Published:Updated:

கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?

காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி

தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா? - ஜூ.வி-யின் நேரடி ரிப்போர்ட்!

கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?

தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா? - ஜூ.வி-யின் நேரடி ரிப்போர்ட்!

Published:Updated:
காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி
‘எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக உரிய நேரத்தில் (ஜூன் 12-ம் தேதி) மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டதால், 99 சதவிகிதப் பணிகள் முடிவடைந்து விட்டன’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘இந்த வருடம் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன’ என்று ஒரு தரப்பு விவசாயிகள் பாராட்டினாலும், அதிருப்தி குரல்களும் எழாமல் இல்லை. இந்தநிலையில், ‘தூர்வாரும் பணிகள் எப்படி நடந்திருக்கின்றன?’ என்று அறிந்து கொள்வதற்காகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரைகளிலும் கால்வாய் ஓரங்களிலும் பயணித்தது ஜூ.வி டீம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவாரூர் மாவட்டத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்று, பாமினி. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாமினி ஆற்றங்கரையில் சில கிலோமீட்டர்கள் பயணித்தோம். நல்ல முறையில் தூர்வாரப்பட்டிருப்பதற்கான ஆதாரமாய் எந்தத் தடையும் இல்லாமல் ஆற்றுப்படுகையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. “பாமினி ஆறு மட்டும் இல்லை... கோரை ஆறு, முடிகொண்டான் ஆறு உள்ளிட்ட ஆறுகளையும் இந்த வருஷம் நல்லா தூர்வாரியிருக்காங்க. தண்ணீர் தங்கு தடையில்லாம பெருக்கெடுத்து ஓடுறதைப் பார்க்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. பிரதான ஆறுகளில் பிரச்னை இல்லை. அந்த ஆறுகளிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் சென்று சேரணும்னா கிளை வாய்க்கால்களும் கிளை ஆறுகளும் நல்லா இருக்கணும். ஆனா, சில கிளை ஆறுகளைத் தூர்வாருவதில் கோட்டைவிட்டுட்டாங்க” என்று விவரித்தனர் அப்பகுதி விவசாயிகள்.

கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?

அவர்கள் சுட்டிக்காட்டிய எடமேலையூர், எட கீழையூர், பருத்திக்கோட்டை, எட அன்னவாசல், வெட்டிக்காடு, அமரபாகம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றோம். அந்தப் பகுதிகளில் பிரதான வாய்க்கால்களே மோசமான நிலையிலிருந்தன. இப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல், “இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூவாநல்லூர் வாய்க்காலிலிருந்து தான் தண்ணீர் வரணும். வடவாறில் மூவர்க்கோட்டையிலிருந்து பிரியக்கூடிய இந்தப் பிரதான வாய்க்காலில் தூர்வாரும் பணி நடக்கவேயில்லை. அதன் கிளை வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் இந்தப் பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் வரவில்லை” என்றார். விவசாயிகள் சொல்வதற்குச் சான்றாக அந்தப் பகுதியிலுள்ள எடமேலையூர் அருகேயுள்ள தெற்கு நத்தம் வாய்க்காலில் புதர் மண்டிக்கிடந்தது.

அடுத்து நாம் சென்றது, வடுவூர் தென்பாதி கிராமம். அங்குள்ள அக்ரஹார வாய்க்காலும் தூர்வாரப்படாமலேயே இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் நம்மிடம், “அக்ரஹாரா வாய்க்கால் மட்டுமல்ல, சாத்தனூர், வடுவூர் புதுக்கோட்டை, காரைக் கோட்டை உட்பட எங்கேயுமே தூர்வாரும் பணியே நடக்கலை” என்றார். விவசாயி ராஜசேகர் என்பவர், “வெண்ணாற்றின் முக்கியமான கிளை ஆறான கண்ணன் ஆற்றில் போன வருஷம் அரைகுறையாகத்தான் தூர்வாரினாங்க. இந்த வருஷம் அதுவும் இல்லை” என்றவாறு புதர்மண்டிய பகுதிகளைச் சுட்டிக்காட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நரிதின்னி வாய்க்கால், காட்டாக்குடி வாய்க்கால், காரைக்கோட்டை வாய்க்கால் போன்றவையும் தூர்வாரப்படவில்லை. கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான சாளுவன் ஆறு, பல ஆண்டுகளாகவே தூர்வாரப்படாத நிலையில்தான் இருக்கிறது. அதே சமயத்தில் குடவாசல், கொரடாச்சேரி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணி நன்றாக நடந்துள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.

வெட்டிக்காடு வாய்க்கால் - பாப்பா வாய்க்கால் - வீரசோழன் ஆறு - கிளை வாய்க்கால்
வெட்டிக்காடு வாய்க்கால் - பாப்பா வாய்க்கால் - வீரசோழன் ஆறு - கிளை வாய்க்கால்

நல்ல விஷயங்களும் நடந்துள்ளன. கொராடாச் சேரியைச் சேர்ந்த முரளி, “எங்க பகுதியைப் பொறுத்தவரை சிறப்பாகவே தூர்வாரும் பணிகளைச் செய்துள்ளனர். கடந்த 20 வருடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த வருஷம் உண்மையிலேயே பரவாயில்லைனுதான் சொல்லணும். குடவாசல்-வலங்கைமான் எல்லையில் இருக்கும் செல்லூர் அணையின் கீழ்ப்பகுதியில் சின்னச் சின்ன மணல் முகடுகளை விட்டுட்டாங்களே ஒழிய மற்றபடி சிறப்பா சுத்தம் பண்ணியிருக்காங்க. வலங்கைமான் திப்பிராஜபுரத்துல, குடமுருட்டி ஆற்றுலயும் தூர்வாரும் பணி நல்லா நடந்திருக்கு” என்றார்.

திருவாரூரைச் சேர்ந்த வரதராஜன், “திருவாரூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமான சுக்கன் ஆற்றை, இந்த வருஷம் சிறப்பாகத் தூர்வாரியிருக்காங்க. கிராமங்களுக்குள்ள இருக்கிற வாய்க்கால்களையும் ஓரளவு தூர்வாரியிருக் காங்க. ஆனால், சுக்கன் ஆத்தோட கிளை வாய்க்கால் திருவாரூர் டவுன் வழியா ஓடுது. அந்த வாய்க்காலை தூர்வாராம விட்டுட்டாங்க. வாய்க்கால்களை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தூர்வாரினாத்தான் சரியான பலன் கிடைக்கும். ஆனாலும், இந்த வருஷம் இந்த அளவுக்குப் பணிகள் நடந்திருப்பதே எங்களுக்கு திருப்திதான்” என்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி, நல்லாடை கிராமத்துக்குச் சென்றோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், “எங்க ஊருக்கு காவிரியின் கிளை நதியான வீரசோழன் ஆற்றிலிருந்துதான் தண்ணீர் வருது. மழைக் காலங்கள்ல வடிகால் வாய்க்கால் மூலமா தண்ணீர் நண்டலாறு போகும். இந்த வருஷம் பாசன வாய்க்கால்களையும், வடிகால் வாய்க்கால்களையும் நல்லா தூர்வாரியிருக்காங்க. எனக்கு 84 வயசாகுது. இத்தனை வருஷத்துல இந்த வருஷம்தான் இப்படி நல்ல முறையில் தூர்வாரியிருக்கிறதைப் பார்க்கிறேன்” என்றார் பூரிப்புடன்.

அடுத்து நாம் சென்ற இடம்... தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்தத் தொகுதிக்குள் வரும் பகுதியான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம். இந்தப் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், “ஆறுகள்ல தூர்வாரும் பணியை ஓரளவுக்கு செஞ்சுட்டாங்க. ஆனால் பி, சி பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாரலை. உள் கிராமங்களுக்கு வர்ற வாய்க்கால்களைத் தூர்வாராததால வயல்களுக்குத் தண்ணீர் வராது. தண்ணீர் மெயின் ஆற்றில் மட்டும் ஓடிக் கடலுக்குள் கலந்துடும். பாபநாசம் வட்டத்தில் மட்டும் 36,000 ஹெக்டேர் நிலங்கள் ஆற்று நீரை நம்பியிருக்கு. அம்மாபேட்டை ஒன்றியத்திலுள்ள பாப்பா வாய்க்கால், புது வாய்க்கால், சேத்து வாய்க்கால், மணக்கால் வாய்க்கால், சடையங்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்கள் தூர்வாரப்படலை. இந்த வாய்க்கால்களில் புதர் மண்டிக்கிடக்கு. அமைச்சர் துரைக்கண்ணுகிட்ட சொல்லியும் எந்தப் பலனும் இல்லை” என்றார்.

ஜெயராமன் - செந்தில்குமார் - துரைக்கண்ணு
ஜெயராமன் - செந்தில்குமார் - துரைக்கண்ணு

இது தொடர்பாக அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். “முதல்வரின் தீவிர முயற்சியில் ஆறுகள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் சிறிய வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அவை 100 நாள் வேலைத் திட்டத்தில் தூர்வாரப்பட்டுவருகின்றன. பெரிய அளவிலான தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இவற்றிலுள்ள குறைகளைச் சரிசெய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன” என்றார்.

மொத்தத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தூர்வாரும் பணியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. `இந்த ஆண்டு இந்தப் பணிகளைப் பார்வையிட, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுதான் இந்த அளவுக்குப் பணிகள் நடந்ததற்கு முக்கிய காரணம்’ என்கிறார்கள் விவசாயிகள். கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, ராஜேஷ் லக்கானி, சந்திரமோகன் ஆகியோர் இந்தப் பகுதிகளில் பல நாள்கள் தங்கியிருந்து பணிகளை ஆய்வு செய்தனர். அதனால், மாவட்ட ஆட்சியர்களும் இந்தப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தினர். ஆனால், `இந்த அதிகாரிகள் உள்கிராமங்களுக்கும் சென்றிருந்தால், பணிகள் இன்னமும் சிறப்பாக நடந்திருக்கும்’ என்கிறார்கள் விவசாயிகள்.

தனி அமைச்சகம் தேவை!

கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?

விவசாயச் சங்கப் பிரமுகர் ஆறுபாதி கல்யாணம், “டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றில் 36 கிளை ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள், 1,665 ஏ பிரிவு வாய்க்கால்கள், ஏ முதல் ஜி வரையிலான சிறிய வாய்க்கால்கள் போன்றவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்குத் தண்ணீர் செல்கிறது. இந்த அனைத்து நீர்ப் பாதைகளையும் முழுவதுமாகத் தூர்வார வேண்டும். அப்போதுதான் நீர்ப்பாசனத் திட்டம் முழுமையடையும். நீர்ப் பாதைகளில் குப்பைகள் கொட்டுவது, மணல் அள்ளுவது, கழிவுகளைக் கலந்துவிடுவது போன்ற செயல்களை முழுமையாகத் தடுக்க வேண்டும். மிதவை எந்திரங்கள் மூலம் ஆறுகளில் தண்ணீர் ஓடும்போதே தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல நீர்ப்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism