Published:Updated:

மேக்கேதாட்டூ அணைக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் எழுத ரங்கசாமி முடிவு?

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கும் ரங்கசாமி மேக்கேதாட்டூ பிரச்னையில் ஆர்வம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல்வர் ரங்கசாமி இன்று தனது அலுவலகத்தில் மேக்கேதாட்டூ அணை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விவாதித்து தீர்மாணங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களையும், புதுச்சேரியில் காரைக்கால் பகுதியையும் சேர்த்து சுமார் 28 லட்சம் ஏக்கர்களில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, உளுந்து, சோளம் போன்றவை காவிரி நீரினால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வரான நாராயணசாமி, மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு
மேக்கேதாட்டூ: `ஒன்றிணைவோம் வா எனச் சொன்ன முதல்வர், எங்களை ஒதுக்கியது ஏன்?' - விவசாயிகள் ஆதங்கம்

முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த இந்த தீர்மானம் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல பா.ஜ.கவின் மூன்று நியமன எம்.எல்.ஏக்களும் அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியிருப்பதன் மூலம் கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்த விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், ``தற்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது.

அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேக்கேதாட்டூ அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும்” என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கும் ரங்கசாமி மேக்கேதாட்டூ பிரச்னையில் ஆர்வம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
மேக்கேதாட்டூ:`விவசாயிகளைக் காக்க புதுச்சேரியும் இதைச் செய்யவேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி

ஆனால் முதல்வர் ரங்கசாமி இன்று தனது அலுவலகத்தில் மேக்கேதாட்டூ அணை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை லட்சுமிநாராயணன், அமைச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் எம்.எல்.ஏ-க்களான திருமுருகன், பி.ஆர்.சிவா போன்றவர்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதுகுறித்து சட்டப்பேரவை வட்டாரத்தில் விசாரித்தபோது, மேக்கேதாட்டூவில் அணை கட்டினால் காரைக்கால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் அதனால் அணை கட்டும் பணியை நிறுத்தும்படி பிரதமருக்கும், நீர்வளத்துறை அமைச்சருக்கும் முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு