Published:Updated:

`55 வயதுக்கு மேல் இருந்தால் வேலை இல்லையா?’ - கலங்கும் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள்!

100 நாள் வேலை சம்பளத்தை வச்சுதான் வீட்டுச் செலவு நடக்குது. அந்த வேலையும் இல்லாமப் போயிருச்சுன்னா என்ன செய்யுறதுன்னே தெரியலை என்று புலம்புகிறார்கள், 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நடைபெறும் இந்தப் பணிகளில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

நீர் நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதால் மண் மூடிக் கிடந்த நீர் செல்லும் பாதைகள் பலவும் புத்துயிர்ப்புடன் காணப்படுகின்றன. அதனால் மழை பெய்ததும் குளம், ஏரி உள்ளிட்டவை விரைவாக நிரம்பி வருகின்றன.

நீர் நிலைகளைத் தூர்வாரும் பணி
நீர் நிலைகளைத் தூர்வாரும் பணி
`விவசாயப் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது?' - மதுரை உயர்நீதிமன்றக் கிளை

இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் பணிகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையர் கே.எஸ்.பழனிசாமி 20-ம் தேதி அறிவித்தார்.

அதில், சளி. இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் மற்றும் இதய நோய், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது. பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக நூறு நாள் வேலைத் திட்டத்தை நம்பி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த முதியவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசின் முடிவால் தாங்கள் உணவுக்குக்கூட திண்டாடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள்.

இது குறித்து குமரி மாவட்டம் கறுக்கன்குழி கிராமத்தைச் சேர்ந்த கோமளம் (65) கூறுகையில், ``போன வருஷம் கொரோனா சமயத்தில் 55 வயசுக்கு மேல உள்ளவங்க நூறுநாள் வேலைக்கு வர வேண்டாம்னு சொன்னாங்க. அதனால போன வருஷம் 80 நாளுதான் வேலை கிடைச்சது.

கோமளம்
கோமளம்

இந்த வருஷம் மொத்தமே எட்டு நாள்தான் வேலை செஞ்சிருக்கோம். இனி ஓட்டு எண்ணின பிறகு புதிய வேலை வந்தா தரலாம்னு சொன்னாங்க. இதுக்கு இடையில 55 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு வேலை இல்லைனு சொலிட்டாங்க.

100 நாள் வேலைக்குப் போறதால கிடைக்குற சம்பளத்துலதான் எங்க ஜீவிதமே நடக்குது.
கோமளம், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்

100 நாள் வேலை சம்பளத்தை வச்சுதான் வீட்டு செலவு நடக்குது. அதனால 55 வயசுக்கு மேல் உள்ளவங்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கணும். அப்பத்தான் கொரோனா முடியுறது வரைக்கும் வீட்டுச் செலவு நடக்கும். இல்லைன்ன எங்க ஜீவிதம் நடத்துறதே கஷ்டம்தான்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோர் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தேனியைச் சேர்ந்த பாலுச்சாமி (வயது 72) கூறும்போது, ``எனக்கு ஒரு பையன். அவனும் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு தனியா போயிட்டான். நானும் என் பொண்டாட்டியும்தான் சேர்ந்து வாடகை வீட்டில் இருக்கோம்.

பாலுச்சாமி
பாலுச்சாமி

என் வீட்டம்மா கட்டட வேலைக்குப் போவாங்க. நான் 100 நாள் வேலைக்குப் போவேன். என்னோட காசை வச்சுதான் வாரக் கடைசியில கறி எடுத்துச் சாப்பிடுவோம். அரசாங்கம் இப்படிச் சொன்னா என்ன பண்றதுனே தெரியல. என் உடம்புல தெம்பு இருக்கு. அதனால, மண்வெட்டியைப் பிடிச்சு வேலை பாக்குறேன். நான் நல்லாதானே இருக்கேன். என்னை ஏன் வரக் கூடாதுனு சொல்லுது அரசாங்கம்?” என வெகுளியாகக் கேட்டார்.

மதுரை மாவட்டம் தனிச்சியத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 56) கூறும்போது, ``ரேசன் அரசியை வச்சு வீட்ல சோறு பொங்குனாலும், குழம்புச் செலவுக்கும், இதர செலவுக்கும் நூறு நாள் வேலை காசுதான் பயன்படுது. கொரோனா வந்து எல்லாரும் பயந்துபோய்கிடக்குற நேரத்துல, எங்க வேலைக்கே உலை வச்சா நாங்க என்ன பண்ணுவோம். நான் ரொம்ப சிரமப்பட்டு போவேன் ராசா?” என்றார்.

பழனியம்மாள்
பழனியம்மாள்

தஞ்சாவூர் அருகே உள்ள மேலவெளி ஊராட்சியைச் சேர்ந்த அம்சவள்ளி (65) என்பவர், ``எங்க பகுதியில் விளை நிலங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறிவிட்ட பிறகு, ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வரும் கூலிதான் சாப்பாட்டுக்கே ஆதாரமாக இருக்குது. தகுந்த முன்னேற்பாட்டோடு தடுப்பூசி போட வைத்து வேலையில் ஈடுபட வைப்பதே சரியானதாக இருக்கும்” என்று படபடத்தார்.

நெல்லையைச் சேர்ந்த 65 வயது மாரியப்பன் என்பவர், ``பிள்ளைகள் எல்லாரும் என்னைத் தனியா விட்டுட்டாங்க. 100 நாள் வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தை வச்சுதான் நானும் என் மனைவியும் சமாளிச்சுட்டு வர்றோம். அந்த வேலையும் இல்லாமப் போயிருச்சுன்னா என்ன செய்யுறதுன்னே தெரியலையே” என்று வேதனைப்பட்டார்.

100 நாள் வேலைத் திட்டப் பணிகள்
100 நாள் வேலைத் திட்டப் பணிகள்

100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியே தமிழகத்தில் பல குடும்பங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான முடிவுகளை அறிவிக்கும் முன்பாக அவர்களின் நலன் கருதி மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு