Published:Updated:

என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

trees
பிரீமியம் ஸ்டோரி
trees

ஆலோசனை

என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

ஆலோசனை

Published:Updated:
trees
பிரீமியம் ஸ்டோரி
trees

‘குறைவான ஆட்கள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவு மிகக்குறைவு’ போன்ற காரணங்களால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. இதைப் பயன்படுத்தி, ‘இந்த மரம் வளருங்கள், பணம் கொட்டும்...கோட்டீஸ்வரர் ஆகலாம்’, ‘தண்ணீரே இல்லாமல் வளர்க்கலாம், ஐந்து வருடங்களில் வருமானம் பார்க்கலாம்’ போன்ற கவர்ச்சியான விளம்பரங்கள் ஒரு பக்கமும் விவசாயிகளைக் குழப்புகின்றன. ஆனால், இதையெல்லாம் நம்பாமல் நம் மண்ணுக்குத் தேவையான மரங்களை நட்டு வளர்த்தாலே போதும். நல்ல லாபம் பார்க்கலாம். மண்ணுக்கு ஏற்ற மரங்கள்குறித்து ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ‘வனதாசன்’ ராஜசேகரனிடம் பேசினோம்.

என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

“மரம் வளர்ப்புக்குப் பொறுமை நிறைய அவசியம். மற்ற பயிர்களைப்போல இரண்டு மாதத்தில் அறுவடை செய்ய முடியாது. அதனால், விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டியது அவசியம். மரங்களில் நீண்டகால மரங்கள், குறுகிய கால மரங்கள் என இரு வகைகள் உள்ளன. தேக்கு, குமிழ், வேங்கை, வாகை, கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், ஆச்சா, தடசு போன்றவை நீண்டகாலம் கழித்துப் பயன் கொடுக்கக் கூடியவை. இம்மரங்களிலிருந்து வருமானம் பார்க்கக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். சவுக்கு, பெருமரம், மலைவேம்பு போன்றவை குறுகியகால மரங்கள். இவற்றில் 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் வருமானம் பார்க்கலாம். இரண்டு முறையையும் தனித்தனியாகச் செய்வதைவிட, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வேளாண் காடுகளாக வளர்ப்பதுதான் சிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜசேகரன்
ராஜசேகரன்

பலன் கொடுக்கும் பலவகை மரங்கள்!

பொதுவாகக் காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழியவைக்கும். மழைத் தண்ணீரைப் பூமிக்கு அடியில் சேமித்து வைத்துக் கொள்ளும். மரங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது, வேர்மூலமாக இலைகளுக்குப் போகும். பயிர்கள் காயும்போதும் மரங்கள் மட்டும் வாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். மரம் வளர்ப்பு நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும். வேலியில் சவுண்டல், வேப்ப மரம் போன்றவற்றை நடலாம். தேக்கு, வருமானம் கொடுப்பதற்கு நீண்ட காலமாகும். ஆனால், வேப்பமரம் 5 வருடத்தில் பலன் கொடுத்துவிடும். இதுபோக ரோஸ்வுட், சந்தன மரங்களையும் தோட்டத்தில் வளர்க்கலாம். நிலத்தின் உள்ளே ஊடுபயிராக நெல்லி, கொய்யா, பப்பாளி, முருங்கை ஆகிய மரங்களை நடலாம். ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காமல், காடுபோலப் பல அடுக்கு முறையில் பழ மரங்கள், தீவன மரங்கள், எரிவாயு மரங்கள், நார் மரங்கள், வேலி மரங்கள், மருத்துவக் குணமுள்ள மரங்கள் எனப் பலவகையான மரங்களை வளர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு பருவத்தில் வருமானத்தைக் கொடுக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

மண்ணுக்கு ஏற்ற மரங்கள் தேர்வு

மரங்களை நட்டு வளர்ப்பதில் முக்கியமானது, நம் மண்ணுக்கு ஏற்ற மரங்களை வளர்ப்பதுதான். இதற்காக எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. உங்கள் நிலத்தில் எந்த மரங்கள் அதிகளவில் வளர்ந்திருக்கிறதோ, அவைதான் நம் மண்ணுக்கு ஏற்ற மரங்கள். அதற்கு முதலிடம் கொடுத்து, அதை வாங்கி நடவு செய்யலாம். அடுத்ததாக நம் மண்ணுக்கு ஏற்ற வணிகரீதியாக வருமானம் கொடுக்கும் மரங்களைத் தேர்வு செய்து நடலாம். இப்படி நடவு செய்தால், வருமானமும் கிடைக்கும். அதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

எப்படி நடுவது?

நிலத்தை இரண்டு உழவு ஓட்டிக் கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 12 அடி, செடிக்குச் செடி 10 அடி என்ற இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும். அப்போதுதான், ஊடுபயிர் சாகுபடிக்கும், டிராக்டர் உழவுக்கும் வசதியான இடம் கிடைக்கும். நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, மஞ்சள், எள், சோளம் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிர்களாகச் சாகுபடி செய்யலாம். மரக்கன்று நடவுக்கு 2 அடி சதுரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் எடுத்தபிறகு நன்கு ஆறவிட்டு, குழியில் பாதியளவுக்குமேல் மண்ணை நிரப்ப வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் பன்றி எரு, மாட்டு எரு, ஆட்டு எரு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 1 கிலோவும், மண்புழு உரம் 1 கிலோ, வேர் வளர்ச்சிப் பூஞ்சணம் (வேம்) 50 கிராம், தலா 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து கொட்டி, அதன்மீது மண்கொண்டு மூட வேண்டும். பிறகு கைகளால் மண்ணைப் பறித்து மரக்கன்றை நடவுசெய்ய வேண்டும். நடும் கன்றுகளுக்கு ஒரு வாரம்வரை, தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, வாரம் ஒருமுறையோ மாதம் இருமுறையோ ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் கொடுக்கலாம்.

நடவு செய்த 2-ம் ஆண்டில் மரத்தைச் சுற்றி 2 அடி விட்டத்துக்குக் களைகளை அகற்றி, மண்ணைக் கொத்திவிட வேண்டும். அதன் பிறகு மரங்களைச் சுற்றித் தொழுவுரம் இடலாம். அதேபோல, மரங்களின் பக்கக் கிளைகளைத் தண்டுப் பகுதிக்குக் காயம் ஏற்படாதவாறு கவாத்துச்செய்ய வேண்டும். அவ்வப்போது கவாத்துச் செய்தால்தான் மரம் நேராக வளரும். அப்போதுதான் நமக்குத் தரமான தடிமனான மரங்கள் கிடைக்கும்.

மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வன விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. வனத்துறை அலுவலகங்கள் அருகிலிருந்தால், அவர்களிடமும் விசாரித்து வாங்கலாம். வனத்துறைத் தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றைப் பராமரிப்பது, உரமிடுவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்’’ எனச் சொல்லிமுடித்தார்.

தொடர்புக்கு, ராஜசேகரன், செல்போன்: 94424 05981.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

சாய்ந்த மரங்களையும் நிமிர்த்தலாம்!

மழைக் காலங்களில் சாய்ந்த மரங்களை நிமிர்த்துவது பற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘எழில்சோலை’ மாசிலாமணி பேசும்போது, “சாய்ஞ்ச மரங்கள்ல இருக்கிற பக்கக் கிளைகளைக் கவாத்து பண்ணிடணும். அதுக்கப்புறம் சாய்ஞ்ச திசைக்கு எதிர் திசையில் ஒரு குழி பறிக்கணும். மரங்களோட உயரம், எடைக்குத் தகுந்த மாதிரி ஆட்கள் அல்லது டிராக்டர் தயார் செஞ்சு வெச்சுக்கணும். குழி பறிச்ச பிறகு, மரத்துல கயிற்றைக்கட்டி... ஆணி வேர் உடைஞ்சிடாம மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமா கயித்தை இழுத்து மரத்தை நிமிர்த்தணும். மரம் நேராக நின்னதும் கீழே ரெண்டு பக்கமும் மண் அணைச்சு விடணும். அப்படியே கொஞ்ச நேரம் கயித்தை இழுத்து பக்கத்துல இருக்குற மரங்கள்ல கொஞ்ச நேரத்துக்குக் கட்டி வைக்கணும்.

மாசிலாமணி
மாசிலாமணி

இப்படி நிமிர்த்தி நடுறப்போ மண்ணுல அதிக ஈரம் இருக்கக்கூடாது. கொஞ்சம் காய்ஞ்சிருந்தாத்தான் மரம் பிடிப்பா நிக்கும். தானே, வர்தா புயல் வந்த சமயத்துல, என் பண்ணையில பல மரங்கள் சாய்ஞ்சு போயிடுச்சி. அந்த மரங்களை இப்படித்தான் தூக்கி நிறுத்தினோம். நாலு வருஷத்துல அந்த மரங்கள் பெரிசா வளர்ந்திருக்கு. தோட்டத்துல நடுவதாக இருந்தாலும் சரி, சாலையோரங்கள்ல நடுவதாக இருந்தாலும் சரி... அந்தந்த மண்ணுக்கு, சூழலுக்கு ஏத்த மரங்களைத்தான் நடணும்” என்றார் அக்கறையுடன்.

மண்ணுக்கு ஏற்ற மரங்களின் பட்டியல்!

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை, நீர் மருது, இலுப்பை.

வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவுண்டல், புளி, இலவம், பனை, புன்னை, பலா.

களர் மண் – குடைவேல், வேம்பு, புளி, பூவரசு, வாகை.

மணல் - சவுக்கு, முந்திரி, சிங்கப்பூர் செர்ரி, புளி, நாவல், சீத்தா, பூவரசு, பனை, குடைவேல்.

உவர் மண் – சவுக்கு, இலவம், புளி, வேம்பு, கருவேல்.

களிமண் – வாகை, புளி, புங்கன், சவுண்டல், நெல்லி, கருவேல், மருது.

அமில நிலம் – யூகலிப்டஸ் வகை மரங்கள்.

சதுப்புநிலம் – பெருமருது, நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன்.

சுண்ணாம்பு நிலம் – வேம்பு, புளி, புங்கன், வெள்வேல்.

நீர் தேங்கும் பகுதிகள் - கருவேல், மூங்கில், நாவல், வெள்ளை மருது, இலுப்பை.

என்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை?

பயன்பாட்டு ரீதியான மரங்களின் பட்டியல்

விரைவாக மகசூல் கொடுக்கும் மரங்கள் - தைல மரம், சவுக்கு, அகத்தி, முருங்கை, முந்திரி, மலைவேம்பு.

தீவன பயன்பாட்டிற்கான மரங்கள் - சவுண்டல், கருவேல், வெள்வேல், வாகை, கொடுக்காப்புளி, அகத்தி.

விறகுக்கான மரங்கள் - கருவேல், வெள்வேல், சவுண்டல், தல மரம், சவுக்கு, வாகை, உடை மரம், புளியமரம், தூங்குமூஞ்சி மரம்.

காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரங்கள் - மூங்கில், தைலம், சவுக்கு, அகத்தி.

தீக்குச்சி செய்யப் பயன்படும் மரங்கள் - பெருமரம், முன் இளவல், ரப்பர்.

எண்ணெய் எடுக்கப் பயன்படும் மரங்கள் - வேம்பு, புங்கன், இழுப்பை, புன்னை.

நீண்டகாலம் கழித்துப் பயன்கொடுக்கக்கூடிய மரங்கள் - தேக்கு, மருது, வேங்கை, வாகை, சில்வர் ஓக்.

நீண்ட காலம் (ஆண்டுதோறும் மேல் பலன்) - வேம்பு, புளி, புன்னை, பனை, இலவம்.

சாலை ஓரங்கள் - சொர்க்க மரம், மகோகனி, செர்ரி, சரக்கொன்றை, பாதாம், புங்கன், பூவரசு, பன்னீர் புஷ்பங்கள்.

மரச்சாமான்கள் - தேக்கு, திசு, வேம்பு, மலைவேம்பு, வாகை, மா, பலா, குமிழ்

காய், கனி, பழங்கள் - மா, பலா, சப்போட்டா, நெல்லி, முருங்கை, நாவல், கொய்யா, விளா, கொடுக்காப்புளி, அத்தி, இலந்தை, சீத்தாப்பழம், மாதுளை...

கவாத்தின்போது கவனம் தேவை!

ஆறு அடி உயரத்துக்கு மேலே சென்ற மரங்களைத்தான் கவாத்து செய்ய வேண்டும். மரத்திலிருந்து ஒரு சாண் அளவுக்கு விட்டுத்தான், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் கவாத்து செய்யலாம். கவாத்தின்போது இலைகள் முழுவதையும் அகற்றிவிடக் கூடாது. போதுமான அளவு இலைகள் இருந்தால்தான் மரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்க முடியும். அனைத்து மரங்களுக்கும் போதுமான இடைவெளியும் சூரிய ஒளியும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

எப்போது நடவு செய்யலாம்?

தண்ணீர் வசதியுள்ள நிலங்களில் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மானாவாரி நிலங்களில் மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பொதுவாகப் பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம் இதற்கு மிகவும் ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளைக் காலை 6 மணி முதல் 10 மணி வரைக்குள்ளும், மாலை 3 மணி முதல் 6 மணிக்குள்ளும் நடலாம். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அல்லது பருவமழையின் ஆரம்பகட்டத்தில் நடவு செய்வது சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism