Published:Updated:

``கால் படி பதநி 20 ரூபா... பனையோலை வாசம் போனஸ்!''- பனைத் தொழிலாளர்கள் விவரிக்கும் வாழ்க்கைமுறை

பதநீர் வியாபாரம்
பதநீர் வியாபாரம்

"வாசனையும், ருசியும் பதநியோட தரத்த சொல்லிடும். ஆனா எங்கோ யாரோ செய்யும் தவறால எல்லோரும் பாதிப்படையுறோம். இப்போ கோடை வெயிலைச் சமாளிக்கப் பலரும் பதநிய விரும்பிக் குடிக்கிறாங்க."

நம் மாநிலத்தின் மரம் என்ற பெருமையுடைய பனைமரம் பல இடங்களில் அழிக்கப்பட்டுவிட்டது. சமூக ஆர்வலர்களின் எழுச்சியால் தற்போது பனைவிதைகள் நடப்பட்டுவருகின்றன. என்றாலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மாறவில்லை. பனை மரத்தை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் 3 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஒரு காலத்தில் தமிழகம் முழுக்கப் பரவிக்கிடந்த பனைமரங்கள், தற்போது சுமார் 5 கோடிக்கும் குறைவாகவே எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பதநீர் எடுக்கப் பானைகள்
பதநீர் எடுக்கப் பானைகள்

பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பல்வேறு பயன்களைத் தருவதால் அது `பூலோகத்தின் கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. இந்த நிலையில், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரை படிக் கணக்கில் வியாபாரம் செய்துவரும் பனைத் தொழிலாளர்களை, சிவகங்கை மாவட்டம் கரும்பாவூர் பகுதியில் சந்தித்தோம். சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலை ஓரம் பனை ஓலையில் தற்காலிகக் குடிசை அமைத்து வசித்து பதநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த லெட்சுமி அம்மா, "எங்களுக்குச் சொந்த ஊர் பரமக்குடி பக்கம் பெருமாள்கோயில். பாரம்பர்யமா பனைத்தொழில்தான் எங்களுக்கு. என் வீட்டுக்காரர், மகன்கள், உறவினர் என்று எல்லாருக்கும் இதுதான் பிரதானம்.

ஆண்டுதோறும் கோடைக்கு சிவகங்கை பக்கம் வந்து மரங்கள் குத்தகை எடுத்து பதநி வியாபாரம் செய்வோம். இந்த வருஷம் எங்க ஊர்ல இருந்து ரெண்டு குடும்பங்கள் சிவகங்கை வந்திருக்கோம். எங்க கிராமத்தில் உள்ள பலரும் பல இடங்களுக்குத் தற்காலிகமா இடம் பெயர்ந்து இந்த வேலையைச் செய்வாங்க. சிவகங்கை கரும்பாவூர் பக்கத்துல 45 மரங்களுக்கு மேல குத்தகை எடுத்திருக்கோம்.

லெட்சுமி வியாபாரத்தில்
லெட்சுமி வியாபாரத்தில்

தினமும் 70 முதல் 90 லிட்டர் வரை பதநி இறக்குறோம். பசங்க மரம் ஏறிக் கொடுக்கும் பதநிய கால் படி 20 ரூபாய்னு விக்குறேன். சுத்தமான முறையில பதநி வியாபாரம் செய்றோம். ஆனா சிலர், `இது கலப்படமா, உண்மையான பதநியா?'னு கேட்டுக் கேட்டுத்தான் குடிப்பாங்க. வாசனையும், ருசியும் பதநியோட தரத்த சொல்லிடும். ஆனா எங்கோ யாரோ செய்யும் தவறால எல்லோரும் பாதிப்படையுறோம். இப்போ கோடை வெயிலைச் சமாளிக்கப் பலரும் பதநிய விரும்பிக் குடிக்கிறாங்க.

கால் படி 20 ரூபாய் என்பது அதிகம்தான். ஆனா, மரத்துல ஏறி, இறங்கி, வேலை செஞ்சு, குத்தகை பணம் கட்டி, சாப்பாடு செலவு, போக்குவரத்துச் செலவுனு எல்லாம் போச்சுனா லாபம் நிக்காது. வேலைபார்த்த கூலிதான் கிடைக்கும். பனையோலை வாசத்தோடு பதநிய நீங்க குடிக்கும்போது... எங்க கஷ்டத்தையும் கொஞ்சம் நெனச்சுப் பார்த்துக் காசு கொடுங்க. ஏதோ ஓரளவுக்கு வருமானம் கிடைப்பதால ஆடு, கோழினு எல்லாத்தையும் வேலைசெய்யும் இடத்துக்கே கொண்டு வந்திடுவோம்.

பதநீர்
பதநீர்

எல்லாரும் பதநிய காசுக்கு வாங்கிக் குடிப்பாங்க. சில போலீஸ்காரங்க மட்டும் காசு கொடுக்காம கைய ஆட்டி டாடா காமிச்சுட்டுப் போய்ருவாங்க. ஈரக்குலை நடுங்க மரம் ஏறி, இறங்குறவங்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம். எங்க உழைப்புக்கு மதிப்புக் கொடுங்கனுதான் கேக்குறோம்...'' என்றார்.

மரம் ஏறும் இளைஞர் கோவிந்தராஜன், "இந்த வருஷம் ஊரடங்கு காரணமா வியாபாரம் டல்தான். ஆனா, வந்ததுக்குப் போதுமான வருமானத்தைக் கொஞ்சம் பார்த்தாச்சு. ரெண்டு குடும்பங்கள் வந்திருக்கிறதால, கிடைக்கும் வருமானத்தைப் பிரிச்சுக்குவோம். ஒரு பானை பதநி இறக்க மூணு முறை ஏறி, இறங்கணும். மூணு முறை சீவிவிட்டாதான் பால் சரியா வடியும். சுண்ணாம்பு தடவிய பானையில முழுமையா சேகரமான பதநிய அதிகாலையில எடுத்துடுவோம். அந்தப் பதநி மதியம்வரை தாங்கும்.

சிலர், பதநியக் கலப்படமா இருக்குமோனு நினைக்கிறதால, அவங்க கண்ணு முன்னாலேயே வடிகட்டிக் கொடுக்குறோம். பனைமரம் ஏறும் எங்களுக்கு அரசு ஆதரவு கொடுத்தா இந்தத் தொழில எங்களால காப்பாத்த முடியும், இந்தத் தொழிலும் எங்களக் காப்பாத்தும்" என்றார்.

பனை
பனை

பனை ஆர்வலர் அசோக்குமார் நம்மிடம், "தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருப்பது பனை. சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடி முதல் தற்காலிக மதிப்புக் கூட்டுப் பொருள்கள்வரை பனையின் பயன்கள் விரிந்துள்ளன. பனைமரத்தின் முக்கியத்துவத்தை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த நிலையில், பனைமரங்கள் பல இடங்களில் அழிக்கப்பட்டுவருவது வேதனைக்குரியது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பனைமரத்தை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று. எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் பனைவிதைகளை சமூக ஆர்வலர்களோடு இணைந்து நடவு செய்து பராமரிக்க வேண்டும்.

பனை மரம்
பனை மரம்
`ஏதோ குரோனாவாமே...’ - கிராமங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஈர மனிதர்கள்!

மேலும் ஆவின் பொருள்களை விற்பனை செய்வதுபோல் பனையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு மதிப்புக்கூட்டுப் பொருளையும் விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் வாரியம் அமைத்து விற்பனை செய்ய வேண்டும். பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு