Published:Updated:

காவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா!

சிலப்பதிகாரப் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
சிலப்பதிகாரப் பூங்கா

சங்க கால மரங்களை வளர்க்கும் காவல்துறை கண்காணிப்பாளர்!

காவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா!

சங்க கால மரங்களை வளர்க்கும் காவல்துறை கண்காணிப்பாளர்!

Published:Updated:
சிலப்பதிகாரப் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
சிலப்பதிகாரப் பூங்கா

பூங்கா

ண்ணின் வரங்களான மரங்களைக் காக்கத் தவறிவருகிறோம். மரங்களின் வகைகள் கூட இப்போதைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை.

அந்தளவுக்கு மரங்களும் இயற்கையும் அழிக்கப்பட்டு வரும் நிலையில், சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மண் சார்ந்த மரங்களைத் தேடிப்பிடித்து அலுவலக வளாகத்தில் வளர்த்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலுவலக முகப்பில் வரவேற்கும் சிலப்பதிகார காட்சியின் சிலம்பு
அலுவலக முகப்பில் வரவேற்கும் சிலப்பதிகார காட்சியின் சிலம்பு

தமிழரின் அரசியல், பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில் சங்க கால மரங்களை மீண்டும் உருவாக்கியது மட்டுமல்லாமல், நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் சிலப்பாதிகாரப் பூங்காவையும் அமைத்து தமிழுணர்வாளர்களையும் மதுரை மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் இடம்
மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் இடம்

தொன்மை நகரமான மதுரைக்குப் பல பெயர்கள் இருந்தாலும் கடம்பவனம் என்பது முக்கியமான பெயராகும். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரை நகரெங்கும் கடம்ப மரங்கள் சூழ்ந்திருக்கும் என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று கடம்ப மரம் ஒன்றைக்கூட மதுரையில் காண முடியவில்லை. இந்த நிலையில்தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மணிவண்ணன்
மணிவண்ணன்

மதுரை புதூர் அருகே மாவட்ட காவல்துறைக்குப் புதிய அலுவலகம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டபோது அதன் முன்பு 2 ஏக்கர் நிலம் வெற்றிடமாக விடப்பட்டது. மழைக்காலத்தில் தண்ணீர்த் தேங்கி குளமாகவும் கோடைக்காலத்தில் கட்டாந்தரையாகவும் எந்த உபயோகமும் இல்லாமல் இருந்து வந்தது. இதை அப்பகுதியைக் கடக்கும் மக்கள் பார்த்து வந்த நிலையில்தான், இரண்டு வருட உழைப்பில் அங்கு ஒரு சோலைவனத்தை உருவாக்கியுள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

காவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா!

கடம்பு போன்ற அரிதான மரங்களைத் தேடிப்பிடித்து இங்கு நட்டுள்ளார். கடம்பு, வாகை, மா, வாழை, பலா, புங்கை, வேங்கை, இலவம், மூங்கில், மருதம், நாட்டுஈச்சம், வெதிரம் (ஒரு வகை மூங்கில்), வசந்தராணி, திலகம், சேடல், செருந்தி, செண்பகம், கோங்கு, வகுளம் (மகிழம்) என்று இலக்கியங்களில் கூறப்பட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் நமக்கு் சங்க காலத்துக்குள் வந்துவிட்ட ஆச்சர்யம் ஏற்படுகிறது. பூங்காவில் ஆங்காங்கு சிலப்பதிகார கதைகளைச் சுருக்கமாகக் கல்வெட்டுகளாகப் பதித்து வைத்துள்ளனர். இந்தப் பூங்காவைப் பராமரிக்கும் பணியைத் தனியார் நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து ஏற்றுள்ளது.

காவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா!

“பரபரப்பான காவல்துறைப் பணிக்கு இடையில் எப்படி இதில் ஆர்வம் வந்தது?’’ என்று கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கேட்டோம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா!

“இயற்கையோடு இயைந்து வாழாததால் பல நல்ல விஷயங்களை இழந்து வருகிறோம். இயற்கையைப் பாதுகாக்காததால் மழை இல்லை; விவசாயம், தொழில் அனைத்தும் பாதிப்படைகின்றன. அதனால், பசுமையான சூழலை உருவாக்குவது அனைவரின் கடமை. நம்மால் முடிந்த அளவு பணியாற்றும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்பில் பசுமையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

பூங்கா நுழைவுவாயில்
பூங்கா நுழைவுவாயில்
வளர்ந்து வரும் மரங்கள்
வளர்ந்து வரும் மரங்கள்

மதுரைக்குப் பணியாற்ற வந்தபோது கண்ணகியும் கோவலனும் வந்த நகரத்துக்கு வருகிறோம் என்ற பெருமையோடு வந்தேன். சிறு வயதிலிருந்து சங்க இலக்கியங்கள் மீது ஈர்ப்பு இருந்ததால் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இடங்களெல்லாம் மதுரையில் இருப்பதைப் பார்த்துப் பிரமித்தேன். கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து கண்ணகி தன் கால் சிலம்பை ஏந்தி நின்ற இடம்தான் இப்போது கடச்சநேந்தல் என்று அழைக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினார்கள். கணவன் கொல்லப்பட்டற்கு நியாயம் கேட்டுக் கடச்சநேந்தலிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில்தான் இப்போது மாவட்ட காவல்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதோடுதான் அலுவலக வளாகத்தில் காலியாகக் கிடக்கும் இடத்தில் சிலப்பதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட பூங்கா அமைக்க விரும்பினேன். இதற்கு இங்குள்ள தமிழார்வளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ‘நீதி தவறக் கூடாது’ என்பதை அனைவருக்கும் அழுத்தமாகச் சொன்ன நூல் சிலப்பதிகாரம். அதனால் சிலப்பதிகாரத்திலுள்ள முக்கியமான சம்பவங்களைக் கல்வெட்டுகளாகப் பதித்தோம்.

சிலப்பதிகார கதாபாத்திரங்கள்
சிலப்பதிகார கதாபாத்திரங்கள்
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காட்சி
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காட்சி

அப்போதுதான் இதை வழக்கமான பூங்காவாக இல்லாமல், சங்க காலத்தில் மதுரை மண்ணில் என்ன வகையான மரங்கள் இருந்தனஎன்பதை ஆய்வு செய்து கடம்பு, வேங்கை, புங்கை, மருதம், இலவம், மா, பலா, வாழை என்று பலவகையான மரங்களை நட்டோம். அரிதான சில மரங்கள் நண்பர்கள் மூலம் கிடைத்தன. அலுவலக வளாகத்தில் எந்தப் பயனும் அளிக்காமல் கிடந்த நிலத்தை மதுரையின் வரலாற்றைச் சொல்லும், நீதியைச் சொல்லும் பூங்காவாக மாற்றியது மனதுக்குத் திருப்தி அளிக்கிறது. நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்ததால் மரம் வளர்ப்பு, இயற்கையைப் பேண வேண்டும் என்பதில் ஈடுபாடு உண்டு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

மர வளர்ப்புடன் பூங்கா
மர வளர்ப்புடன் பூங்கா

காவல்துறையின் இறுக்கமான அடையாளத்தை மாற்றவும், மதுரை மக்கள் குழந்தைகளுடன் வந்து நீதி, ஒழுக்கம் நிறைந்த நம் வரலாற்றையும், மரம் வளர்ப்பு, இயற்கையைப் பாதுகாப்பது பற்றியும் தெரிந்துகொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அபாயத்தால் தற்போது மக்கள் இங்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism