Published:Updated:

`கிராமத்துக்கான காய்கறிகள்... இது, ஊரடங்கு தந்த மாற்றம்!’ -அசத்தும் சிவகங்கை மாவட்ட ஊராட்சி

தனபால்
தனபால்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்து பெரியகொட்டகுடி ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவரின் முயற்சியால் பொதுமக்கள் காய்கறிகளை விளைவித்து தன்னிறைவு அடையும் பாதையில் பயணிக்கின்றனர்.

கொரோனா, உலக நாடுகளை நடுக்கம் காணவைத்த மிகப் பெரும் தொற்று நோயாக உள்ளது. இந்நோயால் வல்லரசு நாடுகள்கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி, வரலாறு காணாத ஊரடங்கு உத்தரவைப் போட வைத்துவிட்டது. இப்படிப் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கொடுத்தாலும் மக்களிடம் சில நல்ல மாற்றங்களை வரவழைத்துள்ளது.

கொரோனா
கொரோனா

இப்படியான மாற்றம்தான் பெரியகொட்டகுடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்து பெரியகொட்டகுடி ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவரின் முயற்சியால், பொதுமக்கள் காய்கறிகளை விளைவித்து தன்னிறைவு அடையும் பாதையில் பயணிக்கின்றனர். இதனால் ஊராட்சி மன்றத் தலைவருக்கும், கிராம மக்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தனபால், ``எங்கள் கிராமத்தில் சுமார் 8 சிற்றூர்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு சமயத்தில் எங்கள் ஊராட்சி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம். தற்போது வரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுகின்றனர்.

கீரை விவசாயத்தில்
கீரை விவசாயத்தில்

முழு ஊரடங்கு சமயத்தில், என்னுடைய முயற்சியால் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகளைச் சந்தையில் பெற்று வழங்கினேன். ஒரு கட்டத்தில், ’ஏன் காய்கறிகளை நாமே உருவாக்க கூடாது’ என்று தோன்றியது. தற்சார்பு வாழ்க்கையில் எனக்கு ஏற்கெனவே ஆர்வம் இருந்ததால், தைரியமாக இதை செய்யலாம் என முயற்சிகளை மேற்கொண்டேன். எங்கள் பகுதியில் உள்ள சேவை மைய கட்டடம் அருகே, சுமார் 3 ஏக்கர் நிலத்தில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன.

அவற்றை முழுமையாகச் சுத்தம் செய்து, தோட்டத்து இடமாக மாற்றினேன். இதில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என முடிவு செய்து, 100 நாள் வேலை ஆட்களைப் பயன்படுத்தினேன். உழவு செய்து இயற்கை உரங்கள் பயன்படுத்தி, கத்திரி, வெண்டை, அவரை, பாவை, பூசணி, முள்ளங்கி எனப் பல பயிர்களை நட்டுள்ளோம்.

கீரை கட்டுகளுடன் தனபால்
கீரை கட்டுகளுடன் தனபால்

இதில், முதல் கட்டமாக தண்டங்கீரை அறுவடை செய்துவிட்டோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான் இங்கு பணி செய்தனர். அவர்கள் 150 நபர்களுக்கு கீரை வழங்கியுள்ளேன். இதனால் பொதுமக்கள் தாங்கள் விளைவித்த கீரையைப் பார்த்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் காய்கறிகளைப் பறித்துவிடுவோம். இதனால் அவர்கள் மனதில் கூடுதல் நம்பிக்கை விதைக்கப்படும். மேலும், அடுத்த கட்டமாக அனைவரின் வீடுகளிலும் சிறிய அளவு தோட்டம் ஏற்படுத்திக்கொள்ள உதவ உள்ளேன். இதனால் எங்கள் ஊராட்சியே தன்னிறைவு அடையும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு