Published:Updated:

ஜப்பானில் குறைந்துவரும் விவசாயப் பணியாளர்கள்... இனி ரோபோக்கள்தான் ஒரே வழி!

ஜப்பான்
ஜப்பான் ( pixabay )

எதிர்காலத்தில் இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அதில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது.

உலக அளவில் 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 7.7 பில்லியனிலிருந்து 9.8 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வர்த்தக ரீதியிலான உணவுகளைத் தயாரிப்பதற்குச் சர்வதேச அளவில் அதிக தேவை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் பல்வேறு இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பல நாடுகளும் புதிய கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அவற்றில் ஜப்பான் ஒரு படி மேலே போய்விட்டது. விதைகள் தூவுவது முதல் அறுவடை செய்வது வரை விவசாயப் பணிகளுக்குச் சுமார் 20 வகையான ரோபோக்களை உருவாக்க, அந்த நாட்டு அரசு மானியம் வழங்கிவருகிறது.

சமீபத்தில், ஹொக்கைடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து யான்மர் எனும் இன்ஜீன் தயாரிக்கும் நிறுவனம், ரோபோ டிராக்டரை வடிவமைத்து, வயலில் சோதனை செய்துள்ளது. இதில், சென்சார் உதவியுடன் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு டிராக்டர்களை இயக்கலாம்.

ஜப்பான்
ஜப்பான்
pixabay

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நிசான் நிறுவனம், ஜி.பி.எஸ் மற்றும் வைஃபைகொண்ட சூரிய சக்தியால் இயங்கும் ரோபோக்களை உருவாக்கியது. பெட்டி வடிவிலான அந்த ரோபோ, நீர் தேங்கியுள்ள வயலுக்குச் சென்று, தேங்கியுள்ள நீரில் ஆக்சிஜனைக் கூட்டியது. அதனால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் தேவை வெகுவாகக் குறைந்தது. இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், பல இளைஞர்கள் விவசாயப் பணியை நோக்கித் திரும்பியிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜப்பான். ஆட்கள் குறைவால் ஏற்படும் பொருளாதார சரிவையும் விவசாயப் பணிகளையும் முறைப்படுத்த இந்த ரோபோக்கள் உதவுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், ஜப்பான் வயல்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒரு பணியாளரின் சராசரி வயது 67 ஆக இருக்கிறது. மேலும், பல விவசாயிகள் பகுதி நேரமாக மட்டுமே வேலை செய்கிறார்கள். ஜப்பானின் நில அமைப்பும், நாட்டின் உணவுத் தேவையில் வெறும் 40 சதவிகிதம் மட்டுமே பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனால், விழித்துக்கொண்ட ஜப்பான் அரசு, மானியம் வழங்கி ரோபோக்களை வடிவமைக்கும் இலக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

ஜப்பான்
ஜப்பான்
pixabay

ஜப்பானின் 85 சதவிகிதம் நிலமானது மலைப் பகுதிகளே. மீதியுள்ள நிலம் அரிசி மட்டுமே பயிர் செய்வதற்கு ஏற்றது. அதனால், அரிசிதான் ஜப்பானின் முக்கிய உணவாக இருந்தது. எனவே, அரிசி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கிவந்தது. ஆனால், தற்போது உணவு முறை முற்றிலுமாக மாறத் தொடங்கியுள்ளது. தனிநபர் ஓராண்டுக்கு அரிசி உண்ணும் அளவும் குறைந்திருக்கிறது. எனவே, ஜப்பானில் அரிசியைத் தவிர வேறு பயிர்களை விவசாயம் செய்யும் நிலை.

அத்தகைய பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். அரிசி தவிர, இதர பயிர்களுக்கு மருந்துகளைத் தெளிக்க, ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மனிதன் இரண்டு நாள்களில் செய்யும் வேலையை, இந்த ட்ரோன்கள் அரை நாளில் முடித்துவிடுகிறது. எனவே, ஜப்பான் அரசும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் அரிசி உற்பத்தியை 2030ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியனாக அதிகரிக்க ஜப்பான் உதவி செய்து, பலருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயிற்சியைக் கொடுத்துள்ளது. அதன் விளைவாக, ஆப்பிரிக்காவில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4 டன்னிலிருந்து 7 டன்னாக உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் வருமானமும் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் விவசாய தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டுசெல்வதில் ஜப்பான் முழுக் கவனம் செலுத்திவருகிறது.

tractor
tractor
pixabay

தவிர வியட்நாம், மியான்மர் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனும் ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உணவு தேவையில் 55 சதவிகிதத்தை உற்பத்தி செய்யவேண்டும் என இலக்கும் நிர்ணயித்துப் பயணித்து வருகிறது.

உணவுத் தேவையை அதிகமான இயந்திரத் தொழில்நுட்பங்களால் சாதிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது ஜப்பான்.

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!
அடுத்த கட்டுரைக்கு