Published:Updated:

இயற்கை விவசாயம்தான் சிறந்தது! - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்!

இயற்கை விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்

சுற்றுச்சூழல்

இயற்கை விவசாயம்தான் சிறந்தது! - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்!

சுற்றுச்சூழல்

Published:Updated:
இயற்கை விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்

`இயற்கை விவசாயம் இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’ என்ற எதிர்ப்புக்குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கும் இன்றைய சூழலில்தான் முழு இயற்கை வேளாண் மாநிலமாக மாறியிருக்கிறது சிக்கிம். அதோடு, சுற்றுச்சூழலில் மகத்தான மேம்பாட்டை எட்டியிருக்கிறது; பல்லுயிர்கள் பெருகியிருக்கின்றன. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவும்பட்டிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு, `முழு இயற்கை வேளாண் மாநிலம்’ என்ற பெருமையைப் பெற்று, உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியது சிக்கிம். அதன் இமாலய சாதனையைப் பாராட்டி, விருது வழங்கி கௌரவித்தது ஐ.நா. இவற்றின் உச்சமாக இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிப்பதால் சிக்கிமில் ஏற்பட்டிருக்கும் நீண்டகாலப் பலன்கள் நாட்டையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

தற்போது சிக்கிமில் மகரந்தச் சேர்க்கையாளர்களான வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்பட்டிருக்கிறது. காடுகளின் வளம் கூடியிருக்கிறது. பல்லுயிர்களின் வாழ்விடங்களாக விளைநிலங்கள் மாறியுள்ளன. சிக்கிம் அரசின் மற்றொரு மைல்கல்தான் இந்தப் புதிய சாதனைகள். இது அரசின் அறிவிப்பு அல்ல. சிக்கிம் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கள ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கும் உண்மை.

Butterfly
Butterfly

சூழல் மேம்பட்டதை இவ்வளவு உறுதியாகத் தெரிவிக்க முக்கியக் காரணம், பல்லுயிர்ப் பெருக்கம் மட்டுமல்ல; சுமார் 130 ஆண்டுகளுக்குப் பின்னர் மரப்பழுப்பு (Woodbrown) நிற வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் சிக்கிமில் தென்படுவதும்தான். பாகிம் கஞ்ஜன்ஜங்கா தேசியப் பூங்காவுக்கு இந்த அரியவகை வண்ணத்துப்பூச்சிகள் வந்திருப்பதை, கடந்த ஜனவரியில் சிக்கிம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ‘‘கடந்த 1887-ம் ஆண்டு அறிவியலாளர் நைஸ்வெல் இந்த மரப்பழுப்பு நிற வண்ணத்துப்பூச்சி இனம் சிக்கிமில் இருப்பதைக் கண்டுபிடித்தார். அப்போது அதன் வாழ்விடம், குணங்கள், செயல்பாடுகள் அதிகமாக அறியப்படவில்லை. அதன் பின்னர் சிக்கிமில் அந்த இனம் தென்படவில்லை. இந்த ஆண்டுதான் மீண்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் வாழ்விடம், அதன் செயல்பாடுகள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன’’ என்கிறார் சிக்கிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் போஜ் குமார் ஆசார்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வட்டப் புள்ளிகளுடனிருக்கும் இந்த வண்ணத்துப்பூச்சி 50 மில்லிமீட்டர் நீளமுள்ள இறக்கைகள்கொண்டது. அது கிழக்கு இமயமலைக் காடுகளில் 1,800 முதல் 2,800 மீட்டர் உயரமான பகுதிகளில் மட்டுமே வாழும். அது வாழ்வதற்குச் சூழல் மிகவும் முக்கியம். அதே பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை சிக்கிமில் கணிசமாக உயர்ந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

Vegetable
Vegetable

பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஏலக்காய், ஆரஞ்சு மற்றும் வேளாண் காடு வளர்ப்புப் பண்ணைகளில் ஆய்வுசெய்ததில், 286 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது. அவற்றில், மூன்றில் இரண்டு பங்கு காட்டினத்தைச் சேர்ந்தவை. ஒரு பங்கு, ஒரே மாதிரியான உணவை உட்கொள்பவை. சில பட்டாம்பூச்சி இனங்களுக்குத் தாவரங்களும், சிலவற்றுக்கு விலங்குகளின் எச்சமும்தான் உணவு. காட்டின் வளம், சுற்றுச்சூழலின் தன்மையை அளவிட உதவுவது பட்டாம்பூச்சிகளே. சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. சூழலின் தன்மையை கணிக்க உதவும் 15 வண்ணத்துப்பூச்சி இனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அவற்றில் 11 வகைகள் நீண்டகாலமாக அங்கு நிலவிவரும் வாழ்வியல் சூழலை கணிக்க உதவின. அந்த இனங்கள் மிகவும் கூர்மையான நுண்ணுணர்வு கொண்டவை. சூழலில் ஏற்படும் சிறு மாற்றம்கூட இவற்றின் வாழ்வியல் முறைகளை பாதித்துவிடும். அதனால் அவை உடனடியாக இடம்பெயர்ந்துவிடும். இவற்றை ஆராய்ந்தால், சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத் துல்லியமாக கணித்துவிடலாம்’’ என்கிறார் ஆய்வாளர் கிஷோர் ஷர்மா.

ரசாயன உரத்தைப் பயன்படுத்தினால் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதித்தது. வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை சிக்கிமில் கணிசமாக உயர்ந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

“பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். அவை மகரந்தச் சேர்க்கையை மட்டுமல்ல; உணவுச் சங்கிலியின் முக்கிய இணைப்புகளையும் உருவாக்குகின்றன. ஒவ்வோர் உயிரினத்துக்கும் இந்த கிரகத்தில் உயிர்வாழச் சம உரிமை உண்டு. அதை நாம் காப்பாற்ற வேண்டும். அவற்றின் அழிவு, அவற்றைச் சார்ந்திருக்கும் தாவரங்களின் பேரழிவுக்கு அடிகோலும். இத்தனை வகைப் பூச்சிகள், விளைநிலங்களில் உலவுவதே நல்ல சூழல் நிலவுவதற்கான அடையாளம்’’ என்கிறார் ஆச்சார்யா.

Vegetable
Vegetable

மேலும், “சிக்கிமில் பல்லுயிர்ப் பெருக்கம் பலமடங்கு உயர்ந்திருப்பதற்கும், காடுகளின் சூழல் பெருமளவில் மாறியிருப்பதற்கும், பல்வேறு பூச்சி இனங்களில் பன்முகத் தன்மை பெருகியிருப்பதற்கும் இவற்றின் பெருக்கமே சாட்சி. இந்தச் சாதனை ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட அரசின் தொடர் முயற்சியின் விளைவு. படிப்படியாக 75,000 ஹெக்டேர் சாகுபடிப் பரப்பு இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான உழவர்கள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, சூழலுக்கு உகந்த பாரம்பர்ய விவசாய முறைகளுக்கு மாறினார்கள்.

முக்கியமாக, பணப் பயிரான ஏலக்காய் உற்பத்தியாளர்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறினார்கள். கடந்த 2014-ம் ஆண்டு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அரசு முற்றிலுமாகத் தடை செய்தது. அதைப் பயன்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. சட்டத்தை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதித்தது. அதனால்தான் சிக்கிமை இந்தியாவின் 100 சதவிகித இயற்கை வேளாண் மாநிலமாக அறிவிக்க முடிந்திருக்கிறது.

உலகின் 36 மிக முக்கியமான பல்லுயிர்ப் பெருக்க இடங்களில் (Biodiversity Hotspot) சிக்கிமும் ஒன்று. அது மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள 700 வகையான வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம். இவை தவிர, இந்தியாவின் மிகவும் அரிதான 42 வகை வண்ணத்துப்பூச்சிகளில், 32 இனங்கள் சிக்கிமில் மட்டுமே இருக்கின்றன.

organic farming
organic farming

இயற்கை மற்றும் பாரம்பர்ய விவசாய முறைகளைப் பின்பற்றுவதால், அங்குள்ள விளைநிலங்கள் ரசாயன எச்சமில்லாத உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன; பல உயிரினங்களுக்குச் சிறந்த வாழ்விடங்களாகவும் இருக்கின்றன. விவசாயம், தோட்டக்கலை, வேளாண் காடுகள் வளர்ப்பு, உள்ளாட்சி மேலாண்மை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்தச் சூழல் தொடர்ந்து மேம்படும். விவசாயிகளிடம் பலபயிர் சாகுபடி ஊக்குவிக்கப்பட வேண்டும். ஒற்றைப் பயிரைவிட, கலப்புப் பயிர்கள் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு மிகவும் உகந்தவை’’ என்கிறார் ஆச்சார்யா.

தற்போது சிக்கிமில் செயல்படுத்தப் பட்டுவரும் பாரம்பர்ய வேளாண் முறைகள் பல்லுயிர் மண்டலத்துக்கு ஓர் அரணாக அமைந்துள்ளன. ஆனால், சிக்கிமைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வாழ்விடங்கள் அழிப்பு, நிலப் பயன்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள், காடுகள் சிதைந்து துண்டாடப் பட்டது, அசுர வேக நகரமயமாக்கல் போன்றவை சூழலைக் கடுமையாக பாதித்துள்ளன.

‘‘ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்தான் வண்ணத்துப் பூச்சிகளுக்கு எமன். உலகின் பல பாகங்களில் இருக்கும் விவசாயிகள் இதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள்.”

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்தான் வண்ணத்துப்பூச்சிகளுக்கு எமன். உலகின் பல பாகங்களில் இருக்கும் விவசாயிகள் இதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து மெக்ஸிகோவுக்குப் பயணமாகும் மொனார்க் வகை வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை 100 கோடியிலிருந்து மூன்று கோடியாகச் சரிந்தது. அவற்றின் வருகை குறைந்ததால் அமெரிக்காவில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள் பயணிக்கும் 3,600 கி.மீ நீளமுள்ள பாதைகளிலிருந்த பல வாழ்விடங்கள் பூச்சிக்கொல்லிகளால் அழிக்கப்பட்டு விட்டன; அதோடு காடுகளின் பரப்பு குறைந்து, அவை முட்டையிட ஏதுவாக இருந்த ஒரு பால் சுரக்கும் தாவரம் களைக்கொல்லிகளால் அழிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம்தான் அவற்றின் வருகை குறைந்ததற்குக் காரணங்கள் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக, அமெரிக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்தனர். அதன் விளைவாக வண்ணத்துப்பூச்சிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இயற்கை சார்ந்த விவசாயம், மரம் நடுதல், மண்வளத்தைப் பாதுகாக்கும் சாகுபடி முறைகள், ரசாயன உரங்களைத் தவிர்த்தல் எனத் தொடர் நடவடிக்கைகளால் சிக்கிமில் தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. பல்லுயிர்ப் பெருக்கம் சாத்தியமானது. அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றின் தாக்கம் மற்றொன்றை நிச்சயமாக பாதிக்கும். வண்ணத்துப்பூச்சிகள் பல்லுயிர்க்கான பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கின்றன. சூழலியல் இணைப்பை பலமாக்குகின்றன. நீடித்தநிலையான பாரம்பர்ய விவசாய முறைகள் ஊக்குவிக்கப்பட்டதால்தான் 120 ஆண்டுகள் கழித்து அரிய வண்ணத்துப் பூச்சிகளின் வருகை சாத்தியமானது.

சிக்கிமைத் தொடர்ந்து கர்நாடகா, மிசோரம், ஆந்திரா, இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இயற்கை விவசாய முறைகளை செயல்படுத்த தொடங்கின. ஆனால் அவற்றால் முடியவில்லை.

நினைவில் வாழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தாலும், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவை முழுமையான வெற்றியடையும். அத்தகைய ஒத்துழைப்பு முழுமையாக இருந்ததால்தான் அனைத்து உயிர்களுக்கும் சிறந்த வாழ்விடமாகச் சிக்கிமால் மாற முடிந்தது. மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்ட முடிந்தது.

தமிழக அரசும் விவசாயிகளும் சிக்கிமைப் பின்பற்ற வேண்டிய தருணமிது. அப்போதுதான் சுற்றுச்சூழலையும், எஞ்சியிருக்கும் விளைநிலங்களையும், நன்மை தரும் பூச்சியினங்களையும் அழிவிலிருந்து காக்க முடியும்.