Published:Updated:

54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம்! - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்!

கால்நடை

பிரீமியம் ஸ்டோரி
மாடு வளர்ப்புக்கு அதிக முதலீடு, பராமரிப்புத் தேவைப்படும் என்பதால் பலரும் ஆடு வளர்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆடு வளர்ப்பில் பலரும் இலைதழைகளைத் தின்னும் வெள்ளாட்டை விட, வயலிலும், புறம்போக்கு நிலங்களிலும் இருக்கும் புற்களை மேயக்கூடிய செம்மறியாடுகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்துவருகிறார்கள். அந்த வரிசையில், பன்னூர் ரகச் செம்மறி ஆடுகளை வளர்த்துவருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பாத்துக்கோட்டாவை அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பிரபு.

செம்மறி ஆடு
செம்மறி ஆடு

அவரிடம் பேசினோம். “பொறந்து வளர்ந்ததெல்லாம் இங்கேதான். 10-ம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கேன். எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல வருஷத்துக்கு ஒரு வெள்ளாமைதான் செய்ய முடியுது. அதனால வருமானத்துக்கு நாங்க நம்பியிருக்கிறது ஆடு, மாடுகளைத்தான். முதல்ல ஆடுகள் குறைச்சலாத்தான் இருந்துச்சு. இடையில நாட்டுக்கோழி வளர்ப்பைத் தொடங்கினேன். நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு. எங்க பகுதியில காட்டுப்பூனைகளோட தொல்லை அதிகம். அதுக வந்து கோழிகளைப் பிடிச்சு சாப்பிட்டுடும். அதனால கோழிகளைக் குறைச்சுக்கிட்டு, செம்மறியாடு வளர்ப்புல முழுசா இறங்கிட்டேன்” என்றவர்,

கொட்டகை
கொட்டகை

“எங்ககிட்ட இப்போ 32 பன்னூர் ஆடுகளும், ரெண்டு குட்டிகளும், 22 நாட்டுச் செம்மறி ஆடுகளும் இருக்கு. பன்னூர் ஆடுகளை எங்கம்மா பார்த்துக்கிறாங்க. நாட்டு ஆடுகளை நான் பார்த்துகிறேன். என்கிட்ட இருக்கிற நாட்டு ஆடுகளையும் கூடிய சீக்கிரம் மாத்தப்போறேன். இடையில நோய் தாக்கிச்சு. அப்போ வைத்தியம் பார்க்க வந்த டாக்டர், ‘இந்தப் பகுதிக்கு பன்னூர் ஆடுகள்தான் செட்டாகும். மத்த ஆடுகள் செட்டாகாது’னு சொல்லிட்டார். அதனால முழுக்கவே பன்னூர் ஆடுகளா மாத்தப்போறேன்” என்றவர், பன்னூர் செம்மறியாட்டு ரகத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

‘‘இந்த ஆடுகள் குள்ளமா, உடல் அகலமா இருக்கும். ரோமம் அடர்த்தியா இருக்கும். இந்த ரகத்துல கிடாக்களுக்குக் கொம்பு முளைக்காது.’’
“கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்துலதான் இந்த ஆடுகள் அதிகம்.

அதனாலதான் இதை, `பன்னூர் ஆடு’னு சொல்றாங்க. சிலர் இதை, `மாண்டியா ஆடு’ன்னும் சொல்றாங்க. மாண்டியா, பெங்களூரு, ராம் நகர், கோலார், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி வரைக்கும் இந்த வகையான ஆடுகளை வளர்க்கிறாங்க. வழக்கமா ஆடுகள் நீளமா, உயரமா இருக்கும். ஆனா, இந்த ஆடுகள் குள்ளமா, உடல் அகலமா இருக்கும். ரோமம் அடர்த்தியா இருக்கும். இந்த ரகத்துல கிடாக்களுக்குக் கொம்பு முளைக்காது. அப்படிக் கொம்பு முளைச்சா, அது பன்னூர் கலப்பினம்கறதைத் தெரிஞ்சுக்கலாம். என்கிட்ட பன்னூர் கலப்பினங்களும் இருக்கு. முன்னல்லாம் கம்பளித் தயாரிப்புக்கு ரோமத்தை வெட்டுறதுக்கு வருவாங்க. இப்போ யாரும் வர்றதில்லை. ஓசூர் குளிருக்கும் வெப்பத்துக்கும் இந்த ஆடுகள்தான் தாக்குப்பிடிக்கும். இது தெரியாம பல விவசாயிகள் மத்த ரக ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்து சிரமப்படுறாங்க. இந்த ஆடு 20-30 கிலோ எடையிருக்கும். நல்லா ஊட்டம் கொடுத்து வளர்த்தா 50 கிலோ வரைக்கும்கூடப் போகும். நாங்க மேய்ச்சல் முறையிலதான் வளர்க்கிறோம். மழைக்காலங்கள்ல ‘பிச்சி நோகு’னு ஒருவகை நோய் வருது. இது வந்துட்டா ஆடுகள் இறந்து போயிடும். இதுக்கு நாட்டு மருந்துக் கடையில ஒருவகைச் சூரணம் கொடுக்கிறாங்க. அதை மழைக்காலத்துக்கு முன்னாடியே கொடுத்துட்டா இந்த நோய் வர்றதில்லை” என்றவர், வருமானம் பற்றிப் பேசினார்.

செம்மறி ஆடுகளுடன் பிரபு தம்பதி
செம்மறி ஆடுகளுடன் பிரபு தம்பதி
“ `வெயில் காலத்துல செம்மறியாட்டுக்கறி சாப்பிடுங்க, குளிர் காலத்துல வெள்ளாட்டுக்கறி சாப்பிடுங்க’னு சொல்வாங்க.

செம்மறியாட்டுக்கறி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். அதனால விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்க அதிகமா குட்டியா விக்க மாட்டோம். ஆடாதான் வளர்த்து, விப்போம். ஒரு குட்டி பிறந்து ஒன்றரை வருஷத்துல ஆடாக மாறிடும். சில ஆடுகள் சினைக்கே வந்திடும். அதுவே கிடாவா இருந்தா சினையாட்டுக்கு கிடைக்கிற விலையும் கிடைக்கும். கிடா, சினை ஆடுகள்னா 9,000 ரூபாய் கிடைக்கும். பெரிய ஆடாக இருந்தா 7,000 ரூபாய் கிடைக்கும். மொத்தமிருக்கும் 54 ஆடுகள் மூலமா ஒன்றரை வருஷத்துக்கு குட்டிகள் இறப்புகள் போக 90 குட்டிகள் கிடைக்கும். இதையே நாலு மாச, ஆறு மாசக் குட்டியா வித்தா 4,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை விலை கிடைக்கும். ஆனா, நாங்க பெருசா வளர்த்துதான் விற்பனை செய்வோம். வருஷத்துக்கு 45 ஆடுகளை விற்பனை செய்வோம்.

மேய்ச்சலில் ஆடுகள்
மேய்ச்சலில் ஆடுகள்

ஆடுகளாக்கி விக்கிறது மூலமா 7,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை கிடைக்கும். சராசரியா 8,000 ரூபாய்னாலும் 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவுன்னு பார்த்தா தடுப்பூசி, அடர்தீவனம், கொள்ளுப்பொட்டு, கைவைத்தியம்னு 52,000 ரூபாய் போயிடும். மிச்சம் 3,08,000 ரூபாய் லாபமாக நிற்கும்” என்றவர் நிறைவாக, “செம்மறியாடுபோலச் சொகுசா மேய்க்கிறதுக்கு வேறெந்த ஆடுகளும் செட்டாகாது. குறிப்பாக, பெண்கள் பார்த்துக்கிறதுக்கு ஏத்த சாதுவான ஆடுகள். நம்மை மீறி எங்கேயும் ஓடிடாது. கொட்டகையில அடைச்சுட்டாலும் அமைதியா இருக்கும். மழைக்காலங்கள்ல மழையில நனையாம ஆடுகளை மேய்க்கணும். நனைஞ்சுதுன்னா குட்டிகளோட இழப்பு அதிகமாகிடும். அதனால லாபம் குறைய வாய்ப்பிருக்கு. இதை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு வளர்த்தா செம்மறியாடும் லாபகரமானதுதான்” என்று சொல்லிப் புன்னகையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பிரபு, செல்போன்: 96775 58066.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செம்மறியாடு வளர்ப்பு!

ண்ணை முறை, மேய்ச்சல் முறை என இரண்டு முறைகளிலும் செம்மறியாடுகளை வளர்க்கலாம். ஆனால், பெரும்பாலும் மேய்ச்சல் முறையைப் பின்பற்றியே இப்பகுதியில் ஆடு வளர்க்கின்றனர். அப்படி வளர்ப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

செம்மறி ஆடு
செம்மறி ஆடு

செம்மறியாடுகள் புற்கள், கீரை வகைத் தாவரங்கள், கொடி வகைத் தாவரங்களை விரும்பி உண்ணும். வயல்வெளிகள், ஏரிகள், குட்டைகள், மேட்டு நிலங்கள் ஆகியவை மேய்ச்சலுக்கு ஏற்றவை. கொட்டகையைத் தேவையைப் பொறுத்து அமைத்துக்கொள்ளலாம். ஓர் ஆட்டுக்கு நான்கு சதுர அடி இடம் இருப்பதுபோல அமைத்துக்கொள்ளலாம்.

ஒரு ஆட்டுக்கு தினமும் 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 100 கிராம் கொள்ளு, 100 கிராம் அடர் தீவனம் ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அதோடு தினமும் இரண்டு கட்டு அகத்தி இலையைக் கொடுத்து வந்தால் ஆறு மாதங்களில் குட்டிகள் நல்ல எடைக்கு வந்துவிடும். ஆடுகளும் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்து குட்டிகளை ஈனும். நோய்கள் அண்டாது. தக்க சமயத்தில் தடுப்பூசி, பூச்சி மருந்து கொடுக்க வேண்டும்.

பெரிய முதலீடு தேவைப்படாது!

கிருஷ்ணப்பா
கிருஷ்ணப்பா

ன்னூர் ஆடுகளை வளர்த்துவரும் பாத்துக்கோட்டாவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரிடம் பேசினோம். “லாரி டிரைவரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒருகட்டத்துல அதிலிருந்து விலகி ஒரேயொரு பன்னூர் செம்மறி ஆட்டை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு 60 ஆடுகளுக்கு மேல இருக்கு. இந்த ஆடுகளை மேய்ச்சுதான் என் பொண்ணை வக்கீலுக்குப் படிக்கவெச்சேன். வெயில் காலங்கள்ல ஒரு ஆள் 100 ஆடுகளை மேய்க்க முடியும். அதுவே வெள்ளாமைக் காலங்கள்ல 30 ஆடுகளைத்தான் மேய்க்க முடியும். ஏரி, குளம், குட்டை, புதர்க்காடுகள் இருக்கிற பகுதிகள்ல தாராளமாவே மேய்க்க முடியும். பெரிய முதலீடு தேவைப்படாது. இந்த சீதோஷ்ண நிலைக்குப் பன்னூர் ஆடுகள் நல்லாவே பொருந்திப் போகுது. இதோட கறி, முயல் கறி மாதிரி மெதுவா இருக்கும். எல்லாரும் சாப்பிடலாம். வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் இது மூலமா சம்பாதிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தப் பகுதியில ஊருக்கு 10 வீடுகள்ல இந்த ஆடுகளை மேய்க்கிறாங்க” என்றார் உற்சாகமாக.

உயிர் எடைக்கு விற்றால் கூடுதல் லாபம்!

டு விற்பனை குறித்துப் பேசிய நாய்க்கனப்பள்ளியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி வெங்கடேசப்பா, “பொதுவாக ஆடு 20 முதல் 25 கிலோ எடை இருக்கும். ஒரு ஆட்டை 7,000, 8,000 ரூபாய்னு வித்தா வாங்குறவங்களுக்கு லாபம். அதனால உயிர் எடை கிலோ 400 முதல் 500 ரூபாய்னு விக்கும்போது 10,000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்ய முடியும். நான் வளர்க்கிற ஆடுகள்ல மாசத்துக்கு ஒண்ணை நானே வெட்டி, கறியா வித்திருவேன். அப்படி விக்கும்போது ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விக்க முடியுது. அதுவும் இப்போ இருக்கிற கொரோனா காலத்துல கிலோ 1,000 ரூபாய்க்குக்கூட விக்கிறாங்க. அதுக்கு முன்னாடி இறைச்சிக் கடையில என்ன விலை போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வித்தா லாபம் அதிகமா கிடைக்கும்” என்றவர், ஆடு வாங்குவது குறித்துப் பேசினார்.

வெங்கடேசப்பா
வெங்கடேசப்பா

“வளப்புக்காக ஆட்டை வாங்கும்போது கழிசல் இருந்தா வாங்கக் கூடாது. அதே சமயம் ஆடுக தலையைத் தொங்கப் போட்டுகிட்டு அசை போடாம இருந்தாலும் கவனமா இருக்கணும். பல்லு பிடிச்சு வாங்குறதுன்னா நாலு பல்லு, ஆறு பல்லு இருக்கிற ஆட்டை வாங்கணும். இருமல், தும்மல் இருக்கிற ஆடுகளை வாங்கக் கூடாது. முடிஞ்ச அளவு வளர்க்கிறவங்ககிட்ட வாங்குறது நல்லது” என்றார்.

ஆடு ஒன்று ரூ.50 ஆயிரம்!

54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம்! - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்!

ன்னூர் ஆடுகள் குறித்துப் பேசிய பாத்துக்கோட்டாவைச் சேர்ந்த சுகுமார், “இந்த ஆடுகளின் பூர்வீகம் கர்நாடக மாநிலம். இந்த ரக ஆடுகளின் அதிகபட்ச உயரமே இரண்டரை அடிதான். பெங்களூரு, மாண்டியாவைச் சுற்றி நடைபெறும் கால்நடைக் கண்காட்சிகளில் இந்த ஆடுகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் எனப் பரிசுகளைத் தட்டி செல்லும் ஆடுகளும் உண்டு. அங்கே இந்த ஆடுகளைக் கொண்டாடுகிறார்கள். நிலவியல்ரீதியாகத் தமிழகத்தின் எல்லையிலும் இந்த ஆடுகள் தங்கிவிட்டன. இந்த ஆட்டின் முகம், கழுத்து, கால்கள் செந்நிறத்தில் இருக்கும். கறி வெளுப்பாக இருக்கும். நான் இதை இனப்பெருக்கத்துக்காக வளர்க்கும் திட்டத்தில் இருக்கிறேன். ஒசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வளர்க்க விரும்புபவர்கள் ஒன்றிரண்டு ஆடுகளை வாங்கிக்கொண்டு போய் வளர்த்துப் பார்த்த பிறகு பெருக்குவது நல்லது. தமிழ்நாடு அரசு, இந்த ரக ஆடுகளை மேலும் பரவலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு