Published:Updated:

முல்லை பெரியாறு: கேரள அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா?

முல்லை பெரியாறு அணை

நில நடுக்க அபாயம் எனப் பீதியை கிளப்பி தண்ணீரை 152 அடிக்குப் பதிலாக 136 அடியிலேயே 35 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து தமிழகத்தை ஏமாற்றியது கேரளா. இப்போது பன்னாட்டு வல்லுநர் குழுவை வைத்து முல்லை பெரியாறு அணையை ஆராய வேண்டும் என்றும் கூச்சலிடுகிறது. யாரை ஏமாற்ற இப்படி நாடகமாடுகிறது கேரளா?

முல்லை பெரியாறு: கேரள அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா?

நில நடுக்க அபாயம் எனப் பீதியை கிளப்பி தண்ணீரை 152 அடிக்குப் பதிலாக 136 அடியிலேயே 35 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து தமிழகத்தை ஏமாற்றியது கேரளா. இப்போது பன்னாட்டு வல்லுநர் குழுவை வைத்து முல்லை பெரியாறு அணையை ஆராய வேண்டும் என்றும் கூச்சலிடுகிறது. யாரை ஏமாற்ற இப்படி நாடகமாடுகிறது கேரளா?

Published:Updated:
முல்லை பெரியாறு அணை

கேரள மாநிலத்தில் பெரும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், ``முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 142 அடிக்கு உயர்த்த விட மாட்டோம், முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்" என்று கேரள அரசியல்வாதிகள் முதல் மலையாள நடிகர்கள் வரை அணையைப் பற்றிய எந்தவித அடிப்படைத் தகவலும் தெரியாமல் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசும் வாய்மூடி மௌனம் காத்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று சொல்வது கேரள மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர் வீரப்பனிடம் பேசினோம்.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

``முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேலே உயர்த்தினால் கேரளாவின் 3 மாவட்டங்கள் மற்றும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசும் கேரள அரசியல்வாதிகளும் தொடர்ந்து பொய்ப் பரப்புரை செய்து வருகிறார்கள். இப்போது இதில் நடிகர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களையும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது எந்தளவுக்கு அப்பட்டமான பொய் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

1895-ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட பிறகு, கடந்த 122 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளங்களில் கேரளாவின் எந்தப் பகுதியாவது வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? அதுவும் 1976-ம் ஆண்டு 555 அடி உயரமுடைய 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை, முல்லை பெரியாறு அணைக்கு கீழே 48 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட பிறகு வெள்ளச்சேதம் ஏதாவது உண்டா? அப்படி ஏற்பட்டதாகப் புள்ளி விவரங்களை கேரள அரசு எப்போதும் கொடுத்தது இல்லை.

முல்லை பெரியாறு அணையின் இரண்டாம் மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (நவம்பர் 2011-ல்) கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். முல்லை பெரியாறு அணை பெருமழையால் விரைவில் நிரம்பி உடையும் தறுவாயில் உள்ளது. இதனால் அந்த அணையின் கீழுள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அவரசமாக உத்தரவிட வேண்டும் என்று வழக்கு போட்டார்.

வல்லுநர் குழு ஆய்வு
வல்லுநர் குழு ஆய்வு

இந்த வழக்கில் கேரளா அரசின் சார்பாக வாதிட்ட அதன் தலைமை வழக்குரைஞர் தண்டபாணி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், `முல்லை பெரியாறு அணையின் (152 உயரத்தில் நீர்மட்டம் இருந்தால்) மொத்தக் கொள்ளளவு 10.5 டி.எம்.சி. இப்போது தேக்கப்பட்டுள்ள நீர்மட்டம் 136 அடி. இதன் கொள்ளளவு 6 டி.எம்.சி மட்டுமே. முல்லை பெரியாறு அணை வலிமையாகவே உள்ளது. முல்லை பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியிலுள்ள பள்ளத்தாக்கின் மேல்பகுதியில் வெறும் 350 குடும்பங்களே தங்கியுள்ளன. அவர்களும் ஆக்கிரமிப்பாளர்களே. அவர்களின் இருப்பிடங்களும் உயர்ந்த வெள்ள மட்டத்துக்கு மேலே 100 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் அவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

வழக்காளர் அச்சப்படுவதுபோல முல்லை பெரியாறு அணை உடைந்து முழு நீரும் வெளியேறினாலும் (6 டி.எம்.சி) அது கீழுள்ள பெரிய பள்ளத்தாக்கின் வழியாக 48 கிலோ மீட்டர் தூரம் 5 மணி நேரம் ஓடி கீழுள்ள 70.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை எளிதாக எந்தவித பாதிப்புமின்றி உள்வாங்கிக்கொள்ளும். எனவே, கேரளா அரசாங்கம் வெள்ளச் சேதங்கள், சொத்து, மக்கள் பாதுகாப்புக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டிய நிலை எழவில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இப்படியொரு வாதம் கேரள அரசால் முன் வைக்கப்பட்டிருப்பதை இப்போதிருக்கும் கேரள அரசியல்வாதிகளும் மக்களும் அறிவார்களா?

