Published:Updated:

மண்புழு மன்னாரு : பாம்புக் கடியை உருவாக்கும் மின்சாரப் பிரச்னை!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

மண்புழு மன்னாரு : பாம்புக் கடியை உருவாக்கும் மின்சாரப் பிரச்னை!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

"அந்தப் பூசாரியா, அந்தப் புது டாக்டரான்னு பார்த்துடுவோம்” என்று சொல்லிவிட்டு உடுக்கையை எடுத்து வேகமாக அடிக்க ஆரம்பித்தார், பொன்னர் சங்கர் கோயில் பூசாரி. பாம்பு கடிபட்ட இளம்பெண்ணைக் கோயிலில் படுக்க வைத்திருந்தார்கள். மயங்கிய நிலையிலிருந்தார். அவரை கடித்த பாம்பையும் கோயில் முன் கட்டி தொங்கவிட்டிருந்தார்கள்.

காலையில் பாம்பு கடித்திருக்கிறது. உடனே, கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, அந்த பெண்ணின் உறவினர், சிகிச்சை அளிக்க என்னை அழைத்துவந்திருந்தார். அது 1974-ம் ஆண்டு, வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல் மாதம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு, சொந்த ஊரில் மருத்துவமனை தொடங்கி, ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கும்போது, பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் உண்டு. அதனால்தான், தைரியமாக மருத்துவம் பார்க்கச் சென்றேன்.

பாம்புக் கடி என்பது மராடைப்பு போல, குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சை கொடுக்க வேண்டும். ஆனால், அந்தக் கோயில் பூசாரி என்னைச் சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை. அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர், சாமி அனுமதி கொடுக்காமல் மருத்துவமனைக்குப் போகக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தார்கள். ஒரு மருத்துவராக அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பற்ற முடிவு செய்தேன். நேராக, அந்தப் பூசாரியோட காலில் விழுந்து வணங்கினேன். அதை அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. உடனே, தட்டில் 10 ரூபாய் தட்சணையாக வைத்தேன். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. இதைப் பார்த்தவுடனே, அந்தப் பூசாரியே, திருநீறு எடுத்து என் நெற்றில் பூசிவிட்டார். ‘பூசாரி ஐயா, நீங்க சொன்னால்தான், அந்தப் பொண்ணை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போக முடியும். அந்தப் பொண்ணு உயிரையும் என் பெயரையும் காப்பதுங்க’ என்று உருக்கமாக பேசினேன்.

அடுத்த சில நிமிடங்களில், சாமி வந்து ஆடிய பூசாரி ‘டேய் வந்திருக்கவன், சின்ன டாக்டர் இல்லடா. பாம்பை கழுத்துல சுத்தியிருக்கிற அந்தப் பரவசிவன் அம்சம். அவனை நம்பி, அனுப்புங்கடா. புள்ளை உசிரை காப்பாத்திக் கொடுப்பான்’என்று வாக்குக்கொடுத்தார்.

பாம்பு
பாம்பு


உடனே, மருத்துவமனைக்குப் போக வாடகைக்குக் கார் எடுத்து வரச் சொன்னேன். அங்கு வந்த கார் டிரைவர் ‘டாக்டர் சார், புதுக் கார் இது. பாதி வழியிலேயே உயிர் பிரிஞ்சி போய்ட்டா, யாரும் இந்த கார்ல ஏற மாட்டாங்க. அந்தப் பெண்ணை என் கார்ல ஏத்த முடியாது மன்னிச்சிடுங்க’ என்று தயக்கத்தோடு சொன்னார்.

சரி, அப்படி ஏதாவது நடந்தால், இந்தக் காரை நானே விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று உறுதியாகச் சொன்னேன். அதற்குச் சம்மதம் தெரிவித்த டிரைவர், அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்தார்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினேன். சில மணி நேரத்தில், அந்தப் பெண் கண் விழித்துவிட்டார். ஊர் முழுக்க இதே பேச்சாக இருந்தது. ‘புது டாக்டர், பாம்பு கடிச்ச பெண்ணைக் காப்பாத்திட்டார், கைராசிக்காரர்’ என்று பேசிக்கொண்டார்கள். இதனால், என் மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்துக் கிராமத்து மக்கள் நம்பிக்கையுடன் தேடி வரத் தொடங்கினார்கள். குறிப்பாகப் பாம்புக் கடிப்பட்டால் இரவு எந்த நேரமாக இருந்தாலும் மருத்துவமனைக்கு வந்துவிடுவார்கள்.

என் மருத்துவப் பணியில் எத்தனையோ பாம்புக்கடிக்குச் சிகிச்சை கொடுத்திருந்தாலும், இந்த முதல் சிகிச்சையை என்னால் மறக்கவே முடியாது. காரணம், ஒரு மருத்துவருக்குச் சிகிச்சை அளிக்க மட்டுமல்ல, மனிதர்களின் மனதையும் அறிந்து, சூழ்நிலைக்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும். அந்தப் பூசாரியுடன் நான் சண்டைப் போட்டிருந்தால் நிச்சயம், அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்று கேட்டால்? காரியம்தான் முக்கியம். மருத்துவக் கல்லூரியில் பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிக்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார்கள். மனிதர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் களத்தில் வந்துதான் கற்றுக்கொண்டேன்’’ என்று மருத்துவத்தையும் தத்துவத்தையும் சேர்த்துச்சொல்லும் இந்த மூத்த மருத்துவர், நம்மில் பலருக்கும் அறிமுகமானவர்தான். ஆம், பஞ்சகவ்யாவைப் பயிர்களுக்குப் பயன்படுத்தக் கண்டறிந்தவர் என்ற வகையில் நாடு முழுக்க அறிமுகமான டாக்டர் கே.நடராஜன், ஈரோடு மாவட்டம் கொடுமுடி சுற்று வட்டார மக்களுக்குக் கைராசியான டாக்டர். பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பாம்புக் கடித்தால், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இவர் சொல்பவை பள்ளி பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டியவை.

‘‘கிராமத்தில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் பாம்புகளுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆனால், பாம்பு கடித்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

பாம்பு கடித்துவிட்டால், சினிமா படங்களில் வருவதைப்போல வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்தால், இரண்டு பேருக்கும் ஆபத்தை உருவாக்கும். முதலில் கடிபட்ட இடத்தில் சோப்பு போட்டுக் கழுவி விட வேண்டும். இதன் மூலமாக, மேல் பகுதியில் தங்கியுள்ள உள்ள விஷம் உடம்பில் இறங்காது.

டாக்டர் கே.நடராஜன்
டாக்டர் கே.நடராஜன்


முன்பு, கடித்தது எந்த வகைப் பாம்பு என்று தெரிந்தால் மட்டும்தான், சரியான மருந்து கொடுக்க முடியும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எந்த வகைப் பாம்பு கடித்தாலும், கூட்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கடித்தது எந்த வகைப் பாம்பு என ஆராய்ச்சி செய்து, அதை அடித்துக் கொண்டு வர நேரத்தைக் கடத்துவதை விட, விரைவாக கடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

நாகப் பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் என இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் பாம்புக்கடி மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இதுதவிர கடல் பாம்பும் விஷமானது. ஆனால், இதன் மூலமாக பாதிக்கப்படுவார் களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

பாம்பு கடித்தது என்று தெரிந்தால், அது கடித்து இருப்பதுபோல உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

‘எந்த இடத்தில் அந்த நபரைப் பாம்பு கடித்ததோ, அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும். கடிபட்டவர், அதிர்ச்சியில் அங்கும் இங்கும் ஓடக்கூடாது. இதனால், விஷம் உடல் முழுவதும் பரவிவிட வாய்ப்புகள் உள்ளன. பயப்படாமல், அமைதியாக இருக்க வேண்டும். பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும்.

‘‘ பாம்புக் கடிக்கு மூலிகை மருத்துவம் பார்க்கிறதுல கைதேர்ந்த ஆளுங்களும் குறைவு. ஆகையால, உடனடியா மருத்துவமனைக்குப் போறதுதான் உயிருக்கு உத்தரவாதம்.’’


பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றிவிட வேண்டும். இதனால் பாம்பின் நஞ்சு உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைப்படும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷனில் படுக்க வைக்கவும்.

ரெக்கவரி பொசிஷன் என்பது, மூச்சுப்பாதை தடைப்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தலையும் கழுத்தும் நேராக இருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும். ஒரு கையைப் பக்கவாட்டில் மேல் நோக்கியும் இன்னொரு கையை மடித்துக் கன்னத்தின் அருகிலும் வைக்க வேண்டும். கால் பகுதியில் கடித்திருந்தால், எலும்பு முறிவு ஏற்பட்டால் தக்கை வைத்துக் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல, பாம்புக் கடிக்கும் அதேபோலச் செய்ய வேண்டும். நேரத்தைக் கடத்தாமல் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்...’

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


இவையெல்லாம், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல். ஆனால், நடைமுறையில் இதுபோலச் செய்பவர்கள் குறைவு. பாம்பு கடித்துவிட்டால், முதலில் மூலிகை மருந்துகளைத் தேடியும், வாழைப் பட்டை சாறு கொடுக்கவும்தான் நம் மக்கள் ஓடுகிறார்கள். இந்த முறைகள் தவறானவையா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்வேன். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் தோட்டத்தில் வேலை செய்த ஆள் ஒருவரை, கண்ணாடி விரியன் பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக வாழைப் பட்டைச் சாறு கொடுத்தார்கள். கடிபட்டவர் உயிர் பிழைத்துவிட்டார். கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால், ரத்தம் கட்டிக்கொள்ளும். சிறுநீரகம் பாதிக்கும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. வாழை மட்டை சாறு, சிறுநீரகத்தை வேகமாகச் செயல்பட வைத்து, விஷத்தை வெளியேற்றி உள்ளது. இந்த வகை பாம்பு கடித்தால், இதை மருந்தாகக் கொடுக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாம்புக் கடிக்கான மருத்துவம் நம் மண்ணில் உள்ளது. ஆனால், இந்த மருத்துவ முறை இன்னும் சரியாக வடிவமைக்கப்படாமல் உள்ளது. பாம்புக் கடிக்கு மூலிகை மருத்துவம் பார்ப்பதில் கைதேர்ந்த ஆட்களும் குறைவு. ஆகையால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் உயிருக்கு உத்தரவாதம்.

எங்களைப் போல அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனையில் பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிக்கிறோம். பெரும்பாலும் தனியார் மருத்துவமனையில் பாம்புக்கடிக்குச் சிகிச்சைக் கொடுக்கமாட்டார்கள். இங்குச் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். பாம்புக் கடித்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

என் அனுபவத்தில் பாம்புக் கடிக்கும், மின்சாரத்துக்கும் நிறையத் தொடர்பு உள்ளதைப் பார்த்து வருகிறேன். விவசாயத்துக்கு முறையாக மும்முனை மின்சாரம் கொடுக்கும்போது, பாம்பு கடிபட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். பகல் நேரத்தில் மின்சாரம் கொடுக்காமல், இரவு நேரத்தில் கொடுக்கும்போது, விவசாயிகள் பயிருக்குப் பாசனம் செய்யச் செல்கிறார்கள். அந்தச் சமயத்தில் உணவு தேடி வெளியில் வரும் பாம்பு மேல், விவசாயிகள் கால் படும். உடனே, பாம்பு, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கடித்துவிடும்.

‘‘என்னய்யா, பாம்பு கடிப்பட்டவங்க வரிசையா வர்றீங்க. நம்ம பகுதியில விவசாயத்துக்கு சரியா மின்சாரம் கொடுக்கலையா’’ என்று கூட நான் விளையாட்டாகக் கேட்பேன். முன்பு குஜராத் மாநிலத்தில் பாம்பு கடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கொடுக்க ஆரம்பித்த பிறகு, அங்கே பாம்புக் கடி குறைந்துள்ளது.

இந்தியாவைவிட அதிகமான நச்சுப்பாம்புகள் உள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் பாம்புக்கடி மரணங்கள் குறைவு. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்துள்ளார்கள். உலக அளவில் இந்தியாவில்தான் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இந்தக் கணக்கும் கூட முழுமையானது அல்ல. மருத்துவமனைக்கு வராமல் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆகையால், அரசு, விவசாயத்துக்கான மும்முனை மின்சாரத்தைப் பகல் நேரத்தில் முறையாகக் கொடுக்க வேண்டும். பாம்புக் கடி குறித்து, கிராமம்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கையும் வைத்தார் டாக்டர் நடராஜன்.

பகல்பொழுதிலேயே மும்முனை மின்சாரத்தை அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும். கூடவே பாம்புக்கடி பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.