Published:Updated:

அரிசிச் சோறு, எள்ளுச் செடி, இலைதழைகள் போதும்... எளிய முறையில் இடுபொருள்கள் தயாரிக்கலாம்!

தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி
யற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதேசமயம், இதில் ஆர்வமுள்ள அனைவரும், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புக்குத் தேவையான கழிவுகளைப் பெற மாடுகள் வளர்ப்பதில்லை. பல்வேறு காரணங்களால், இயற்கை இடுபொருள்களை வெளியில் பணம் கொடுத்து வாங்குவதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள். இது ஒருபுறமிருக்க, ரசாயன இடுபொருள்கள் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளில் பலர், ‘நாங்களும் இயற்கை விவசாயம் செய்யணும்னுதான் நினைக்குறோம். ஆனா, எங்களால மாடு வளர்க்க முடியல. அதனால்தான் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யுறோம்’ என்கிறார்கள்.

இந்நிலையில்தான் மிகவும் எளிய முறையில் இயற்கை இடுபொருள்கள் தயாரிக்க வழிகாட்டுகிறார், திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையத்தின் முன்னாள் தலைவரும் தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியின் இணை முதல்வருமான உதயகுமார். இவர், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் வேளாண் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இயற்கை விவசாயத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது இயற்கை விவசாயிகள் பெருமளவு பயன்படுத்தும் இ.எம் என்று அழைக்கப்படும் திறன்மிகு நுண்ணுயிரி திரவத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்.

உதயகுமார்
உதயகுமார்

அதிக செலவு இல்லாமல் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, மிகவும் எளிய முறையில் வீரியமிக்க இடுபொருள்கள் தயாரிப்பு குறித்துப் பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் உதயகுமார். ‘‘இயற்கை விவசாயத்துக்குக் கால்நடைகள் வளர்ப்பு மிகவும் அவசியம். சொந்தமாக இடுபொருள்கள் தயார் செய்தால்தான், செலவுகள் குறையும். இயற்கை விவசாயத்தில் நிறைவான லாபம் ஈட்ட முடியும். ஆனால் நிறைய பேர் வெளியில் பணம் கொடுத்து, நுண்ணுயிரி திரவம், பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருள்களை வாங்குகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். அது பெரும்பாலும் வீரியமிக்கதாக இருக்காது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளையும் தாவரப் பொருள்களையும் பயன்படுத்தினால்தான் அது அந்த மண்ணில் வீரியமாகச் செயல்படும். பயிர் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அரிசிக் கஞ்சி, எள்ளுச் செடியின் தண்டுப்பகுதி, இலைதழைகளைப் பயன்படுத்தி, இடுபொருள்கள் தயார் செய்யலாம். தென் கொரியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் உள்ள விவசாயிகள், ‘இண்டிஜினஸ் மைக்ரோஆர்கானிசம்’ என்ற நுண்ணுயிரி திரவம் தயார் செஞ்சு பயன்படுத்துகிறார்கள். இதைச் சுருக்கமாக ஐ.எம்.ஓ (indigenous microorganisms) என அழைக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், மணிச்சத்து கரைசல், நொதித்த தாவரக் கரைசல் உள்ளிட்ட இடுபொருள்களையும் பயிர்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அரிசிச் சோறு, எள்ளுச் செடி, இலைதழைகள் போதும்... எளிய முறையில் இடுபொருள்கள் தயாரிக்கலாம்!

நுண்ணுயிரி திரவம் (ஐ.எம்.ஒ)

ஒரு கிலோ பாரம்பர்ய அரிசியை, குறைவான தண்ணீரில் அரைவேக்காடு வேக வைக்க வேண்டும். 12 அங்குலம் நீளம்,8 அங்குலம் அகலம், 4 அங்குலம் உயரம் கொண்ட பிளாஸ்டிக் டிரேவில் நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் டிரேவுக்குப் பதிலாக, மண்ணால் அல்லது மரத்தால் ஆன தொட்டியைப் பயன்படுத்தினால், நுண்ணுயிரிகள் அதிகளவில் ஈர்க்கப்படும். தென்கொரியாவில் ‘சிடார்’ என்ற மரத்தைப் பயன்படுத்துகிறார்கள். சோறு நிரப்பப்பட்ட தொட்டியை, சுத்தமான காடா துணியால் நன்றாக இறுகக் கட்டி, தோட்டத்தில் இலைதழைகள் உள்ள இடத்தில் மண்ணில் குழி தோண்டிப் தொட்டியின் அளவுக்கு ஏற்றவாறு வைக்க வேண்டும். மூங்கில் புதர்கள், கறையான் புற்றுகள் உள்ள இடத்தில் புதைத்தால் மிகவும் சிறப்பு.

அரிசிச் சோறு, எள்ளுச் செடி, இலைதழைகள் போதும்... எளிய முறையில் இடுபொருள்கள் தயாரிக்கலாம்!

சோறு நிரப்பப்பட்ட தொட்டியைப் வைத்ததும் அதன் மீது இலைதழைகளைப் போட்டு மூடி வைக்க வேண்டும். மழைக்காலமாக இருந்தால், தண்ணீர் இறங்காமல் இருக்க, பிளாஸ்டிக் விரிப்பு போட்டுப் பாதுகாப்பாக மூட வேண்டும். மழை மற்றும் குளிர்காலமாக இருந்தால், செயல்பாடுகள் சற்று மெதுவாக நடக்கும். அடுத்த 7 நாள்களில் தொட்டியை வெளியில் எடுக்க வேண்டும். மற்ற காலமாக இருந்தால், 4 நாள்களில் வெளியில் எடுக்கலாம். இதில் பாக்டீரியா படலம் உருவாகி இருக்கும். இதை மண்பானையில் போட்டு, அதோடு ஒரு கிலோ வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை (குளிர் மற்றும் மழைக்காலம் என்றால் கால் கிலோ அதிகமாகச் சேர்க்க வேண்டும்) கலந்து, துணியால் வேடு கட்டி மூடி வைக்க வேண்டும்.

அடுத்த 3 முதல் 5 நாள்களில் நுண்ணுயிரி தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி திரவம் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். நொதிகள், என்சைம்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளால், பயிரின் வளர்ச்சி தூண்டப்படும். இதனால் பூப்பூக்கும் தன்மை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கூடுதல் மகசூல் கிடைக்கும். எல்லாப் பயிர்களுக்கும் இதைப் பயன் படுத்தலாம். பயிர் நடவு செய்த 15 முதல் 20 நாள்களில் இதைத் தெளிக்கலாம். 10-15 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை இதுபோல் தெளிக்கலாம்.

அரிசிச் சோறு, எள்ளுச் செடி, இலைதழைகள் போதும்... எளிய முறையில் இடுபொருள்கள் தயாரிக்கலாம்!

நொதித்த தாவரக் கரைசல்

மழைக்காலம் முடிந்து, வசந்தகாலம் தொடங்கியதும், தாவரங்கள் செழிப்பாக இருக்கும். அப்போது ஹார்மோன்கள், தாதுக்களின் செயல்பாடுகள் வீரியமாக இருக்கும். இது போன்ற காலங்களில் சூரிய உதயத்துக்கு முன்பாக, எல்லா மரங்களின் இலைகளையும் களைச்செடிகளையும் இதற்குப் பயன்படுத்தலாம். குறிப்பாக, பார்த்தீனியம் செடிகளிலுள்ள கொழுந்து இலைகள் மிகவும் ஏற்றது. பார்த்தீனியம் இலைதழைகளில் மண் ஒட்டியிருந்தால் கைகளால் துடைத்துக்கொள்ள வேண்டும். துண்டு துண்டாக நறுக்கப்பட்ட 5 கிலோ இலை தழைகளுடன், ஒரு கிலோ வெல்லம் கலந்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். இதை மண் பானைக்குள் போட்டு, அதன் மீது காற்று புகாதவாறு கல் வைத்து, காடா துணியால் மண்பானையின் வாயிலை கட்டி வைக்க வேண்டும். 4 முதல் 7 நாள்களில் இதில் நொதித்தல் ஏற்பட்டு, தாவரக் கரைசல் திரவம் தயாராகிவிடும். அதில் 100 மி.லி எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம். பயிர்களில் பூப்பூப்பதற்கு முன்பாக, மொட்டுக் கட்டும் தருணத்தில் இதைத் தெளிக்கலாம். 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். இது ஒரு அருமையான சத்து டானிக். சத்து குறைபாட்டால், செடிகளின் வளர்ச்சி குன்றி, பூக்கள் சிறுத்து இருந்தால், இந்த டானிக் அதைச் சரி செய்துவிடும்.

மணிச்சத்து கரைசல்

பயிர்களின் வேர் வளர்ச்சிக்கும், செல்களின் பெருக்கத்துக்கும் மணிச்சத்து மிகவும் அவசியம். மணிச்சத்து குறைபாடு இருந்தால், வேர்கள் மண்ணில் உள்ள சத்துகளை எடுக்காது. வறட்சியைத் தாங்காது. எள்ளுச் செடியின் தண்டுப்பகுதியில் மணிச்சத்து அதிகமாக இருக்கிறது. அறுவடைக்குப் பிறகு, எள் பிரித்தெடுக்கப்பட்ட செடிகளின் தண்டுப்பகுதியைப் பயன்படுத்தி மணிச்சத்து கரைசல் தயார் செய்யலாம். 5 கிலோ சாம்பல் கிடைப்பதற்குத் தேவையான அளவு காய்ந்த எள்ளுச் செடிகளைத் தீ வைத்து எரிக்க வேண்டும். நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது, தீயை அணைத்துவிட வேண்டும். நெருப்பு அணைந்த பிறகு கரியும் சாம்பலுமாகக் கிடைக்கும். இதை ஒரு காடா துணியில் இறுகக் கட்டி வைக்க வேண்டும். ஒரு பானையில் 5 லிட்டர் தண்ணீர் நிரப்பி, அதில் சாம்பல் கட்டப்பட்ட துணி மூட்டையை இறக்க வேண்டும். 5 முதல் 7 நாள்களில் பாஸ்பரஸ் கனிமங்கள், தண்ணீரில் முழுவதுமாக இறங்கி, மணிச்சத்து கரைசல் தயாராகிவிடும். பயிர் நடவு செய்யப்பட்ட 10 நாள்களில், 100 லிட்டர் தண்ணீரில் மூன்றரை லிட்டர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பூப்பூக்கும் தருணத்திலும் இக்கரைசலைத் தெளிக்கலாம்’’ என்றவர், ‘‘மேலே சொன்ன கரைசல்களை விதைநேர்த்திக்கும் பயன்படுத்தலாம். அடியுரமாக எருவுடன் கலந்தும் பயன்படுத்தலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, முனைவர் உதயகுமார், செல்போன்:94425 42915.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு