Published:Updated:

விவசாயம் எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்குது!

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
பிரீமியம் ஸ்டோரி
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

நானும் விவசாயி

விவசாயம் எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்குது!

நானும் விவசாயி

Published:Updated:
விவசாய வேலைகளில் நடிகர் அருண்
பிரீமியம் ஸ்டோரி
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

‘விகடன் ஒளித்திரை’ தயாரிப்பான ‘அழகி’ மூலம் சின்னத்திரை பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் அருண். தொடர்ந்து ‘இளவரசி’ ‘வாணி ராணி’ ‘சந்திரலேகா’ ‘பூவே உனக்காக’ ‘பிரியசகி’ உள்ளிட்ட பல பிரபலமான சின்னத்திரை தொடர்களில் நடித்தார். 12 ஆண்டுகள் சின்னத்திரை வாழ்க்கைக்குப் பிற‌கு, தற்போது முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார். சென்னையில் வசித்துக் கொண்டிருந்த அருணின் குடும்பம், அவரின் விவசாய ஆர்வத்தின் காரணமாகக் கொடைக் கானலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் பாறைப்பட்டி என்ற இடத்தில் இருக்கிறது அருணின் தோட்டம். உருளைக்கிழங்கு வயலில் வேலையாக இருந்த அவரைச் சந்தித்தோம். சின்னத்திரையி லிருந்து விவசாயத்துக்கு வந்த பிறகான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

‘‘சின்னத்திரை நடிகர், நடிகைகள் தொடர்கதைகள் மூலமாகத் தினமும் மக்கள் வீடுகளுக்குள்ளே செல்வதால் அதிக பிரபலம் கிடைக்கிது. ஆனா, அது நிரந்தரமில்லாதது. அதனால, இப்ப யெல்லாம் டிவியில இருந்தாலும் கைவசம் இன்னொரு தொழிலை வெச்சிக்கணும்னு தான் பலரும் விரும்புறாங்க. அந்தத் தொழில் மனசுக்கு மிகவும் பிடிச்ச விவசாயமா இருக்கட்டுமேனு நினைச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே, அதுக்கான முயற்சிகளை ஆரம்பிச்சிட்டேன். கடைசியா நடிச்சுகிட்டு இருந்த ‘பூவே உனக்காக’ ‘சீரியல்’ என்னோட அந்த முயற்சிக்குச் சில நேரங்கள்ல தடையாக இருக்குற மாதிரி தெரிஞ்சது. அதனால ‘சீரியல்’ல இருந்து வெளியேறி, இங்க வந்துட்டேன்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

எனக்கு பூர்வீகம் மயிலாடுதுறை. அப்பா அம்மா விவசாயம் செய்யல. அவங்களுக்கு முந்தைய தலைமுறை அதாவது தாத்தா காலத்தில விவசாயம் செய்திருக்காங்க. அப்பா வேறு வேலைக்கு வந்துட்டதால விவசாயம் செய்யல. ஆனாலும், எங்க உறவுக்காரங்க பலரும் விவசாயத்தில இருந்ததால என்னோட சிறு வயசு, தோட்டம், வாய்க்கால், கிணற்றைச் சுற்றியே நகர்ந்தது. விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போதெல்லாம் வயல்கள்ல விளையாடி யிருக்கேன். பிறகு, பொறியியல் படிச்சுகிட்டிருந்த நாள்கள்லதான், நாமும் விவசாயம் செய்ய ணும்ங்கிற ஆசை வந்தது. சின்னத்திரைக்கு வந்த பிறகு, எப்படியும் ஒரு துணைத் தொழில் வேண்டும்னு முடிவு செஞ்ச நிமிஷமே விவசாயம்தான் என் மனசுல ஓடுச்சு. ‘இன்ஜினீயரிங்’ படிச்சுட்டு, நடிக்க வந்தப்ப என்னோட அந்த விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாத பெற்றோர், ‘விவசாயம் செய்யப் போகிறேன்’னு சொன்னப்பவும் எந்த மறுப்பும் சொல்லல’’ என்றவர், விவசாயம் செய்ய கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்த தகவலுக்குள் புகுந்தார்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

‘‘உண்மையைச் சொல்லணும்னா நான், முதல்ல ஒரு சுற்றுலாப் பயணியாதான் இங்க வந்தேன். இங்கயிருக்கச் சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. விவசாய ஆசையில நிலம் தேடிக்கிட்டு இருந்த நேரம். நான் எதிர்பார்த்த விலையில இந்த இடம் கிடைச்சது. அதனால சுற்றுலாப் பயணியா வந்த நான், இங்கேயே தங்கிட்டேன். இது 3 ஏக்கர் நிலம். முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பட்டாணி போட்டிருக்கோம். விவசாயத்துல இறங்குறதுக்கு முன்னாடி, அது தொடர்பான பல விஷயங்களைப் பலர்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். பசுமை விகடன் வாசிப்பேன். நிறைய யூடியூப் பார்த்தேன். இங்க சித்திக்னு ஒரு நண்பர்தான் உதவியா இருக்கிறார்’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
விவசாய வேலைகளில் நடிகர் அருண்


‘‘முள்ளங்கி, பட்டாணி, உருளைக் கிழங்குனு மூணு பயிர்களைச் சாகுபடி செய்திருக்கோம். உருளைக்கிழங்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அறுவடை பண்ணுனோம். பட்டாணியில‌ இப்ப குச்சி கட்டுற பருவம். குச்சி நட்டிருக்கோம். முள்ளங்கி போன தடவை வந்ததுக்கே நல்ல விலையில்ல. அதனால முதல் விளைச்சல்ல வீட்டுக்கு, நண்பர்களுக்குன்னு கொஞ்சம் எடுத்ததோடு சரி. அதை அப்படியே மண்ணுக்கு உரமா விட்டுட்டோம். அடுத்த முறையாவது விலை இருக்குமானு தெரியல. உரம்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

என் தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே இயற்கை உரம்தான். வெளியில இருந்து வாங்கிக்கிட்டிருந்தேன். இப்ப சில மாடுகளையும் வாங்கி இருக்கேன். பாறைப் பட்டிக்கு மேல ஒரு அருவி இருக்கு. அந்த அருவியில கோடையில மட்டும்தான் தன்ணீர் குறைவா விழும். மத்த நாள்ல எந்நேரமும் தண்ணீர் விழுந்துகிட்டிருக்கும். அந்த அருவியில இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலதான் இந்தத் தோட்டம் இருக்கு. அதனால அங்கிருந்து தண்ணி எடுத்துக்கிறேன். அதனால தண்ணிக்கு பிரச்னை இல்ல.

விவசாய வேலைகளில் நடிகர் அருண்
விவசாய வேலைகளில் நடிகர் அருண்

விவசாயத்துல சவால்கள் நிறைய இருக்கு. இந்த இடத்துக்கு மண் சாலைதான். அதுவும் கரடு முரடா இருக்குது. அதனால விவசாய வேலைக்கு, வேலையாளுங்களைக் கூட்டிக்கிட்டு வர்றது ரொம்பச் சிரமமா இருக்கு. கொடைக்கானல்ல இருந்துதான் கூட்டிக்கிட்டு வரணும். வண்டி வெச்சுதான் கூட்டிக்கிட்டு வர வேண்டியிருக்கு. இது, கொடைக்கானல் மலையிலேயே அதிக உயரமான பகுதி. வாகனத்தில வர்றதுக்கே சில சமயங்கள்ல பயப்படுகிறாங்க. எதிரே ஒரு வண்டி வந்தா, சில கிலோ மீட்டர் பின்னாடி போக வேண்டியிருக்கும்.

அதனால, விளைபொருள்களை எடுத்துக் கொடைக்கானலுக்குக் கொண்டு வர்றதுக்கே பெரிய செலவு பிடிக்குது. இது மாதிரியான சிக்கலெல்லாம் இருக்கும்னு எதிர்பார்த்து வந்ததால மனம் சோர்வடையல. சவால் களுக்கு என்ன தீர்வுன்னுதான் யோசிக்கிறேன்’’ என்றவர் நிறைவாக,

பட்டாணி
பட்டாணி

‘‘நான் விவசாயம் பார்த்துப் பெரிசா சம்பாதிக்கணும்னு நினைக்கல. முதலுக்குப் பங்கம் வராத அளவுக்கு இருந்தா போதும்னு தான் நினைக்கிறேன். சில நேரம் அது கிடைக்கலன்னாலும், மனம் சோர்வடை யாதுன்னு நம்புறேன்.

ஏன்னா, சென்னையில பரபரப்பான போக்குவரத்துக்கு நடுவுல கரியமில வாயுவைச் சுவாசிச்சபடியே காலை 7 மணிக்குக் கிளம்பி இரவு 7 மணிவரைக்கும் நடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்புவேன். தூங்கி, எழுந்து மறுநாளும் அதே மாதிரி பயணத்துக்குத் தயாராகணும். அதோட ஒப்பிடும்போது, நம்முடைய சொந்த நிலத்தில விளைஞ்சிருக்குற பயிர்களை வருடிக் கொடுத்தபடியே, அதோட வளர்ச்சியைப் பக்கத்திலிருந்தே பார்க்குற நிமிஷங்கள் எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்குது. அதனால, திரும்பவும் சின்னத்திரைப் பக்கம் வருவேனா இல்லையானு தெரியாது. இன்னைக்கு நிலைமையில நானும் விவசாயிதான்’’ என்று உற்சாகத்தோடு சொல்லி முடித்தார் அருண்.

- வருவார்கள்


படங்கள்: ஜார்ஜ் அந்தோணிசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism