போருக்கு உந்து சக்தியாக இருக்கும். தமிழக விவசாயத்துக்குப் பேரிழப்பு.

அடுத்த கட்டுரைக்கு