Published:Updated:

இங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள்
அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள்

முயற்சி

பிரீமியம் ஸ்டோரி
.டி துறை, தனியார் வேலைகளில் கைநிறைய சம்பாதிக்கும் இளைஞர்களில் பலர் அவற்றை உதறிவிட்டு இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் என்று திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்காவில் வேலை பார்க்கும் நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞரோ, ஊருக்குப் பொதுவான அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து, அதை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கிவருகிறார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கிராமத்து இளைஞர்கள் மூலம் அந்தத் தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து, மக்களுக்குத் தடையில்லாமல் வழங்கிவருகிறார். இதுவரை 3,000 கிலோ வரை மக்களுக்கு இலவசமாக வழங்கி அசத்தியிருக்கிறார். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திலிருக்கிறது வ.வேப்பங்குடி. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நரேந்திரன் கந்தசாமி. தற்போது அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். தனது கிராமமான வ.வேப்பங்குடியை பசுமைக்குடியாக மாற்றும் முயற்சியில் உள்ளூர் இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து உள்ளிட்ட சிலர் மூலம் இறங்கியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் நரேந்திரன் கந்தசாமியிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினோம்.

அரை ஏக்கர் காய்கறித் தோட்டம்
அரை ஏக்கர் காய்கறித் தோட்டம்

“கரூர் மாவட்டமே வறட்சியானது. அதிலும் எங்க ஊர் கடும் வறட்சியுள்ள ஊர். ஊர் முழுக்கச் சுண்ணாம்பு மண்ணு நிறைஞ்சிருக்கு. அதனால எங்க ஊர்ல இயற்கைச் சூழல் மோசமா இருந்துச்சு. எனக்கு 2010-ம் வருஷம் ஆஸ்திரேலியாவுல கணினித் தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைச்சுது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்துனு வேலை பார்த்துட்டு இப்போ அமெரிக்காவில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். சுவிட்சர்லாந்துல வேலை பார்த்தபோது, அங்கே இருந்த இயற்கைச் சூழலைப் பார்த்துட்டுதான்,‘நம்ம ஊரையும் இப்படி மாத்தணும்’னு தோணிச்சு. நம்ம ஊரையும் இயற்கைச் சூழல் நிறைந்த பகுதியாகக் கட்டமைக்கணும்னு முடிவு பண்ணினேன். இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள், காணொலிகளைத் தேடிப் பார்த்து, அறிவை வளர்த்துகிட்டேன். நம்மாழ்வார் ஐயா சொன்ன கருத்துகளை உள்வாங்கிக்கிட்டேன். பிறகு வேலையில இறங்கினேன். ஊர்ல இருந்த வேல்முருகன், காளிமுத்து மாதிரி சில இளைஞர்கள் இதுக்கு உதவியா இருக்காங்க. தேவையான பணத்தை நான் செலவு செய்யறேன்.

அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள்
அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள்

2017-ம் வருஷம் பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்புனு பலவகை மரப் போத்துகளைப் பத்தடி வரை வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். ஊர் பொது இடங்கள்ல 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை நட்டு வளர்த்தோம். கிராமத்துல இருக்குற 200 குடும்பங்களுக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...

செயற்கை விவசாயத்தால உணவு விஷமாகி, மக்களின் உடல்நலம் கெடுறதை அவங்களுக்கு உணர்த்த நினைச்சேன். நாட்டுக் காய்கறி விதைகளையும், கீரை விதைகளையும் கொடுத்து, அவங்களையே இயற்கை முறையில காய்கறித் தோட்டம் அமைக்கச் சொன்னோம். ஆனா, சிலர் மட்டும்தான் காய்கறித் தோட்டம் போட்டாங்க. அந்தக் காய்கறிகளைப் பயன்படுத்தினாங்க. ஆனா, விதைப்பெருக்கம் செய்யலை. அடுத்த வருஷமும் விதைகளைக் கொடுத்தேன். அப்பவும் அப்படியே செஞ்சாங்க. அதனால ஊருக்குப் பொதுவான அரை ஏக்கர் இடத்துல இயற்கை முறையில காய்கறிகளை விதைச்சு, அது மூலம் மக்களுக்குப் படிப்பினை கொடுக்கணும்னு நினைச்சேன். போன வருஷம் இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைச்சோம். எங்க ஊர் மண் சுண்ணாம்பு மண். `அதுல எதுவும் விளையாது’னு சொல்வாங்க. அதனால ‘இந்த மண்ணை மாத்தி, அதுல காய்கறித் தோட்டம் அமைங்க’னு பலரும் சொன்னாங்க. ஆனா, நாங்க அப்படிச் செய்யலை. இந்த மண்ணுல எல்லாக் காய்கறிகளையும் விளைவிக்க முடியும்னு மக்களுக்கு உணர்த்த நினைச்சோம். எந்த இடுபொருளையும் போடலை. அமுதக்கரைசல், மீன் அமிலம், பஞ்சகவ்யானு எதையும் தெளிக்கலை.

அவங்க தோட்டம் போடும்போது அதையெல்லாம் வாங்க மக்கள் சிரமப்படுவாங்கனு அதைப் பயன்படுத்தலை. ஆடு, மாடு சாண எருவை மட்டும் பயன்படுத்தினோம். இந்தத் தோட்டத்துக்கு `சமுதாயக் காய்கறித் தோட்டம்’னு பேரு வெச்சோம். கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தத்தக்காளி, கேரட், பீட்ருட்னு நாங்க தோட்டத்துல போட்டிருந்த எல்லாக் காய்கறி, கீரைகளும் ஜனவரி 1-ம் தேதி காய்ப்புக்கு வந்துடுச்சு. இப்போ ஊர் மக்களே தண்ணி பாய்ச்சுறது, களை பறிக்குறதுனு எல்லா வேலைகளையும் பார்க்குறாங்க. வாரம் ரெண்டு தடவை வேல்முருகன், காளிமுத்து காய்கறிகளைக் கொண்டு போய் எல்லா வீட்டுக்கும் கொடுப்பாங்க. இடையில காய்கறித் தேவைப்படுறவங்க வந்து தேவையான காய்கறிகளைப் பறிச்சுக்கிட்டு போவாங்க. மூணு மாசமா, இப்படி இயற்கை முறையில விளைஞ்ச காய்கறிகளைக் கொடுத்துட்டு வர்றோம். இதைக் கேள்விப்பட்டு இந்தச் சமுதாயத் தோட்டத்தைப் பார்க்கப் பலரும் வர ஆரம்பிச்சாங்க. அதோட, எங்க ஊர்ல நடக்குற விசேஷங்களுக்கு வர்ற வெளியூர் மக்கள் சிலர் அவங்க ஊர்லயும் இப்படித் தோட்டம் அமைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இது தவிர, கரூர் மாவட்டத்துல இருக்கிற 20 அரசுப் பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கியிருக்கிறோம்’’ என்றவர்,

இங்கு இயற்கைக் காய்கறிகள் இலவசம்... கரூரில் சமுதாயக் காய்கறித் தோட்டம்...

``இப்போ கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிப்போட்டுக்கிட்டு இருக்கு. மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கிடைக்காம அவதிப்படுறாங்க. ஆனா, எங்க ஊர் மக்கள் எந்தக் கவலையும் இல்லாம சமுதாயக் காய்கறித் தோட்டத்துல இயற்கை முறையில் விளைஞ்ச, சத்தான காய்கறிகளைப் பறிச்சு, சமைச்சு சாப்பிட்டுட்டு ஊரடங்கு உத்தரவைச் சரியாகக் கடைப்பிடிக்கிறாங்க. காய்கறிகள் கிடைக்காம கஷ்டப்படுற கரூர், வெள்ளியணைப் பகுதி மக்கள் சிலருக்கும் காய்கறிகளைக் கொடுக்கிறோம்.

காய்கறி வழங்குதல்
காய்கறி வழங்குதல்
கரூரைச் சேர்ந்த காவலர்களின் ‘உதவும் கரம்’ அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் 100 கிலோ காய்கறிகளைப் பறிச்சுட்டுப் போய், ஊரடங்கினால் காய்கறி இல்லாம தவிக்கும் மக்களுக்குக் கொடுத்திருக்காங்க.

அதெல்லாம் எனக்குப் பெருசில்லை. எங்க ஊர் மக்கள்ல சிலர் டீக்கடை, பொது மேடைகள்ல உட்கார்ந்து வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு இருப்பாங்க. அவங்கள்லாம் இப்போ ஓய்வு நேரங்கள்ல சமுதாயக் காய்கறித் தோட்டத்துல வேலை பார்க்குறாங்க. போன மாசம் காணியாளம்பட்டி கே.வி.கேயில இருந்து இயற்கை வேளாண் திருவிழா நடத்தினாங்க. அதுல எங்களுக்கும் ஒரு ஸ்டால் ஒதுக்கியிருந்தாங்க. இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்ட முயற்சி அங்கே வந்த விவசாயிகளைக் கவர்ந்தது.

அவங்கள்லாம் எங்களை உற்சாகப் படுத்தினாங்க. எங்க ஊர் மக்களிடம் இப்போது இயற்கை விவசாயம் குறித்த ஆர்வம் வந்திருக்கு.
மரக்கன்று வழங்குதல்
மரக்கன்று வழங்குதல்

இந்த ஆர்வம் எங்க ஊராட்சியான வரவணையில் இருக்கிற 15 குக்கிராம மக்களுக்கும் வரணும்னு நினைக்கிறேன். அதனால அந்த 15 கிராமங்களிலும் 15,000 மரங்களை வளர்க்கப் போறோம். தமிழகத்துல இதை ஒரு முன்மாதிரி ஊராட்சியக உருவாக்கப் போறோம். ‘வரவணை ஊராட்சிக்குப் போனா எல்லா உணவுப் பொருள்களும் கிடைக்கும்’னு தமிழ்நாடே பேசுற அளவுக்கு இந்த ஊராட்சியை மாத்தப்போறோம். இங்கே விளையுறதை யார் வேணும்னாலும் வந்து இலவசமாகப் பறிச்சுக்கலாம் என்ற நிலையை உருவாக்கப்போறோம். இதை ஓர் இயக்கமாக, எங்க ஊர், ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம், தமிழகம்னு கொண்டு போறதுதான் உச்சபட்ச இலக்கு” என்றார்.

தொடர்புக்கு, நரேந்திரன் கந்தசாமி,

செல்போன்: 91761 86934 (வாட்ஸ்அப் நம்பர்)

அரசு கையிலெடுக்க வேண்டும்!

“பொதுவாக இயற்கை விவசாயப் பொருள்களை விற்க கார்ப்பரேட் பாணியில பலர் கிளம்பியிருக்காங்க. வசதியானவங்க வசிக்கும் பகுதிகள்ல ஆர்கானிக் கடைகள் ஆரம்பிச்சு, கொள்ளை விலைவெச்சு விற்பனை பண்றாங்க. உண்மையிலேயே அங்கே அதெல்லாம் இயற்கை முறையில் விளைஞ்சதுதானானு சந்தேகம் இருக்கு. அதை உடைக்கணும்னுதான் நான் இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்டத்தை அமைச்சேன்.

நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் சிலரை ஒவ்வொரு ஊர்லயும் நியமிச்சு, அரசே இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்ட முறையைச் செய்யலாம். இதனால மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். விஷமான உணவு உற்பத்தி குறையும். கொரோனா வைரஸ், எதிர்ப்பு சக்தி குறைவா உள்ளவங்களைத்தான் எளிதாகத் தாக்குதுன்னு சொல்றாங்க. மனிதர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதற்கு முதல் காரணமே நாம் அனைவரும் விஷமான உணவை உண்பதுதான்” என்கிறார் நரேந்திரன் கந்தசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு