Published:Updated:

`பாபநாசம் 11 அடி, சேர்வலாறு 28 அடி, குற்றாலத்தில் வெள்ளம்!'- ஒரே நாளில் ஆச்சர்யப்பட வைத்த‌ மழை

நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 28 அடி உயர்ந்துள்ளது.

பாபநாசம் அணை
பாபநாசம் அணை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதனால் களையிழந்து காணப்பட்ட குற்றால சீசன் மீண்டும் சிறப்பாக மாறியிருக்கிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி மட்டும் அல்லாமல் பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றாலம் அருவி
பழைய குற்றாலம் அருவி

அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. எனவே, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. 65.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 77.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 8,881 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது. 80.64 அடியாக இருந்த சேர்வலாறு அணை ஒரேநாளில் 108.59 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்து 54 அடியாகியிருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 1,958 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

ஐந்தருவி
ஐந்தருவி

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 110 மில்லி மீட்டரும் கொடுமுடியாறு அணைப்பகுதியில் 75 மில்லி மீட்டரும் ராதாபுரத்தில் 66 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருவதால் விவசாயிகளின் மனம் குளிர்ந்துள்ளது.