Published:Updated:

மேலாளர் பதவி டு இயற்கை வேளாண்மை... சிவகங்கை இளைஞரின் விவசாய பயணம்!

இயற்கை முறையில் (கேழ்வரகு)
இயற்கை முறையில் (கேழ்வரகு)

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற தனது நெடுநாள் கனவை நனவாக்க, ஒரு கட்டத்தில், வேலையை உதறிவிட்டார் கதிர்வேல்.

கை நிறையா சம்பளம் வாங்கினாலும் மனசுக்கு திருப்தியில்லாத பணியை நீண்டநாள் செய்ய முடியாது. வருமானம் சற்று குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வதில் ஆனந்தம் கொள்வோர் பலர். அந்த வரிசையில் இணைந்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கதிர்வேல். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கறுப்புக் கவுனி நெல்
கறுப்புக் கவுனி நெல்

ஆனால், அந்த வேலையை மனது விரும்பவில்லை. சொந்த தொழில் செய்ய வேண்டும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற தனது நெடுநாள் கனவை நனவாக்க, ஒரு கட்டத்தில், வேலையை உதறிவிட்டார். தனது விருப்பப்படி, இயற்கை விவசாயம் செய்துகொண்டே, மரச்செக்கு எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய கதிர்வேல், ``எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமம். ஊருல விவசாயம் பார்த்துகிட்டு இருக்கேன். அதோட மரச்செக்கு எண்ணெய் கடையும் வெச்சிருக்கேன். ஒரு செல்போன் கம்பெனியில 7 வருஷம் மேனேஜரா வேலைபார்த்தேன். ஒரு கட்டத்துல நம்மாழ்வார் ஐயாவோட கருத்துகள் என்னை ஈர்த்தது. ஆன்லைன்ல அவரோட வீடியோ அடிக்கடி பார்ப்பேன்.

மரபு எண்ணெய் கடை
மரபு எண்ணெய் கடை

இன்னிக்கு ஆரோக்கியம் கெட்டுப்போறதுக்கும், அதிக நோய்களுக்கும் காரணம் நம்ம உணவுப்பழக்கம்தான். ரசாயனம் போட்டு விளைய வெக்குற உணவுப் பொருள்களைச் சாப்பிட்டு, நோயாளிகள் அதிகமாயிட்டு இருக்காங்க. அதுனால மருத்துவமனைகளும் பெருகிட்டு இருக்கு. இது எனக்குள்ள கவலையை உருவாக்கிச்சு. அதுனால, உணவுப்பழக்கம் தொடர்பா மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு முடிவு பண்ணுனேன். ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு, மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். கையில போதுமான பணம் இல்லை. வீட்டுல இருந்த நகைகளை வித்துட்டு, எண்ணெய் கடை ஆரம்பிச்சேன்.

கலப்படமில்லாத சுத்தமான எண்ணைய்களைத் தயாரிச்சு, மக்களுக்குக் கொடுக்குறேன். அதோட கிடைக்குற லாபத்துல ஒரு பங்குல கடையில ஒரு பகுதியில நூலகம் அமைச்சிருக்கேன். நூலகத்தில நம்மாழ்வார், செந்தமிழன், தமிழ் மருத்துவ நூல்கள், வேளாண்மை சார்ந்த நூல்கள் வெச்சிருக்கேன்.

கதிர்வேல்
கதிர்வேல்

இதுமட்டுமல்லாம மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலமா உருவாகும் உணவுகளையும், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளையும் பயன்படுத்த வேண்டாம்னு கடைக்கு வர்ற வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 10 வகையான நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுக்கிறேன். அதை, இயற்கை முறையில வளர்க்க இலவசமா ஆலோசனைகளையும் சொல்றேன்.

நாட்டு வகை விதைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பு வைக்கப்படணும். நம்மைச் சுற்றி முளைச்சிருக்க செடி, கொடிகள்ல பலது மூலிகைகள். அந்த மூலிகைகள் படத்தோட அதன் பயன்களைப் பற்றி, துண்டறிக்கை அச்சடித்து கொடுக்குறேன்.

துண்டறிக்கை
துண்டறிக்கை

`யாக்கையின் இயல்பு நிலத்தோடு பிணைந்து கிடப்பதே' என்பதை மக்கள் உணர வேண்டும். நிலம் வளமையாக இருந்தாதான் மக்களின் நலனும் வளமையாக இருக்கும். அதுனால மண்ணுக்கேற்ற மரக்கன்றுகளை இலவசமா கொடுக்கிறேன். பொது இடங்கள்ல நட்டு பராமரிச்சுட்டு வர்றேன்.

ரசாயன வழி வேளாண்மையைக் கைவிட்டு, இயற்கை வழி வேளாண்மையைக் கையிலெடுங்கள்னு விவசாயிகிட்ட சொல்லிகிட்டே இருக்கேன். தற்சார்பு வாழ்வியலின் மூலமா நாட்டு மாடுகள், விதைகள், நிலம், நீர், காற்று இவை அனைத்தையும் பாதுகாத்தால்தான் இந்தச் சமுதாயம் வளமையாக மாறும். அதுக்கு என்னால முடிஞ்ச செயல்களை செஞ்சிட்டு இருக்கேன்.

 இயற்கை முறையில் 
(தூயமல்லி)
இயற்கை முறையில் (தூயமல்லி)

பசுமை விகடன் வாசிப்பு எனக்குள்ள இயற்கை விவசாயம் மீதான நம்பிக்கைய ஏற்படுத்தியது. திண்டுக்கல், நத்தம் பகுதியில இருக்க சம்மங்கி சாகுபடி செய்யுற மருதமுத்துங்கிற விவசாயியைப் பற்றிப் படிச்சுட்டு, அவரைப் போய் சந்திச்சேன். ஆனால், என்னுடைய நிலத்துக்கு அது சரியாக வராதுனு தெளிவா சொன்னாரு. பிறகு, இயற்கை முறையில காய்கறிகளை விளைய வெச்சு, பக்கத்து பகுதிகள்ல நடக்குற சந்தைகள்ல விற்பனை செஞ்சேன். தினமும் 1,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.

தொடர்ந்து தூயமல்லி, மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி மாதிரியான பாரம்பர்ய நெல் ரகங்களையும் பயிர் பண்ணி, சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திட்டு வர்றேன். 15 நாட்டு மாடு இருக்குறதால உரம் தயாரிப்பு சுலபமா இருக்கு. இப்ப, வாழை, கேழ்வரகு, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் பயிர் பண்ணியிருக்கேன். எண்ணெய் கடையில கிடைக்குற கழிவுகளை நிலத்துக்கு உரமா பயன்படுத்திக்குவேன்.

வீட்டில் கோழிகள்
வீட்டில் கோழிகள்
இதோ... இவ்வளவுதான் மாடித்தோட்டம்... முதல்ல கொத்தமல்லி சாகுபடி செய்வோமா? - வீட்டுக்குள் விவசாயம் - 4

எந்தக் கலப்படமும் இல்லாம பொருளைக் கொடுத்துட்டு வர்றேன். என்னுடைய நண்பர் புத்தகக் கடை முருகனோடு சேர்ந்து, மாடித்தோட்டம் அமைப்பது, பாரம்பர்ய விதைகளை வழங்குவதுனு இலவச சேவைகளும் செய்றோம்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு