நாட்டு நடப்பு
Published:Updated:

50 ஏக்கர்... 20,000 செம்மரங்கள்... கோடிகளில் கொழிக்கும் லாபம்! வறண்ட நிலத்தில் செழிப்பான விளைச்சல்!

செம்மரத் தோட்டத்தில் ராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்மரத் தோட்டத்தில் ராமன்

சிவகங்கையில் அசத்தும் ஓய்வுபெற்ற ஆசிரியர்!

மகசூல்

வறண்ட நிலத்திலும்கூட இது செழிப்பாக வளரும். இதற்கு எந்தவித பராமரிப்பும் தேவையில்லை. தண்ணீரும் அதிகம் தேவை யில்லை... மழைநீரே போதுமானது. ஒரு முறை முதலீடு செய்து கன்றுகள் நடவு செய்துவிட்டால் வருங்கால வைப்பு நிதி போல எதிர்காலத்தில் கைகொடுக்கும். இதனால்தான் விவசாயிகளில் பலர், செம்மர சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், பீர்க்களைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் விவசாயியுமான ராமன் 50 ஏக்கரில் செம்மரங்களைப் பயிரிட்டு வளர்த்து வருகிறார். வீடுகளில் தரையில் பதிக்கப்படும் டைல்ஸ்க்கு பெயர் பெற்ற ஆத்தங்குடி கிராமத்தில் பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, ராமனின் செம்மரத் தோட்டம். ஓர் காலைப்பொழுதில் இதைப் பார்வையிட சென்றோம். இங்கு அணிவகுத்து நின்ற செம்மரங்களும் சிலுசிலுவென வீசிய காற்றும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. நடைப்பயிற்சியில் ஈடுபட்டவாறே இங்குள்ள மரங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த ராமன் மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார். ‘‘என்னைப் பொறுத்தவரைக் கும் இதுதான் எனக்கு சொர்க்கம். இங்க வந்துட்டா போதும்... என் மனசு அடையுற சந்தோஷத்தை வார்த்தையால விவரிக்க முடியாது. தினமும் காலையிலயும் சாயந் தரமும் இங்கதான் நடைப்பயிற்சி செய்றேன். இங்கவுள்ள பசுமையான சூழலும் செம்மரங் களோட காற்றும் எனக்குக் கிடைச்சிருக்குற மிகப்பெரும் வரம்னே சொல்லலாம். செம்மரங்கள் சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே உறுதுணையா இருக்கும்...’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

செம்மரத் தோட்டத்தில் ராமன்
செம்மரத் தோட்டத்தில் ராமன்

“விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். நான் பி.எஸ்ஸி பட்டப்படிப்பு முடிச்சிட்டு 1973-ம் வருஷம் இலுப்பக்குடி நடுநிலைப்பள்ளியில ஆசிரியர் பணியில சேர்ந்தேன் சாக்கோட்டை நடுநிலைப் பள்ளி யில தலைமையாசிரியராகவும் வேலை பார்த்தேன் 1996-ம் வருஷம் விருப்ப ஓய்வு கொடுத்திட்டு, முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன்’’ என்று சொன்னவர், செம்மரம் சாகுபடி குறித்த அனுபவத்தை விவரித்தார்.

செம்மரம் சாகுபடி செஞ்சிருக்குற இந்த 50 ஏக்கர் நிலமும் சரளை கலந்த செம்மண் பூமி. இது வறண்ட நிலம். இதுல நெல், கரும்பு மாதிரியான பயிர்கள் எல்லாம் போட்டு பெருசா லாபம் பார்க்க முடியாதுங்கறதுனால ரொம்ப வருஷம் வரைக்கும் சவுக்கும் தைல மரங்களும்தான் பயிர் பண்ணிகிட்டு இருந்தேன். இந்தச் சூழல்லதான் 10 வருஷங் களுக்கு முன்னாடி செம்மரக் கடத்தல் பத்தின செய்திகள் ஊடகங்கள்ல அடிக்கடி வெளியாகிக்கிட்டு இருந்துச்சு. செம்மரங் களோட விலை ரொம்ப அதிகம்... இதுக்கு சர்வதேச அளவுல தேவை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு சில விவசாயிகள் தங்களோட சொந்த நிலத்துல ஏக்கர் கணக்குல செம்மரம் வளர்க்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன். நமக்குத்தான் நிறைய நிலம் இருக்கே... நாமும் செம்மரம் வளர்க்கணும்ங்கிற ஆசை வந்துச்சு. ஆனாலும், எப்படி இதை வளர்க்கிறது, இது எல்லாம் நம்மூர்ல வளருமாங்கிற சந்தேகம் மொதல்ல எனக்குள்ள இருந்துச்சு. பிறகுதான் எனக்குத் தெரிய வந்துச்சு... வறட்சியான நிலங்களுக்கு இது ரொம்பவே ஏத்த மரப்பயிர்னு. கிராம நிர்வாக அலுவலருக்கு முறைப்படி தெரியப்படுத்திட்டு, இதைச் சாகுபடி செய்ற துக்கான ஆரம்பகட்ட பணிகள்ல மும்முரமா இறங்கினேன்.

செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்
செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்

புதுவயல் வனத்தோட்ட கழகத்துல ரொம்ப பழைமையான செம்மரங்கள் இருக்கு. அங்கவுள்ள அலுவலர்கள்கிட்ட முறைப்படி அனுமதி வாங்கி அங்க இருந்து விதைகளை எடுத்துக்கிட்டு வந்து 16,000 மரக்கன்றுகள் உற்பத்தி செஞ்சேன். ஒரு கன்றுக்கு 6 ரூபாய் வீதம் செலவாச்சு. அதோடு, ஈரோட்டுல உள்ள ஒரு நாற்றுப் பண்ணையில் இருந்து ஒரு கன்று 15 ரூபாய்ங்கற விலையில 4,000 செம்மரக்கன்றுகள் வாங்கிக்கிட்டு வந்தேன்.

ஒரு ஏக்கருக்கு 400 கன்றுகள் வீதம் 50 ஏக்கர்ல மொத்தம் 20,000 செம்மரங்கள் நடவு செஞ்சிருக்கேன். கன்றுக்குக் கன்று 10 அடி இடைவெளி விட்டு 3 அடி ஆழம், 3 அடி சுற்றளவு கொண்ட குழி எடுத்து, அதுல அரைக்கிலோ மண்புழு உரம் போட்டு கன்று நடவு செஞ்சேன். கன்று நடவு செஞ்சதுல இருந்து ரெண்டு வருஷம் வரைக்கும் 15 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணீர் கொடுத்தேன். அதுக்குப் பிறகு அப்பப்ப பேஞ்ச மழை தண்ணியிலயே செழிப்பா வளர்ந்து வந்துடுச்சு. மழைக்காலத்துல தண்ணீர் தேங்குற வகையில அங்கங்க சின்ன சின்னதா குட்டைகள் வெட்டி வச்சிருக்குறேன். இதனால மண்ணுக்குள்ள தண்ணி நல்ல சேகரமாகி ஈரப்பதம் பரவலாகுது.

மூணாவது வருஷம் கிளைகளைக் கவாத்து செஞ்சேன். அதுக்குப் பிறகு மரங்கள் நல்லா செங்குத்தா மேல் நோக்கி வளர ஆரம்பிச்சது. கன்றுகள் நட்டதுல இருந்து இப்ப 10 வருஷமாகுது. 10 அடி உயரத்துக்கும் மேல வளர்ந்திருக்கு. இன்னும் 10 - 15 வருஷத்துல நல்லா முதிர்ச்சி அடைஞ்சு, அறுவடைக்கு வந்துடும்’’ என்று சொன்னவர், செம்மரத்துக்கான சந்தை வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்
செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்

‘‘சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கு. இந்தியாவுல இருந்து தான் அந்த நாடுகளுக்குச் செம்மரங்கள் அதிக அளவுல ஏற்றுமதி செய்யப்பட்டுக்கிட்டு இருக்கு. மருந்துப் பொருள்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்கிறதுக்கும் இதைப் பயன் படுத்துறாங்க. ரொம்ப வசதி படைச்சவங்க, தங்களோட வீடு களுக்குத் தேவையான மர ஜாமான்கள் செய்யச் செம்மரத்தை பயன்படுத்துறாங்க. வீனை செய்யவும் செம்மரம் பயன் படுத்தப்படுது. சர்வதேச சந்தையில இதோட மதிப்பு எப்பவுமே அதிகமா இருக்கு’’ என்று எதிர்கால வருமான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

‘‘செம்மரத்துல மூணு விதமான கிரேடுகள் இருக்கு. என்னோட தோட்டத்துல உள்ள செம்மரங்கள் மூணாவது கிரேடு. இன்னைக்கு உள்ள சந்தை மதிப்புல இதுக்கு ஒரு டன்னுக்கு 30 லட்சம் ரூபாய் விலை கிடைக்குது. இன்னும் பத்து வருஷம் கழிச்சு, என்னோட செம்மரங்களை நான் அறுவடை செஞ்சு விக்கிறப்ப, இன்னும் கூடுதலா விலை கிடைக்கும். ஆனாலும்கூட ஒரு டன்னுக்கு 30 லட்சம் ரூபாய் விலை கிடைச்சாலே எனக்கு மிகப்பெரிய லாபம். ஒரு மரத்துக்குக் குறைந்தபட்சம் 100 கிலோ வீதம் எடை கிடைச்சாலே, மூணு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்
செம்மண் கலந்த சரளை மண்ணில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் செம்மரங்கள்

இந்த 50 ஏக்கர்ல உள்ள 20,000 மரங்கள் மூலம் 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடை கூலி, போக்குவரத்துச் செலவு, செம்மரங்களை விற்பனை செய்யும்போதும், அதுல குறிப்பிட்ட சதவிகித தொகையை வனத்துறைக்குக் கட்டணமாகச் செலுத்தணும். இதுக்கெல்லாம் சேர்ந்து 50 சதவிகிதம் பணம் போனாலும் கூட, 300 கோடி ரூபாய் லாபமா கிடைக்கும். நிலத்தைத் தயார் பண்ணி, கன்றுகள் நடவு செஞ்சு கவாத்து செய்றதுக்கு அதிகபட்சம் 7,00,000 லட்சம் ரூபாய் வரைக்கும்தான் செலவு செஞ்சிருக்கேன். ஆனா 20 - 25 வருஷங்கள்லயே பலநூறு கோடி ரூபாய் லாபம் கிடைக்குறதுங்கறது ரொம்ப நிறைவான விஷயம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


தொடர்புக்கு,

ராமன், செல்போன்: 98424 27757

‘‘சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கு. இந்தியாவுல இருந்து தான் அந்த நாடுகளுக்குச் செம்மரங்கள் அதிக அளவுல ஏற்றுமதி செய்யப்பட்டுக்கிட்டு இருக்கு.’’

25 ஏக்கரில் சவுக்கு சாகுபடி 60 லட்சம் ரூபாய் லாபம்!

‘‘தாஞ்சூர் கிராமத்துல எனக்கு 30 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 25 ஏக்கர்ல பல வருஷங்களா சவுக்கு சாகுபடி பண்ணிகிட்டு இருக்கேன். நான் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்குறது சி.ஜே-9 ஜூங்குனியானா வீரிய ரகச் சவுக்குக் கன்றுகள் நடவு செஞ்சப்ப, அடியுரமா எரு கொடுப்பேன். 15 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சிவேன். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. நாலு வருஷத்துலயே அறுவடைக்கு வந்துடும். காகித ஆலைக்கு மொத்தமா எடுத்துக்கிறாங்க. கடைசியா நான் சாகுபடி செஞ்சிருந்த சவுக்கு, போன மாசம்தான் அறுவடைக்கு வந்துச்சு. ஏக்கருக்கு 60 டன் வீதம் 25 ஏக்கர்ல மொத்தம் 1,500 டன் மகசூல் கிடைச்சது. ஒரு டன்னுக்கு 5,750 ரூபாய் வீதம் 1,500 டன்னுக்கு 86,25,000 வருமானம் கிடைச்சது. 26,25,000 செலவு போக 60,00,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைச்சது” என்கிறார் ராமன்.

‘‘செம்மரம் வெட்டும் பருவம் வந்தவுடன் உங்கள் பகுதி வனத்துறை அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தால், ஆய்வு செய்த பிறகு, விற்பனை செய்ய அனுமதி கொடுப்பார்கள்.’’

பாரம்பர்ய நெல் சாகுபடி

‘‘பசுமை விகடனால் ஈர்க்கப்பட்டு, எங்க வீட்டுத் தேவைக்கு மட்டும் 5 ஏக்கர்ல இயற்கை விவசாயத்துல பாரம்பர்ய நெல் ரகங்களும் தென்னையும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். தாஞ்சூர்ல உள்ள 30 ஏக்கர் பரப்புல 25 ஏக்கரை சவுக்குக்கு ஒதுக்கிட்டு, மீதமுள்ள 5 ஏக்கர்லதான் நெல்லும் தென்னையும் பயிர் பண்ணிகிட்டு இருக்கேன். இப்ப ரெண்டு ஏக்கர்ல கறுப்புக்கவுனியும் தங்கசம்பாவும் சாகுபடி செஞ்சிருக்கேன். போன தடவை ஒரு ஏக்கர்ல கறுப்புக் கவுனி சாகுபடி செஞ்சதுல 1,200 கிலோ நெல் மகசூல் கிடைச்சது. அதை அரிசியாக்குனதுல 800 கிலோ அரிசி கிடைச்சது. அதைத்தான் இப்ப எங்க வீட்டுல சாப்ட்டுக்கிட்டு இருக்கோம். மூணு ஏக்கர்ல தென்னை பயிர் பண்ணி யிருக்கோம்’’ என்கிறார் ராமன்.

பதிவு அவசியம்!

இந்தியாவில் எந்த உயிரினங்கள், தாவரங்கள் அல்லது அதை சேர்ந்த பாரம்பரிய அறிவு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும், அல்லது அதை ஒரு வியாபாரத்திற்காக பயன்படித்தினாலும், அந்த நிறுவனங்கள் தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் அனுமதியோ அல்லது மாநில பல்லுயிர் பரவல் வாரியத்தின் அனுமதியோ பெற்று இருக்கவேண்டும்.

ஜெஸ்டின் மோகன்
ஜெஸ்டின் மோகன்

செம்மரம் குறித்து சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் செயலர் ஜெஸ்டின் மோகனிடம் பேசினோம். ‘‘முன்பு சிவப்பு சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களை அரிய வகைத் தாவரமாக ஐ.யு.சி.என் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்திருந்தது. இதனால், விவசாய நிலங்களில் உள்ள செம்மரங்களாக இருந்தாலும், அதை வெளிநாடுகளில் விற்பனை செய்ய தடை செய்யப் பட்டிருந்தது.

மத்திய அரசின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் பாரின் டிரேடு (DGFT) அறிவிக்கை எண். 56/2105-2020 தேதி 18.2.2019-ன்படி தனியார் பட்டா நிலங்களில் விளைவிக்கப்படும் செம்மரங்களை மாநில அரசின் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சட்டபூர்வமான அனுமதி பெற்ற பின்பு, சர்ட்டிபிகேட் ஆஃப் ஆர்ஜின் இணைத்து ஏற்றுமதிக்கு விண்ணப்பித்து விற்பனை செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால், செம்மரம் விற்பனைக்கு இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது. விவசாய நிலங்களில் செம்மரங்களை வளர்க்கலாம். மரக்கன்றுகளை நடவு செய்யும்போதே, கிராம நிர்வாக அலுவலரிடம் உங்கள் நிலத்தில் செம்மரம் உள்ளது என்ற தகவலை ஆவணங்களில் பதிவு செய்யச் சொல்லுங்கள். செம்மரம் வெட்டும் பருவம் வந்தவுடன் உங்கள் பகுதி வனத்துறை அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தால், ஆய்வு செய்த பிறகு, விற்பனை செய்ய அனுமதி கொடுப்பார்கள்’’ என்றார்.

தொடர்புக்கு, தேசிய பல்லுயிர் ஆணையம், டைசல் பயோ பார்க் (TICEL Bio Park), 5-வது மாடி, சி.எஸ்.ஐ.ஆர் சாலை, தரமணி, சென்னை - 600113.

தொலைபேசி: 044 - 22541071.