Published:Updated:

உள்ளூர் மீன்களை அழிக்கும் வெளிநாட்டு மீன்கள்? - நடவடிக்கை எடுக்கக் கோரும் சிவகங்கை மக்கள்

கண்மாய்களில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் போன்ற புதிய ரக மீன்கள் வளர்க்கப்படுவதால் பாரம்பர்ய மீன் இனம் அழிந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

’ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் போன்ற புதிய ரக மீன்கள் வளர்ப்புகளால் பாரம்பர்ய மீன் இனம் அழிந்து வருகிறது. எனவே, பாரம்பர்ய மீன் இனம் அழிவதைத் தடுக்க ஆப்பிரிக்க கெளுத்தி மீன் உற்பத்தியை சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்ய வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் பாரம்பர்யங்களை மீட்டெடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இயற்கை வழி விவசாயம், சிறுதானிய பயிர்களை உண்ணுதல், மண்பானை சமையல் என மீள் வினை போல் மாற்றம் உருவாகி வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு ரக மீன்களால் தமிழக பாரம்பர்ய மீன்கள் அழிந்துவருவதாகவும் அதை மீட்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விரால் மீன் பிடிப்பு
விரால் மீன் பிடிப்பு

இது குறித்து சமூக ஆர்வலர் புத்தகக் கடை முருகன் நம்மிடம், "சிவகங்கை வறட்சியான மாவட்டத்தின் பட்டியிலில் குறிப்பிடப்பட்டு வந்ததால் ஆரம்ப காலத்திலேயே புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக சிவகங்கையில் அதிகளவு கண்மாய், குளங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மன்னர்களின் தீவிர முயற்சியால் மழை வீணாகாமல் சேகரிக்கப்பட்டன. அதனால் சிவகங்கையில் புதிய குளங்களோ, கண்மாயோ ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்தாலே போதுமானது. இந்தக் கண்மாய்களில் அதிகளவு நாட்டு வகை மீன்கள் வளர்த்துப் பராமரிக்கப்பட்டன. அவை பல்வேறு சூழல் மாறுபாடுகளால் அழிவில் உள்ளன. அவற்றில் ஒன்றாகக் கண்மாய்களில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன் போன்ற புதிய ரக மீன்கள் வளர்ப்புகளால் பாரம்பர்ய மீன் இனம் அழிந்து வருகிறது.

இந்த மீன்களுக்கு உணவாக கோழி இறைச்சி, மாட்டிறைச்சி கழிவுகளைக் கொட்டி வளர்க்கிறார்கள். அதனால் இதை உணவாக உண்ணக்கூடிய மக்களுக்கு புற்று நோய், தோல் நோய்கள் அதிகமாக உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு ஆபத்துகளை உருவாக்கும் என்பதால்தான் தேசிய பசுமை தீர்ப்பாயம் முழுவதுமாகத் தடை விதித்துள்ளது. இந்த மீன்கள் வளரும் நீர்நிலைகளில் இருக்கும் எல்லா உயிர்களையும் தின்றுவிடும்.

 கண்மாய் மீன் பிடிப்பு
கண்மாய் மீன் பிடிப்பு

கடைசியில் இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மட்டும்தான் பெருகி வரும். ஒரு மீன் 4 லட்சம் முட்டைகள் இடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வகை மீன்களை பொது நீர்நிலைகளில் வளர்ப்பதற்குத் தடை விதித்து உத்தரவிடுமாறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், அத்துடன் கண்மாய்களில் மீன் பிடிக்கும் கிராமத்து மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கக்கூடிய கண்மாய்களை மீன்பிடிப்புக்கு குத்தகைக்கு விடும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்றும் சிவகங்கை மாவட்டம் தமிழிய சிந்தனைக்களம் சார்பாக ராஜீவ்காந்தி, ரவி ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்துள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு