Published:Updated:

சுரைக்காய், பூசணிக்காய், அவரைக்காய்... அயர்லாந்தில் தமிழ்நாட்டுக் காய்கறிகள்!

ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி

அசத்தும் சிவகங்கை தம்பதி!

சுரைக்காய், பூசணிக்காய், அவரைக்காய்... அயர்லாந்தில் தமிழ்நாட்டுக் காய்கறிகள்!

அசத்தும் சிவகங்கை தம்பதி!

Published:Updated:
ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி

அக்கறைச் சீமை

சிவகங்கை மாவட்டம், கூத்தலூரைச் சேர்ந்த தம்பதி ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி. இவர்கள் அயர்லாந்தின், டனிகல்(Donegal) மாகாணத்தின், லெட்டர்கென்னி நகரில் வசித்து வருகின்றனர். ரிச்சர்டு கணினித் தொழில்நுட்ப வல்லுநராகவும், ஆஞ்சலா மென்பொருள் தொழில்நுட்பப் பயிற்றுநராகவும் பணியாற்றி வருகிறார்கள். பரபரப்பு நிறைந்த தங்களுடைய அன்றாடப் பணிகளுக்கு இடையில், குளிர் மிகுந்த அயர்லாந்தில் இயற்கை முறையில் தமிழ்நாட்டுக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவித்து அசத்தி வருகின்றனர்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், சுரைக்காய், பூசணிக் காய், பீர்க்கன், புடலை, அவரைக்காய் என நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் அனைத்து காய்கறிகளும் இவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் செழிப்பாக விளைந்து கொண்டிருக்கின்றன. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்தக் காய்கறிகளைத் தங்களுடைய வீட்டுத் தேவை போக, அங்குள்ள அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.

ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி
ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதி

ரிச்சர்டு-ஆஞ்சலா மெர்சி தம்பதியை பசுமை விகடனுக்காக வீடியோ காலில் தொடர்புகொண்டோம். தங்களுடைய தோட்டத்தை, வீடியோவில் நமக்கு முழுமை யாகச் சுற்றிக் காண்பித்தனர்.

அழகிய ரோஜாக்களும் வண்ணத்துப்பூச்சிகளும்!

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த டேவிட் ஆஸ்டின், லியோனோர்டோ வகை ரோஜாச் செடிகளும், இவற்றைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த பலவிதமான வண்ணத்துப் பூச்சிகளும் நம் மனதை வசியப்படுத்தின. செடியில் பழுத்துத் தொங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களோ, அதைப் பறித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

பாலித்தின் கூடாரம்
பாலித்தின் கூடாரம்

காய்கறிகளைப் பறித்துக்கொண்டிருந்த ஆஞ்சலா, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். எம்.சி.ஏ படிச்சிட்டு தனியார் கல்லூரியில விரிவுரையாளராக வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். 2004-ம் வருஷம் எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. எங்களுக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க. என் கணவர் ரிச்சர்டு மலேசியாவுல தகவல் தொழில் நுட்பத்துறை வல்லுநராகப் பணியாற்றிக்கிட்டு இருந்தாரு. திருமணத்துக்கு அப்புறம் நானும் மலேசியா போனேன். அங்க உள்ள மல்டி மீடியா பல்கலைக்கழகத்துல தகவல் தொழில் நுட்பத் துறையிலேயே விரிவிரையாளராக வேலை பார்த்தேன். 2007-ம் வருஷம் இந்தியாவுக்கு வந்து ஹைதராபாத்துல இருந்தோம்.

மலர்
மலர்

அப்புறம் அயர்லாந்துல பணிபுரிய வாய்ப்புக் கிடைச்சது. 2015-ம் வருஷம், குடும்பத்தோடு இங்க வந்துட்டோம். இந்தியாவுல விளையக்கூடிய காய்கறிகள், அங்கயிருந்து இங்க இறக்குமதியாகி, இங்கவுள்ள இந்தியக் கடைகள்ல வாரத்துக்கு ஒருநாள் தான் கிடைக்கும். விலையும் அதிகம், அதுவும்கூட பதப்படுத்தப்பட்டுத்தான் இருக்கும். தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, புதினாவுக்கு எல்லாம் தட்டுப்பாடு அதிகம். இங்குள்ள கடைகள்ல ஆர்கானிக் காய்கறிகள் கிடைக்குது. ஆனா, விலை ரொம்ப அதிகம்.

மலர்
மலர்

தமிழ்நாட்டுல உள்ள நம்மூர் சந்தைக்கு 500 ரூபாய் எடுத்துக்கிட்டுப் போனாலே போதும். ஒரு வாரத்துக்கு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடலாம். ஆனா, இங்க அப்படியில்ல. வெளிநாடுகள்ல இருந்துதான் அதிகம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுறதுனால, இங்க பல மடங்கு விலை அதிகம்.

காய்கறி
காய்கறி

தமிழ்நாட்டுல சமவெளி பகுதிகள்ல விளையக்கூடிய காய்கறிகளை, அயர்லாந்துல உற்பத்தி செய்ய சீதோஷ்ண நிலை பெரும் பாலும் ஒத்துழைக்காது. வருஷத்துல பல மாதங்கள் கடுங்குளிராதான் இருக்கும். இப்ப நாங்க வசிச்சுக்கிட்டு இருக்கக்கூடிய ஊர், அட்லாண்டிக் கடலை ஒட்டியே இருக்கு. அதனால, இங்கேயும் குளிர் அதிகம். காற்றோட வேகமும் அதிகம். இதனால, எல்லாவிதமான காய்கறிகளையும் இங்க பயிர் செய்றது ரொம்பவே சவாலான காரியம். உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் உள்ளிட்ட சில காய்கறிகளை மட்டும்தான் இங்க சாகுபடி செய்ய முடியும். ஆனா, எல்லாவிதமான காய்கறிகளையும் நம்ம வீட்டிலேயே இயற்கை முறையில உற்பத்திச் செய்யணும்னுங்கற ஆசை ரொம்ப நாளா இருந்துச்சு. பாலித்தின் மூலம் பசுமைக் கூடாரம் அமைச்சு, வெளிப்புற சிதோஷ்ண நிலையைக் கட்டுப்பத்தினா, எல்லாவிதமான காய்கறிகளும் சாகுபடி செய்ய முடியும். ஆனா, நாங்க இருந்த வாடகை வீட்ல அதுக்கான இடவசதி இல்லை.

காலிஃப்ளவர்
காலிஃப்ளவர்


எங்களோட ஆசைக்கு, அங்க இருந்த சின்ன இடத்துல, பாலித்தின் பைகளை (க்ரோபேக்- Grow bag) பயன்படுத்திப் பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட்னு இங்க உள்ள சீதோஷ்ண நிலைக்கு உகந்த சில காய்கறிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சோம். இந்தச் சூழ்நிலையிலதான் எங்களோட கனவை நிறைவேத்தக்கூடிய வகையில, 2020-ம் வருஷம், தோட்டம் அமைக்கக்கூடிய அளவுக்கு இடவசதியோடு, இந்த வீடு அமைஞ்சது’’ என்றார். அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய கணவர் ரிச்சர்டு,

பாலித்தின் கூடாரம்
பாலித்தின் கூடாரம்

பாலித்தின் கூடாரம்

24 அடி நீளம், 14 அடி அகலத்துக்குப் பாலித்தின் மூலம் பசுமைக் கூடாரம் அமைச்சோம். காய்கறிகள் உற்பத்தி செய்றதுக் கான, 24 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி உயரத்துக்குப் படுக்கை (ரெய்ஸ்டு பெட்) அமைச்சோம். இதுல இரண்டு பக்கமும் மரத்தாலான தடுப்புகள் அமைக்கப் பட்டிருக்கும். இது மாதிரி மூணு படுக்கைகள் அமைச்சோம். இயற்கை இடுபொருள்கள் கலக்கப்பட்டு, உயிர்ச்சத்துகள் நிறைஞ்ச 5 டன் மண் விலைக்கு வாங்கி, அதை ரெய்ஸ்டு பெட்டுக்குள் நிரப்பினோம். இதுல காய்கறி செடிகளை நடவு செஞ்சி வளர்க்க ஆரம்பிச்சோம். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, முள்ளங்கி, பாகற்காய், முட்டைகோஸ், காலிஃப்ளவர், பட்டர் பீன்ஸ், புதினா, பச்சைமிளகாய், அவரைக்காய், பசலைக்கீரை, வெள்ளைப்பூண்டு, இஞ்சி... இந்த மாதிரி இன்னும் பலவிதமான பயிர்களைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். படுக்கை இல்லாத பகுதிகள்ல களைகளைக் கட்டுப்படுத்துறதுக்காகவும், நடைபாதைக்காகவும், மற்ற ஒரு டன் ஜல்லிக் கல்லையும் வாங்கி நிரப்பினோம்.

எங்க வீட்லயே மட்கிய குப்பை எரு, மண்புழு உரம் எல்லாம் தயார் பண்ணி, காய்கறிச் செடிகளுக்குப் போடுறோம். பாலித்தின் கூடாரத்துக்கு வெளியில தொட்டிகள்ல மண்ணை நிரப்பி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் எல்லாம் சாகுபடி செய்றோம். லில்லி உள்பட 15 வகையான பூ செடிகளும் வளர்க்குறோம். இதனால் வண்ணத்துப்பூச்சிகள் இங்க அதிகமா வந்து, இங்கவுள்ள பயிர்கள்ல மகரந்தச்சேர்க்கை நல்லா நடக்குது.

காய்கறிகள்
காய்கறிகள்


உரத் தொட்டிகுப்பை எரு தயார் செய்றதுக்குனு, எங்க வீட்ல 3 பிளாஸ்டிக் கேன்கள் வச்சிருக்கோம். இந்த கேன் 4 அடி உயரம், 3 அடி விட்டத்துல இருக்கும். தினமும் எங்க வீட்ல மிஞ்சக்கூடிய உணவுக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், வீட்டுத்தோட்டத்துல சுத்தம் செய்யக்கூடிய களைப்புல்... இதையெல்லாம் உரத் தொட்டியில போட்டுக்கிட்டே இருப்போம். இதை எப்போது மூடியே வச்சிருப்போம். திறந்து வச்சிருந்தா, இங்கவுள்ள குளிர்ச்சியான சூழல்னால, அதுல கழிவுகள் மக்கி உரமாக, நீண்ட காலமாகும். மூடி வச்சிருக்குறதுனால, அடுத்த 6 மாதங்கள்ல மக்கிடும். உரமா பயன்படுத்தலாம்.

மண்புழு உரம் தயாரித்தல்

மண்புழு உரம் தயாரிக்குறதுக்காகவே, பிரத்யேகமான பிளாஸ்டிக் பெட்டிகள் இங்க விற்பனைக்கு கிடைக்குது. இதுல மூணு அடுக்கு இருக்கும். ஒவ்வொரு அடுக்குலயும் நிறைய துளைகள் இருக்கும். காய்கறி கழிவுகள், உணவுக்கழிவுகள், களைப்புற்கள்.... இதையெல்லாம் போட்டு, கொஞ்சம் மண்புழுக்களை விட்டுடுவோம். காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகளை எல்லாம் மண்புழுக்கள் சாப்பிட்டு எச்சத்தை வெளியேத்தும். அதை உரமா பயன்படுத்திக்குவோம். இதுல முதல்ல 50 புழுக்கள் மட்டும்தான் வாங்கிவிட்டோம். இப்ப அது பல்கிப் பெருகி சுமார் 6,000 புழுக்கள் இருக்கு.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி

நாற்றுகள் உற்பத்தி

காய்கறி நாற்றுக்களை நாங்களே உற்பத்தி செஞ்சிக்குறோம். இதைப் பாலித்தின் கூடாரத்துல வச்சி உற்பத்தி செய்ய, போதுமான வெப்பநிலை இங்க கிடைக்காது. அதனால வீட்டுக்குள்ளயே உற்பத்தி செய்றோம். இங்க எல்லா வீடுகள்லயுமே மனித உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்ககூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கு. இதனாலதான் இங்க வச்சி, நாற்றுகள் உற்பத்தி செய்றோம்.

ஆனாலும் கூட விதைகள் சீக்கிரத்துல முளைச்சி வளர்றதுக்கு, கூடுதல் வெப்பம் தேவை. அதனாலதான் தெர்மல் மேட்ல, நாற்று உற்பத்திக்கான குழித் தட்டுகளையும், குடுவைகளையும் வச்சி நாற்றுகள் உற்பத்தி செய்றோம். நாற்று உற்பத்திக்கான குழித்தட்டுகள்லயும், குடுவைகள்லயும்... மண், குப்பை எரு, மண்புழு உரம்... இதையெல்லாம் நிரப்பிதான் விதைப் போடுவோம். அடுத்த 3-5 மாதங்கள்ல நாற்றுகள் வளர்ந்துடும். அதுக்குப் பிறகு அந்த நாற்றுகளை பாலித்தின் கூடாரத்துக்குக் கொண்டு போயி நடவு செய்வோம். எங்க வீட்டுக்குத் தேவையான எல்லாக் காய்கறிகளுமே புத்தம் புதுசா, ஆரோக்கியமா எங்க வீட்லயே கிடைக்குதுனு நினைக்குறப்ப, மனசுக்கு சந்தோஷமா இருக்கு’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு,

செல்போன்: +353 894203595.

பூச்சி, நோய் கட்டுப்பாடு

‘‘இங்க செடிகளைப் பாதிக்கக்கூடிய `ஸ்லக்ஸ்’ பூச்சித் தாக்குதல்தான் அதிகமாக இருக்குது. இந்த வகைப் பூச்சிகள்கிட்ட இருந்து செடிகளைப் பாதுகாக்குறது பெரிய சவால். இதைக் கட்டுப்படுத்த, வெள்ளைப் பூண்டுக் கரைசலைப் பயன்படுத்துவோம். இது தவிர, மற்ற பூச்சித் தாக்குதல்கள், வேர் அழுகல் நோய் வராம தடுக்க, இயற்கை பூச்சிவிரட்டி பயன்படுத்துறோம். இதனால பூச்சி, நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுது’’ என்கிறார் ஆஞ்சலா மெர்சி.

வேலையும் தோட்டமும்

‘‘கொரோனா ஊரடங்கு சமயத்துல வீட்ல இருந்துதான் வேலை பார்த்தேன். வீட்டுத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமா கவனிக்க, அந்தச் சூழல் ரொம்பவே உதவியா இருந்துச்சு. இப்போ, தினசரி அலுவலகம் போக வேண்டியிருக்கு. அங்க வேலையை முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்த உடனே, தோட்டத்துக்குத்தான் போவேன்’’ என்கிறார் ஆஞ்சலா மெர்சி.

பயிர் வளர்ச்சியூக்கி

‘‘ஒரு பாட்டில்ல வாழைப்பழங்களையும், கொஞ்சம் வெல்லத்தையும் போட்டு மூடி வெச்சிடுவோம். அடுத்த 4 வாரங்கள்ல நல்லா நொதிச்சு வரும். அதுல இருந்து 5 மி.லி கரைசல் எடுத்து, 1 லிட்டர் தண்ணீர்ல கலந்து, செடிகளோட காய்ப்பு பருவத்தப்ப தெளிப்போம்’’ என்கிறார் ரிச்சர்டு.