Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: ராஜசேகரன்

சொல்வனம்

ஓவியம்: ராஜசேகரன்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

இருத்தல்

புழுவும் இருக்கிறது
சிட்டுக்குருவியும் இருக்கிறது
மீனும் இருக்கிறது
இது போதாதா
பருந்து இருக்கிறதென்று நிரூபிக்க.

- ராம்பிரசாத்

ஏந்தும் சாலை

இரவுக்காய்த் தன்னை
ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது அந்தி
பசியோ பயமோ
எதுவென்று தெரியவில்லை
புதருக்குள்ளிருந்து வெளிவரும்
ஒரு சாம்பல் நிறப் பூனைக்குட்டி
சாலையில்
வருவோர் போவோரென
ஒவ்வொருவரின் கால்களையும்
உரசியபடி மியாவ் என்கிறது
ஒவ்வொருவராய்க் கடந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
செய்வதறியாது திகைத்த சாலை
பூனைக்குட்டியை
கைகளில் ஏந்திக்கொண்டு
காத்திருக்கத் தொடங்குகிறது.

- மகேஷ் சிபி

பழம்பிம்பம்

புளிய மரத்தடியே இருக்கும் மோரியில்
தாத்தா அமர்ந்திருக்கவாபோகிறார்
கோயில் திண்ணையில்
ஆடு புலியாட்டம் ஆட
யார் இருக்கிறார்கள் இப்போ
பெரிய வீதியில் நுழைந்ததுமே
கண்படும் கண்ணகி அக்கா வீடு
கதவடைத்துதான் கிடக்கப்போகிறது
எல்லோர் வீடும் மெத்தை வீடுதான்
புது வீட்டுக்குத் திண்ணையே இல்லை
தேவைதான் என்ன
இடிந்து சிதிலமடைந்து கிடக்கும்
வீட்டை வெறுமனே எட்டிப் பார்க்கலாம்
சிரித்தபடியே உள்ளிருந்து
வரவாபோகிறது பாட்டி
‘யாருன்னு தெரியலயே’ என்பார்கள்
தெரிந்துதான்
என்ன ஆகிடப்போகிறது
பூக்கடை முக்கோடு திரும்பிவிட்டேன்
யார் செத்த கண்ணீர் அஞ்சலியிலோ
ஊர் செத்த காட்சி!

- கவிஜி

சொல்வனம்

பற்ற வை

தெரியாத பெண்ணிடம்
தீப்பெட்டியைக் கடனாக வாங்கி
தீபம் பொருத்திவிட்டு
மீண்டும் தரும்பொழுது
நன்றியென்று பரஸ்பரமாய்
புன்னகைத்தேன்
அவள் உதடுகளும்
புன்னகைத்ததா
இல்லையென்பது
போலவேயிருந்தன அவளின் கண்கள்
கோயிலில் இருந்து வீடு திரும்பியும்
அந்தக் கண்களையே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன்
புன்னகைத்தாளா
இல்லையா
இல்லையென்றால் ஏன்
முணுமுணுக்கும் உதடுகளை
மறைக்க வைத்து விழிகளின்
அசைவினால் மட்டுமே வேண்டுதலை
எப்படிக் கணிக்கிறாரோ அந்த இறை!

- சரண்யா சத்தியநாராயணன்

அந்திமழை

இத்தனை அழகாக
கண்களில்
ஒற்றிக்கொள்ளும்படி
விழும்
அந்திமழைக்கு
ஒரு குறையும் இல்லை
கொஞ்சிக் கிள்ளிட
ஒரு கன்னம்
இல்லையென்பதைத் தவிர.

- ந.சிவநேசன்