Published:Updated:

கொங்கு மண்டலத்தில் கொந்தளித்த விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி-க்கள்
கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி-க்கள்

எடப்பாடிக்கு எதிராகத் திரளும் எம்.பி-க்கள்!

பிரீமியம் ஸ்டோரி

முதல்வர் எடப்பாடிக்குச் செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கின்றன. இப்போது, விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் திட்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில், விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், கொங்கு மண்டலத் தைச் சேர்ந்த ஆறு எம்.பி-க்கள் ஒரே மேடையில் கலந்துகொண்டு அதிரடித்திருக் கின்றனர்.

உயர்மின் கோபுரங்கள், கெயில் எரிவாயுக் குழாய், பாரத் பெட்ரோ லியத்தின் ஐ.டி.பி.எல் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம், எட்டு வழிச்சாலை போன்றவற்றால் விவசாயிகளின் நில உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்தும் கொங்கு மண்டலத்தில் நிலவும் நீர் ஆதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் ஆயிரக்கணக் கான விவசாயிகள் கலந்துகொண்ட செயல்திட்ட அறிவிப்புக் கூட்டம் ஈரோடு சென்னிமலையில் நடைபெற் றது. உழவர் வாழ்வாதாரப் பாது காப்பு இயக்கம் சார்பில் ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில், ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, கோவை எம்.பி நடராஜன், திருப்பூர் எம்.பி சுப்பராயன், கரூர் எம்.பி ஜோதிமணி, நாமக்கல் எம்.பி சின் ராஜ், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் ஆகிய ஆறு எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.

உயர்மின் கோபுரங்கள் அமைப்ப தற்கு எதிராக விவசாயிகள் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த பரபரப்பான நிலையில், இந்தக் கூட்டம் கூடியது. கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய அமைப்புகள், லோக்கல் அரசியல் கட்சியினருடன் காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் கொந்தளித்த விவசாயிகள்

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி பேசுகையில், “விவசாயிகளின் நிலத்தை எடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொடுக்கும் நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. உயர்மின் கோபுரங் களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தொடுத்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்து தீர்ப்பு வரும்வரை, உயர்மின் கோபுர திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும். இன்றைக்கு அமைந்திருக் கும் அரசாங்கம் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி கவலைப்படத் தயாராக இல்லை. எனவே, போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் போராடினால்தான் நாங்கள் உங்களுடன் நிற்க முடியும். மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப் பெரிய மனிதச் சங்கிலி போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

கரூர் எம்.பி ஜோதிமணி, “உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் நீண்டகாலமாக அமைதியாகப் போராடி வருகின்றனர். ஆனால், அரசு இந்தப் போராட்டங்களில் வன்முறையை ஏவுகிறது. ஒரு நீண்ட நெடிய போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

“விவசாயிகள் தனித்தனியாகப் போராடினால் வேலைக்கு ஆகாது. அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்றார் கோவை எம்.பி நடராஜன்.

“எந்தத் திட்டத்தையும் நாம் வேண்டாம் எனச் சொல்லக்கூடாது. திட்டம் வராமல் நாடு எப்படி வளரும்? தொழில்வளம் பெருகும்? கையகப்படுத் தும் நிலத்துக்கும் அழிக்கப்படும் மரங்களுக்கும் முறையான விலை கொடுத்தால், நல்ல திட்டங் களை நாம் ஆதரிப்பதில் தவறில்லை” என நாமக்கல் எம்.பி சின்ராஜ் பேச, கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் பேசும்போது, “மத்தியில் பாசிச அரசிடம் பிச்சை எடுக்கும் அரசாக மாநில அரசும் இருக்கிறது. இவர்களுக்கு விவசாயிகளின் வலி தெரியாது. கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பல லட்சம் விவசாயிகள் ஒன்றுசேர்ந்து போராடியிருந்தால், இந்த அரசை எப்போதோ பணியவைத்து மண்டியிட வைத்திருக்கலாம்” என்றார்.

திருப்பூர் எம்.பி சுப்பராயன் பேசுகையில், “மின்கோபுரத் திட்டத்தை விவசாயிகள் வேண்டாமென்று சொல்லவில்லை. மாற்று வழியில் கேபிள் அமைத்துக் கொண்டுசெல்ல வலியுறுத்துகின்றனர். அதை ஏன் இந்த நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை? நீதிமன்றம் விவசாயி கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக் கிறது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்ற சர்வாதிகாரம் இங்கு இல்லை. மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னைகளைத் திரட்டி ஒவ்வோர் ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டால், இந்த அரசு நிலைகுலையும். ஒரு மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுங்கள். உங்கள் போராட்டத்தின் முதல் வரிசையில் நாங்கள் இருப்போம்” என்றார்.

கூட்டத்தின் இறுதியில், கெயில் பைப்லைன், ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டங்களைச் சாலை ஓரமாக மட்டுமே செயல்படுத்த வேண் டும் என்றும் பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு மற்றும் திருமணி யாறு - முத்தாறு நதிநீர் இணைப்புத் திட்டங் களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தவில்லை யெனில், கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் வெடிக்கும் இந்த எதிர்ப்புகளை எடப்பாடியார் எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு