Published:Updated:

`விரதம் இருந்து அறுவடை, பெண்களுக்கு நோ என்ட்ரி!' - பழங்குடி ஆண்கள் மட்டுமே சமைக்கும் அசத்தல் பொங்கல்

கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் புல்வெளிகள் மரகதப்பச்சையாய் மாறியிருந்தன. அதில் ஆண்கள் பலர் வெள்ளை நிற வேட்டியும் சட்டைக்குப் பதிலாக வராடு எனும் பாரம்பர்ய உடையும் போர்த்திக்கொண்டு ஆளுக்கொரு வேலையை செய்துகொண்டிருந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினர்களான கோத்தர் இனத்தில் ஆண்கள் மட்டுமே சமைக்கும் பாரம்பர்ய தினைப்பொங்கல் குறித்துக் கேள்விப்பட்டு அவர்களின் பூர்வீக கிராமமான கொல்லிமலைக்குக் கிளம்பினோம்.

பழங்குடியின கிராமம்
பழங்குடியின கிராமம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் ஜங்ஷனிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய மலைப்பாங்கான சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் மிகப் பெரிய பள்ளத்தாக்கான கேத்தியில் நான்கு புறமும் மலைகள்சூழ விளைநிலங்களுக்கு மத்தியில் புல்வெளிகளும் சோலை மரங்களும் நிறைந்த ஆதிகால நீலகிரியைப் போன்ற ஓர் இடத்தில் அமைந்துள்ளது இந்தப் பழங்குடியின கிராமம்.

நேர்த்தியாகவும் வரிசையாகவும் சிறியதும் பெரியதுமாய் கட்டப்பட்டிருந்த இவர்களின் வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்துள்ள பசும்புல்வெளியில் நீலகிரிக்கே உரித்தான சோலை மரங்களின் அடியில் சிறிய முக்கோண வடிவிலான கோயில்கள் அமைந்துள்ளன.

கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் புல்வெளிகள் மரகதப்பச்சையாய் மாறியிருந்தன. அதில் ஆண்கள் பலர் வெள்ளை நிற வேட்டியும் சட்டைக்குப் பதிலாக வராடு எனும் பாரம்பர்ய உடையும் போர்த்திக்கொண்டு ஆளுக்கொரு வேலையை செய்துகொண்டிருந்தனர்.

பழங்குடியின கிராமம்
பழங்குடியின கிராமம்

பெரிய பெரிய மண் பானைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தவர்களிடம் அறிமுகமானோம். ``இந்த நிகழ்வு எங்களின் பாரம்பர்ய வழிபாட்டில் மிக முக்கியமானது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நீங்களும் அருகில் வர வேண்டாம். காலணிகளைக் கழற்றிவிட்டு அங்கே போய் நில்லுங்கள்" என 20 அடி தூரம் தள்ளி நிற்கச் சொன்னார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புல்வெளிக்கு நடுவே கருங்கற்களால் பத்துக்கும் அதிகமான அடுப்புகளை அமைத்திருந்தனர். அதில் விறகிட்டு தீ மூட்டி அந்தப் பெரிய மண்பானைகளை வைத்தனர். கருங்கல் அடுப்பு, மண்பானை, மரக்கரண்டி, தண்ணீர் கொண்டு வரவும் மண்பாண்டம், மூங்கில் கூடை என‌ அனைத்திலும் தாங்கள் தயாரித்ததையே பயன்படுத்துகின்றனர். மேலும், பொங்கலுக்கு பயன்படுத்தும் சாமைத் தினையையும் தங்கள் நிலங்களில் விளைவித்து அறுவடை செய்கின்றனர்.

பழங்குடியின கிராமம்
பழங்குடியின கிராமம்

மண்பானைகளில் நீர் கொதித்து ஆவிபறக்க ஊர் பெரியவர்கள் வானத்தைப் பார்த்து வணங்கி சிறிய வெண் முத்துக்கள் போல் உள்ள சாமையைப் பானையிலிட்டு கிளறுகின்றனர். மற்றொரு பானையில் அவரையை இடுகின்றனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் நமது அருகில் வந்து பேசிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரவி `` நீலகிரியில் 7 கோக்கால்களில் (கோத்தர் கிராமம்) சுமார் 2,000 மக்கள் வாழ்ந்து வருகின்றோம். அய்யனோர், அம்மனோர் மற்றும் கம்பட்டராயர் ஆகியோர் எங்களின் குலதெய்வங்கள். இன்றளவும் மொழி, உணவு, உடை, இசை, நடனம், வழிபாடு எனப் பாரம்பர்ய முறைப்படி பின்பற்றி வருகிறோம். ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இந்தப் பெருவிழாதான் எங்களுக்கு முக்கியம். ஒரு வாரம் நடைபெறும் இந்த நிகழ்வில் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா பல ஆயிரம் ஆண்டுகளாய் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. நாங்ளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்" என்றார்.

பழங்குடியின கிராமம்
பழங்குடியின கிராமம்

இதையடுத்து நம்மிடம் பேசிய மற்றொரு பழங்குடியின இளைஞர், ``முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே சமைக்கும் பொங்கல் இது. இதற்காகவே விதைக்கப்பட்ட சாமைத் தினையை விரதம் இருந்து அறுவடை செய்து பொங்கல் வைக்கிறோம். இதில் எங்கள் கிராமத்தில் கிடைக்கும் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவோம். உப்பைக் கூட சேர்த்துக்கொள்வதில்லை.

அதேபோல் ஆரம்பத்தில் மிளகாய் பயன்பாடு இல்லை என்பதால் அவரை சமையலுக்கு உப்பு, மிளகாய் என எதையும் பயன்படுத்துவதில்லை. கடும் கட்டுப்பாடுகளுடன் பொங்கல் வைத்து எங்கல் குல தெய்வத்துக்கும் இயற்கைக்கும் படைத்து வழிபடுவோம்" என்றார் உற்சாகத்துடன்.

பொங்கல் தயாரிப்புப் பணிகள்
பொங்கல் தயாரிப்புப் பணிகள்

பொங்கலும் பொங்கிவர வெண்ணிற உடையணிந்த ஆண்கள் மண்டியிட்டு வணங்கி வானை நோக்கி வணங்கி கதிரவனுக்கும் முன்னோர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு