Published:Updated:

மண் பேசும் மக்களிசைப் பாடகரின் இயற்கை விவசாயம்!

வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி

முயற்சி

மண் பேசும் மக்களிசைப் பாடகரின் இயற்கை விவசாயம்!

முயற்சி

Published:Updated:
வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்களிசைப் பாடகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதி. சினிமா பாடல்கள், கச்சேரிகள் எனப் பல்வேறு பரபரப்பு வாழ்க்கைக்கு இடையில், சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அசத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கலபம் கிராமத்திலிருக்கிறது செந்தில் கணேஷின் தோட்டம். ஒரு காலைப்பொழுதில், அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர் நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கலபம் கிராமம்தான். விவசாயக் குடும்பம். எங்களுக்கு இங்க ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. பூர்வீக பூமி. சின்ன வயசிலருந்தே விவசாயத்து மேல ரொம்பவே ஆர்வம். காலையில சீக்கிரமாகவே எந்திரிச்சு அப்பாகூட கொல்லைக்குப் போயிடுவேன். அங்க அப்பாவுக்குக் கூடமாட இருந்து எல்லா வேலைகளையும் செய்வேன். புதுக்கோட்டையைப் பொறுத்தவரைக்கும் ‘வானம் பார்த்த பூமி’ன்னுதான் சொல்லணும். தஞ்சாவூர் மாதிரி முப்போகமும் இங்க பயிர் செய்ய முடியாது. ‘பருவத்து’க்குத் தகுந்த மாதிரி நிலக்கடலை, எள்ளு எது வருமோ அதைப் பயிர் செஞ்சிக்குவோம்.

தொட்டியில் உற்சாகக் குளியல்
தொட்டியில் உற்சாகக் குளியல்

அப்ப எங்ககிட்ட மாடுக இருந்துச்சு. உழவு பண்றதுலயிருந்து, தண்ணீர் இறைக்கிறது வரைக்கும் எல்லாத்துக்கும் மாடுகளதான் பயன்படுத்துவோம். பெரும்பாலும் நான்தான் கொல்லைக்கு மாடுகளை ஓட்டிக்கிட்டுப் போவேன். எங்க கொல்லையைச் சுத்திலும் ஏதோவொரு பயிர் பண்ணியிருப்பாங்க. குறிப்பா, வரப்பு ஓரத்துலதான் உளுந்து, தட்டைப்பயறுன்னு தானியங்களைப் பயிர் செஞ்சிருப்பாங்க. நாம வரப்பு ஓரத்துலதான், மாட்டை ஓட்டிக்கிட்டுப் போகணும். அப்படி ஓட்டிக்கிட்டுப் போறப்ப, மாடுங்க வரப்புல வாய் வச்சிக்கிட்டே வரும். அதைப் பார்த்த கொல்லைக்காரங்க கண்டபடி திட்டித் தீத்திருவாங்க. எல்லாத்தையும் காதுல வாங்கிக்கிட்டு சமாளிச்சு மாடுகளை ஓட்டி கிட்டு வர்றதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவோம்.

‘பள்ளி விடுமுறை’ விட்டுட்டா போதும். காலையிலயிருந்து சாயந்தரம் வரைக்கும் கொல்லையிலயேதான் கிடப்பேன். மாட்டுக்குப் புல் அறுக்குறது, களை எடுக்கிறது, கடலைப் பறிக்கிறதுன்னு வேலை இருந்து கிட்டே இருக்கும். அப்ப எல்லாம் பருவ மழை சரியா பெய்ஞ்சிடும். குளம், கண்மாய் எல்லாம் தண்ணீர் நிரம்பியிருக்கும். அப்போ மானாவாரியிலேயே, நெல், கடலை, சோளம்னு நடவு செஞ்சு நல்ல மகசூல் பார்த்திடுவோம். நல்ல வருமானம் கிடைக்கும்’’ என்றவரின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்.

தென்னை
தென்னை

‘‘கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சதுக்கு அப்புறமே எனக்கும் விவசாயத்துக்குமான இடைவெளி உண்டாயிடுச்சு. தொடர்ந்து, கல்யாணம், கச்சேரி வாய்ப்புகள்னு அடுத்தடுத்து வந்ததால, விவசாயத்துக்குப் பெரிய இடைவெளி உண்டாகிப்போச்சு. அதே நேரத்துல கடுமையான வறட்சி, குடும்ப வறுமை. விவசாயத்துக்குப் போதுமான தண்ணி இல்ல. போர் போடுறதுக்கும் வசதி இல்ல. அப்பாவால முடியல. கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கும் மேலா பெருசா எதுவும் செய்யாம கொல்லையைச் சும்மாவே போட்டு வெச்சிட்டோம்.

ஆனா, இன்னைக்கு இயற்கை விவசாயம் செய்றதுக்கான தேவை வந்திருச்சு. கிராமங்கள்ல இருக்க மக்களே பாரம்பர்யமான உணவுமுறைகளை மறந்துபோய் ‘பாஸ்ட்புட்’ கலாசாரத்துக்கு மாறிகிட்டு இருக்காங்க. இதனால, எத்தனையோ நோய்கள், பிரச்னை கள் வர்றதை தினமும் பார்க்கிறோம். ரசாயனம் இல்லாத இயற்கையில் விளைஞ்ச காய்கறிகளை வாங்குறதே இன்னைக்குப் பெரும் சவாலா இருக்கு. அது 100 சதவிகிதம் இயற்கையில விளைஞ்சதாங்கிறது கேள்விக்குறியா இருக்கு. நாம சாப்பிடுறது பெரும்பாலும் நஞ்சுதான்னு புரிஞ்சது.

நெல் வயல்
நெல் வயல்

இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சிக்க நம்மாழ்வார் புத்தகங்களைப் படிச்சு, அவரோட வீடியோ பேச்சுக்களைக் கேட்ட பிறகு, இனி கண்டிப்பா நாம எந்தச் சூழல்லயும் விடாம விவசாயத்தைச் செய்யணும்கிற வைராக்கியம் வந்திச்சு. அதுக்கப்புறமாதான், இப்போ ரெண்டு, மூணு வருஷமா திரும்பவும் கொல்லைக்கு வந்து, தொட்டி, கேணி எல்லாம் எடுத்துக் கட்டி, போர் போட்டு, முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துல இறங்கியிருக்கேன்” என்றபடியே தொட்டிக்கு அருகே இருந்த மா மரத்திலிருந்த மாங்காயைப் பறித்து நம் கையில் கொடுத்தவர், சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘இந்தத் தடவை நல்ல மழை பெய்ஞ்சு குளம் எல்லாம் முழுசா நிரம்பிக்கிடக்கு. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கு. இந்த வருஷம் கோடை சாகுபடி நல்லாயிருக்கும். போன வருஷம் ஒரு ஏக்கர் முழுசும் நிலக் கடலைப் போட்டிருந்தோம். கிட்டத்தட்ட 15 மூட்டை வரையிலும் மகசூல் கிடைச்சது. 6 மாசத்துக்கு வர்ற மாதிரி எண்ணெய் ஆட்டி வெச்சுக்கிட்டோம். அக்கா, தங்கச்சிகளோட பொறந்ததால அவங்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கிட்டோம். அது போக, கொஞ்சம் சேமிச்சு வெச்சு கேட்கிறவங்களுக்குக் கொடுக்கிறேன். சம்பா பட்டத்துல 50 சென்ட்ல நெல் நடவு செஞ்சிருந்தேன். அதுலயிருந்து கிட்டத்தட்ட 18 மூட்டை வரையிலும் மகசூல் கிடைச்சது. அதை அப்படியே அரைச்சு சாப்பாட்டுக்கு வெச்சுக்கிட்டோம்.

வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி
வயலில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி


20 சென்ட்ல வெண்டைக்காய், கத்திரிக் காய், கொத்தவரங்காய், கீரை வகைகளப் போட்டோம். வீட்டுத் தேவைக்கு எடுத்துக் கிட்டு, பக்கத்து வீட்டுக்காரங்க, சொந்தக் காரங்களுக்கு அவங்க வெளியில வாங்குற விலையைவிட கொஞ்சம் கம்மியான விலைக்கே கொடுத்தோம். கொல்லையில காய்க்கிற காய்ங்க எல்லாம் சுவையா இருக்கிறதால, தேடி வந்து காய்கறிகளைக் கேட்கிறாங்க. அதுல வர்ற வருமானத்தைப் பெருசா பார்க்கிறதில்ல. நம்ம கொல்லையில விளைஞ்ச காய்கறின்னு பறிச்சு கொடுக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். நஞ்சில்லா காய்கறிகளை மக்களுக்குக் கொடுக்கிறதுல ஒரு ஆத்ம திருப்தி இருக்கு.

பக்கத்துல இருக்க வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல தேவையான விதைகளை வாங்கிக்கிட்டு வந்து நடவு செஞ்சிக்குவோம். இயற்கை விவசாயிகள்கிட்டயிருந்து எரு, மண்புழு உரம், பஞ்சகவ்யான்னு தேவையான இடுபொருள்கள வாங்கிக்கிறோம். எங்கப் பகுதியில இருக்க இயற்கை விவசாயிங்களை அணுகி தேவையான ஆலோசனைகளைக் கேட்டுக்குவேன்.

குறைஞ்சபட்சம் 5 ஏக்கர்ல நிலம் வாங்கி நடுவுல ஒரு குளம் வெட்டி, சுற்றிலும் மரங்களை நடவு செஞ்சு பறவைகளுக்குக் கூடு அமைச்சுக் கொடுக்கணும்.

திரும்பவும் முழுக்க, முழுக்க இயற்கை விவசாயம் செய்யலாம்னு அப்பா கிட்ட சொன்னப்ப, அப்பாவுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துச்சு. இயற்கை விவசாயத்துல சுத்தமா மகசூலே இருக்காது. நமக்கு நஷ்டம்தான் ஏற்படும்னு பலரும் கருத்து சொன்னாங்க. மகசூல் குறைஞ்சு, நட்டமே ஏற்பட்டாலும் பரவாயில்ல. கிராமத்துலயாவது நஞ்சில்லா காய்கறிகளை, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடணும்னு வைராக்கியமா இருந்தேன். நஷ்டம் வந்தாலும் பரவாயில்லைன்னுதான் மொதல்ல காய்கறி களைப் போட்டேன். கொஞ்சம் மகசூல் குறைவுதான். ஆனா, இதுவரைக்கும் எனக்கு எந்த நஷ்டமும் இல்ல.

இப்ப பக்கத்துல இருக்கவங்களோட ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பார்க்குறோம். ஏற்கெனவே இருக்க நிலத்தோட சேர்த்து இப்ப 2 ஏக்கராக ஆகிருச்சு. இந்த வருஷம் ஒரு ஏக்கர்ல கடலை, உளுந்து, கேப்பை (கேழ்வரகு) மூணையும் நடவு செஞ்சிருக்கேன். அரை ஏக்கர்ல காய்கறி சாகுபடி செய்யப்போறேன். அது இல்லாம, எங்க நிலத்தைச் சுத்திலும் 50 தென்னை மரங்களை நடவு செஞ்சிருக்கேன். நடவு செஞ்சு வெச்சிருக்குற மா, பலா மரங்கள் எல்லாம் பருவத்துல பழங்களைக் கொடுத்துக்கிட்டு இருக்கு. நானும் என் மனைவியும் பெரும்பாலும், சினிமா வாய்ப்பு, கச்சேரின்னு போயிடுறோம். அந்த சமயங்கள்ல அப்பாதான் விவசாயத்தைப் பார்த்துக்கிறாரு. எப்பயெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ உடனே கிராமத்துக்குக் கிளம்பி வந்துடுவேன். ஊருக்கு வந்திட்டா கொல்லையிலயேதான் கெடப்பேன்’’ என்றவர் நிறைவாக,

நெல் வயல்
நெல் வயல்

‘‘இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்தணும். எங்க பகுதியில பாரம்பர்ய நெல் ரகங்கள் இயற்கை விவசாயத்துல எல்லாம் வராதுன்னு ஒரு மாயபிம்பம் இருக்கு. அடுத்த சம்பா பட்டத்துல நேரடியா இருந்து தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா மாதிரியான பாரம்பர்ய நெல் ரகங்களை வாங்கி நடவு செய்யணும். கண்டிப்பா, நல்ல மகசூல் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. வரும் காலத்துல குறைஞ்சபட்சம் 5 ஏக்கர்ல நிலம் வாங்கி நடுவுல ஒரு குளம் வெட்டி, சுற்றிலும் மரங்களை நடவு செஞ்சு பறவைகளுக்குக் கூடு அமைச்சுக் கொடுக்கணும். அதோட, பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தணும். அதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை” என்றபடி விடைகொடுத்தார் செந்தில் கணேஷ்.

- வருவார்கள்

போராட்ட பாட்டு!

‘‘நெடுவாசல் ‘ஹைட்ரோ கார்பன்’ போராட்டத்தைக் கண்டிப்பா எங்களால மறக்க முடியாது. நெடுவாசல் போராட்டத்துல அந்தப் பிரச்னைகளை மையப்படுத்தி அன்னைக்கு நானும், என் மனைவி ராஜியும் சேர்ந்து ஒரு பாட்டு எழுதிப் பாடுனோம். அந்தப் பாட்டு பட்டித் தொட்டியெல்லாம் பரவிருச்சு. அதுக்கப்புறம்தான் எங்களுக்குப் பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைச்சது. அப்ப மேடைப்பாடகனா, விவசாயியாகத்தான் அந்தப் போராட்டதுல கலந்துகிட்டேன்” என்கிறார் செந்தில் கணேஷ்.