வல்லுநர் குழு ஆய்வு
வல்லுநர் குழு ஆய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சென்ற ஆண்டு முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேலே 142 அடிவரை நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை; இவற்றுக்குப் பிறகும், தென்மேற்குப் பருவமழை தொடங்கியவுடன் கேரள அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தேவையற்ற பீதி, திட்டமிட்ட பொய்களை எதற்காகச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. அணையின் வலிமையை பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆராய வேண்டும். முல்லை பெரியாறு அணையின் வலிமை நிலநடுக்கத்தாலும் கூட சிறிதும் பாதிக்கப்படாது என அதை இதுவரை ஆய்வுசெய்த 4 குழுக்கள் உறுதி செய்துள்ளனர்.

வலுவான பாறைகளின் மீது அமர்த்தப்பட்டிருக்கிற அணையின் அடிப்பகுதி மிக அதிக எடை கொண்டது. இதுபோன்ற அபரிமிதமான தொழில்நுட்ப வடிவமைப்பில் கட்டப்பட்ட அணைகள் இன்றளவும் உலக அளவில் மிகக் குறைவே. இவற்றின் பலம் அலாதியானது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சரி. ஆவணங்களில் இருக்கிற விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு உயிருடன் விளையாடக் கூடாது என்பதால், அணையின் பலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. ஐந்து பேர் கொண்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு உருவாக்கப்பட்டது. ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழகம் சார்பில் ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் கே.டி.தாமஸ் (இருவருமே உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள்), மத்திய நீர்வளத்துறை அமைச்சக முன்னாள் செயலாளர் சி.டி.தத்தே, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே.மேத்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தத்தே, மேத்தா இருவரும் இந்தத் துறையில் நிபுணர்கள். உலகின் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளின் துணைகொண்டு இவர்கள் அணையின் உறுதித்தன்மையை சோதித்தனர்.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

இவர்கள் மட்டுமன்றி, நாட்டில் மிக முக்கிய அறிவியல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரவழைக்கப்பட்டு அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்தார்கள். அப்போது மத்திய ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, தனது துறையில் இருந்த கடற்படை வீரர்களைத் தன்னிச்சையாக அனுப்பி வைத்தார். அவர்களும் அணையின் அடியாழம் வரை மூழ்கிச் சென்று அதிர்வலைகளை அனுப்பி ஆராய்ந்தார்கள். அணையில் அடிக்கு ஓர் இடத்தில் துளை போட்டு ஆய்வு நடந்தது. `பொக்ரான் சோதனை’ ஒன்று தவிர, மற்ற எல்லா சோதனைகளையும் நடத்திப் பார்த்தது இந்தக் குழு. இறுதியாக, தங்களது அறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு இந்த அதிகாரமளிக்கப்பட்ட குழு சமர்ப்பித்தது. அதன்படியே, அணை மிக பலமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கேரளாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் தாமஸ் 1979-80-ல் இந்திய அரசின் ஆளுகையில் கீழுள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்தார். அவருடைய அறிவுரைப்படி 1980 - 1994-ம் ஆண்டுகளில் முல்லை பெரியாறு அணை மூன்று வகைகளில் வலிமைப்படுத்தப்பட்டது. 2012-13-ல் டாக்டர் ஏ.எஸ்.ஆனந்த் வல்லுநர் குழு விரிவாக ஆராய்ந்து, ``14 ஆய்வுகளின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணை போதிய வலிமை மிக்க வடிவமைப்பாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடிய நீர்தாங்கு திறன் கொண்டதாக அணை உள்ளது. முல்லை பெரியாறு அணை நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளதால் (நில நடுக்க அதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 3.5 முதல் 4.2 வரை) நில நடுக்க எதிர்ப்பு சக்தி உடையதாக உள்ளது. மேலும், 155 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கமும் 2012-ல் எங்களுடைய நீரியக்க வல்லுநர்களைக் கொண்டு முல்லை பெரியாறு அணையின் `அணை உடை ஆய்வு’ செய்து அணை வலிமையாகவும் உறுதியாகவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

இவற்றுக்குப் பிறகும் கேரள அரசும் அரசியல்வாதிகளும் மீண்டும் முல்லை பெரியாறு அணையின் வலிமையை பன்னாட்டு வல்லுநர் குழு கொண்டு ஆராய வேண்டும் வலியுறுத்துவதில் ஏதாவது, அடிப்படை உண்டா? இதுபோதாது என்று யாரையாவது தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் பொய்வழக்கு தொடுப்பதும் கேரள அரசின் வாடிக்கையாகிவிட்டது. இது கேரள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல; நம்மவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும். இதுபோன்ற பொறியியல் கணக்கீடுகளில் அதன் வழியான மதிப்பீட்டில் எந்தவிதமான அனுமானமும் ஊகமும் மற்றும் தனி மனித முடிவும் மதிப்பீடும் கிடையாது. அதற்கு இடமும் கிடையாது. எனவே, இது நாட்டுக்கு நாடு குழுவுக்குக் குழு மாறுபட வாய்ப்பே கிடையாது. சுருக்க விளங்குமாறு சொன்னால் இரு 4+3=7 என்பதைப் போன்றது.

மேலும், நம் நாட்டில் அணை தொடர்பான, நிலநடுக்கம் தொடர்பான பெரும் வல்லுநர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மேலை நாட்டு வல்லுநர்களுக்கு இணையானவர்கள். அதைவிட மத்திய நீர்வள ஆணையப் பொறியாளர்கள், இதுபோன்ற கட்டுமானத்திலும் ஆய்விலும் மேலான திறமையும் அனுபவமும் உடையவர்கள். எனவே, பன்னாட்டு வல்லுநர் குழு புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை என்பது கேரளாவுக்குத் தெரிந்தாலும் விதண்டாவாதமாகத் திரும்பத் திரும்ப சொல்வதன் உள்நோக்கம் என்ன? கேரள மாநிலத்தின் மின் உற்பத்தியை மனதில் கொண்டு 1976-ல் பிரமாண்ட இடுக்கி அணை கட்டப்பட்டது.

இடுக்கி அணை
இடுக்கி அணை

கட்டி முடித்த பின் பார்த்தால்... தண்ணீர் வந்து அணை நிரம்புகிற பாட்டைக் காணோம். முல்லை பெரியாறை உடைத்தால், அந்தத் தண்ணீரை அப்படியே கொண்டு வந்து இடுக்கியில் நிரப்பிக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார்கள். அதற்கு செயல் வடிவமும் கொடுத்தார்கள். 1979 அக்டோபர் 16-ம் தேதி வெளியான மலையாள மனோரமா நாளிதழில் முதன்முதலாக அந்தச் செய்தி வெளியானது. `பெரியாறு அணைக்கு நிலநடுக்க அபாயம்’ என்று திட்டமிட்டு செய்தி வெளியிட்டார்கள். அன்று தொடங்கி இன்று வரைக்கும் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்ப அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள்.

நில நடுக்க அபாயம் எனப் பீதியை கிளப்பி 152 அடிக்குப் பதிலாக 136 அடியிலேயே 35 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து தமிழகத்தை ஏமாற்றியது. இப்போது பன்னாட்டு வல்லுநர் குழுவை வைத்து முல்லை பெரியாறு அணையை ஆராய வேண்டும் என்கிறது கேரளம். இதை வைத்து இன்னுமொரு 10 ஆண்டுகள் ஏமாற்றலாம் என்பதைத் தவிர வேறென்ன. இது ஒரு திசை திரும்பும் சதித் திட்டம். நம் தமிழக அரசு சரியாகப் புரிந்துகொண்டு முல்லை பெரியாறு அணைப்பகுதிகளை முழுமையாக நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உரிமையை நிலை நாட்டிட வேண்டும்.

முனைவர் வீரப்பன்
முனைவர் வீரப்பன்

1886-ம் ஆண்டு ஒப்பந்தப்படி 8,964 ஏக்கர் கேரளப் பரப்பும் அதில் அணைகட்டித் தண்ணீரை எடுத்துக்கொள்ளும் உரிமையும் அப்பகுதிகளில் நம்மவர் எவ்விதமான தங்கு தடையுமின்றிப் புழங்கவும் சென்று வரும் உரிமையும் 999 ஆண்டுகளுக்குத் தரப்பட்டுள்ளது. இது ஒன்றும் குத்தகைக்கு விடப்பட்ட நிலமல்ல, சட்டப்படி 999 ஆண்டுகளுக்கு இப்பகுதி முழுவதும் தற்காலிகமாக நமக்கு மாற்றித் தரப்பட்டுள்ள சொத்து (ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் வகையில்). இது இன்னும் பலருக்குப் புரியாமலே உள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. பலரும் இது நமக்குத் குத்தகைக்கு விடப்பட்ட நிலம் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு யாருடைய தயவையும் உத்தரவையும் எதிர்பார்த்துக் காத்திராமல் முல்லை பெரியாறு அணை, அதையொட்டிய 8,964 ஏக்கர் நிலப்பரப்பு, அதனுள் சென்றுவரும் வழிகள், சோதனைச் சாவடிகள் அனைத்தையும் நம்முடைய முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் முல்லை பெரியாறு சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். கேரள அரசியல்வாதிகளும் பாடம் கற்பார்கள். காவிரி விஷயத்தில் தமிழகத்திலிருந்து எந்தக் குரல் எழுந்தாலும் உடனடியாக கர்நாடகத்திலிருந்து எதிர்க்குரல் எழுகிறது. கேரளாவில் இப்போதும் எழுந்துகொண்டிருக்கும் அடிப்படையற்ற கூக்குரலுக்கு தமிழக முதல்வர் உடனடி பதில் கொடுத்து அவர்களின் வாயை அடைக்க வேண்டும். ஏனென்றால், முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. அந்த நியாயம் அறிவியல் தரவுகளால் பெறப்பட்டவை. எனவே, தைரியமாகக் குரல் கொடுத்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராகக் குரல் எழும் வாயை அடைக்க வேண்டும்” என்றார்.

தமிழக முதல்வர் குரல் எழுப்புவாரா?