Published:Updated:

கடுகு விதை! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

“இப்ப நான் என்ன பண்ண? சாக்ஸைத் தேடவா... கடுகைத் தேடவா?”, அவரைத் திட்ட முடியாது. பல்லைக் கடித்து கணவரிடம் எகிறினேன் – அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக!

பையன் பள்ளிக்கு, கணவர் அலுவலுகத்துக்கு, நான் கல்லூரிக்கு என அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்த பரபரப்பான காலைப் பொழுது அது! வேலைக்குப் போய் குடும்ப பொருளாதாரத்துக்கு உதவும் பொறுப்பை நான் எடுத்திருந்தாலும், சமையல் பொறுப்பை மட்டும் எடுக்கவோ, குறைந்தபட்சம் உதவவோகூட வீட்டில் யாரும் முன் வருவதில்லை!

‘எல்லாம் என் தலையில்தான் விடியும்’, புலம்பிக்கொண்டே ரசம் தாளிக்க தேடினால், கடுகு பொட்டுகூட இல்லை! வெந்தயமும் காலி! ‘நேத்துகூட தாளிச்சோமே... நிறைய இருந்ததே!’ என்று யோசிக்கும் பொழுதே சட்டி காய்ந்துவிட, “சாரு என் சாக்ஸைக் காணோம்!”, எங்கள் அறையிலிருந்து கணவர் குரல். வந்ததே கோபம்! “ப்ளீஸ்டி”, என்ற கெஞ்சல், கோபத்திற்கு சற்றே அணை போட, “அவன் கேட்கிறான்ல லதா, என்னன்னு பாரு! நான் தாளிக்கிறேன்”, ‘இவள் சமைக்கட்டும்’, என்று அடுப்பு பக்கம் வராது, பையனுக்கு என்றவுடன் சிபாரிசுக்கு வந்தார் மாமியார்!

Representational Image
Representational Image

சாருலதா என்ற என் பேர் மட்டுமல்ல, நானுமே ஒவ்வொருவர் இழுப்புக்கும் தகுந்தாற்போல வளைய வேண்டும். அதற்குள் “அம்மா நான் ரெடி!”, என்று தானா தயாராகிக் கிளம்பி வந்த என் மகன் அபியை சாப்பிடச் சொல்லிவிட்டு, “ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைக்கணும்! அபியைப் பாருங்க சமத்தா கிளம்பிடுச்சு! ஆம்பிளை பிள்ளைனாலும், தன் வேலையைத் தானே பார்த்துக்கிற மாதிரி சொல்லிக்கொடுத்திருக்கேன். ஆனா, நீங்க? சாக்ஸ் கூட தேட முடியாம வளர்ந்து நிக்கிறீங்க!” என்றவாறு அறைக்குள் நுழைந்தேன். இது பெருமையா, இல்லை குத்தலா என்ற குழப்பத்தில் பார்த்தார் கணவர், “ஆபீஸில் முக்கியமான மீட்டிங்டி. சீக்கிரமா போகணும். என்னால இந்த மலைக்குள்ள தேட முடியலை”, சேர்மீது குவிந்திருந்த துணிகளைக் காட்டி கேட்கவும், அதைத் தேட ஆரம்பித்த வேளையில், “லதா!”, என்ற கோபக்குரலில் அழைத்து, “கடுகு, வெந்தயம்கூட இல்லாம என்னத்தை தாளிக்க? நேத்துதானே சூப்பர் மார்க்கெட் போனீங்க! இதைக்கூட வாங்கலையா?”, இவர் வளர்ப்பைக் குறை சொன்னதற்குக் கிடைத்த வாய்ப்பை விடாது என்னைத் தாளித்தார் மாமியார்.

“இப்ப நான் என்ன பண்ண? சாக்ஸைத் தேடவா... கடுகைத் தேடவா?”, அவரைத் திட்ட முடியாது பல்லை கடித்து, கணவரிடம் எகிறினேன் – அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக! “சாக்ஸை மட்டும் எடும்மா தாயே போதும்!“ என்றார் எரிச்சலும், அவசரமுமாய். “ஹூம்...” சலிப்புடன் கோழியைவிட வேக வேகமாக துணிகளைக் கிளறி, அவர் சாக்ஸைக் கண்டுபிடித்துக் கொடுத்த நேரத்தில், “அம்மா, ஸ்கூல் பஸ் வந்திடும் லஞ்ச் பேக் தாங்க!” அபி நினைவூட்டலில் பறந்தேன் சமையலறைக்கு! மாமியாரும் அங்கில்லை. வேலையும் எதுவும் நடக்கவில்லை. இருக்கிறதை வைத்து தாளித்து ஒப்பேற்றி, டிபன் பாக்ஸில் எடுத்துவைக்கும்போதே ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அவனை முன்னே போகச் சொல்லிவிட்டு, மின்னல் வேகத்தில் பேக் செய்து பையை பறந்துபோய் கொடுத்தேன்.

Representational Image
Representational Image

பஸ் சென்ற பின்னும் வேகமாக ஓடியதில், இதயம் தாறுமாறாக துடித்து மூச்சிரைத்தது. எதிர் வீட்டு மாலதி அக்கா வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த மாமியார் என்னை பார்த்ததும், “அபிக்கு என்ன கொடுத்தே? வீட்டுல ஒண்ணுமே இல்லையே” என்றபடி என்னிடம் வந்து, “அரக்கபறக்க வேலைக்குக் கிளம்பிட்டு இருந்த மாலதியைப் போய் இடைஞ்சல் கொடுக்கிற மாதிரி ஆகிடுச்சு! இந்தா பிடி, சீக்கிரம் சமைச்சு முடி! அவனும் கிளம்பிடப் போறான்“ என்று இரவல் வாங்கிய கடுகைக் கொடுத்து விரட்டினார் என்னை. ‘நானும்தானே வேலைக்குப் போறேன். யாரோ மாலதிக்கு பாவப்படுற இவங்க வீட்டுக்கு வாழவந்த மருமகளுக்கு ஒரு பொட்டுக்கூட அக்கறைப்பட மாட்டாங்க!’, உள்ளம் பொருமியது! அதைப் பின்னுக்குத் தள்ளி, விறு விறுவென வீட்டிற்குள் வர, வாசலிலே நின்ற மாமியார், “லதா இங்க வந்து பாரு! ஏதோ முளைவிட்டு...” “அட, வெந்தயக் கீரையும் கடுகுக் கீரையுமா இருக்கு. உன் மகன் வேலையா... பச்ச மண்ணுக்கு விவசாயம் சொல்லிக்கொடுக்கிறேன்னு, அது வீட்டுல உள்ளதெல்லாம் விதைச்சு வுட்டுருக்கு. இருக்கிற விலைவாசியில அத்தனையும் மண்ணுல போட்டு... இப்படி மண்ணுல போட்டுப் போட்டு உங்கப்பா நடுத்தெருவுக்கு வந்தது பத்தாதா?” “அது சரி, அவர் பொறுப்பா இருந்திருந்தா உனக்கும் அது தெரிஞ்சிருக்குமே” வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல மாமியார் வாய் இஷ்டத்துக்கு பேச கடுகு தொலைந்த கதை புரிபட, அபி மேல் கோபம் ஒருபுறம்!

என்னைப் பெற்றவரை பேசுவதைத் தாங்க முடியாத அழுகை ஒருபுறம். அப்பா விவசாயக் கடனில் மூழ்கித் தவித்தபொழுது என் கணவர்தான் மீட்டார் - என் மாமியாரும் தடையாய் நிற்கவில்லை. அந்தச் செயலுக்காகத்தான் அவரை எதிர்த்துப் பேசவில்லை. அப்படியே பேச நினைத்தாலும் எங்கே நேரம் இருக்கிறது. அழுவதற்குக்கூட நேரம் இன்றி, வந்த அழுகையை விழுங்கிவிட்டுக் கிளம்பினேன். நான் பின்னால் அமர்ந்ததும், பைக்கை கிளப்பிய கணவர், “அபி அன்னைக்கே சொன்னான்டி தாத்தா மாதிரி தோட்டம் செய்யுறேன்னு. அது இப்ப தான் புரியுது!” “நீங்களும் ஏதாவது அப்பாவை வைச்சு ஆரம்பிச்சிடாதீங்க! உங்க அம்மா பேசுனதையே தாங்க முடியலை!” என்றேன் குரல் தழுதழுக்க. ஒரு உதவி வாங்கியதற்கு மாற்றாய் இத்தனை குத்தல் பேச்சுக்களா? “அவங்க புரியாம பேசுறதை பெரிசு படுத்தாதே! குடிச்சு தன்னை அழிச்ச என் அப்பா மாதிரியே போன்னு விடாம, ஒரு விதவையா பல பாடுக்கு மத்தியில என்னை உருவாக்கி, எனக்குன்னு ஒரு சந்ததி உருவாகக் காரணமானது என் அம்மா. பொண்டாட்டி சிரமப்படுறான்னு தெரிஞ்சும் அவளைச் சார்ந்தே இருக்கிற என்னைப் போல இல்லாம சுயமா நிக்கிற பையனா உருவாக்குற நீ!

Representational Image
Representational Image

தாய் ஒருத்தி இல்லன்னா நானும் சரி, அபியும் சரி எங்களுக்கான தனித்துவத்தை இழந்திருப்போம்!”, “எனக்குத் தெரியாதாடி? பாவம் மாமா! அவர் அறியாமைதான் அவரை கஷ்டத்தில் விட்டதே தவிர, அவர் வியர்வை சிந்தின மண்ணு இல்லை! நம்ம எல்லாருக்குமான தாய் அது! கடுகளவு விதையைக்கூட காடா மாத்துற தாய்” என்றார். ஏதோ ஆறுதல் மனதில். அவருக்கும் என்ன தோன்றியதோ, அந்த நாளில் இருந்து அபியும் நானும் அமைத்திருந்த சின்னஞ்சிறு தோட்டத்தில், அவரும் ஆர்வமாக ஈடுபட ஆரம்பித்தார். அபி விதைத்ததில் வளர்ந்த கீரைகளைப் பறிக்காமல் வளரவிட்டோம். அவை பூத்து, பயிராகி, விதைத்ததை விட பல மடங்கு அறுவடை செய்து கொடுத்த பேரனைக் கண்டு பெருமிதமாக, “டிவி, கேம்ஸ்னு கிடக்குற பிள்ளைங்க மத்தில என் பேரனைப் பாத்தியா! அப்படியே உன் ரத்தம்டா”, மகனிடம் என் மாமியார் சிலாகித்துக்கொண்டிருக்க, பூமித் தாயின் பொறுமையைக் கொஞ்சம் இரவல் வாங்கிக்கொண்டேன்.

- ஷர்மி ராஜம்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு