அநியாயமா இருக்கே? இதை யார்கிட்டப் போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள் அநியாயக்காரர்களைத் தோலுரிப்போம்...

விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர்களின்றி, நேரடியாகப் பொதுமக்களிடம் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் 1999-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சியில் தமிழகமெங்கும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. மாநிலத்திலேயே முதல் முறையாக மதுரை அண்ணா நகரில் 14.11.1999 அன்று உழவர் சந்தை திறக்கப்பட்டது. பிறகு, பல இடங்களில் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டன. இன்றைக்கும் பல இடங்களில் உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் 2009-ம் ஆண்டு உழவர் சந்தை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் கிடந்தது. பல்வேறு தரப்பில் அழுத்தம் இருந்தும் சிங்கம்புணரி உழவர் சந்தை திறக்கப் படவில்லை. விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு வந்து சாலையோரமாக விற்பனை செய்து வந்தார்கள். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி 25-ம் தேதி உழவர் சந்தை திறக்கப்பட்டது.
உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய ஆர்வமாக விவசாயிகள் வந்தார்கள். ஆனால், சாலையோர வியாபாரிகளின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் தெருவோரம் காய்கறிகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அதிகாரிகள் அலட்சியத்தால் சிங்கம்புணரி உழவர் சந்தைக்கு மீண்டும் பூட்டுப்போடப் படுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய தமிழகப் பாரம்பர்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் அருணாச்சலம், “சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்துல பல கிராமங்கள் விவசாயத்தை நம்பிதான் இருக்குது. விவசாயிகளே நேரடியா விற்பனை செய்ற இடம் உழவர் சந்தைதான். விவசாயிககிட்ட இருந்து வியாபாரிங்க ஒரு விலைக்கு வாங்கி, லாபம் வெச்சுதான் நுகர்வோருக்கு விற்பனை செய்றாங்க. ஆனா, உழவர் சந்தையில விவசாயிகளே விற்பனை செய்றதால, வியாபாரிக வைக்குற லாபத்துல குறிப்பிட்ட சதவிகிதம் விவசாயிக்குக் கூடுதலா கிடைச்சிடுது. உதாரணமா, சந்தையில கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகுற வெண்டைக் காயை, விவசாயிககிட்ட 10 ரூபாய்க்குத்தான் வியாபாரிங்க வாங்குவாங்க. ஆனால், உழவர் சந்தையில விவசாயி நேரடியா விற்பனை செய்யும்போது, கிலோ 15 ரூபாய் விலையில விற்பனை செய்றாரு. அவருக்கு கிலோவுக்கு 5 ரூபாய் கூடுதலாக் கிடைக்குது. நுகர் வோருக்கும் 5 ரூபாய் குறைவா கிடைக்குது. ஆக, உழவர் சந்தையால விவசாயி, நுகர்வோர் ரெண்டு பேருக்கும் லாபம்தான். அதனாலதான் இங்க இருக்க உழவர் சந்தையைத் திறந்து விடணும்னு பல போராட்டங்கள் பண்ணினோம். ஒரு கட்டத்துல உழவர் சந்தையைத் திறந்து விட்டுட்டாங்க. ஆனா, இப்ப உழவர் சந்தை திறந்தும் பயன் இல்லாமல் கிடக்குது. உள்ள 20 கடைகளுக்கு மேல இருக்கு. ஆனா, ரெண்டு மூணு விவசாயிகதான் கடை போடுறாங்க. சாலையோரங்கள்ல வியாபாரிகள் கடை போட்டுக்கிறாங்க. அதனால பொதுமக்கள் யாரும் உழவர் சந்தைக்கு வர்றதில்ல.
உழவர் சந்தையில் முன்பதிவு செய்த விவசாயிகளும், வேற வழியில்லாம சாலையோரங்கள்ல உக்காந்து கிட்டுதான் கொண்டு வர்ற காய்கறிகளை வித்துட்டுப் போறாங்க. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுறதுதான் மிச்சம். உழவர் சந்தை, தி.மு.க ஆட்சிக்காலத்துல வந்த திட்டம்ங்கிறதால சிங்கம்புணரி உழவர் சந்தை கிடப்பில் போட்டுட்டங்க. விவசாயிகள் விளைபொருளை விற்பனை செய்றதுக்காக இடவசதியோடு ஒரு வளாகம் இருந்தும் சாலையோரங்கள்ல விற்பனை செய்றாங் கன்னா அதுக்கு காரணம் பேரூராட்சி அதிகாரிகளோட அலட்சியம்தான். அவங்கதான், சாலையோரங்கள்ல கடைபோடுறதுக்குப் பலருக்கும் அனுமதிக் கொடுத்து உழவர் சந்தையை முடக்கப் பார்க்குறாங்க.

விவசாயிகள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் சந்தையை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம், வேளாண் துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்’’ என்றார்.
உழவர் சந்தையில் கடை போட்டிருந்த இளம் விவசாயி அருண்,
``கண்ணமங்கலம்பட்டிதான் என்னுடைய கிராமம். உழவர் சந்தை திறந்தப்ப, பத்து பதினைந்து பேர் கடை போட்டிருந்தோம். இப்ப ரெண்டு பேர் மட்டும்தான் கடை போட்டிருக்கோம். சாலையில் வியாபாரம் செய்யுற இடைத்தரகர்கள் போட்டியைச் சமாளிக்க முடியாம பலபேரு சாலைக்கே போயிட்டாங்க. உள்ள ரெண்டு கடை மட்டுமே இருக்குறதால, பொதுமக்களும் சாலையோரங்கள்ல காய்கறிகளை வாங்கிட்டுப் போயிடுறாங்க. உழவர் சந்தைக்கு யாரும் வர்றதில்ல.
உழவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை முழுமையா உழவர்களுக்குப் பயன்படணும்னா சாலையோரங்கள்ல கடைபோடுற விவசாயிகள் மறுபடியும் உள்ளே வந்து விற்பனை செய்ற சூழலை அதிகாரிகள் உருவாக்கித் தரணும். கடைகள் அதிகமா இருந்தாத்தான் பொதுமக்களும் உள்ளே வருவாங்க’’ என்றார்.
இதுகுறித்துச் சிங்கம்புணரி தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், ``சிங்கம்புணரி பகுதியில தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை கட்டி முடித்தும் கிடப்புல போட்டுட்டாங்க.
இப்பதான் வேண்டா வெறுப்பா உழவர் சந்தையைத் திறந்திருக்காங்க. அதுவும் நீதிமன்றத்துக்கு வழக்கு போகவும்தான் அவசரம் அவசரமா திறந்தாங்க. ஆனால், உழவர் சந்தை திறந்தும் பிரயோசனம் இல்ல. விவசாயிகள் உள்ளே வந்து விற்பனை செய்ற மாதிரியான நிலமையை அதிகாரிகதான் உருவாக்கிக் கொடுக்கணும்’’ என்றார்.
தாமதமாகத்தான் தெரியும்!
இதுகுறித்துப் பேசிய திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ பெரிய கருப்பன், ``கலைஞர் கொண்டு வந்த திட்டத்தைப் பல வருடங்களாக முடக்கிப்போட்டனர். தற்போது ஆரவாரம் இல்லாமல் திறந்துள்ளனர். உழவர் சந்தை திறந்த தகவல்கூட எனக்குத் தாமதமாகத்தான் தெரியும். அதிகாரிகள் இதுகுறித்து எந்தத் தகவலும் என்னிடம் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதி என்ற முறையிலாவது எனக்குத் தகவல் சொல்லி இருக்கலாம். இருந்தபோதிலும் தற்போது திறக்கப்பட்டது நல்ல விஷயம்தான். உழவர் சந்தைக்கு, உழவர்களையும் மக்களையும் வரவழைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசுகிறேன்” என்றார்.

விவசாயிகள்
உழவர் சந்தையில்தான்
கடைபோட வேண்டும்!
மக்கள் பிரதிநிதிகள் கருத்து இப்படி இருக்க, அதிகாரிகள் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக வேளாண் வணிகத் துணை இயக்குநர் சுரேஷிடம் பேசினோம்.
``உழவர் சந்தை திறந்து நல்லபடியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மக்களிடமும் விவசாயிகளிடமும் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு செய்துவருகிறோம். உழவர் சந்தைக்குள் 20 கடைகள் உள்ளன. விவசாயிகள் கூடுதலாகக் கடை கேட்டால் கட்டித்தரவும் தயாராக இருக்கிறோம். கழிப்பறை வசதிகள்கூட உழவர் சந்தையில் உள்ளது. விவசாயிகளுக்குத் தராசு, அடையாள அட்டை, போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் இங்கு கடை போட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். சாலை ஓரத்தில் கடை போடும் விவசாயிகள் உழவர் சந்தையில் கடைபோட வேண்டும்” என்றார்.
விளம்பரம் செய்துள்ளோம்!
சாலையோரங்களில் கடை போடுவதால் சில தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வருவாய்க் கிடைக்கிறது. அதனால்தான் பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதுகுறித்துச் சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசினோம். ``சாலையோரத்தில் கடைபோடும் நபர்களை உழவர் சந்தையில் கடைபோடச் சொல்லி விளம்பரம் செய்துள்ளோம். விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து உழவர் சந்தைக்குச் செல்ல வலியுறுத்துகிறோம். அதிரடியாக அவர்களைச் சந்தையில் கடை போடச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் மாற்று விளைவுகள் வந்து சேரும். எனவே, முறையாக அவர்கள் அங்கு செல்லக் காவல்துறை மூலம் தகவல் அளித்து வருகிறோம்’’ என்றார்.

அரசு,
அலட்சியம்,
அநியாயம்...
அடுத்தகட்டம்!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, இளனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார், தங்களது பகுதியில் விதைநெல் குளறுபடியால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துத் தனது ஆதங்கத்தைக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தார். இப்பகுதி விவசாயிகள, சம்பாப் பட்டத்தில் தனியார் கடைகளில் வாங்கி விதைப்பு செய்த ஆர்.என்.ஆர்-25048 என்ற நெல் ரகம் முன்கூட்டியே பூ பூத்ததால், மகசூல் இழப்பைச் சந்தித்தார்கள். இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அதைத் தொடர்ந்து நம்மைத் தொடர்புகொண்டு பேசிய கோயம்புத்தூரில் உள்ள விதைச் சான்று இயக்குநர் சுப்பையா, இது தொடர்பாக உடனடியாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்’’ எனத் தெரிவித்திருந்தார். அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். ``கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடுங்க’’ என்றார். அதன் பிறகு, பலமுறை தொடர்புகொண்டும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
விவசாயி அசோக்குமாரிடம் பேசியபோது, ``கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமேஷ் எங்களை அழைத்து விசாரணை நடத்தினார். ஆனா, இதுவரை நிவாரணம் கிடைக்கலை’’ எனத் தெரிவித்தார். அமைச்சர் சொன்னவுடன் விசாரணைக் குழு, அது இதுவென வேகம் காட்டிய அதிகாரிகள், அதற்குப் பிறகு சுணக்கம் காட்டுகிறார்கள். விவசாயிகள் நலனுக்காகப் பாடுபடும் அரசு என்பது இதுதானோ?