Election bannerElection banner
Published:Updated:

`மானாமதுரை சட்டிக்கு அம்புட்டு கிராக்கி ஏன் தெரியுமா?' - பகிரும் மண்பாண்டத் தொழிலாளர்கள்

பொங்கல் பானை
பொங்கல் பானை

``ஒரு பூச்சட்டின்னாகூட, மானாமதுரை சட்டின்னா கரெக்டா கண்டுபுடிச்சுடலாம்." என்கிறார் மானாமதுரையில் மண்பானை கடை வைத்திருக்கும் கமலம் பாட்டி. பொங்கல் சீசனுக்கு தயாராகும் மண்பாண்டத் தொழிலாளர்கள் குறித்த பதிவு.

``பழசெல்லாம் இப்ப மறுபடியும் புதுசாகிட்டு வருது. இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் மாதிரி மண்பாண்டங்களையும் மக்கள் இப்ப வாங்க ஆரம்பிச்சிருக்காங்க" என்கிறார்கள் மண்பாண்ட கலைஞர்கள்.

``மண்பானையில் எந்த உணவையும் சமைக்கலாம். சமைத்த உணவுக்குத் தனித்த ருசியைக் கொடுக்கும். சூடும் நீடித்த நேரம் இருக்கும். மண்பானை வெப்பத்தை சுலபத்தில் வெளியேற்றுவதில்லை. எனவே, சமைத்த உணவை ஹாட் பாக்ஸ்களில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மண்பாண்டத்தில் இருக்கும் உணவு விரைவில் கெடாது என்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியதில்லை.

மண்பானை
மண்பானை

இப்படி பல்வேறு காரணங்களால், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட உயர்தட்டு மக்களும்கூட இப்போது மண்பாண்ட பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்" என்கின்றனர் சமையல் கலைஞர்கள்.

இப்படி மண்பாண்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெருகி வந்தாலும், அதன் உற்பத்தி அருகி வருகிறது என்றே சொல்லவேண்டும். ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருள்கள் தை பொங்கல் நேரத்தில்தான் அதிகம் வாங்கப்படுகின்றன. மண்பாண்டங்கள் செய்யும் இடமான, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் பூவந்தி பகுதிகளில் ஒரு ரவுண்ட் வந்தோம்.

தெருவெங்கும் பச்ச களிமண்ணு வாசம், கண்களைக் குளிர வைக்கும் பாண்டங்களின் வண்ணம் என்றிருந்தது. பூவந்தி, வேளார் மக்கள் வசிக்கும் பகுதி. பச்சப்புள்ள தலையைத் தட்டிக்கொடுப்பதுபோல, தன் கணவர் வார்த்துக் கொடுத்த பொங்கல் பானையைத் தட்டித் தட்டி உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார் சிந்தாமணி. கிழக்கு வாசல் திரைப்படத்தில் `பச்ச மல பூவு... நீ உச்சி மல தேனு’ பாடல் ஆரம்பிக்கும் முன் இளையராஜா கோத்திருந்த இசை போல ஒலித்து வசீகரித்தது அந்தச் சத்தம்.

சிந்தாமணி
சிந்தாமணி

தன் வேலைக்கு இடையில் நம்மிடம் பேச்சுக்கொடுத்தார் சிந்தாமணி. ``மழை நேரமா இருக்கு. வேலைய முடிச்சு வெயில்ல காய வைக்கணும். அப்பத்தேன் உழைச்ச காச எடுக்கமுடியும் தம்பி" என்றபடி கைகள் விறுவிறுவென வேலை செய்துகொண்டிருக்க, நம்மிடம் தொடர்ந்தார். ``சட்டி, பானை செய்றதுதேன் எங்களுக்குத் தொழிலு. நாங்க கம்மா வெட்டுறதோ, கூலி வேலைக்குப் போறதோ கெடையாது. கஷ்டமோ நஷ்டமோ இந்த மண்ணோடதேன் உருளுறோம். பானை சட்டி செய்யுற தொழில்ல வருமானம் குறைவுதான்னாலும் நெறைவு இதுலதேன் எங்களுக்கு.

பொங்க வேல பாக்குற நேரம் கஷ்டமா இருக்கும். ஏன்னா நேரத்துக்கு பானை கொடுக்கணும். அப்பதேன் காசு எடுக்க முடியும். மத்த நேரத்துல பொறுமையா பாத்துக்கிடலாம்.

பொங்க பானையில நாலு சைஸு செய்யுறோம். காப்புடி (கால் படி), அரப்புடினு (அரை படி) குடும்பத்துக்கு தக்கன பானை வாங்கிக்கிடலாம். மண் பானையில வெக்கிற பொங்க, பச்சரிசி, வெல்லத்தத் தாண்டி கூட ஒரு ருசியக் கொடுக்கும். அதேநேரம் மண்பானையில பொங்க வெக்கும்போது பொறுமையா வெக்கணும். பொங்க வைக்கும்போது கரண்டி போட்டுக் கிண்டிவிடாம, மரத்துடுப்பு போட்டுத்தேன் பதமா மண் பானையில கிண்டிவிடணும். அப்புடி பக்குவமா பொங்கவெச்சு எறக்கிறதுலதேன் இருக்கு தெறம.

சிந்தாமணி
சிந்தாமணி

ஒவ்வொரு பொங்க பானையை வார்த்து, வடிவம் கொண்டாந்து, நெழல் காய்ச்சல்ல காய வச்சு, கலர் கொடுத்து சுட்டு எடுக்கிறதுக்குள்ள கொம்பாயிரும். இப்புடி கஷ்டப்பட்டுத்தேன் வேலை செய்றோம். இத வாங்கிச் சமைக்குற மகராசிங்க, `பானை, சட்டி எல்லாம் நல்லா இருக்கு... சாப்பாடு ருசியா இருக்கு ஆத்தா'னு ஒரு வார்த்த சொல்லிப்புட்டா போதும்... அவுக கொடுத்து வாங்குன காசுக்கு மேல அம்புட்டு சந்தோசமா இருக்கும்" என்று மலர்ந்து சிரிக்கிறார்.

சிந்தாமணியின் மகன் மணி பேசினார், ``திருகையில வெச்சு செய்ற ஒவ்வொரு மண்பாண்ட பொருளும் இப்ப எனக்கு அத்துப்புடிதேன். ஆனா, பானைய தட்டி எடுக்கிறதுதேன் இப்போ வரை கஷ்டம். ஒரே நாளையில லாரி சாமான் செஞ்சுபுடுவேன். அதைத் தட்டி எடுக்கத்தேன் நேரமாகும். ஒவ்வொரு பானையவும் காயவெச்சு எடுத்து, காயவெச்சு எடுத்துனு மூணு முறை தட்டுற வேல இருக்கும். பாவம் எங்கம்மாதேன் அந்த வேலையைச் செய்வாக.

மணி
மணி

குறுக்கு வலிக்க உக்காந்து, பானையோட உள்கூட்டுல கல்லையும் வெளிய கட்டையையும் வெச்சுத் தட்டுவாக. அப்புடித் தட்டி சுத்தி எடுத்தாத்தேன் பானைக்கு நல்ல ஃபினிஷிங் கெடைக்கும். இப்ப என் மனைவியும்கூட அதைப் பழகிட்டு இருக்கு. ஆனா, அது கைக்கு இந்த வேல இன்னும் பக்குவப்படல.

என் அண்ணன் மக, சின்ன பொண்ணுதேன். அது கைக்கு நல்லா பானை தட்ட வருது. இப்போதைக்கு பள்ளிக்கூடம் லீவுங்குறதால அம்மாவுக்கு உதவி செய்யுது.

சிவகங்கை மாவட்டத்துலேயே, மானாமதுரைக்கு அடுத்து பூவந்திதேன் மண்பானைக்கு பேரு போனது. இப்ப அங்ககூட பானை தட்ட ஆள் இல்ல. இங்கதேன் செய்றோம்.

இந்த வருசம் அதிக மழையால தொழிலு கொஞ்சம் முடக்கம். போதாததுக்கு கொரோனா வேற ஊட வந்து ஆட்டைய கலச்சுப்பிடிச்சு. இந்த பொங்கல எதிர்பார்த்துதேன் இருக்கோம். முன்னவிட இப்போ பல பேரு மண்சட்டி வாங்க ஆரம்பிச்சுட்டாக. யூடியூப்ல எல்லாம் அதுலதேன் சமைக்குறாகனு சொல்லி வாங்கிட்டுப் போறாக” என்று சிரிக்கிறார்.

பானை
பானை

மானாமதுரையில் மண்பானை கடை விரித்திருந்த கமலம் பாட்டியிடம் பேசினோம். ``ஏழு ஊரு மண்ணு எடுத்துத்தேன் மண்பானை செய்யுறாக. மண்ணுல உப்பு, ஒரப்பு இருக்கானு பாத்துத்தேன் கம்மாயில மண்ணு எடுப்பாக. இப்புடி தேடித் தேடி மண் எடுத்துச் செய்யுறதனாலதேன் மானாமதுரை சட்டிக்கு அம்புட்டு கிராக்கி. ஒரு பூச்சட்டின்னாகூட, மானாமதுரை சட்டின்னா கரெக்டா கண்டுபுடிச்சுடலாம்.

வருசா வருசம் அப்பிக (ஐப்பசி), கார்த்திகையிலேயே பொங்க வேல ஆரம்பிச்சுரும். இந்த வருசம் மழை அதிகம்ங்கிறதால சரியா வேல ஓடல. எனக்கு 85 வயசு ஆகுது. ஆனாலும் உழைச்சு வாழணும்னு இப்புடி வியாபாரம் பாக்குறேன். ஆண்டவன் விட்ட வழி... ஏதோ பசி அமர காசு கெடைக்குது. அப்பப்ப என் மவன் வீட்டுக்கும் காசு கொடுப்பேன்" என்றார் அந்த மூத்த உழைப்பாளி.

பொங்கல் பானை வியாபாரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு தை விடியட்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு